Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்

ஆங்கிலத்தில் `லேப்பிஸ் லஜூலி’ என்று அழைக்கப்படும் கந்தகக்கல், நீலநிறத்தில் காணப்படும். ஆனால், நீலமணி போன்று ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்காது. ஸ்கை ப்ளூ என்று சொல்லப்படும் ஆகாய வர்ணத்தில் காணப்படும். மன அமைதி, மனக் கட்டுப்பாட்டுக்கு இக்கல் உதவும். எகிப்து, சுமேரியா நாடுகளில் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ரத்தினம் புழக்கத்தில் உண்டு. இறந்தவர்களின் கல்லறையில் இக்கற்கள் ஏராளமாகக் கண்டுபிடிக்கப் பட்டன. சிந்து சமவெளியில் அகழ்வாய்வின்போது சூது பவளங்களும் இந்த கந்தகக் கற்களும் ஏராளமாகக் கிடைத்தன. லேப்பிஸ் என்றால் இலத்தீனில் கல் என்பது பொருள். இச்சொல் பாரசீகமொழி வழியாக அரபிக்கு வந்தது. லஜூலி என்ற சொல்லிலிருந்துதான் அஜியூர் (azure) என்ற ஆங்கிலச்சொல் உருவாகியது.

Azure, ஆகாய நீலத்தை குறிக்கும். நீல நிற ஆகாயம் தெளிவானது. எனவே, லேப்பிஸ் லஜூலி என்பது ஆகாய நீல நிறக்கல் என்று பொருள்பட்டது. இக்கல்லில் இடையே தங்கநிற ரேகைகள் காணப்படுவதும் உண்டு. அவற்றிற்கு மதிப்புஅதிகம். பழைய எகிப்து நாட்டில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு `மாட்’ என்ற தேவதையின் சின்னமாக இக்கல் போற்றப்பட்டது. மாட் உண்மையின் கடவுள் என்பதனால், குறிப்பாக நீதிபதிகள் லேப்பிஸ் லஜுலியை அணிந்தனர்.அவர்கள் பொய் சொல்லக்கூடாது. மனம் குழம்பக்கூடாது. தெளிவாகத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதால், லேப்பிஸ் லஜுலியை அணிந்தனர்.மத்திய காலத்தில், ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியான இக்கல், அதன்பிறகு ஐரோப்பியரை மிகவும் கவர்ந்தது. கி.மு 7570-ஆம் ஆண்டு முதல் இக்கற்கள் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. பொதுவாக, ஆற்றங்கரையில் கிடைக்கும் சுண்ணாம்புக் கற்களில், இந்த லேப்பிஸ் லஜூலி என்ற கந்தகக்கல் காணப்படுகிறது.

எங்குக் கிடைக்கின்றது?

அர்ஜென்டினாவில் ஆண்டெஸ் பகுதி யில் ஏராளமாகவும் சைபீரியா, ருசியா, அங்கோலா, அர்ஜென்டினா, பர்மா, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, இந்தியா போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் கிடைக்கின்றன.

ஓவியமும் லஜுலியும்

ஐரோப்பாவில் ஆரம்பகாலத்தில், இக்கல்லை நுணுக்கிப் பொடியாக்கி அதனை ஓவியம் வரையப் பயன்படுத்தினர். குறிப்பாக, மேரிமாதாவின் மேலங்கியில் காணப்படும் நீலநிறத்திற்கு இந்த லேப்பிஸ் லஜூலிக்கல்லின் மாவு நீலநிறப் பெயிண்ட் தயாரிக்கப் பயன்பட்டது.

விசுத்தியும் லேப்பிஸ் லஜுலியும்

இக்கல் தொண்டைப் பகுதிக்குரிய கல் ஆகும். இதற்குரிய சக்கரமும் குரல் வளைப் பகுதிக் குரிய விசுத்தி சக்கரமாகும். எனவே, குரல் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நிலையில் இருப்போர், குரல் சார்ந்த தொழில் செய்கின்ற பாடகர், பேச்சாளர், வக்கீல், குருக்கள் போன்றோர், லேப்பிஸ் லஜூலி கல்லை அணியலாம். குரல்வளை சார்ந்த தைராய்டு மூச்சுத் திணறல், நுரையீரல்தொற்று போன்ற நோய்கள் குணமாகும்.

பலன்கள்

லேப்பிஸ் லஜுலி அணிவதால், நல்ல பேச்சுவன்மை உண்டாகும். மனம் தெளிவுபெறும். மனமும் உடலும் இசைந்து செயல்படும். லேப்பிஸ் லஜூலி மனமும் செயலும் ஹார்மோனைஸ் ஆக உதவும். மன அழுத்தம் நீங்கும்.

