Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆன்மீக தகவல்

கண்ணீர் பெருக்கும் கருடாழ்வார்

சாதாரணமாக எல்லா வைணவத் தலங்களிலும் கருவறையில் இருக்கும் மூர்த்தத்தைவிட கருடாழ்வார் உயரம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டை - காளஹஸ்தி பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ள மன்னார் போளூர் கிருஷ்ண சுவாமி கோயிலில் கிருஷ்ண பகவானைவிட கருடாழ்வார் உயரம் அதிகம். ஆகவே, இவர் தரை மட்டத்திற்குக் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணனின் கருணையை வியந்து, கண்களிலிருந்து நீர் பெருகி, கன்னங்களை நனைக்கும் இந்தத் தோற்றம் நெகிழ்ச்சியானது.

தர்ம வாள்

ராவணன் கையில் வைத்திருந்த வாள் அவனுக்கு சிவபெருமானால் அருளப்பட்டது. அதன் பெயர் சந்திரஹாசம். அந்த வாளை வைத்திருந்தவரை யாராலும் அவனை வெல்ல முடியவில்லை. அதே சமயம் அந்த சந்திரஹாச வாளைத் தர்மத்தை காப்பாற்ற மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதர்மத்துக்குப் பயன்படுத்தினால் அது சக்தி இழந்து விடும். ராவணன் சீதையை ஆகாய மார்க்கமாகக் கவர்ந்து சென்றபோது அதைத் தடுத்த ஜடாயுவை அந்த வாளால் வெட்டி வீழ்த்தினான் ராவணன். அதிலிருந்து அந்த வாள் அவனுக்குப் பயன்படாது போயிற்று.

தொட்டில் வரமருளும் தூக்கப் பிரார்த்தனை

பொதுவாக கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவார்கள். ஆனால், இந்த கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு, சந்நதியில் ஒரு குட்டித் தூக்கமே போடலாம். இந்த அதிசய வழிபாட்டைக் கொண்டது, தமிழக - ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டம், மாநெல்லூர் வீரபத்திரர் கோயில். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்து 9 விரலி மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு, 9 முறை பிராகார வலம் வருகின்றனர். பின் அதை அம்பாள் பாதத்தில் வைத்துவிட்டு, சுவாமி சந்நதி எதிரில் படுத்து குட்டித் தூக்கம் போடுகின்றனர். இதனால் வீரபத்திரர் குழந்தை பாக்கியத்தை விரைவாக அருளுவார் என்று நம்புகின்றனர்.

ஒரு சிற்பி, மூன்று அம்பிகைகள்

திருநாகேஸ்வரம் திருப்பட்டீஸ்வரம், திருப்புள்ளமங்கை ஆகிய கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மூன்று தலங்களிலும் துர்க்கையம்மன் அருள்பாலிக்கிறாள். இந்தக் கோயில்களை அடுத்தடுத்து தரிசிப்பவர்கள் அன்னையை உற்றுக் கவனித்தால் மூன்று சிலைகளிலும் ஒரே சாயலாக அமைந்திருப்பதைக் காணலாம். இதற்கு முக்கிய காரணம் இந்த மூன்று சிலைகளையும் வடித்தவர் ஒரே சிற்பிதான்.

மாணிக்க வாசகருக்கு உபதேசம்

பூலோக கயிலாயமாம் சிதம்பரம் திருத்தலத்தில் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு நடராஜப் பெருமான் குருந்த மரத்தினடியில் உபதேசம் புரிந்த நிகழ்வு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்றுதான் மாணிக்கவாசகர் ஈசனுடன் இரண்டறக்கலந்தார்.

திருப்புள்ள மங்கை

தேவர்கள் அமுதத்தைக் கடைந்த போது வெளிப்பட்ட நஞ்சை இறைவன் அமுதமாக உண்ட இடம் திருப்புள்ளமங்கை எனும் பசுபதி கோயில். இறைவன், பசுபதி நாதர். அன்னை, பால்வளை நாயகி. திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது. தஞ்சாவூருக்கு மிக அருகே உள்ள கோயில். தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.

அமர்ந்த ஆண்டாள்

பெரும்பாலான வைணவ ஆலயங்களில் தனி சந்நதியிலோ அல்லது கருவறையிலோ காட்சி தரும் ஆண்டாள் நின்ற கோலத்தில்தான் காணப்படுகிறாள். மாலவனுக்கு மாலை சூட்டத் தயாராக இருக்கும் கோலம்! ஆனால், மதுரைக்கு அருகில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் ஆண்டாள் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். ரங்கனுடன் திருமணம் முடித்த நிம்மதி போலிருக்கிறது!

நாகலட்சுமி