Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குருவி ஞானம்

சாலையோரத்து ஆலமரம். மூட்டை முடிச்சுகளுடன் வந்த ஒரு மனிதன் ‘உஸ்..’ என்று தன் களைப்பை வெளிப் படுத்தியபடி, மரத்தின் அடியில் அமர்ந்தான். நீண்ட தொலைவு வெயிலில் நடந்து வந்ததால் அவன் உடலில் வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அவன் முகத்தில் இனம்புரியாத ஒரு கவலை ரேகை. எதையோ பறிகொடுத்த தோற்றம்.
அந்த மனிதனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன மரத்தில் இருந்த இரு குருவிகள் ஒன்று ஆண் குருவி. இன்னொன்று பெண் குருவி.
பெண் குருவி கேட்டது: ‘‘இந்த மனிதர்கள் ஏன் எப்போதும் கவலையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்?’’
ஆண் குருவி பதில் கூறியது: ‘‘தம் உணவுக்காகத்தான் இப்படி அலைகிறார்கள்.’’
பெண் குருவி விடவில்லை. ‘‘நாமும் தான் உணவுக்காக அலைகிறோம். நாம் கவலைப்படுவதில்லையே?’’
‘‘அவர்களுக்கும் நமக்கும் இரண்டு வித்தியாசங்கள் இருக்கின்றன.’’
‘‘என்ன வித்தியாசங்கள்’’
‘‘முதல் வித்தியாசம், நாம் இறைவனை சார்ந்து வாழ்கிறோம். அவன் அருளால் உணவு கிடைக்கும் என்று நம்புகிறோம். மனிதர்கள் அவ்வாறில்லை. அவர்கள் இறைவனைச் சார்ந்திருப்பதில்லை. தம் முயற்சியினால் மட்டும் தான் கிடைக்கிறது என்று அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.’’
‘‘எவ்வளவு ஆணவம்! சரி, இன்னொரு வித்தியாசம்?’’
‘‘அது, கிடைத்ததைப் பெற்று இறைவனுக்கு நன்றி செலுத்தும் குணம். மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும் நிறைவு ஏற்படுவதில்லை. அதனால் இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் இல்லை. மேலும் செல்வம் சேர்ப்பதிலேயே தன் வாழ்நாளைக் கழித்து விடுகிறார்கள். எப்போதும் அந்தக் கவலை தான்! அப்புறம் என்று நிம்மதி அவனை தேடி வரும்?’’
‘‘நல்லா சொன்னீங்க. ஒரு விஷயத்துக்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.’’
‘‘எதுக்கு?’’
‘‘நல்லவேளை, இறைவன் நம்மை மனித இனத்தில் படைக்கவில்லை.’’
  - சிராஜுல் ஹஸன்.
இந்த வார சிந்தனை
‘இறைவா, இறையச்சமற்ற உள்ளம், உள்ளதைக் கொண்டு திருப்தியுறாத மனம், பயன் தராத கல்வி, ஏற்றுக் கொள்ளப் 
படாத பிரார்த்தனை ஆகியவற்றிலிருந்து 
பாதுகாப்பு வேண்டுகிறேன்’ (நஸாயி).