சத்யா ரத்தினம் (stone of truth)

லேப்பிஸ் லஜுலியை சத்தியா ரத்தினம் - ஸ்டோன் ஆஃப் ட்ரூத் என்று அழைக்கின்றனர். எனவே, இக்கல்லை அணிபவர்கள், பொய் சொல்ல மாட்டார்கள். அவர்களால் பொய் சொல்ல இயலாது. அவர்களுக்குத் தெளிவான மனமும் தீர்க்கமான முடிவும் எடுக்க முடியும். மனதில் குழப்பம் இருக்காது. மனகுழப்பம் உடையவர்கள்தான் பொய், புரட்டு, பித்தலாட்டம் செய்வார்கள். மனதில் துணிவற்றவர்கள் போலித் தனத்தில் இறங்குவார்கள். தெளிவான சிந்தனை உடையவர்களுக்குப் பொய்யும் புரட்டும் தேவைப்படாது. இக்கல்லை அணிபவர்கள், வேலை செய்யுமிடத்தில் விஸ்வாசம் மிக்கவர்களாக இருப்பார்கள். நல்ல மனவலிமையும், துணிவும், ஞானமும், அறிவும் இவர்களுக்குக் கிடைக்கும். இதனால் இவர்களின் நட்பு வட்டம் பெருகும். வாய்மையை வாழ்க்கையில் பின்பற்றுவார்கள். பொய் சொல்ல மாட்டார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் இவர்களைத் தேடி வரும்.

தூக்கமின்மைக்கு லேப்பிஸ் லஜூலி

நல்லுறக்கம் கொள்வதற்கு இக்கல் உதவும். இக்கல்லை தலையணையின் அடியில் வைத்துக் கொண்டு உறங்கினால் நல்ல உறக்கம் வரும். விரலில் மோதிரமாகவோ, கழுத்தில் நகையாகவோ அணிந்து கொண்டு உறங்கலாம். ரத்த ஓட்டம் சீராகும். நோய் எதிர்ப்பு சக்திப் பெருகும்.

மனம் அமைதி பெற லேப்பிஸ் லஜூலி

மனநலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை எடுக்கும்போது, இக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து வருவதால், அவர்களுடைய சிகிச்சை விரைவாக பலனளிக்கும்.

போட்டித்தேர்வு எழுதுவோர்

பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு எழுதுகின்றவர்கள், தங்களின் நினைவாற்றல் பெருகவும், அறிவும் புரிதலும் கூடுதலாகவும், லேப்பிஸ் லஜூலி கல்லை மோதிரத்தில் பதித்து விரலில் படுமாறு அணிந்து கொள்ளலாம். இம்மோதிரத்தை நடுவிரலில் அணிய வேண்டும். இதனால், இவர்களிடம் படபடப்பும் குழப்பமும் நீங்கிவிடும்.

மாணவர்களுக்கு

லேப்பிஸ் லஜூலி அணிவதால், மாணவர்களுக்கு மற்றும் எழுத்தாளர்களுக்கு, படைப்பாற்றல் பெருகும். எழுதும் திறன் புலப்பாட்டுத்திறன் அதிகரிக்கும். அழகாக தெளிவாக கோர்வையாக எழுதுவார்கள். எதையும் மறந்து விட்டுவிட மாட்டார்கள். இவர்களின் கவனம், கூர்மையாகும். கான்சென்ட்ரேஷன் கூடும். விரைந்து முடிவெடுக்க உதவும். எனவே, விரைவாக கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டே போவார்கள். ஒரே கேள்வியில் நின்று குழம்பிக் கொண்டு நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். எனவே லேப்பிஸ் லஜூலி கற்களை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அணியலாம்.

யார் அணியலாம்?

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இக்கல் ராசிக்கல் ஆகும். தனுசு, ரிஷபம், துலாம், மகரம் ஆகிய ராசியினர், லேப்பிஸ் லஜூலி கல்லை அணியலாம். சுமேரியாவில் லேப்பிஸுக்கு இறைசக்தி உண்டு. இக்கல்லினுள் இறைவன் இருக்கிறான் என்று நம்பியவர்கள் உண்டு. எனவே, தனக்கு வரும் எல்லா தீங்கையும் தன்னை தாக்க வரும் அனைத்து தீய சக்திகளையும் இறைவனின் இக்கல்லை அணிந்திருந்தால், விலக்கிவிடுவார் என்று நம்பினர்.