ஆலவாய் நகரில் மாரியம்மன் தெப்பக்குளம் மேற்குக் கரையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் “அருள்மிகு ஸ்ரீமரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் திருக்கோயில்.” பற்பல அபூர்வ சிறப்புகள் கொண்ட பண்டைய திருத்தலமாகும்! மதுரை - இராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையின் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. திருவிளையாடல் புராணம், மதுரை கோயில்கள் திருப்பணி பற்றிய “திருவாலவாயுடையார் திருப்பணி மாலை” மற்றும் நாயக்கர் கால வரலாற்றுகளில் இவ்வாலயத்தின் தொன்மை அதன் தோற்றம் குறித்தும் தெரிய வருகிறது.
மதுரையில் உள்ள பஞ்சபூதத் திருத்தலங்களில் இக்கோயில் “வாயுத் தலமாகும்.” அத்துடன் அரிய சக்தி வாய்ந்த தல விருட்சமாக வில்வ மரங்கள் இரண்டு உள்ளன. சிவபெருமான் அருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல் புராணத்தில் “ஐராதவதம் சாபம் தீர்த்த படலம் மற்றும் இந்திரன் சாபம் தீர்ந்த படலம்” ஆகிய நிகழ்வினால் உருவான திருக்கோயில் என்பது குறிப்பிடத்தக்கது!
இக்கோயிலுக்குள் நுழைந்ததும் இறைவனை நோக்கி நாலு கால் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நந்தி பகவான் நம்மனதை பெரிதும் கவர்ந்திழுக்கிறார்! அவருக்கு முன்பு பலிபீடம், எதிரே மகா மண்டபத்திலிருந்து இறைவனை நேரடியாக தரிசிக்கும் அமைப்பில் “மூலவர் முக்தீஸ்வரர்” வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
அருகே பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன் மற்றும் சிவலிங்கமும் அமைந்திருக்கின்றன. சுவாமி சந்நதிக்கு செல்லும் முன்னரே வலது பக்கம் “மரகதவல்லி அம்மன்” தனி சந்நதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.மகாமண்டபத்தில் உள்ள 26க்கு மேற்பட்ட தூண்களிலும் பல்வேறு தெய்வ சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல வெளிப்பிராகாரத்தை சுற்றி வரும்போது ஒரு தூணில் கற்பக மரம் அதற்கு கீழே சதுர ஆவுடையில் சிவலிங்கம் அந்த சிவலிங்கமேனியில் ஒரு பெரிய மரகத பச்சை பதக்க மாலையுடன்...? சிவலிங்கத்தை பின்புறமாக ஒரு சர்ப்பமும், முன்புறமாக ஒரு (கிளி?) குருவியும் ஒன்றோடு ஒன்று உச்சி முகர்ந்து நிற்பது போன்ற காட்சி மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருக்கிறது! இதே தூணின் பின்புறம் தலையில் சுமை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிவனடியார் லிங்கத்தை பூஜித்து வழிபடும் காட்சி, இங்கும் அதே கற்பக மரம், கீழே சிவலிங்கம் அந்த லிங்கமேனியில் பதக்க மாலை அணிவிக்கப்பட்டிருக்கிறது இப்படி ஒவ்வொரு சிற்பங்களுக்கும் காரணக் கதைகள் இருக்கின்றது.
இன்னொரு தூணில் தலையில் கொம்பு முளைத்த ஒரு சிவனடியார், ஜடா முடியை விரித்து தொங்க விட்டவாறு, தன் கையை தலைக்கு மேல் கை வைத்து கும்பிட்டவாறும், ஒரு காலில் நின்றும் ஒரு காலை தூக்கிக் கொண்டும், அவருக்கு பின்னால் பன்றியும் நிற்பதை காணமுடிகிறது. திருசுற்று பிராகாரத்தை வலம் வரும்போது கருவறை பின்பக்கத்தில் நீண்ட கருங்கல் சுவர்களில் அரை வட்டத் தூண்களில் பூமாலைகள், தோரணங்கள், பூவிதழ்கள் அழகு விரிந்திருக்கின்றன.
