பகுதி 1
உத்தமர்கள், மகான்கள், ஞானிகள் என்பவர்களுக்குக் கூடத் துயரங்கள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் அவர்கள் தெய்வ அருளால் தாண்டினார்கள். தெய்வத்தைத் தவிர வேறு சிந்தனையே இல்லாத அவர்களுக்குப் போய், அவ்வாறு ஏன் வர வேண்டும்?
நமக்காகத்தான்! உதாரணம்: அப்பர் சுவாமிகளுக்குக் கடுமையான வயிற்று வலி (சூலை) வந்தது. சிவனருளால் அது நீங்கியது; நமக்குத் ‘தேவாரம்’ எனும் அற்புதமான அருந்தமிழ்ப் பாடல்கள் கிடைத்தன.ஒரு பறவையை வேடன் ஒருவன் அடித்துக் கீழே வீழ்த்தியதைக் கண்ட வால்மீகி, மனம் துயரப்பட்டார். அதனால், நமக்குக் கிடைத்தது, வால்மீகி ராமாயணம்.உள்ளத்தால் உயர்ந்த உத்தமர்களுக்கு வரும் துயரம் கூட, சாதாரண மக்களுக்கு நன்மைதரும் விதமாகவே அமைகிறது. இப்படித்தான், கிருஷ்ண பக்தியில் தலைசிறந்த அக்ரூரர், கண்ணனிடம் இருந்தே சாபம் பெறுகிறார். ஏன்? விளைவு?
துவாரகாபுரியில் தன்னுடைய அந்தப்புரத்தில், விலை உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தாள் சத்யபாமா. இருந்தாலும் அவள் முகத்தில், வருத்தம் அப்பியிருந்தது. அந்த நேரம் பார்த்து அங்கே, கண்ணனிடம் பேரன்பும் பக்தியும் கொண்ட அக்ரூரர் வந்தார். அவருக்கு எல்லாவிதமான மரியாதைகளும் தந்து பரிவோடு உபசரித்த சத்திய பாமா, தன் மனக்குறையையும் அவரிடம் வெளியிட்டாள்.
‘‘அக்ரூரரே! கண்ணனைப் பற்றி எல்லாம் அறிந்தவர் நீங்கள். அந்தக் கண்ணன் செய்வது நியாயமா? ருக்மிணியிடமும் மற்ற கோபிகைகளிடமும் மிகுந்த அன்போடு ஆடிப்பாடி, அவர்களுக்கு மகிழ்வூட்டுகிறாரே தவிர, இந்தப் பக்கமே வருவதில்லை. கண்ணனைத் தரிசிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. என் நினைவே அவருக்கு இல்லை போலிருக்கிறது.
‘‘ஆகையால் நீங்கள் போய், கண்ணனிடம் என் குறையைத் தெரிவித்து, அவரை இங்கே அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்! இன்னும் ஒரு நாழிகை (24 - நிமிடங்கள்) நேரத்திற்குள், கண்ணன் இங்கு வராவிட்டால், என் உயிர் உடலை விட்டு நீங்கி விடும்’’ எனக்கூறி கண் கலங்கினாள்.‘‘இதோ போய்க் கண்ணனிடம் விஷயத்தைச் சொல்லி, இங்கே அனுப்புகிறேன்’’ என்று வாக்குறுதி தந்த அக்ரூரர், அந்தப்புரத்தை விட்டு வெளியே வந்தார்.
வெளியே வந்த அக்ரூரரின் மனம், கவலையில் ஆழ்ந்தது; ‘‘ம்! இன்னும் ஒருநாழிகை நேரத்தில், கண்ணன் இங்கே வந்தாக வேண்டுமாமே! அப்படி வரவில்லையென்றால், தான் உயிர் துறந்து விடுவதாக சத்தியபாமா சொல்கிறாள். கண்டிப்பாக அவள், சொன்னதைச் செய்வாள்.‘‘இப்படிப்பட்ட நிலையில் நான் என்ன செய்வேன்? இந்த நேரத்தில் கண்ணனை, நான் எங்கே தேடிப் பிடிப்பேன்? சத்திய பாமாவின் மனம் அமைதியடையும் வண்ணம், ஏதாவது ஒரு வழியை உடனே கண்டு பிடித்தாக வேண்டும்’’ என யோசித்தார்.
