Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜோதிடர் அமைவதுகூட இறைவன் கொடுத்த வரம்தான்

ஒருவருக்கு கணவன் அமைகிறது, மனைவி அமைகிறது, குழந்தைகள் அமைகிறது, பெற்றோர்கள் அமைகிறார்கள், உத்தி யோகம், வீடு, குடும்ப வைத்தியர் என அமைகிறார்கள். அது போலவே, ஜோதிடரும் அமைய வேண்டும். ஆனால், அதற்கும் விதி இருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் 60 வயது உள்ள ஒரு நண்பர் என்னிடம் ஜாதகத்தோடு வந்தார். அவருக்கு ஒரு குறை இருந்தது. அவர் ஒரு பிரபலமான ஜோதிடரிடம் எப்பொழுதும் தன்னுடைய ஜாதகத்தைக் காட்டுவார். அவர் இவருக்கு ஆலோசனைச் சொல்லுவார். அந்த ஆலோசனையின் படி அவர் நடந்து கொள்வார். சில சில கஷ்டங்களின் போது அவர் தொலைபேசியில்கூட இவருக்குப் பரிகாரங்களைச் சொல்லுவார்.

அவரை மாதிரி ஒரு ஜோதிடரைப் பார்க்கவே முடியாது.

எழுந்திருப்பதும், ஜவுளிக்கடைக்குப் போய் சட்டை வாங்குவதும் எல்லாம் அவர் யோசனைப்படிதான். “அவரோடு எப்போதும் இருப்பீர்கள் என்று சொல்லுங்கள்” என்றேன்.

சிரித்தபடி ``அப்படிதான்” என்றார். அப்படி சிலருக்கு அமைவது உண்டு. அதற்கும் ஜாதகத்தில் விதி வேண்டும் அல்லவா... 130 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில், ஒரு 200 300 பேருக்குத்தானே அந்த வாய்ப்பு வரும். அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இப்பொழுது நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்;

``ஐயா நீங்கள் கொடுத்துவைத்தவர். மருத்துவரை கையோடு வைத்துக் கொண்டு வைத்தியம் பார்த்திருக்கிறீர்கள். சரி... அவரை நீங்கள் எப்போது சந்தித்தீர்கள்? எப்படி அறிமுகம்?’’ அவர் சொன்னார்;

``ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் மூலம் அவரைச் சந்தித்தேன்’’

``சரி இப்பொழுது அவர் எங்கே இருக்கிறார்?’’ உடனே அவர் சோகமானார்;

``இப்போது இல்லை. அவர் காலமாகிவிட்டார்’’

``அப்படியானால், உங்கள் 54 வயதில் அவரைச் சந்தித்து, சுமார் மூன்றாண்டுகள் அவருடைய ஆலோசனையைப் பெற்று இருக்கிறீர்கள். பிறகு அவர் இறந்துவிட்டார். இப்பொழுது உங்களுக்கு ஆலோசனை சொல்வதற்கு ஆட்கள் இல்லை.’’

``அவரைப் போல ஆலோசனை சொல்வதற்கு ஆட்கள் இல்லை.’’

``சரி.. அந்த ஆலோசனையின் மூலம் நீங்கள் அடைந்த அதிகபட்ச பலன் என்ன?’’

``என்ன கேட்கிறீர்கள்?’’

``பெரிய அளவு உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்ற ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா? அல்லது ஒரு மிகப் பெரிய ஆபத்தில் இருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டீர்களா?’’ அவர் சொன்னார்;

``அப்படியெல்லாம் பெரிய அளவில் ஒன்றுமில்லை. சில நேரங்களில் வீடு வாங்குவதா என்று கேட்பேன். வாங்க வேண்டாம் என்பார். இல்லாவிட்டால் வாங்கு என்பார். இப்படி சின்னசின்ன விஷயங்களைத்தான் பயன் அடைந்திருக்கிறேன்.’’

``சரி அவரைச் சந்திப்பதற்கு முன்னால், 54 வயது வரை உங்களுக்கு வந்த பிரச்னையை எப்படித் தீர்த்துக் கொண்டீர்கள்?’’

``அப்பொழுதும் சில ஜோதிடர்களிடம் காட்டினேன். சில நேரங்களில் சரியாக வரும். சில நேரங்களில் ஏறுக்கு மாறாக வரும். பிறகு ஜோசியம் பார்ப்பதையே விட்டுவிட்டேன். ஏதேனும் கஷ்டம் என்றால், நேராக ஏதாவது ஒரு கோயிலுக்குச் சென்று, என்னுடைய

பிரச்னையை இறைவனிடம் சொல்லிவிட்டு வந்துவிடுவேன்.’’ இப்பொழுது நான் சொன்னேன்;

``சரியாகச் சொன்னீர்கள். அவரைச் சந்திப்பதற்கு முன் கடவுள் நேரடியாக உங்கள் பிரச்னை எல்லாம் தீர்த்து வைத்திருக்கின்றார். அவரைச் சந்தித்த பிறகு அவர் மூலமாக கடவுள் உங்களுக்கு ஆலோசனை கிடைக்கச் செய்து சில பிரச்னையை தீர்த்து வைத்திருக்கின்றார். இனியும் அதே கடவுள் உங்களுக்கான பிரச்னைகளை தீர்த்துவைப்பார்’’

``அப்படியானால், என் ஜாதகத்தைப் பார்க்கவில்லையா?’’

``அவசியம் இல்லை. அடுத்து அந்த அளவுக்கு துல்லியமாகச் சொல்ல முடியாது. நீங்கள் பழையபடி கோயிலுக்குச் செல்லுங்கள். உங்கள் பிரச்னைகள் சரியாகும். அவர் (கடவுள்) பரிகாரம் சொல்லமாட்டார்.’’