ஒவ்வொரு தூண்களின் கீழ் சிம்மயாளிகள் மற்றும் இரண்டு முனைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு முகத்துடன் இரண்டு சிம்மயாளிகள் இணைந்த உருவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது!
திருமலை நாயக்க மன்னர், மெய்க் காவலர்கள், ரிஷிகள், ஒரு பசுமாடு சிவலிங்கத்திற்கு தானாக பால் சுரந்து கொண்டும், தன்நாவால் லிங்கத்தை வருடி வணங்கும் காட்சியும் சிற்பங்கள் வழியாக
காணமுடிகிறது!
அனுமன் தலையில் மூன்றடுக்கு சஞ்சீவி மலையை தூக்கி வைத்துக் கொண்டிருப்பதும், ஒரு இளம் நங்கை ஆடுவது போன்ற தோற்றம், ஒரு தூணில் ஒரு முகம் மட்டும் தலையில் கிரீடம், காதில் ஓட்டை தொங்கட்டான், முறுக்கு மீசை மெய்க்காவலர் போல தெரிகிறது? இப்படி ஒவ்வொரு கல் தூண்களிலும் பற்பல சிற்பங்கள் பழமை மாறாமல் கலையுடன் கூடிய தொன்மத்தை பறைசாற்றுகிறது...!
திருத்தல புராண வரலாறு
ஒரு சமயம் துர்வாச முனிவர் காசியில் சிவபூஜை செய்து முடித்த தருணத்தில் சிவபெருமானின் திருமுடியிலிருந்து விழுந்த தாமரைப் பூவை எடுத்துச் சென்று, அவ்வழியில் வெள்ளை யானையின் மீது உலா வந்த இந்திரனுக்கு கொடுக்கிறார். அவனோ அதை அலட்சியமாக ஒரு கையால் வாங்கி வெள்ளை யானை மீது வைத்தான், யானையோ உடலால் சிலுப்பி அம்மலரை கீழே தள்ளிக் காலால் மிதித்தது.இதனைக் கண்ட துர்வாச முனிவர் கோபம் கொண்டு இந்திரனைப் பார்த்து “நீ செய்த தவறால் உன் தலை பாண்டியன் ஒருவனின் வளை (திகிரி சக்கரம்)யினாலே சிதறிப்போகும், இந்த வெள்ளை யானை காட்டு யானையாகும்” என சாபமிடுகிறார்.
இந்திரனும், வெள்ளை யானையும் துர்வாசர் காலில் விழுந்து மன்னித்து விடவும், சாபவிமோசனம் வேண்டினான். துர்வாச முனிவரும் “உன் தலைக்கு வந்தது முடியளவாக (தலைப்பாகையோடு) போகும். மேலும் வெள்ளை யானை நூறு ஆண்டுகள் காட்டு யானையாக திரிந்து மீண்டும் வெள்ளை யானையாகும்” என்று அருளினார்.அதன் பின்னர் நூறு ஆண்டுகள் கழித்து வெள்ளை யானை கடம்பவனத்தில் (மதுரைக்குள்) நுழைந்தது, பொற்றாமரைக் குளத்தில் நீராடி சாபவி மோசனம் பெற்று இறைவனை போற்றி வழிபட்டது.
சிவபூஜை விருப்பத்தினால் (ஐராவதம்) வெள்ளையானை இங்கேயே தங்கி முதலில் வழிபட்டது இத்திருத்தலமாகும், சாபம் தீர்ந்த பின்பும் தன் வாகனமான வெள்ளையானையை இந்திரன் தேடுகிறான். வெள்ளையானை (ஐராவதம்) கிடைத்து இந்திரலோகம் செல்லும் போது மீண்டும் சிவபூஜையில் நாட்டம் ஏற்படுகிறது, அப்போது மதுரைக்கு கிழக்கே தன் பெயரால் (ஐராவதநல்லூர்) ஒரு நகரை ஏற்படுத்தி சிலகாலம் சிவபெருமானை வணங்கிய பின் இந்திரலோகத்தை அடைகிறது.
