Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சக்தி தத்துவம்-அபிராமி அந்தாதி

``சூடகக் கையையும் கொண்டு’’

என்று திருக்கடையூர் தல வரலாற்றுக் குறிப்பை இங்கே பேசுகிறார். விஷ்ணு வானவர் அமுதத்தை தேவர்களுக்கு அளிக்க விரும்பி, அதை ஓரிடத்தில் வைத்து அனைவரும் குளிக்க செல்ல, அந்த நேரம் பார்த்து, விநாயகர் அதை பூசித்து லிங்கமாக்கினார். அதை தவவலிமையால் கண்ட விஷ்ணுவானவர், சிவபெருமான் தனித் திருக்கக் கூடாது என்று உலகியல் நலன் கருதி, தனது அனைத்து ஆபரணங்களையும் ஒருசேரக் குவித்தார். அரசர்கள் அடுத்தவர்களுக்கு குறிப்புணர்த்தும் ராஜமுத்திரை பொருந்திய சூடகத்தை ஆபரணக்குவியலுக்கு தலைமையாக்கி அதையே உமையம்மையாக பாவித்து வழிபட்டார். ‘`சூடகம்’’ என்பது ஐந்து விரல் மோதிரத்தை இணைக்கும் வட்டமாக தோன்றும் ஓர் அணிகலன்.

அரசர்கள் பத்து விரலிலும் மோதிரம் அணிவார். எந்த விரல் மோதிரம் என்ன ரத்தினத்தை யாருக்கு கொடுக்கிறாரோ, அதை பொருத்து அந்த மோதிரம் பெற்ற மனிதரை தண்டிக்கவோ, கண்டிக்கவோ, கூர்ந்தாய்வு செய்யவோ கட்டளையிடுகிறார் என்பது பொருள்.

இங்கு ரகசிய குறியீட்டு சொல்லாக மோதிரமே பயன்படுத்தப்படுகிறது. ரத்தினங்களை தனித் தனியாகவும், அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரே மோதிரமாகவும் அணிவர். இது அரச கட்டளையை உணர்த்தும் ‘எம்பிராட்டி’ (14) யாகிய இறைவியை குறிக்கவே ``சூடகக் கையையும்’’ என்கிறார். மேலும், ``சூடகம்’’ என்றால் தர்பைப்புல் என்று பொருள்.

திருவண்ணாமலை தல புராணத்தின் வழி, வல்லாள மகாராஜா என்பவருக்காக அவர் விரும்பிய வண்ணம் சிவபெருமான் சிராத்தம் செய்து வைத்தார். (சிராத்தம் - இறந்தோருக்குச் செய்யும் சடங்கு) அப்பொழுது, உமையம்மையானவள் சிராத்தம் செய்யும் சிவபெருமானுக்கு தர்பையை ஏந்தி நின்றாள். அதையே பட்டர் ``சூடகக் கையையும்’’ என்கிறார். அப்படி இறந்தவர்களின் ஆன்மாக்கள் நரகம் நீக்கி நல் உலகம் பெற செய்கின்ற செயலே சிராத்தம். அந்த சடங்கையே அதை செய்யும் கையையே ``சூடகக் கையையும் கொண்டு’’ என்கிறார்.

``கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல் விடும்போது’’இறந்த வீட்டில் கேட்கும் அலறல் ஒலி. இறந்தவன் தன்னை காப்பாற்ற கூறும் ஓல ஒலியை ஏற்படுத்தும் பண்பு கொண்டது என்பதை ‘`கதித்த’’ என்று குறிப்பிடுகிறார். ``கப்பு’’ என்பதற்கு ரகசியம் என்பது பொருள். யமன் உயிரை பறிப்பது யாருக்கும் தெரியாது. ரகசியமானது, முன்னறிவிப்பின்றி நிகழ்வது, தப்பிப்பதற்கு வழி இல்லாத பண்பையே ‘`கதித்த கப்பு’’ என்கிறார். ``வேலை’’ என்பதனால் உயிரை பறிக்கும் ஆயுதமான சூலத்தின் கூர்மையையும் சரியான நேரத்தையும் சூட்டுகிறார். ``வெங்காலன்’’ என்பதனால் மிகுந்த சினம் கொண்டவன் யாதொன்றினாலும் சமாதானப் படாதவன் என்பதை குறிக்கவே ``வெங்காலன்’’ என்றார்.