``பிறகு?’’

``பயப்படாதீர்கள். அவரே பரிகாரம் தானே.. அவரைவிட பெரிய பரிகாரம் என்ன இருக்கிறது?’’ இப்படிச் சொல்லிவிட்டு அவரிடம் சொன்னேன்;

``இன்னொரு நுட்பமான விஷயத்தையும் நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். நீங்கள் அந்த ஜோதிடரை உங்கள் கையில் வைத்திருந்த பொழுது, சில நேரங்களில், சில பிரச்னைகளுக்காக, அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது, தொடர்பு கொள்ள முடியாமல் போயிருந்திருக்குமே, அதனால் சிரமப்பட்டு இருப்பீர்களே?’’ என்று கேட்ட பொழுது,

``ஐயா, சரியாகச் சொல்லுகின்றீர்கள். அப்படித்தான் சில வேலைகளில் நடந்துவிட்டது. ஒரு முக்கியமான முடிவெடுக்க அவரைத் தொடர்பு கொண்டபோது, தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் சிறு நஷ்டம், அமைதிக்குறைவு ஏற்பட்டது’’ நான் சொன்னேன்;

``அதுதான் உண்மை. சாட்ஷாத் பகவானே அர்ஜுனனுக்குச் சாரதியாக அமைந்து, அதே போர்க்களத்திலே சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும், இன்னொரு பகுதியில் தனியாக மாட்டி சண்டையிட்டுக் கொண்டிருந்த அபிமன்யுவைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டால்தான் நீங்கள் ஜோதிடத்தின் எல்லையைப் புரிந்து கொள்ள முடியும். கடவுளோ, ஜோதிடரோ உங்களைக் காப்பாற்றும் நேரத்தில், காப்பாற்றிவிடுவார். கவலைப் படாதீர்கள் எல்லோரையும் ஜோதிடர் காப்பாற்ற வேண்டும் என்றால், நடைமுறையில் சாத்தியமில்லை.’’ அவர் சென்றுவிட்டார். நான் யோசித்தேன்.

ஜோதிடம் என்பது அற்புதமான கலை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நம்முடைய மகரிஷிகள் சக்தி வாய்ந்த தவத்தினால் மனித குலத்துக்கு இந்தக் கலையைக் கொடுத்தார்கள். ஆனால் நான் திரும்பவும் சொல்வது, இது ஒரு யூகக்கலை. வானில் கிரக நகர்வுகளைக் கொண்டு இப்படி நடக்கலாம் என்று யூகிக்கும் கலை.

அப்படியானால் இது விஞ்ஞானம் இல்லையா? என்று கேட்கலாம். விஞ்ஞானம்தான். ஆனால், மெய்ஞ்ஞானத்தோடு கூடிய ஒரு விஞ்ஞானம். விஞ்ஞானமே ஒரு யூகக் கலைதான் என்று சொல்லும் பொழுது, ஜோதிடம் மட்டும் எப்படி நிர்ணயத்த நிச்சயமான, ``கட்டாயம் நடக்கும்’’ என்று சொல்லக்கூடிய கலையாக இருக்கும்? சமீபத்தில் ஒரு அனுபவம்.

நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இரண்டு வாரங்களுக்கு முன் சென்னைக்குத் தென்கிழக்கே ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அதனுடைய துல்லியமான செயற்கைக்கோள் படம், கண்பார்வையில், (பிரத்யட்சமாக) நம்முடைய கையில் இருந்தது. ஆனால், அதன் திசைமாற்றமோ, நகரும் வேகமோ ஊகிக்க முடிந்ததே தவிர, துல்லியமாக கணிக்க முடியவில்லை. இருந்தாலும் அதனுடைய நகர்வுகள், அடர்த்தி, இவைகள் எல்லாம் ஊகிக்கப்பட்டு, அது சென்னையில் பெரு மழையைத் தரலாம், புயலாக மாறித் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதனை ஒட்டித்தான் நிகழ்வுகள் நடந்தன. கடைசியில் அது சென்னைக்கு இன்னும் வட கிழக்காக நகர்ந்து ஆந்திராவில் வேகம் குறைந்து கரையைக் கடந்தது. சென்னை தப்பித்தது. ஏதோ ஒரு விதத்தில் எதிர்பார்த்த நிகழ்வு நடக்காவிட்டாலும், நாம் தயாராக இருந்ததால், ஓரளவு தப்பித்தோம். அப்படித்தான் ஜோதிடமும். மேக நகர்வுகளைக்கொண்டு மழையின் அடர்த்தியைக் கணிப்பது போலவே, கிரக நகர்வுகளைக் கொண்டு, என்னென்ன நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லாமே தவிர, மேஜையை அடித்து, நான் சொன்னால் சொன்னதுதான், கட்டாயமாக நடந்தே தீரும் என்று சொன்னால், பல நேரங்களில் ஏமாந்துவிடுவோம். சில நேரங்களில் ஊகித்தபடி நடப்பதாலேயே அதே விஷயம் எல்லா நேரங்களிலும் நடந்துவிடும் என்பது நிச்சயம் இல்லை.

ஆனால், நன்மையோ தீமையோ ஓரளவு முன்கூட்டியே ஊகிப்பதன் மூலம், நாம் அதை எதிர்கொள்வதற்கு தயாராக சில விஷயங்களைச் செய்து கொள்ள முடியும் என்பதுதான் ஜோதிடம் பார்ப் பதால் நமக்கு ஏற்படுகின்ற நன்மை.