Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறப்பு வாய்ந்த மார்கழி திருவாதிரை நட்சத்திரம்

பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. அதனாலேயே மார்கழி மாதம் வரும் திருவாதிரை மிகவும் சிறப்பாக கருதப் படுகிறது. ஏன் தெரியுமா? அன்றுதான் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தை. அவளுக்கு திருமணம் நடந்தது. அந்த காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும். ஆனால் திரேதாயுகாவின் கணவன் திருமணமான மூன்றாவது நாளே இறந்து விடுகிறான். தன் வாழ்க்கை பறிபோய்விட்டதை நினைத்து, பார்வதி தேவியை வணங்கி ‘உன் பக்தையான எனக்கு ஏன் இந்த கதி’ என கதறுகிறாள் திரேதாயுகா.

தன் பக்தையின் அலறளைக் கேட்ட தேவி, அவள் கணவனுக்கு உயிர் பிச்சை அளிப்பதாக சபதம் செய்கிறாள். பார்வதியின் சபதத்தை கேள்விப்பட்ட யமன் கதிகலங்கி, உடனே திரேதாயுகாவின் கணவனுக்கு உயிர் அளிக்கிறான். பூலோகத்தில் திரேதாயுகாவின் கணவன் உயிர் பெற, திரேதாயுகா பார்வதி தேவிக்கு நன்றி கூறுகிறாள். அப்போது சிவனும் பார்வதியும் அவர்கள் எதிரில் காட்சி தருகின்றனர். சிவன் பூமியில் தோன்றிய அந்த நாள் மார்கழி மாத திருவாதிரை நாள். அவர் பூமிக்கு வந்ததை கொண்டாடுவதே ஆருத்ரா தரிசனம்.

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை என்பது குறித்து புராணச் செய்திகள் பல உள்ளன. சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது.

திருவாதிரை விரதம்

அன்றைய தினம் திருமணமான பெண்கள் மாங்கல்ய நோன்பு விரதம் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோவிலுக்கு சென்று சிவ பார்வதியை வழிபட்டால் தம்பதியினர் ஒற்றுமையாக வாழ்வார்கள். கன்னிப்பெண்களுக்கு நினைத்த வாழ்வு அமையும். அன்றைய நாள் விரதம் இருந்து 18 வகையான காய்கறிகளை சமைத்து இறைவனுக்கு படைத்து சந்திரனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். பிறகு பூஜையில் வைக்கப்பட்டுள்ள மஞ்சள் சரடினை கணவன் கையால் கட்டிக் கொள்ள வேண்டும்.

ராஜிராதா, பெங்களூரூ.