மேலும், ``வெங்’’ என்ற பதம் வெண்மையையும் குறிக்கும். ‘வெங்கட்’ (35) என்பதனால் இதை அறியலாம். அறம் தவராதவன் ஒருசிறிதும் வழுவாதவன் என்ற கருத்தையும் ``வெங்காலன்’’ என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய உடலில் இருக்கும் உயிரை பிடிக்கின்ற இயல்பை கொண்ட சூலத்தை ``என்மேல் விடும்போது’’ `உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது’ (89). இவையாவற்றையும் இணைத்தே ``கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல் விடும்போது’’ என்கிறார்.

``வெளி நில் கண்டாய்’’இதுவரை என் உடலுக்கு உள் இருந்து `என் மனத் தாமரையினில் வந்து புகுந்து இருந்தாள்’ (90) என்று உள்ளே இருந்து உடல் நலம் காத்த உமையை உடலுக்கு வெளியிலே இருக்கும் உயிர் நலம் காக்க சொல்கிறார் பட்டர். ``கண்டாய்’’ என்ற வார்த்தையால் கவனமாக பார்த்துக் கொள் என்று வேண்டுகிறார். இதையே ``வெளி நில் கண்டாய்’’ என்கிறார்.

“பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே”

“பாலை” என்று பாலாம்பிகையும்,

“தேனை” என்று ஸ்ரீ சக்கரத்தையும்.

“பாகை” என்று பாகம் பிரியாளராகிய அர்த்தநாரீஸ்வரரையும்

“பனிமொழியே”

என்று வாக்கு கூறும் மஹாயக்ஷியையும் சேர்த்து பதினோரு தேவதைகளின்தியானத்தை குறிப்பிட்டுள்ளார் பட்டர். ஒரு பாடல் போன்று தோன்றினாலும், இப்பாடலில் கூறப்பட்ட பதினோறு தேவதையும் ஸ்ரீவித்யா உபாசனைக்கு க்ரியா தேவதைகளாக தோன்றி உலகியல் இன்பத்தையும், அதிசய சக்திகளையும் வழங்கும். பாலையும், தேனையும், பாகையும் போலுமிருக்கும் உன் இனிமையான சொன்னதை செய்யும் வாக்கால் காத்தேன் என்று சொல். ``மொழியே’’ எனக்கு இனிய வாக்கை சொல், வளைக்கை அமைத்து `அஞ்சல் என்பாய்’ (33) என்பதனால், இதை நன்கு அறியலாம்.

மேலும், ``ஐ’’ என்பதற்கு கடவுள் என்று பொருள். பால்+ஜ= பாலை பாற்கடலில் தோன்றிய இலக்குமி, தேன்+ஐ = தேனை மல்லிகார்ஜூனர் பிரமராம்பிகையை தேன் உண்ணும் வண்டு என்று பார்வதியையும், பாகு+ஐ = பாகை என்று உடலையும், பகுத்தறியும் ருத்ர சக்தியாகிற கௌரியையும், ``போலும்’’ என்ற சொல் ஒப்ப, சிவ, சிவனிய என்ற பொருளில் சிவனையும், உயிர்களோடு மிக சரியாக பொருந்தும் சிவ என்னும் சக்தியையும், ``மொழியே’’ என்பதனால் சரஸ்வதியையும், முறையாக பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈவர, சதாசிவன் சக்திகளை காலனிடமிருந்து காக்க வேண்டுகிறார். என்பதையே “பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே” என்கிறார்.

“அந்தமாக”“மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற காலையும்” என்பதனால் திருமால், பிரம்மா, வேதம் சொன்ன வானவர்களால் கண்டறிய முடியாத தேடிக் கொண்டிருக்கின்ற நிலையில் உள்ள சிவபெருமானின் திருவடியையும், “சூடக கையையும் கொண்டு” என்பதனால் எமனை உதைத்த காலையும், அபிராமி அம்மையின் அபய, வரத முத்திரை காட்டி அபயமளித்த கையையும்.

“கதித்த கப்பு வேலைவெங்காலன் என் மேல் விடும் போது” தப்பிக்க விடாது ஓலமிட செய்கின்ற எமனானவன் அறிந்து தன் உயிரை பறிக்க வரும் பொழுது என்று நேரத்தையும்,

“வெளி நில் கண்டாய்” என்பதனால் வெளியில் இருந்தபடியே என்னை தாக்காது கவனமாக காப்பாய் என்றும், “பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே” பால் போன்ற உண்மை வார்த்தைகளையும், தேன் போன்ற இனிய சொல்லையும், பாகை போன்று நன்மை செய்வதற்கான குளிர்ந்த வார்த்தைகளை பேசி என்னை எமவாதனையில் இருந்து காப்பாய் என்று வேண்டுகின்றார் பட்டர். நாமும் வேண்டி நலம் பெறுவோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்