Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆடிப்பூர உற்சவங்கள்

தீ மிதித்தல்

ஆடி மாதங்களில் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும் பூக்குழி இறங்குதல் அல்லது தீமிதித்தல் என்ற விழாவோடு நிறைவு பெறும். திரௌபதி அம்மன் கோயில்களிலும், குறிப்பாக வட மாவட்டங்களில் மஹாபாரதம் பாடி, தீ மிதித்தல் விழா நடைபெறும். ஆடி மாதம் என்பது இந்தியாவில் வெயில் மற்றும் மழைக்காலத்திற்கு இடையிலான காலம். இக்காலத்தில் பலவிதமான நோய் தொற்றுக்கள் எளிதில் உண்டாகும். இந்த மாதத்தில் தீ மிதிப்பதால் உடலின் பல நோய்கள் நீங்கும் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். எனவே தான் பழங்காலத்தில் மஞ்சள்காமாலை முதலிய நோய்களுக்கு காலில் சூடு வைத்து குணப்படுத்தப்பட்டது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு வணக் கத்தின் பரிணாமம் இது என்கிறார்கள். தீ மிதிப்பவர்கள் குறிப்பாக ஆடி மாதத்தில் தான் மிதிப்பர்.

ஆடிப்பூர உற்சவங்கள்

ஆடி சந்திரனுக்குரிய மாதம். பூரம் சுக்கிரனுக்குரிய நட்சத்திரம். மகா லட்சுமிக்குரிய நட்சத்திரம். மகாலட்சுமியும் சந்திரனும் பாற்கடலில் தோன்றியவர்கள் என்பதால் சகோதரிகள். எல்லா பெருமாள் கோயில்களிலும் ஆடிப்பூரம் களை கட்டும். திருச்சி தொட்டியம் அருகில் அரசலூர், ஸ்ரீநவநீத கிருஷ்ண பெருமாள் திருக்கோயில் மூர்த்திகள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் மிகுந்த கலை நுணுக்கம் கொண்டவை. இங்கே ஆடிப்பூரம், 100 தடா அக்கார அடிசில் செய்து சிறப்பாகக் கொண்டாடப்படும். ஸ்ரீரங்கம் ஆடிப்பூரத்தில் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம் கண்டருளுவார். திண்டுக்கல்லில் இருந்து 20 கி. மீ தொலை வில் உள்ளது வடமதுரை. சவுந்தரராஜப் பெருமாள் கோயில். சவுந்தரவல்லி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமாள் இங்கு காட்சி தருகிறார். இங்கு ஆடியில் திருக்கல்யாணம் சிறப்பு. மாம்பலம் கோதண்ட ராமர் சந்நதியில் ஸ்ரீ ரங்கநாதர் ஆடி கருட சேவையும் கஜேந்திர மோட்சம் உற்சவமும் (ஆடி16) நடைபெறும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்கு ஜேஷ்டாபிஷேகம் ஆடியில் (ஆடி7) நடைபெறும்.

மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உற்சவங்கள் நடைபெறுவதற்காகவே வீதிகள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என்று மாதங்களின் பெயரில் உண்டு. ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் விளை நிலங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து மீனாட்சி அம்மனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக் கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் வீதியில் உலா வரும் போது சிறப்பு நாதஸ்வரம் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசையுடன் அம்மனை சேர்த்தி சேர்ப்பர். தினசரியும் அம்மன் அன்னம், காமதேனு, யானை, ரிஷபம், கிளி வாகனத்தில் எழுந்தருள்வார். 7வது நாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 8ஆம் நாள் குதிரை, 9ஆம் நாள் இந்திர விமானம், 10ஆம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.