ஒரு சில விநாடிகளிலேயே, அக்ரூரருக்கு ஒரு வழி தெரிந்து விட்டது. வழி தெரிந்த அவருக்கு வரப்போகும் பிரச்னை தெரியவில்லை. அதனால், அக்ரூரர் தான் தீர்மானித்தபடி தானே கண்ணன் வடிவத்தில் போய், சத்தியபாமாவின் எதிரில் நின்றார்.பல நாட்களாகக் காணாத கண்ணனைக் கண்டு, சத்திய பாமாவும் வருத்தம் நீங்கினாள். உடனடியாக அங்கிருந்து வெளியேறினார், அக்ரூரர். அது மட்டுமல்ல! தான் கொண்ட அந்த (கண்ணன்) வேடத்திலேயே கண்ணன் எதிரில்போய் நின்று, நடந்தவை அனைத்தையும் சொன்னார்.
கண்ணனோ, ‘‘அக்ரூரா! என்னைப் போலவே வேடம் பூண்ட நீ, பிறவிக் குருடனாகப் பிறப்பாய்!’’ என்று சொல்லி விட்டார்.உடலோடு உள்ளமும் கலங்கியது அக்ரூரருக்கு; ‘கண்ணா! சத்தியபாமாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தான் நான் உன்னைப்போலவே வேடம் பூண்டேனே தவிர, இதில் எந்த விதமான கெட்ட எண்ணமும் எனக்கு இல்லை. அப்படிப்பட்ட இந்த அடியவனுக்கு இப்படி சாபம் கொடுக்கலாமா?’’ எனக் கேட்டார்.
‘‘அக்ரூரா! எனக்குத் தெரியும் உன்னைப்பற்றி. இப்போது கறந்த பாலை விடத் தூய்மையானவன் நீ! ஆனால் எல்லோரும் அப்படி நினைக்க மாட்டார்களே! அதற்காகத்தான் சாபம் கொடுத்தேன்’’ என்று பதில் சொன்னார் கண்ணன்.அதன்பிறகு சத்யபாமாவை அங்கு வரவழைத்த கண்ணன், ‘‘சத்யபாமா! அக்ரூரனை, நான் என்று நம்பியதன். காரணமாக, நீ பூலோகத்தில் ஒரு பணிப் பெண்ணாகப் பிறப்பாய்!’’ என்றார்.அக்ரூரரும் சத்யபாமாவும், ‘‘கண்ணனுக்குக் கோபம் வரும் படியாக, நாம் நடந்து கொண்டு விட்டோமே!’’ என்று வருந்தினார்கள்.
வருத்தத்திற்குக் கண்ணன் மருந்து தடவினார்; ‘‘கவலைப்படாதீர்கள்! உங்கள் இருவருக்கும் நான் காட்சியளித்து, மறுபடியும் என்னுடன் சேர்த்துக் கொள்வேன்’’ என ஆறுதல் சொன்னார்.
கண்ணனின் திருவுள்ளப்படியே, அக்ரூரர் பிறவியிலேயே கண்பார்வை இல்லாத சூர்தாசராக வந்து பிறந்தார். சத்யபாமா பணிப் பெண்ணாகப் பிறந்தாள்.
மதுராபுரியில் பிறந்த சூர்தாசரின் புகழ் எங்கும் பரவியது. ஊனக்கண் இல்லாவிட்டாலும் ஞானக் கண்களால் இறைவனைத் தரிசித்து வந்தார். உள்ளத்தில் தரிசிக்கும் கண்ணனிடம் அப்படியே உரையாடுவார்; அந்தத் தரிசன அனுபவங்கள் அனைத்தும் அப்படியே, பாடல்களாக வெளிப்பட்டன. அவ்வாறு வெளிப்பட்ட பாடல்களை சூர்தாசர் பாடப்பாட, அவரைச்சுற்றி எப்போதும் பக்தர்கள் கூட்டம் சூழத் தொடங்கியது. அவர்கள் கேட்டதோடு மட்டுமல்லாமல், தாங்களும் சேர்ந்து பாடத் தொடங்கினார்கள். நாடெங்கும் பக்தி, பரவத் தொடங்கியது.