(ஸ்ரீமுக்தீஸ்வரர் திருக்கோயில் ஆவணங்களில் ஐராவதநல்லூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல இக்கோயிலிருந்து ஒரு கி/மீ தூரத்தில் ஐராவதநல்லூர் எனும் சிற்றூர் உள்ளது)
விஜயநகர பேரரசு வழிவந்த நாயக்கர்களில் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கருங்கற்களை கொண்டு கருவறை மற்றும் தூபி, மண்டபங்கள், தூண்கள், சிற்பங்கள் உள்ளிட்ட திருப் பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
அவருக்கு பின்னர் வந்த முத்து வீரப்ப நாயக்கர் தம்பியான திருமலை நாயக்க மன்னர் தனது ஆட்சிக் காலத்தில் இக்கோயிலின் திருப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறார். ஆனால், திருமலை நாயக்க மன்னர் மீனாட்சியம்மனுக்குதான் ஏற்படுத்து வதாக நேர்ந்து கொண்ட தெப்பக்குளத்திற்கு முக்தீஸ்வரர் கோயிலின் முன் பகுதியை தேர்ந்தெடுத்ததால் இக்கோயிலை மேலும் விரிவுபடுத்த முடியவில்லை என வருத்தமடைந்திருக்கிறார்.
இருப்பினும் தன்னுடைய அண்ணன் எழுப்பிய இக்கோயிலுக்கு பிரதான நுழைவு வாசலில் ராஜகோபுரம் இல்லாத குறையை போக்க (இக்கோயில் எதிரே) தெப்பக்குளம் மைய மண்டபத்தில் உள்ள ஒரு கோயில் அதன் மேல் பெரிய கோபுரம் கட்டி எழுப்பியிருக்கிறார் என்று கூறப்படுகிறது! ஆகவே, முக்தீஸ்வரர் கோயில் உள்ளிருந்து பார்த்தாலும், தெப்பக் குளத்தின் கிழக்கிலிருந்து பார்த்தாலும் மைய மண்டபத்தின் பெரிய கோபுரமானது முக்தீஸ்வரர் கோயிலுக்கான ராஜகோபுரமாகவே தெரியும்!
இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமானால் முக்தீஸ்வரனை கிழக்கிலிருந்து உதிக்கும் “சூரியன் வழிபட தடையில்லாதவாறு மையமண்டபத்தின் முதல் நிலை தளத்திலிருந்து சதுரவடிவில் பெரிய துவாரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது” திருமலை நாயக்க மன்னர் தன்னுடைய தொலை நோக்கு மற்றும் பொறியியற் சிந்தனையை வெளிக்கொணரும் வகையில் அமைத்திருக்கிறார் எனச் சொல்லலாம்!
நாட்டில் லட்சக்கணக்கான திருக்கோயில்களில் சில கோயில்களில் மட்டுமே “சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள இறைவன் மீது படர்ந்தெழும்” வகையில் கட்டப்பட்டிருந்தாலும் ஆண்டிற்கு ஓரிரு அல்லது நாலைந்து நாட்கள் மட்டும் அந்த கோயில்களில் அக்காட்சியை காணமுடியும்!மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்ட “இக்கோயிலில் மட்டும் சூரிய ஒளிக்கதிர்கள் இறைவனின் திருமேனியில் மாலையாக சூட்டி வழிபடுவது போல நடக்கும் பேரதிசயம்” ஆண்டிற்கு 24 நாட்கள் நடைபெறுகிறது என்பது ஆன்மிக ஆனந்தமாகும்!
ஒவ்வொரு வருடமும் உத்தராயணத்தில் 12 நாட்கள் அதாவது மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை காலை 6.35 மணி முதல் 6.45 மணி வரையிலும் மீண்டும் 7.00 மணி முதல் 7.10 மணி வரையிலும் காணமுடியும். தட்சிணாயனத்தில் 12 நாட்கள் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை அடுத்து 6.40 மணி முதல் 6.50 மணி வரையிலும் காணமுடியும்.
இந்த காலங்களில் “முதல் பத்து நிமிடம் செங்கதிராகவும், அடுத்த பத்து நிமிடம் கண்ணைக்கூசும் வெண்கதிராகவும் படரும்” இதற்கான வழிவகை கோயில் கருவறை முன்புள்ள மகாமண்டபத்தின் உள்ளே மூன்று து வாரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது! “ஒளியாகவும் நானே என்று உணர்த்துவதுபோல காட்சி தருகின்ற தருணத்தில் சந்நதியில் குழுமியிருக்கும் பக்தர்களின் ஒருமித்த குரலில் நமச்சிவாயம்” கோஷம் இறைவன் திருவடியை அடைகிறது. இப்பேர்ப்பட்ட திருக்கோயில்களை “சூரிய பூஜைக் கோயில்கள்” எனப் போற்றப்படுகின்றன.
