Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜோதிடத்தில் கர்ம தோஷம்

ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, ஊர் ஊராக பல ஜோதிடரிடம் பலன் பார்த்து எதுவும் நடக்காமல் விரக்தியில் இருப்பவர்கள் பலரை நாம் கண்டிருக்கலாம். இங்கு சொல்லப்படும் இந்த கர்ம தோஷம் எழுதிய எனக்கும் இருக்கலாம். இதை வாசிக்கும் உங்களுக்கும் இருக்கலாம். அப்படியிருந்தால், உணர்ந்து தெளியவே இந்த வழிகாட்டுதல். தோஷம் என்றால் குறைபாடு எனக் கொள்ளலாம். சென்ற பிறவியில் ஏற்பட்ட தவறான செயல்களால் ஏற்பட்ட வாழ்க்கையின் / வாழ்வின் குறைபாடுகள் என்பதே கர்ம தோஷம் என்பதாகும்.

ஏன் கர்ம தோஷம் வருகிறது?

இவ்வுலகில் ஒருவன் சம்பாதித்த பல கோடி சொத்துக்களையும், புகழையும் அவன் எங்கும் எடுத்துச் செல்ல முடியாது. இப்பூவுலகை விட்டு விடுபடும் ஒவ்வொரு மனிதனும் புண்ணியத்தையும் பாவத்தையும் மட்டுமே எடுத்துச் செல்கிறான். அதுவே அவனுக்கு வழிகாட்டுகிறது. ஒரு மனிதனின் ஆசைதான் அவனை அப்படிச் செய்ய வைக்கிறது. ஆசை என்பதை இரு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று நியாயமான ஆசை.

மற்றொன்று பேராசை. இந்த பேராசை, ஒரு விஷயத்தை அடைவதற்கு எந்த இலக்கும் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்? எதைச் செய்தாவது அதனை அடைவது என்ற குறிக்கோளுடன் அதர்ம (தவறான) வழியிலும் சென்று அதனை எப்படியாவது பெறுவதாகும்.

ஆனால், பேராசையால் ஏதாவது கர்மங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படியே ஒவ்வொரு மனிதனும் தனக்கான கர்ம தோஷங்களை தானே உருவாக்கிக் கொள்கிறான்.

எப்படி இந்த கர்ம தோஷங்கள் தொடர்கின்றன?

ராகு - கேதுக்கள் ஒவ்வொரு மனிதனின் தவறான கர்மங்களையும் கண்காணிக்கிறது. அதனை சேமித்து சனி பகவானிடம் ஒப்படைத்து விடுகிறது. கர்ம தோஷம் உள்ளவர்கள், தவறான செயல்களை செய்யும் பொருட்டு எல்லாவற்றையும் மறைத்து தப்பித்துவிட்டோம் என மனக்கணக்கிட்டுக் கொள்கின்றனர். அதனால், அவர்கள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து கர்மத்தை செய்கின்றனர். சேமித்த தவறான செயல்கள் அனைத்தும் கர்ம தோஷங்களாக தொடர்கிறது. சனி பகவான், தன்னிடம் பெற்ற கர்மங்களை கொண்டு தண்டனை வழங்குகிறார். அறிவியலின் கூற்றுப்படி, நியூட்டனின் மூன்றாம் விதியாகும். ஒவ்வொரு செயல்களுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு என்பது உண்மையாகும்.

புராணத்தில் கர்ம தோஷம்

இக்கதை சுருக்கமாக சொல்லப்படுகிறது... கர்மதோஷத்தின் காரணமாக ராஜாவான அரிச்சந்திரன், தனது ராஜ்ஜியத்தை இழக்கிறான். தான் ஒரு காலத்தில் ராஜா என்ற தன் சுயத்தை மறந்தே போகிறான். வறுமையின் காரணமாக தன் மனைவி சந்திரமதியை வேலைக்கு அனுப்பிவிட்டு சுடுகாட்டில் வேலைக்கு போகிறான். இவனது மகன் லோகிதாசன், ஒரு நாள் பாம்பு கடித்து இறந்து விடுகிறான். அவனை இடுகாட்டில் புதைக்க சந்திரமதி அங்கே கொண்டு வருகிறார். பழைய நினைவுகளை மறந்ததால் தன் மனைவியையும் மகனையும் அவனால் தெரிந்து கொள்ள முடியாமல் சுடுகாட்டில் புதைப்பதற்கு பணம் கேட்கிறான். அப்பொழுது சந்திரமதி தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி முடியாத நிலையை கூறுகிறாள்.

சந்திரமதியின் கழுத்தில் இருக்கும் தாலியைக் கண்ட அரிச்சந்திரன், ``ஏன் பொய் சொல்கிறாய்? உன் கழுத்தில் தாலி இருக்கிறதே... உன் கணவர் சம்பாதிக்கவில்லையா என்ன? அந்தப் பணத்தை எனக்கு தரலாமே’’ எனக் கேட்கிறான். அதை கேட்டவுடன் சந்திரமதி அதிர்ந்து போகிறார். ஆம், அந்த தாலி அரிச்சந்திரன் கண்களுக்கு மட்டுமே தெரியும். அப்படியான ஒரு அதிசயமிக்க பெண்ணாக பிறக்கும் போதே தாலியுடன் பிறந்தவள் சந்திரமதி. அப்பொழுதுதான்,``நீ யார்? என் கணவருக்கு மட்டுமே தெரியும் அதிசயம் உங்களுக்கு எப்படி தெரிந்தது’’? என கேள்வி எழுப்புகிறாள் சந்திரமதி.

