Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராகு - கேது ஐந்தில் இருந்தால் குழந்தை பிறக்காதா?

ஜாதக பலன்களைக் கணக்கிடுவதில் சில நுட்பங்கள் உண்டு. ஒவ்வொரு கிரகமும் என்னவெல்லாம் பலன்களைத் தன்னகத்தே கொண்டு இருக்கின்றன என்கின்ற பட்டியலை முதலில் அறிய வேண்டும். அதைப் போல, ஒரு குறிப்பிட்ட ராசிக்குள் (பாவம் என்று சொல்வார்கள்) என்னென்ன விதமான நன்மை தீமைகள் அடங்கியிருக்கின்றன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகத்துக்கும் உள்ள காரகத் துவங்களில் உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என்ற இரண்டு விஷயங்கள் உண்டு. உதாரணமாக, ராசிக்கு மூன்றாம் பாவம் பிரயாணங்கள், தகவல் தொழில்நுட்பம் முதலியவற்றைக் குறிக்கும். உடல் அங்கங்களில் காதுகளைக் குறிக்கும். உயிர் காரகத்துவத்தில் இளைய சகோதரனைக் குறிக்கும்.

அதைப் போலவே, நான்காம் இடத்தை எடுத்துக் கொண்டால், உயிர் காரகத்துவமாக தாயைக் குறிக்கும். அதைப் போலவே கல்வியையும் குறிக்கும். வீட்டையும், இருக்கும் ஊரையும் குறிக்கும். மூன்றாம் வீடு கெட்டுப் போயிருந்தால் சகோதர ஸ்தானம் போய்விட்டதா என்றால் இல்லை. காரணம் அது மட்டுமே அங்கே தீர்மானம் செய்யாது.

சகோதர உயிர் காரகத்துவத்தை தனக்குள் வைத்திருக்கக்கூடிய கிரகம் செவ்வாய். இந்தச் செவ்வாயும் பலம் குறைந்து இருந்தால்தான் உங்களுக்கு அந்தக் குறிப்பிட்ட உயிர் காரகத்துவம் குறித்துச் சொல்ல முடியும். எனவே, ஒரு காரகத்துவத்தை அதாவது ஒரு குறிப்பிட்ட விசயத்தை அது சகோதரனோ, பிள்ளையோ, தந்தையோ, தாயோ, தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், இரண்டையும் இணைத்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம், நடக்கக்கூடிய கிரக தசா புத்திகளின் அமைப்பையும், கோள் சார அமைப்பையும் பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு நாம் வர முடியும். பல ஜாதகங்களில் நிராகரிக்கப்பட்டது என்று சொல்லக்கூடிய பல பலன்கள் அவர்களுக்கு வாழ்நாளில் கிடைத்துவிடுகிறது.

காரணம் என்ன என்று சொன்னால், லக்னாதிபதி பலமாக அமைந்து, யோக திசைகள் நடக்கும் பொழுது, அதிலே வரக்கூடிய ஏதாவது ஒரு புத்தி, சாதகமான கோசாரம், என இரண்டும் இணைகின்ற பொழுது அந்தப் பலனைத் தந்துவிடுகிறது.

இப்பொழுது ராகு-கேதுவுக்கு வருவோம். புத்திரஸ்தானம் எனப்படுகின்ற ஐந்தாம் இடத்தில், இந்த சர்ப்ப கிரகங்கள் அமர்ந்துவிட்டால், அவர்களுக்கு குழந்தைச் செல்வம் இருக்காது என்பதை பலரும் எளிதாகச் சொல்லி விடுகின்றார்கள். ஆனால், அது அப்படி அல்ல என்பது சில உண்மையான ஜாதகங்களைப் பார்க்கின்ற பொழுதுதான் நமக்குத் தெரிய வருகின்றது. அப்பொழுதுதான் நான் மேலே சொன்ன உண்மைகளும் புரியும். ராகு ஐந்தில் இருந்தாலும்கூட அவர்களுக்கு பிள்ளைப்பேறு கிடைப்பதற்கு, இரண்டு காரணங்கள்.

1. ராகு அமர்ந்த நட்சத்திர அதிபதியின் யோக நிலை அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் ஐந்தாம் பாவத்தோடு ஏற்பட்ட தொடர்பு.

2. புத்திரஸ்தானம் கெட்டுப் போயிருந்தாலும், குழந்தைக்குக் காரகத்துவம் படைத்த குருபகவான் வலிமையோடு இருந்து, ஏதாவது ஒரு விதத்தில் ஐந்தாம் பாவத்தோடு தொடர்பு கொள்வது.

