திருமாலை அறியாதார் திருமாலை அறியாதாரே என்று சொல்லுவதுண்டு. அதாவது திருமாலை என்னும் திவ்ய பிரபந்தப் பகுதியைப் பாராயணம் செய்யாதவர்கள் அந்த லட்சுமி நாராயணனான திருமாலை அறியாதவர்களே என்ற கருத்தில் இதைச் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட உயர்ந்த படைப்பு அது. நாற்பத்தைந்து பாசுரங்களைக் கொண்ட திருமாலை என்ற இந்த அழகிய பாமாலையை ஸ்ரீ ரங்கநாதனுக்குச் சூட்டியவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். மாதங்களில் சிறந்து விளங்கும் மார்கழியில், கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய சுபதினத்தில் அவதரித்தவர் இவர். திருமண்டங்குடி என்ற திவ்ய தேசத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இயற்பெயர் விப்ர நாராயணர். ஸ்ரீ ரங்கத்திலே நல்லதொரு நந்தவனம் அமைத்து அரங்கனுக்கு மிக்க அபிமானத்துடன் புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார் இவர்.
ஒரு காலகட்டத்திலே தேவதேவி என்ற தாசியின் மோகத்தில் வீழ்ந்திருந்த விப்ர நாராயணர், அந்த அரங்கனின் அருளால் மாயை நீங்கப்பெற்றார். அதற்குப் பின் இறைத் தொண்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தொண்டரடிப்பொடி என்ற பெயரும் பெற்றார். அரங்கனையன்றி வேறு எவரையும் தொழமாட்டேன் என உறுதியாக இருந்தார். அதனால் ஸ்ரீ ரங்கத்தைத் தவிர இதர திவ்ய தேசங்களைப் பற்றி இவர் பாடவில்லை. அதனால் இவருக்குப் பத்தினி ஆழ்வார் என்ற ஏற்றமும் உண்டு. திருமாலை என்ற படைப்பு பலவிதத்திலும் சிறப்பு மிக்கது. எளிய அழகிய தமிழில் பகவானின் நாம மகிமையை நெஞ்சில் படும்படி இந்தப் பாசுரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் அக்காலத்திய ஸ்ரீ ரங்கநகரின் இயற்கை எழிலையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.
இறைவனின் நாம மகிமையை முதல் பாட்டிலேயே எடுத்துக் கூறுகிறார் ஆழ்வார். உன்னுடைய திருநாமம், யமனால் ஏற்படக்கூடிய அவதிகளைத் தீர்க்கும் என்று பாடுகிறார். அச்சுதா என்றும் அரங்கனே என்றும் அமரர் தலைவனே என்றும் பாடி மகிழும் இந்தச் சுவை எனக்குப் போதும். இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்கிறார் ஆழ்வார். ‘‘நமனும் முத்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க் கமாகும் நாமங்க ளுடைய நம்பி’’ என்று கொண்டாடுகிறார் அவர். முன்னொரு காலத்தில் முத்கலன் என்பவன் பாவமே செய்பவனாய் வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் அவன் பாப பரிகாரமாக எள்ளில் பசு மாதிரி உருவம் செய்து கிருஷ்ணார்ப் பணம் என்று சொல்லி தானம் செய்தான். அவன் மரணமடைந்தபோது யமதூதர்கள் அவனை யமனிடம் இழுத்துச் சென்றார்கள்.
