Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆன்மிகமும் ஜோதிடமும்

ஜோதிட சாஸ்திரம் என்பது அதி அற்புதமான சாஸ்திரம். ஆனால் கடல் போன்ற அந்த சாஸ்திரத்தில், கூழாங்கற்களைப் போல சில அற்ப உலகியல் பலன்களை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். காரணம் அதுதான் பிரதானமாக இருக்கிறது. எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடக்கும்? அதிகமான பணம் எனக்குக்கிடைக்குமா? கோடீஸ்வர யோகம் கிடைக்குமா? மிகப்பெரிய பதவியை அடைய முடியுமா? என்பதெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா என்றால் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். இந்த “ஓரளவு” என்பது மிக முக்கியமான விஷயம்.காரணம், எத்தனைக் கணக்குகள் போட்டு குட்டிக் கரணம் அடித்தாலும் நம் கைக்குப்பிடிபடாத ஒரு நுட்பமான கலை ஜோதிடக் கலை. இதை அநேகமாக எல்லா ஜோதிடர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.நான் 100% மிகச் சரியாகச் சொல்வேன் என்று, எனக்குத் தெரிந்து எந்த ஜோதிடரும் சொன்னது கிடையாது. 80 சதவிகிதம் பலன் சரியாக இருந்தால் அவர் மிகப்பெரிய ஜோதிடர் என்று தான் மிகப்பெரிய ஜோதிடர்களும் சொல்லுகின்றனர்.ராமாயணத்தில் சீதைக்குத்திருமண நாள் குறிக்கின்ற பொழுது மகரிஷிகள் எல்லாம் சேர்ந்துதான் நேரம் குறிக்கிறார்கள். அந்த நேரத்தில் அந்த வைபோகம் நடந்து விடுகிறது.பட்டாபிஷேகம் நடத்துவதற்கும் இவர்கள்தான் நாள் வைக்கிறார்கள். ஆனால் பட்டாபிஷேகம் தவறி விடுகிறது.மகாபாரதத்தில் துரியோதனன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜோதிட கலையில் வல்ல சகாதேவன் நாள் குறித்துக்கொடுக்கின்றான். ஆனால் வென்றது பாண்டவர்கள். காரணம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகின்றான் கண்ணபிரான்.அதனால் நான் அடிக்கடி சொல்வது, ஜோதிடத்தைப் பார்த்துச் சின்னச் சின்ன விஷயங்களைத் தெரிந்துகொள்வதை விட, ஆத்ம விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்படியானால் சின்னச் சின்னவிஷயங்களைத் தெரிந்து கொள்ளக் கூடாதா? என்று கேட்டால், நீங்கள் என்ன தெரிந்து கொண்டாலும் நடப்பதுதான் நடக்கிறது. அதை இறைவனிடத்திலே ஒப்படைத்து விட்டு நீங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், எதை மிகச்சரியாக செய்ய வேண்டுமோ அதைச் செய்துவிட்டு போங்களேன்.வேத சாஸ்திரத்தில், ஒரு சில வழிபாடுகள் உள்ளன. அதைத்தவம் என்று வைத்துக் கொள்ளலாம். யாகங்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.இதைச் செய்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று இருக்கிறது அது வாஸ்தவம் தான். ஆனால் அதை நிறைவேற்றித் தருவதற்கு பகவானுடைய அருள் இருந்தால் தானே முடியும்.அவருடைய அருள் இருந்துவிட்டால், இதைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே?ராமாயணத்தில் ராம லட்சுமணர்களை வெல்வதற்கு பலவிதமான வர பலங்களைப் பயன்படுத்துகின்றார்கள் ராவணனும் இந்திரஜித்தும். அவர்களிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களும் பயன்படாத போது, புதிய ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் இந்திரஜித் நிகும்பலா யாகம் செய்வதற்குப் புறப்படுகின்றான்.யாகம் செய்து புதிய ஆயுத பலத்தைப் பெற்றுத்தான் சண்டையைத் தொடர முடியும்.ஆனால் நிகும்பலா யாகம் முடிப்பது என்பது யாருடைய கையில் இருக்கிறது? அதற்கு பகவானுடைய அனுமதி வேண்டுமே! பகவானை எதிர்த்து ஒரு காரியத்தைச் செய்வதற்காக நிகும்பலா யாகம் பண்ணுகின்ற பொழுது அது எப்படிப் பலன் தரும்? பகவானை எதிர்த்து என்பது, பகவா னுடைய விருப்பங்களை எதிர்த்து என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.பகவானுடைய விருப்பம் நமக்கு எப்படித் தெரியும் என்று கேட்கலாம்?பகவான் என்ற தத்துவத்தின் அடிப்படை, பிறருடைய துன்பங்களைத் துடைப்பது, பிறருக்கு நன்மையைச் செய்வது தான்.