இந்தத் தொடர்புகளை கணக்கிடாமல், நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. அடுத்து அந்தத் தொடர்புகள் செயல்படும் நேரத்தை, நாம் தசாபுத்தி கோள்சாரம் மூலம் தெரிந்து கொள்ளுகின்றோம். இந்த அடிப்படையில் அலசி ஆராய்ந்தால், ராகு - கேது ஐந்தாம் பாவத்தில் அமர்ந்த பல ஜாதகங்களில், புத்திர பாக்கியம் அமைந்திருப்பதைக் காண முடியும். அதைவிட இன்னொரு அமைப்பையும் பார்க்க வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரத்தில் “பாவத் பாவ” அமைப்பு என்பார்கள். உதாரணமாக ஐந்தாம் இடத்துக்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடம், அதாவது பாக்கிய ஸ்தானம் பலமாக அமைந்து, பாக்கியஸ்தான கிரகம், ஏதாவது ஒரு விதத்தில் ஐந்தாம் பாவத்தோடும் தொடர்பு கொண்டு, அதற்குரிய தசா புத்திகள் நடந்தால், நிச்சயம் அவர்களுக்குச் சந்தான பாக்கியம் உண்டு.

இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. சந்தான பாக்கியத்தை தீர்மானித்து விட்டாலே அவர்களுக்கு திருமண பாக்கியமும் உண்டு என்று ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால், நவீன காலத்தில் அப்படிப்பட்ட முடிவுக்கும் வர முடியாத நிலைதான் இருக்கின்றது. அதற்குக் காரணம், காலத்தின் தாக்கம். இதில் இன்னொரு விசேஷமும் பார்க்க வேண்டும்.

ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால், பதினோராம் இடத்தில் கேது இருப்பார். ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால், 11-ஆம் இடத்தில் ராகு இருப்பார். கேது திசை ஏழு வருடங்கள். ராகுவின் திசை 18 வருடங்கள். ஒரு ஜாதகருக்கு இளமையில் கேது திசை கழிந்து போய் இருந்தால், ஐந்தாம் இடத்தில் கேது இருந்தாலும்கூட அவருக்கு பதினோராம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு திசை கை கொடுக்கும்.

காரணம், பதினோராம் இடம் சனி. ராகு- கேது முதலிய கிரகங்களுக்கு யோகம் தரும் அமைப்புள்ள ஸ்நானங்கள் அல்லவா. இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நான் பார்த்த ஒரு ஜாதகத்தில், ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தார். ஐந்தாம் இடத்தில் ராகு நட்சத்திர நாதன் குரு, லக்னத்துக்கு 11-ஆம் இடத்தில் இருந்தார்.

ஐந்தாம் இடம், ராகு தோஷம் வேலை செய்யவில்லை. நட்சத்திர நாதன் குரு பதினோராம் இடத்தில் இருந்து தன்னுடைய நேர் ஏழாம் பார்வையால், 5ம் இடத்தில் அமர்ந்த ராகுவின் வீரியத்தைக் குறைத்ததால், ஜாதகருக்கு நல்ல சந்தான பாக்கியம் கிடைத்தது. லக்னாதிபதியும் திரிகோணாதிபதிகளான 5:9க்கு உரியவர்கள் பலம் பெற்றாலும்கூட, அந்த ஜாதகத்தில் மற்ற தோஷங்கள் நீங்கிவிடும். இப்பொழுது 11-ஆம் இடத்தை ஏன் சொன்னேன் என்றால், அதிலும் ஒரு நுட்பம் உண்டு. ஐந்தாம் இடத்துக்கு ஏழாம் இடம்தான் பதினோராம் இடமாக மாறுகிறது. அப்படியானால் என்ன பொருள் என்று சொன்னால், ஐந்தாம் இடத்தில் உள்ள குழந்தைக்கு, அதன் ஏழாம் இடமான திருமண பாக்கியஸ்தானம் வலுவடைந்து இருப்பதால், ஜாதகருக்கு சந்தான பாக்கியம் உண்டு என்பதை நாம் மறைமுகமாக தெரிந்து கொண்டுவிடலாம்.

அதைப் போல, ஜாதகரின் கர்மஸ்தானம் பலமாக இருந்தாலும்கூட அவருக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு விதத்தில் தாமதமாகவாவது ஒரு குழந்தை பிறக்கும். அதற்குத் தோதாக ஐந்தாம் இடத்தோடு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு தசாபுத்தி நடந்தால்கூட அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும்.

இப்படிப்பட்டவர்கள், சில எளிய பரிகாரங்கள் செய்வதன் மூலமாகவும், குழந்தை வரம் தருகின்ற திருக்கோயில்களுக்குச் சென்று வணங்குவதன் மூலமாகவும், கந்தசஷ்டி விரதம் போன்ற விரதங்கள் இருப்பதன் மூலமாகவும், நிச்சயம் அவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கும். அதற்கு ஐந்தாம் இடத்தில் உள்ள ராகுவோ கேதுவோ தடையாக இருக்க மாட்டார்கள்.