யமன் பாசக்கயிற்றால் பிணைத்து என்னை இழுத்துவர, நீ என்னை உபசரிக்கிறாயே என்ன காரணம் என்று திருமாலின் திருநாமத்தின் பெருமைகளை எடுத்துக்கூறினான். இவர்கள் இப்படி உரையாடிக்கொண்டிருப்பதைக் கேட்ட நரகத்தில் உள்ளோர்களுக்கு பெருமாளின் திருநாமத்தைக் கேட்ட புண்ணியத்தாலேயே நரக வாதனை ஒழிந்தது. விஷ்ணு தர்மத்திலே இது கூறப்பட்டிருக்கிறது. ஆழ்வார் அதனை இங்கு நினைவு கூர்கிறார். சாதாரணமாக நம்மிடம் காணப்படும் குறைகள் எல்லாம் தமக்கு இருப்பதாக ஆழ்வார் உருவகித்துக்கொண்டு உடல் உருக, ஊன் உருகப் பாடுகிறார். ‘போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனையமாட்டேன், தீதிலா மொழிகள்கொண்டு உன் திருக்குணம் செப்பமாட்டேன், காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்’ என்று பாடும் ஆழ்வார் ஊரிலேன், காணியில்லை, உறவு மற்றொருவரில்லை, பாரில் நின் பாதமூலம் பற்றினேன் பரமமூர்த்தி என்று கூறுகிறார்.
மனத்திலோர் தூய்மையில்லை, வாயில் ஓர் இன்சொல் இல்லை என இப்படியெல்லாம் இருக்கும் நமக்காக ஆழ்வார் எனக்கு இனி கதியெனச் சொல்லாய்? என்று கேட்கிறார் இறைவனை. தகுதியேதும் இல்லாமல் இருந்தும் அரங்கனே உன்னிடம் ஏன் ஓடி வருகிறோம் தெரியுமா? உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன் என்கிறார் ஆழ்வார்.மேற்குத் திசையில் முடியை வைத்து கிழக்குத் திக்கில் பாதம் நீட்டி வடக்கில் முதுகு காட்டி விபீஷணன் வாழும் தென்திசை இலங்கையைப் பார்த்துக்கொண்டு பாம்பனை மேல் பள்ளிகொண்டிருக்கும் அந்த அரங்கனின் அழகைப் பார்த்து என் உடலும் உள்ளமும் உருகா நின்றதே, என் செய்கேன் என்கிறார் ஆழ்வார்.‘குடதிசை முடியை வைத்துக், குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டித், தென்திசை இலங்கை நோக்கி, கடல்நிறக் கடவுள் எந்தை அரவனைத் துயிலுமா கண்டு,’ என்ற ஆழ்வாரின் அனுபவம் நமக்கு மெய் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றது.
அன்பே பக்தி, ஆராய்ச்சியும் அறிவும் அல்ல. அன்பு செய்யும் அடியவரிடம் அரங்கன் குலத்தையோ ஜாதியையோ பார்ப்பதில்லை. அவர்கள் நான்மறைகளைக் கற்றவர்களா என்பதையெல்லாம் அவன் கருத்தில் கொள்வதில்லை, உண்மையான ஈடுபாடு இருந்தால் ஓடி வந்து இறைவன் அருள்புரிகிறான். ஸ்ரீ ரங்கம் அவர் காலத்தில் எப்படி இருந்தது? இதனை அறிய ஆழ்வாரின் ஒரு பாட்டே போதும். ஆழ்வார் பாடுகிறார். ‘வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆடும் சோலை, கொண்டல் மீது அணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை, அண்டர்கோன் அமரும் சோலை’ என்ற முறையிலே வண்டினமும் மயில்களும், குயில்களும் ஒருங்கே வசிக்கும் வகையில் மேகத்தை எட்டிப் பிடிக்கக்கூடிய மரங்களும் கொடிகளும் செடிகளும் நிறைந்த ஊராகத் திருவரங்கம் இருந்திருக்கிறது. ஆழ்வாருக்கு அந்த அரங்கனைப் போலவே அவனுடைய ராஜதானியான ஸ்ரீ ரங்கமும் அவ்வளவு உகப்பாக இருந்தது. அதனால்தான் காவிரியைக்கூட ‘கங்கையிற் புனிதமாய் காவிரி’ என்று பாடுகிறார். அத்தகைய ஸ்ரீ ரங்கத்தையும் அங்கு கோயில் கொண்டிருக்கும் அரங்கனையும், திருமாலை என்னும் பாமாலை மூலம் நினைத்து அவனுடைய அருளைப் பெறுவோம்.