Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்மாவை வெல்ல முடியுமா? :ஜோதிட ரகசியங்கள்

ஒரு ஜாதகத்தின் பலனை மூன்று விஷயங்கள்தான் நிர்ணயித்துக் கொடுக்கின்றன. ஒன்று பிறந்தபோது இருக்கும் கிரக நிலைகள். அதுதான் ஒருவரின் ஜாதகக் கட்டம். அந்தக் கட்டத்தில் அமர்ந்த கிரகங்களின் வலிமையைப் பொறுத்து அவருடைய 12 பாவங்களின் பலன்கள் நிர்ணயிக் கப்படுகின்றன. இரண்டாவது, தசா புத்திகள். மூன்றாவது கோள்சாரம் (transit). இந்த விஷயங்கள் ஒரு சூட்சுமத்தைச் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 12 கட்டங்களும் ஒன்பது கிரகங்களும் சிறப்பாக அமைந்த ஒரு ஜாதகம் உலகத்திலேயே கிடையாது. தசரதனின் பிள்ளையாகப் பிறந்த  ராமன்தான் 12 ஆண்டுகள் காட்டிலும் மேட்டிலும் அலைந்து படாத பாடுபட்டான். மனைவியைப் பிரிந்து தவித்தான். தெய்வ ஜாதகங்களுக்கு கிரக பலனா? என்று இவற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதில் ஜாதக அறிவியலை மட்டும்தான் பார்க்க வேண்டும்.  ராமனே அவதாரம் செய்தாலும், இந்த கர்ம பூமியில் அனைத்தும் அம்சமாக அமைந்து விடுவதில்லை. 12-ஆம் இடம் பலமாக அமைந்து, எங்கேயும் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவார்கள்.

அவர்களுக்குக் காற்று வேண்டியதில்லை. குளிர்சாதனம் வேண்டியதில்லை. ஆனால், நாளைய செலவுக்கு பணம் இருக்காது. தனஸ்தானம் அடிபட்டு இருக்கும். கோடி கோடியாக செல்வம் குவிந்திருக்கும். 12-ஆம் இடம் அடிபட்டு இருக்கும். சயனஸ்தானம் சரியிருக்காது. வீட்டிலே வந்தாலே நிம்மதிக் குறைவு இருக்கும். படுத்தால் தூக்கம் வராது. புரண்டு புரண்டு படுப்பார்கள். நன்கு குறட்டை விட்டு தூங்குபவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். இரண்டாம் இடம் பலமாக இருக்கும். ஆறாம் இடம் அடிபட்டு இருக்கும். ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டு மூக்கில் குழாயைச் சொருகிக் கொண்டு, அறைக்கு வெளியே மொறுமொறுவென்று மசால் வடை சாப்பிடுபவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுவார்கள்.

அந்த ஆஸ்பத்திரியில் உள்ள அத்தனை பேருக்கும் மசால் வடை வாங்கித் தரும் காசு தலைமாட்டில் இருக்கும். ஆனால், ஒரு வடையின் ஒரு பருப்பை வாயில் போட முடியாத அளவுக்கு ஆரோக்கியம் கெட்டுப் போயிருக்கும். நீங்கள் எத்தனைப் பெரிய மனிதர்களையும் செல்வாக்கு உள்ளவர்களையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுக்கு எந்த கிரக நிலைகள் மிகப் பெரிய செல்வாக்கையும் பணத்தையும் கௌரவத்தையும் வாங்கித் தந்ததோ, அதே கிரக நிலைகள்தான் அவர்களுக்கு ராத்திரி படுக்கையில் தூங்கினால் கெட்ட சொப்பனத்தையும், எதிர்கால அச்சத்தையும், மன நிம்மதி இல்லாத வாழ்க்கையையும் தருகிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.இதை பல முக்கிய பிரமுகர்கள் என்னிடத்திலே பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காசு பணத்தை, கௌரவத்தை, பல லட்ச ரூபாய் காரை, வீட்டை நான் வியந்து பார்த்தேன். அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தாங்கள் படும் கஷ்டங்களைச் சொன்னபோது, நான் நினைத்தது இதுதான். ஒன்றை தந்துவிட்டு ஒன்றை பிடுங்கிக் கொண்டானே, இதுதான் கர்மா என்பது. இதிலிருந்து மீள வழி தெரியவில்லை. பிராயச் சித்தங்கள் என்று கோடிக்கணக்கில் செலவு செய்கின்றார்கள். ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பணத்தைச் செலவு செய்து, கிரக நிலைகளை தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுவது வேடிக்கையாக இருக்கிறது.நம்முடைய பணம் எந்தக் கிரகத்துக்குத் தேவையாக இருக்கிறது? அல்லது எந்த தெய்வத்திற்குத் தேவையாக இருக்கிறது? அந்தத் தெய்வங்கள் கொடுத்த பணத்தை நாம் நம்முடைய கர்மாவைப் போக்கிக் கொள்வதற்கு செலவு செய்வதால், கர்மா தீர்ந்து விடுமா என்ன? கர்மாவை கர்மாவால்தான் போக்கிக் கொள்ள வேண்டும். இதைச் சொன்னால் பலரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏதோ ஒருநிம்மதி தேவைப்படுகிறது.