சூர்தாசரின் எளிமையான பாடல்கள் பண்டிதர் முதல் பாமரர் வரை, அனைவரின் உள்ளங்களிலும் பக்தியை வளர்த்தது. பாடல்களை பாடியதுடன் பகவானின் மகிமையைப்பற்றி, கதா காலட்சேபமும் செய்தார் சூர்தாசர்.அதைக்கேட்டு, ஊரில் இருந்த அனைவரும் தங்களையும் அறியாமல், தெய்வ பக்தியில் ஈடுபட்டார்கள். ஒருநாள்....
மற்றொருவர் உதவியுடன் மதுராபுரியில் உள்ள கோயில் சந்நதியில்போய் நின்றார் சூர்தாசர்; வேதனைபட்டது உள்ளம்.‘‘நாராயணா! பிறந்தது முதல் இதுநாள் வரை, பார்வை இல்லையே என்று நான் வருந்தியதே இல்லை. ஆனால், இப்போது உன் சந்நதியில் வந்து நின்று, உன் திவ்ய மங்கல விக்கிரகத்தைப் பார்க்க முடியாமல் இருப்பதை நினைத்தால், பார்வையில்லாத என்னுடைய பாவம்தான், இப்படி நடக்கிறது என்று தோன்றுகிறது.
போன பிறவியில் நான் அக்ரூரனாக இருந்தபோது கம்சன் சொல் கேட்டு, கோகுலத்திலிருந்து உன்னைக் கூட்டி வந்தேனே, அந்தப் பாவமா? பக்தி மயமான கோபிகைகளின் பார்வையில் இருந்து, உன்னைப் பிரித்ததால்தான் என் பார்வையைப் பறித்து விட்டாயா கண்ணா! உத்தமமான பக்தைகளான கோபிகைகளின் உள்ளம் நோகும்படியாகச் செய்ததன் பலனா இது? தெய்வமே! இன்னும் எத்தனை நாள், நான் உன் திருவடிவை என் கண்களால் பார்க்காமல் இருப்பேன்? உன் கருணையை இந்தக் கடையேனுக்கும் காட்டக் கூடாதா?’’ எனப் பலவாறாகப் புலம்பினார் சூர்தாசர்.
பக்தர் புலம்பலுக்குப் பரந்தாமன் இரங்கினார்.
சூர்தாசரின் கண்கள் பார்வையைப் பெற்றன; பரந்தாமனைக் கண்டார். உள்ளம் விம்மியது, அவருக்கு. ‘‘கருணை வள்ளலே! அடியேனின் வேண்டுகோளுக்கு இரங்கி, உன் அருள் வடிவைக் காண எனக்குப் பார்வையைத் தந்தாயே! உன் கருணையை என்னவென்று சொல்லுவேன்! கண்ணா! நீ தந்த இந்தப் பார்வையைக் கொண்டு, உன்னைப் பார்த்தது போதும். இனி வேறு எதையும் பார்க்க விரும்பவில்லை. என்னைப் பழையபடியே குருடனாக ஆக்கி விடு! எனக்கு ஞானக் கண்ணைக் கொடுத்து, எப்போதும் உன்னைத் தரிசிக்கும்படியாக அருள் செய்!’’ என உருக்கத்துடன் வேண்டினார்.
வேண்டுதல் பலித்தது. சூர்தாசருக்குப் பார்வைபோய், பழையபடியே குருடரானார்.அன்றுமுதல் முன்பைவிட அதிகமாக, ஹரி நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டார் சூர்தாசர். அதேகாலத்தில் அவந்தி நகரை, அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கு சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. மனச் சோர்வு ஏற்படும்போது, சங்கீதத்தைக்கேட்டு மன நிம்மதி அடைய வேண்டும் என்பதற்காக, அந்த அரசர் சங்கீத வித்வான்கள் பலரைத் தன் அரசவையில் வைத்துப் பாதுகாத்து வந்தார்.
