Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம்

அபிஷேகம் என்ற சொல் நடைமுறையில் இறைவனைத் திருமுழுக்காட்டுவதைக் (நீராட்டுவது) குறிக்கிறது. அச்சொல்லுக்கு உரிமைப்படுத்துதல் என்றும் பொருள் கூறுவர். ஆசார்ய அபிஷேகம் என்பதற்கு ஒருவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துதல் என்பதைக் காண்கிறோம். இது போன்றே அரசனுக்கு மகுடம் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தல் என்பது அவனுக்கு நாட்டை உரிமையாக்கி அவன் ஏவலில் காவலில் வாழ்வோம் என்பதை ஒப்புக் கொள்வதைக் குறிக்கிறது. அன்னாபிஷேகம் என்பது இறைவனுக்கு வயலில் விளைந்த அரிசியைக் கொண்டு அமுதாக்கிக் காய்கறிகளைக் கொண்டு பதார்த்தங்கள் செய்து படைப்பதேயாகும். காலப் போக்கில் அது அபிஷேகம் என்ற சொல்லைக் கொண்டு இறைவன் திருமேனியில் அதைச் சாற்றும் வழக்கம் வந்ததென்பர்.

ஆகமங்கள் காணமும் நவ நைவேத்தியம் எனும் புத்ததூட்டும் விழாவே பல பரிமாணங்களைப் பெற்று அன்னாபிஷேகம் ஆனதென்பர். ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. உச்சிக் காலத்தில் அக்னிதிரட்டி (அக்னியை வளர்த்து) அடுப்பிலிட்டு அதை மூட்டுவர். உலை வைத்து தேவையான அளவு அரிசியை வடித்து அமுதாக்குவர். அதற்கேற்ப காய்கறிகளால் கூட்டு, துவையல், பொறியல், அவியல் முதலியவற்றை செய்வர். முறுக்கு, அதிரசம், தேன்குழல் சுகியன், முதலியவற்றைச் செய்து கொள்வார்.

மாலையில் இறைவனை அபிஷேகித்து ஒற்றாடை சார்த்தியபின் (நன்கு துடைத்தல்) அமுதை (அரிசிச்சோறு) இறைவன் திருமேனியை மூடும் படி சார்த்துவார். அதன் மேல் அலங்காரமாக வடை, முறுக்கு, அதிரசம், அப்பம் ஆகியவற்றை அணிவிப்பர். பாகற்காயை அப்படியே வேகவைத்து புளிகார மிட்டு கோர்த்து உருத்திராட்ச மாலைபோல் அணிவிப்பர். நீண்ட புடலங்காயை அப்படியே அவித்து பாம்புபோல் அணிவிப்பர். சுவாமிக்கு முன்புறம் வாழை இலைகளைப் பரப்பி பல வகையான அன்னங்கள் பணியாரங்கள், கறிகள், கூட்டுகள் பழங்கள், பானங்கள் பாயசங்களை இட்டு நிவேதனம் செய்வர்.

பிறகு தீபாராதனை செய்யப்படும். அதன்பிறகு மிளகுநீர், தண்ணீர் ஆகியவை நிவேதித்து திரையிடப்பட்டும். முகவாசம் எனப்படும் தாம்பூலம் நிவேதிப்பர். மீண்டும் தீபாராதனை செய்து அன்பர்களுக்குப் பிரசாதம் வழங்குகின்றனர். பிறகு அந்த அலங்காரத்தைக் களைந்து சிறிதளவு அன்னத்தை (சோற்றை) எடுத்து லிங்கம்போல் செய்து பூசித்து தட்டில் வைத்துப் பரிசாரகன் தலையில் ஏந்தி வரக் குடை மேளதாளம் தீவட்டியுடன் சென்று ஊரில் சிறப்பு பெற்று விளங்கும். குளம், ஏரி, ஆறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அதை விடுவர். அப்படிச் செய்வதால் நன்கு மழை பொழிந்து விளைச்சல் அதிகமாகும் என்று உறுதியாக நம்புகின்றனர்.ஆலயத்திற்கு வரும் எல்லோருக்கும் பிரசாதகமாக அன்னமும் படைக்கப்பட்ட காய்கறிகளும் அளிக்கப்படும். கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய அளவில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஏறத்தாழ 100 மூட்டை அரிசியைச் சோறாக்கி அன்னாபிஷேக விழா நடத்துகின்றனர்.சிதம்பரத்தில் தினமும் அழகிய திருச்சிற்றம்பல முடையாரான லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. (இதில் காய்கறிகள், குழம்புகள் படைப்பதில்லை. அன்னத்தைக் கொண்டு லிங்கத்தை மூடி வில்வம் அணிவித்து தீபாராதனை செய்கின்றனர்.