அந்த நிம்மதியை வேண்டுமானாலும் சில பிராயச்சித்தங்கள் தரலாம். உதாரணமாக, கோயிலுக்குப் போகிறோம். விளக்கு ஏற்றுகிறோம். அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்கின்றோம். கொஞ்சம் மனதில் சாந்தியும் தைரியமும் பிரச்னையை தாங்குகின்ற ஆற்றலும் வரும் என்ற அளவில்தான் அந்த பிராயச் சித்தங்களுக்கான பலன் இருக்கும். அதுவும் நாம் முழுமனதோடு தெய்வத்திடம் சரணடைய வேண்டும். அந்த இடத்தில் நம்முடைய அகங்காரமோ, பண பலமோ வந்து விடக் கூடாது. அப்படிச் செய்யும் பிராயச் சித்தங்கள் கஷ்டங்களை இரண்டு மடங்காக்கிவிடும். கிரகங்கள், ``என்ன, என்னிடமே உன்னுடைய வேலையைக் காண்பிக்கிறாயா?’’ என்று சினம் கொண்டு விடும். சில நேரங்களில் வம்பை விலைக்கு வாங்குவது போல கிரகங்கள் தரும் கஷ்டங்களை அதிகப் படுத்துவதாக ஆகிவிடும்.இன்னொரு விஷயம். இதில் கிரகம், கிரகம் என்று சொல்வது, ஏதோ வானில் இருக்கக்கூடிய சனியும், புதனும், குருவும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவைகளெல்லாம் நம்முடைய பல்வேறு எண்ணங்கள், செயல்களின் பிரதிநிதிகள்.

ஒரு தொழிலாளியை ஒரு முதலாளி அவமானப்படுத்தி விடுகிறார். அவருக்குச் சேர வேண்டிய பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறார் என்று சொன்னால், அந்த இடத்தில் சனியினுடைய வீரியம் அதிகரித்துவிடுகிறது. அவர் உங்களுக்கு இரண்டு மடங்கு தீய பலன்களைத் தருவதற்கு தயாராகி விடுகின்றார். அதே நேரத்தில், யாரோ ஒருவருக்குப் படிப்பதற்கு உதவி செய்கின்றீர்கள், இல்லை படிப்பு சொல்லித் தருகின்றீர்கள். இல்லை, உங்களிடம் வந்தவர்களுக்கு நல்ல ஆலோசனை சொல்லுகின்றீர்கள். நீங்கள் எத்தனைச் சிரமத்தில் இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் எதிர்மாறான நிலையில் குரு இருந்தாலும், குரு தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டு உங்களுக்கு நன்மை செய்ய முன்வரும் அமைப்பில் வந்து விடுகின்றார். எனவே, பிராயச்சித்தம் என்பது நம்முடைய நல்ல செயல்களை அதிகப்படுத்தி அதில் எந்தவிதமான அகங்காரமும் இல்லாமல், ``நாம் ஒன்றும் கொண்டு வரவில்லை, ஒன்றும் கொண்டு போகப் போவதில்லை ஏதோ நமக்கு இத்தனை நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இத்தனைச் செல்வம் வந்திருக்கிறது. இவற்றையெல்லாம் இயன்றளவு மற்றவர்களுக்குக் கொடுப்போம்’’ என்று நினைப்பதுதான் கர்மாவை வெல்லும் வழி. ஒன்று இருந்தால் ஒன்று இல்லை. இதுதான் ஜாதகம் சொல்லும் நீதி. எத்தனை கணக்குகள் போட்டாலும் கடைசியில் இங்கே வந்துதான் நிற்கும். அப்படியானால் என்ன தீர்வு என்று கேட்கலாம்?இருப்பதைக் கொண்டு இல்லாததை நிரப்பிக் கொள்ளுங்கள். அது ஒன்றே தீர்வு. இருப்பதை எண்ணி மகிழுங்கள். இல்லாததை மறந்து விடுங்கள். அல்லது இருப்பதைக் கொண்டு இல்லாததைச் சரி செய்து கொள்ளுங்கள்.