அப்பொழுதுதான் தன் சுயத்தை உணர்ந்த அரிச்சந்திரன், எல்லாவற்றையும் உணர்கிறான். பின்புதான் தன் மகனையும் தான் இழந்த சாம்ராஜ்யத்தையும் மீட்டு நன்மையடைந்தான் அரிச்சந்திரன். இந்த சம்பவம் நடந்த இடம், காசி என்று சொல்லக் கூடிய வாரணாசி ஆகும்.

ஜாதகம் உள்ளவர்களுக்கு கர்ம தோஷத்தின் அடையாளம் என்ன?

ஜாதகம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட அமைப்புகள் இருந்தால், உங்கள் ஜாதத்தில் கர்ம தோஷம் உள்ளது என உறுதி செய்து கொள்ளளாம்.

*ஜாதகத்தில், கேந்திர ஸ்தானங்கள் என சொல்லக்கூடிய 1-ஆம் இடம், 4-ஆம் இடம், 7-ஆம் இடம் மற்றும் 10-ஆம் இடத்தில் சனி பகவான் இருந்தால், கர்ம தோஷம்தான்.

*சனி ஆட்சி, உச்சம் பெற்று இருந்தாலும் கர்ம தோஷம்தான்.

*ராகு - கேது அச்சுகளுக்கு வெளியே சனி இருந்தாலும் கர்ம தோஷம்தான்.

*தொடர்ந்து உடன்பிறப்புகள் மற்றும் சந்ததிகளுக்கும் இதேபோல, கேந்திரங்களில் சனி பகவான் அமர்வது கர்ம தோஷமே.

ஜாதகம் இல்லாதவர்களுக்கு, கர்ம தோஷத்தின் அடையாளம் என்ன?

*உங்களது தாய், தந்தைக்கு ஐந்துக்கு மேல் எட்டு எட்டு பேர் அல்லது பதிமூன்று பேர் உடன் பிறப்புகள் இருப்பர். உங்களுக்கும் இதே போல ஐந்து அல்லது எட்டு பேர் உடன் உடன்பிறப்புகள் அமைந்திருக்கும்.

*கணவன் - மனைவி தம்பதிகளுக்கு இடையே ஐந்து முதல் 12 வயதிற்கு மேற்பட்ட இடைவெளி இருக்கும்.

*வீட்டில் மூத்தவர்கள் இருக்கும்போது இளையவர்களுக்கு திருமணம் நடந்திருக்கும்.

*குடும்பத்தில் பிறக்கும்போது ஊனம் போன்ற அமைப்புகள் இருந்திருக்கும் அல்லது விபத்தினால் கைகளிலோ அல்லது கால்களிலோ பிளேட் ஸ்குரு வைக்கப்பட்டிருக்கும்.

*வீட்டில் மாறுபட்ட திருமணம் நடக்கும்.

*வீட்டில் திருமணமாகி வாரிசு இல்லாமல் இருக்கும்.

*வீட்டில் திடீரென நிகழும் தொடர் மரணங்கள், சுபகாரியத் தடைகள் கர்ம தோஷத்தின் அடையாளங்கள்.

*குலதெய்வம் தெரியாமல் இருப்பது. அதை தேடாமல் இவர்களாக ஒரு தெய்வத்தை குல தெய்வம் என நினைத்து வழிபடுவது.

*இரவு, பகல் பார்க்காமல் தொடர்ச்சியாக தொழிலே கண்ணாக உழைத்தல்.

*சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு, சமூக நன்மைக்காக உழைப்பது.

*ஆண் வாரிசு இல்லாமல் இருப்பதும், ஒரே ஒரு வாரிசாக அமைவதும் கர்ம தோஷமே.

*குடும்பத்தில் உள்ள நபர்கள் எவராவது தொலைந்து போவது.

*வீட்டில் உள்ள நபர்கள் அல்லது குழந்தைகள் புத்திசுவாதீனம் இல்லாமல் இருப்பது.

*வீட்டில் நரம்பு தொடர்பான வியாதிகள், மனநல வியாதிகள் இருந்தால் கர்ம தோஷம்தான்.

*சிலர் வாழ்வில் பூர்வீகச் சொத்திற்காக மற்றொரு சொத்தை விற்பனை செய்து வாழ்க்கை முழுவதும் நீதிமன்றமே கதி என்று எல்லாவற்றையும் இழக்கும் அமைப்பு.

*கர்ம தோஷங்கள்தான் கேன்சர் போன்ற தீர்க்க முடியாத வியாதிகளையும் தருகின்றது.

*சிலருக்கு இரு தார தோஷங்களையும் தருகின்றது.

கர்ம தோஷம் நீங்க வழி உண்டா? பரிகாரம் என்ன?

இதற்கான பரிகாரத்தை காசியில்தான் செய்தல் வேண்டும். இதற்காக கடுமையான விதிமுறைகளும் உண்டு. இந்த கர்ம தோஷத்தில் அவர்களின் தனிப்பட்ட ஜாதகமே வழி சொல்லும்.

எந்தக் கிழமைகளில் செல்ல வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? போன்றவைகள் உண்டு. ஒவ்வொருவரும் செல்கின்ற நாளும் என்ன செய்ய வேண்டும்? என வழிமுறைகளை சொல்லும். பொதுமையாக சொல்லப்பட்டால், அனைவரும் தவறாக செய்து கர்மதோஷத்தை அதிகப்படுத்திக் கொள்வர். இதைப் பற்றி முழுமையாக தெரிந்த ஜோதிடரிடம் கேட்டு வழிகாட்டுதல்களின்படி செய்தால் மட்டுமே கர்மம் குறையும்.