ஆதியில் சிவபெருமானை “இந்திரரேஸ்வரர் மற்றும் ஐராவதேஸ்வரர்” என்றும், திருமலை நாயக்கர் காலத்திற்கு பின்னர் “முக்தீஸ்வரர்” என்றே மக்களால் வணங்கி அழைக்கப்படுகின்றன!
இதற்கு காரணம் “சிவபதம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி இக்கோயிலின் சந்நதி கருவறையின் உள்வழியாக மேலே முக்தி விளக்கேற்றும் வழக்கத்தாலும் முக்தீஸ்வரர்” என பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
சிவன் சந்நதிக்கு நுழையும் போது இடது பக்கம் ஒரு தூணில் “தட்சிணா மூர்த்தி வீணை வாசித்துக் கொண்டவாறு” காட்சி தந்து அருள்பாலிக்கிறார். சிவாலயங்களில் பொதுவாக கொடிமரம் இருக்கும். ஆனால். இங்கு கொடி மரம் மற்றும் நவக்கிரங்களும் இல்லை...? இக்கோயிலில் பல்லாண்டுகளாக “நவக்கிரக சந்நதி ஏற்படுத்த விரும்பியும் இறை உத்தரவு கிடைக்கவில்லை.” எனவே, இத்தகைய கோயிலை “கோளிலித்தலம்” என ஆன்மிகச் சான்றோர்கள் கூறுகின்றனர்.
முக்தீஸ்வரனை மனமுருகி வேண்டுபவர்களுக்கு “நவக்கிரக தோஷம்” இருந்தால் ஒருசேர விலகி விடும் என்பது ஐதீகம்...! திருமணம் ஆகாதவர்களுக்கு (குறிப்பாக வயதாகியும்) இங்குள்ள முக்தீஸ் வரை தரிசித்து வேண்டிக் கொண்டால் திருமணம் கைகூடும், அதேபோல திருமணம் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கிறது.
மகாசிவராத்திரி அன்று சிறப்பு அபிஷேகம் பூஜைகளும் மற்றும் நவராத்திரி பண்டிகையின்போது “ஒரே நாளில் கோடி நாம பாராயணமும், அன் னாபிஷேக பூஜையும்” நடைபெற்ற பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.திருக்கார்த்திகை நன்னாளில் கோயிலெங்கும் ஆயிரக்கணக்கான தீபமேற்றி வழிபடுகின்ற கண்கொள்ளாக் காட்சியை காணமுடிகிறது.
மீனாட்சி கோயிலின் மாதத் திருவிழாக்களில் தை மாதம் நடைபெறும் பனிரெண்டு நாட்கள் திருவிழாவின் இறுதியில் “தைப்பூசம் நாளன்று தெப்பத் திருவிழாவிற்காக மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும்” இக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் தினமும் மாலை வழிபாட்டில் அனைத்து பக்தர்களும் ஒரு ங்கிணைந்து “தமிழில் ஒருமித்த உரத்த குரலில் திருநாமங்கள் உச்சரிக்கும் அர்ச்சனை” நடைபெறுகின்றன.
தமிழில் வழிபாடு முடிந்ததும் மீண்டும் பக்தர்கள் எதிரெதிரே அமர்ந்து ஒருங்கிணைந்து “நமச்சிவாயம் மந்திர ஜபம்” செய்வது இன்றைக்கும் நடைபெறுகிறது.
ஸ்ரீமரகதவல்லி சமேத முக்தீஸ்வரரை தாள் பணிந்து வணங்குவோம். இறையருள் பெறுவோமாக…! இக்கோயிலில் தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது, காலை 6 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
எங்கு உள்ளது?
பெரியார் பேருந்து நிலையம் - (4 ஆம் நம்பர் வழித்தட பேருந்து) அனுப்பானடி செல்லும் வழியில் மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் எதிரே இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஆர்.கணேசன்