Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதனைப் பிடித்தால் புது வாழ்வு பெறலாம்!

“பொன் கிடைத்தாலும் கிடைக்கும், புதன் கிடைக்காது” என்பார்கள். புதன்கிழமை பொதுவாகவே மிகச்சிறந்த சுப நாளாகக் கருதப்படுகிறது.

பொன் கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்காது என்பதற்கு எத்தனையோ அர்த்தங்கள் சொல்வார்கள். ஆனால் ஒரு ஜாதகத்தில் புதன் வலிமையாக இருந்துவிட்டால், அவனுடைய புத்தி பழுதில்லாமல் இருக்கும். புத்தி பழுதில்லாமல் இருந்து விட்டால், அவனால் எந்தக் காரியத்தையும் சாதித்து விட முடியும். எந்தச் சூழ்நிலையிலும் ஜெயித்து விட முடியும். வாக்குக் காரகனாகவும் புதன் இருப்பதால் யாரிடமும் இனிமையாகப் பேசி வெற்றிகரமாக வாழ்ந்து விட முடியும்.

மற்ற கிரகங்கள் வலிமையோடு இருந்தாலும் புதன் வலிமை குறைந்திருந்தால் அவனை ஏமாற்றுவது எளிது. பல நேரங்களில் செய்யக் கூடாத காரியங்களைச் செய்து பலவற்றை இழந்து விடுவான். எனவே புத்திக்குரிய கிரகமாகிய புதன் ஒரு ஜாதகத்தில் வலிமையாக இருந்துவிட்டால் அவனால் மிக உயர்ந்த பொன்னையும் வாங்கி விட முடியும். ஆனால், பிறப்பினால் அவனிடத்தில் பொன் இருந்தாலும் கூட புதன் சரியாக இல்லாவிட்டால் புத்தி பழுதுபட்டு இருக்கின்ற பொன்னையும் இழந்து விட வேண்டி இருக்கும். இதை வைத்துக் கொண்டுதான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொன்னார்களோ என்று தோன்றுகின்றது.

காலச் சக்கரத்தில் மூன்றாவது ராசியான மிதுன ராசிக்கும் ஆறாவது ராசியான கன்னி ராசிக்கும் உரியவராக புதன் இருக்கின்றார். மூன்றாவது ஸ்தானம் என்பது தைரியத்தையும் வீரியத்தையும் குறிப்பது. இட மாற்றங்களையும் சிறு பயணங்களையும், தகவல் தொழில்நுட்ப அறிவையும் குறிப்பது.

ஆறாவது ஸ்தானம் என்பது பகை கடன் நோய் முதலியவற்றைக் குறித்தாலும் கூட வெற்றியையும் குறிப்பது. புத்தி உள்ளவர்கள் எதிரிகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். எப்போதும் நடுநிலையுடன் இருப்பார்கள். எனவே சமாதானத்திற்கும், நடுநிலைக்கும் காரகர் புதன் ஆவார்.

புதன் ஒரு ஜாதகத்தில் வலிமையாக இருந்து விட்டால் அவர்களுக்கு தைரியமும், எதையும் எதிர்கொள்ளும் திறனும் இருக்கும்.அதனால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம் ஆகும். சந்திரனை மனோகாரகன் என்பார்கள். அந்த சந்திரனுடைய பலவீனங்களைப் போக்கடிப்பது புதன் என்னும் அறிவன். அறிவால் மனதையும் ஆண்டு வெற்றியைத் தேடித் தருவது புதன்.

இந்த புதனின் பெருமையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் அவருடைய காரகத்துவத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தாய்மாமனுக்கு புதன் காரக கிரகமாக வருகிறார். புதனின் அதி தேவதை விஷ்ணு பகவானாவார். உலகில் உள்ள அனைத்து பசுமையான விஷயங்களையும் குறிக்கக் கூடியவர்.

புதனுக்குரிய உலோகம் பித்தளை. தானியம் பச்சைப்பயிறு. சுவையில் உவர்ப்பு சுவையைக் குறிக்கக் கூடியவர், செடிகளில் நாயுருவி செடியைக் குறிக்கும். புதனுக்குரிய வாகனம் குதிரை ஆகும். ரத்தினம் மரகதம், வஸ்திரம் பச்சைப்பட்டு, கணிதம், புள்ளி விபரம், காவியம், சிற்பம் போன்றவற்றுக்கு புதனே காரகராகின்றார். பிணிகளில் வாதம் சம்பந்தமான நோய்களுக்கு காரகன், உடல் அங்கங்களில் தோல் பகுதியைக் குறிக்கக்கூடியவர். புதனுக்குரிய திசை வடக்கு, மலர்களில் வெண்காந்தள் மலர்களைக் குறிக்கும், புதனுக்குரிய மிருகம் ஆண் பூனை, பறவைகளில் கிளி.

தந்திர புத்தி, இரட்டை பேச்சு, காசோலைகள், காற்று, காலண்டர், கடி காரம், பத்திரம், வர்ணனை கிரகித்தல் (உள்வாங்குதல்), பயணம், பிரின்டிங் பிரஸ், பங்குதாரர், கல்விக்கூடம், சமயோசித புத்திகதை, கட்டுரை, பாடல், சர்க்கஸ், நாடகம், வக்கீல், ஜோதிடர், தரகர், தபால் காரர், புள்ளியியல் ஆய்வாளர், பஞ்சாங்கம், டெண்டர், விலாசம், புத்தக கடை, வடக்கு திசை, கிணறு, படிக்கும் அறை ,வணிக ஸ்தலம், அமைதியை விரும்பக் கூடிய குணம், ஆராய்ச்சி குணம், பிறருக்கு கற்பதில் விருப்பம், பொறுமை, ஆயுள்பலம் உண்டு என புதனின் காரகத் தன்மையை சொல்லிக் கொண்டே போகலாம்.