இந்த உலகம் எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்பதற்காக என் னென்ன நன்மைகளைச் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் ஒரு தனி மனிதன் தன்னுடைய முயற்சியினாலும் புத்தியாலும் செய்வது தான் இறைவனுக்குப் பிரியமானது. இதுதான் சகல சாஸ்திரங்களின் சாரம்.நீங்கள் பிராயச்சித்தமாக ஒரு புனிதமான ஆற்றில் குளித்துவிட்டு, கட்டிய துணியை அந்த ஆற்றின் பக்கத்திலேயே எறிந்து விட்டுப் போவது என்பது எப்படி முழுமையான பிராயச்சித்தமாக இருக்க முடியும்?அது சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது. பலருக்கு இடைஞ்சலைத் தருகிறது. அப்படியானால் நீங்கள் ஒரு பாவத்தை கழித்துக் கொண்டு, அதே நேரத்தில் மற்றொரு பாவத்தைச் செய்கின்ற சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது அல்லவா.! இவற்றை எல்லாம் மனதில் உணர்ந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்பதை சாஸ்திரம் காட்டுகிறது.ஜோதிட சாஸ்திரத்தில் என்ன ஆன்மிகம் இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு ஒரு அற்புதமான செய்தியைத்தருகின்றேன்.ஜனனம் என்பது லக்னம். மரணம் என்பது அதனுடைய 12-வது வீடு. ஒரு வீட்டின் பலனை அதனுடைய 12 வது வீடு பலமிழக்கச் செய்துவிடும். இது ஜோதிடத்தின் மிக மிக அடிப்படையான விதி.ஒரு திருமண பொருத்தத்தைப் பார்க்கின்றோம். ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி ஆறில் இருக்கிறான் என்று சொன்னால் என்ன பொருள்? ஏழாம் பாவகத்தை ஆறாம் பாவம் கெடுக்கிறது என்று பொருள்.இதற்குப் பல துணை விதிகள் உண்டு. கிரகத்தின் நிலை, வாங்கிய சாரம், என்று பல விஷயங்களைப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.

ஆனாலும் அடிப்படை இதுதான். ஏழாம் பாவகத்தின் பல்வேறு காரகத்துவத்தை ஆறாம் பாவகம் தடுக்கிறது என்று அர்த்தம்.இதை ஒவ்வொரு பாவகத்துடன். பொருத்திப் பார்க்கலாம். எட்டாம் பாவகம் நோய் நொடிகள். ரண சிகிச்சைகள். நிம்மதி இல்லாத வாழ்க்கை என்றால் அந்த பாவகத்தைக் கெடுப்பது அதன் 12-ஆம் பாவகமான ஏழாம் பாவகம். ஏழாம் பாவகம் என்பது இல்லற வாழ்க்கை. இல்லற வாழ்க்கை நன்றாக இருந்தால், அவன் ஏன் எட்டாம் பாவகத்தின் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றான்?ஆறாம் பாவகம் நோய் என்றால் அந்த நோய் தீர்க்கும் மருந்து ஐந்து தானே. ஐந்தாம் பாவகம் வலிமை பெறுகின்ற பொழுது ஆறாம் பாவகத்தின் நோய் நொடி, கடன் தொல்லை, எதிரிகள் எல்லாம் இருக்க மாட்டார்கள் அல்லவா. ஐந்தாம் பாவகம் என்பது ஒரு சந்தோஷமான மனநிலை. உளவியல் படி சந்தோஷமான மனநிலையில் உள்ளவங்களுக்கு ஆறாம் பாவகமாகிய நோய் நொடி எப்படி வேலை செய்யும்?இந்த அடிப்படை ஞானத்தைத் தருவது ஜோதிட சாஸ்திரம். இதை ஆன்மிகத்தில் எப்படிப் பயன்படுத்தலாம்?லக்னம் என்பது ஜனனம் ஒருவருடைய பிறப்பு என்று பார்த்தோம். அந்த பிறப்பைக் கெடுப்பது, முடித்து வைப்பது மரணம். அது 12-ஆம் பாவகம். அதனால் தான் அதை தூக்கத்திற்கும் வைத்தார்கள்.திருவள்ளுவர் தூக்கத்தையும் மரணத்தையும் இணைத்து குறள் பாடி இருக்கின்றார்.உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. இந்த 12 ஆம் பாவகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

தேஜஸ்வி