ஒருநாள், சங்கீத வித்வான்களின் தலைமைப் பாடகர் பாடினார். அரசவையில் இருந்த அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அமைதியும் ஆனந்தமும் அங்கு குடி கொண்டன.கச்சேரி முடிந்ததும் கரகோஷம் எழுந்தது. பாடகரை நெருங்கினார் மன்னர்; ‘‘அற்புதம்! அற்புதம்! உங்களைப் போல ஓர் உயர்ந்த பாடகரை, நான் பார்த்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. உங்கள் சங்கீதத் திறமையும் சாரீர இனிமையும் யாருக்கும் வாய்க்காது. இந்த அரசவையில் நீ இருப்பது, என் பாக்கியம்!’’ என மனம் கொண்ட மட்டும் புகழ்ந்தார். (இந்த மன்னர் - அக்பர். அவரது அரசவையில் தலைமை பாடகராக இருந்தவர் - தான்சேன் என்றும் ஒரு வரலாறு உண்டு.)மனம் கொண்ட மட்டும், வாய் கொண்ட மட்டும், மன்னர் புகழ்ந்ததும், அதைக்கேட்ட தலைமை பாடகர் அதை மறுத்தார்.
‘‘மன்னா! தாங்கள் என் மீதுள்ள அன்பினால், அளவுக்கு அதிகமாகப் புகழ்கிறீர்கள். சங்கீதத்தில் எனக்கு இணையானவர் இல்லை என்கிறீர்களே! ஆனால் உண்மை அதுவல்ல. வட மதுரையில் சூர்தாசர் என்ற பாகவத உத்தமர் இருக்கிறார். சங்கீதக் களஞ்சியமான அவர் குரலைக் கேட்டு, குயில் வெட்கப்படும். தேவர்கள் எல்லாம் மிகுந்த ஆசையுடன், அவர் பாடலைக் கேட்பார்கள். இவ்வளவு ஏன்? சூர்தாசர் பாட ஆரம்பித்தால் போதும்.
கண்ணனே அவர் அருகில் உட்கார்ந்து கொண்டு, பாடலைக் கேட்டுத் தலை அசைப்பான்’’ என்றார்.மன்னர் வியப்படைந்தார். உடனே மந்திரியை அழைத்து, ‘‘பல்லக்குடன் போய் சூர்தாசரை அழைத்துக் கொண்டு வர, ஏற்பாடு செய்யுங்கள்!’’ என உத்தரவிட்டார். அதன்படியே மந்திரியும்போய், சூர்தாசரை அழைத்து வந்தார்.
சூர்தாசர் அரசவைக்குள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்றார்கள். மன்னர் சிம்மாசனத்தில் இருந்து எழுந்து போய், சூர்தாசரை வரவேற்று உயர்ந்ததான உபசாரங்களைச் செய்து உட்கார வைத்தார்.அதன்பிறகு, ‘‘சுவாமி! நீங்கள் சிறந்த பக்தர் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும், அடியேனுக்காக நீங்கள் இங்கே எழுந்தருளியிருப்பது, அடியேனின் பாக்யம். நீங்கள் பாடும் தெய்வப் பாடல்களைக் கேட்க வேண்டும் என்பது, எங்கள் விருப்பம். தயவு செய்து எங்கள் இஷ்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்!’’ என வேண்டினார் அரசர்.சூர்தாசர் நெகிழ்ந்தார்; ‘‘மன்னா! கண்ணனின் கருணையைப் பாடுவது, என் கடமையல்லவா? அதற்காக நீங்கள் இவ்வளவு தூரம், என்னைக் கேட்க வேண்டுமா?’’ எனச் சொல்லிப் பாட ஆரம்பித்தார்.
(தொடரும்)
பி.என். பரசுராமன்