வேகமாக நகரும் கிரகம் என்பதால், விரைந்த செயல்களுக்கு புதன் காரகர். அதாவது, எழுத்து, தகவல் தொடர்பு, விளம்பரம், அஞ்சல், தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, பத்திரிகை, கம்ப்யூட்டர், நூல்கள், போக்குவரத்து போன்றவற்றுக்கு புதனே காரகராகின்றார். உடலில் விரைவாகச் செய்திகளை அனுப்பும் நரம்பு மண்டலங்களுக்கும், உணர்வுப் புலன்களுக்கும் புதனே காரகர் ஆவார்.

புதனுக்குரிய ஸ்தலங்கள் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் திரு வெண்காடு. வழிபாட்டு பொருட்கள் கற்பூரம், வீட்டில் வரவேற்பறை மற்றும் படிக்கும் அறை போன்ற பகுதிகளைக் குறிக்கும். புதன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறார். ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரத்தின் அதிபதியாக வருகிறார்.

புதனுக்கு ஏன் “புத்தி” என்கிற காரகத்தைக் கொடுத்தார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கின்றேன். நம்முடைய சூரிய மண்டலத்தில் சூரியன் தான் பிரதானமானது. அந்த சூரியனைச் சுற்றித் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக நெருக்கமாக இருப்பது சுக்கிரன். அதற்குப் பிறகு வருவது புதன் அதற்குப் பிறகு பூமி. தொடர்ந்து செவ்வாய் குரு சனி முதலிய கோள்கள்.

இதில் சூரியனுக்கு அருகாமையில் உள்ள புதனை விட அதிக தூரத்தில் உள்ள சுக்கிரன் அதாவது வெள்ளியில் உஷ்ண நிலை அதிகம். சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் அல்ல என்றாலும், அதன் அடர்த்தியான வளிமண்டலம் பசுங்குடில் விளைவு காரணமாக வெப்பத்தை தக்கவைக்கிறது, இது நமது சூரிய மண்டலத்தின் மிகவும் வெப்பமான கோளாக அமைந்துள்ளது.

யோசித்துப் பாருங்கள் புதனை புத்திக்கு கொடுத்தவர்கள் சுக்கிரனை உணர்ச்சிக்கு கொடுத்தார்கள். அதாவது காம உணர்ச்சி, போகங்கள், ஆடம்பரம் முதலிய சுபாவங்களுக்கு சுக்கிரனைச் சொன்னார்கள். காரணம் என்ன? சூரியனது உஷ்ணத்தால் தூரத்தில் இருந்தாலும் சுக்கிரன் பாதிக்கிறது. அருகில் இருந்தாலும் புதன் அவ்வளவு பாதிப்பில்லாமல் இருக்கிறது.

உணர்ச்சி (சுக்கிரன்) எப்பொழுதும் சூடேறும். பல தவறான செயல்களுக்கு அந்தச் சூடு வழி வகுக்கும். ஆனால் எத்தனைச் சூடு இருந்தாலும் புத்தி உள்ளவன், அதை தக்க வைத்துக் கொள்ள மாட்டான். புத்தியால் வென்று விடுவான். இதுவே தான் புதன் சுக்கிரன் இரண்டிலும் நடக்கிறது அதனால் தான் புதனுக்கு புத்தியையும் சுக்கிரனுக்கு போக உணர்ச்சியையும் காரகத்துவமாகக் கொடுத்தார்கள்.

சமயோசித புத்திக்கு புதன் காரகர் என்பதால், சூழ்நிலையை தனக்கு சாதகமாக உருவாக்கிக்கொள்ளும் நபர்களுக்கும், புதுமையை விரும்பும் நபர்களுக்கும், வியாபாரிகளுக்கும், ஜோதிடர்களுக்கும், தூதுவர்களுக்கும், ஒரே சமயத்தில் பல செயல்களை செய்பவர்களுக்கும், தசாவதானி, அஷ்டாவதானி போன்றவர்களுக்கும் தரகு வேலை செய்பவர்களுக்கும் புதனே காரகர் ஆவார்.

பொது அறிவு, தவணை முறை, நுட்பமான பொருட்கள், ஒப்பந்தம், நிபுணத்துவம், இளவரசன், பல குரலில் பேசும் திறன், விகடகவி, பச்சை நிறம், ஒரு முறைக்கு இருமுறை செய்யும் இரட்டைத் தன்மை, பிரதிநிதிகள் (Agent), நுட்பமான ஆராய்ச்சி, சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவைகள், எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை, இலக்கணப் புலமை, உலோகங்களில் பித்தளை போன்றவற்றுக்கு புதனே காரகராகின்றார்.

புதனின் இத்தனைக் காரகங்களும் நிஜ ஜாதகத்தில் செயல்படுகின்றதா? அடுத்து, புதன் வலிமையானால் அவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்கின்றார்களே, ஆனால் சிலர் புதன் வலிமை அடைந்தும், பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காதவர்களாக இருக்கிறார்களே, அதற்கு என்ன காரணம் என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா! அதை ஒரு உதாரண ஜாதகத்தோடு அடுத்த இதழில் பார்ப்போம்.