``குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்’’
- என்ற குறளுக்கு ஏற்ப, குழந்தை இல்லை என்றால் குடும்பத்தில் ஏற்படும் கவலைகளுக்கு அளவே இல்லை. குழந்தை இல்லாத பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களும் அவமரியாதைகளும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தாய்மை, இறைவனின் வரப்பிரசாதம். இன்றைக்கு மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறிவிட்டாலும், இன்றும் ஏராளமானோர் குழந்தையின்மை குறைபாட்டுடன் இருக்கின்றனர். ஒரு ஜனன கால ஜாதகத்தில், புத்திர ஸ்தானமான 5 ஆம் பாவகமும், பாவகாதிபதியும், புத்திரக்காரரான குருவும், பலமிழந்து காணப்பட்டால், அந்த ஜாதகம் ``புத்திரதோஷம்’’ உள்ள ஜாதகமாக கருதப்படும். பொதுவாக 1,5,7,9,12 ஆகிய பாவகங்கள் சந்தான அபிவிருத்தி தொடர்பான பலன்கள் அறிய காரணமாக அமைகின்றன. எனவே மேற்கூறிய பாவகங்களும் புத்திரகாரனான குருவும் வலிமையற்று இருந்தால், ஜாதகருக்கு ``புத்திரதோஷம்’’ ஏற்படும்.
ஐந்தாம் வீடு, ஐந்தாம் அதிபதி இருக்கும் வீடு, புத்திரகாரன் குரு இருக்கும் வீடு ஆகிய மூன்று வீடுகளிலும் அஷ்டவர்க்க பரலில் 28க்கு மேல் இருந்தால், புத்திரபாக்கியம் உண்டு.
குழந்தை வரத்திற்கான பரிகாரங்கள்
குழந்தை பாக்கியம் வேண்டுவோர், சந்தானகிருஷ்ணன், சந்தானலட்சுமி, சந்தானகணபதி, பாலமுருகன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்தால், புத்திரபாக்கியம் ஏற்படும். புத்திரதோஷ நிவர்த்திக்கு, 51 தீபங்கள் ஏற்ற வேண்டும். 51 தீபங்களை வீட்டில் நாகபடம் உள்ள எந்த தெய்வத்தின் முன்பும் ஏற்றி வரலாம்.
தேன் தானம், விதை வித்துக்கள் தானம் செய்தால், முறையே புத்திர பாக்கியம் சந்ததி விருத்தி ஏற்படும். நவதானிய சுண்டல் செய்து சிறுவர்களுக்கு தானம் செய்யலாம். மேலும், சந்தனத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் புத்திரப்பேறு கிடைக்கும். வியாழக்கிழமைகளில் ஒருவேளை உபவாசமும், மாலையில் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் தொடர்ந்து ஏற்றி வர, விரதம் முடிந்த 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும்.
தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்கருகாவூருக்கு சென்று முல்லைவனநாதர் உடன் அருள் பாலிக்கும் ``கர்ப்பரட்சாம்பிகையை’’ வழிபட்டால் அம்மன் புத்திரபாக்கியத்தை தருவார். அம்பாள் சந்நதியில் கோலமிட்டு வந்தால், குழந்தைப்பேறு பிரார்த்தனைகள் நிறைவேறும். இங்கு அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் பசுநெய் பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும்.
திருவண்ணாமலையில் இருந்து 58 கிலோமீட்டர் தூரத்தில் ஆரணி உள்ளது. இங்கு குழந்தை வரம் அருளும் ``புத்திர காமேட்டீஸ்வரி’’ திருக்கோயில் உள்ளது. தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை இல்லை. ஆகையால், இத்திருத்தலத்தில் உள்ள சிவனை மனம் உருகி வேண்டிய பின்னர், விஷ்ணுவே ராமராக தசரதனுக்கு பிறந்தார். ராமர் பிறந்த பின் தசரதனுக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தனர். இது சக்தி வாய்ந்த திருத்தலம் ஆகும். குழந்தை வேண்டி, புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஏழு திங்கள் கிழமை விரதம் இருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய் சாதமோ, தயிர் சாதமோ, காய்கறி வகை சாதமோ அவரவர் விருப்பத்திற்கேற்ப கொடுத்து, அதன் பிறகு நீங்கள் சாப்பிட வேண்டும். இரண்டாவது வாரத்தில் 2 குழந்தைகள் மூன்றாவது வாரத்தில் 3 குழந்தைகள் ஆறாவது வாரத்தில் 6 குழந்தைகள் என அன்னம் பரிமாற வேண்டும். ஏழாவது திங்களில், புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளி மற்றும் பவளமல்லி மாலை (கோயிலில் இந்த மாலை கிடைக்கும்) அணிவித்து, மிளகு சேர்த்த வெண்பொங்கலை நிவேதனம் செய்து வணங்க வேண்டும். ஆனி பௌர்ணமி அன்று கோயில் சார்பில் நடக்கும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் ``புத்திரபாக்கியம்’’ ஏற்படும்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ வாஞ்சியம் ஆலயத்தில் உள்ள நந்தவனத்தில், சந்தன மரக்கன்று நட்டால் நல்ல ஒழுக்கத்துடன் கூடிய குழந்தைகள் பிறக்கும். அத்திரி மகரிஷியும் அனுசுயா தேவியும் இவ்வண்ணமே செய்து சோமன், துர்வாசர், தத்தாத்ரேயர் போன்ற இறை அவதாரங்களை பெற்றெடுத்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து, வாழை மரக்கன்றை தானமாக கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப் பழங்களை தானமாக கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோயிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதையை நகம் படாமல் சுரண்டி எடுத்து, காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன் மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
இலந்தை மரம், அபூர்வ சக்தி கொண்ட தெய்வீக விருட்சமாகும். புத்திர பாக்கிய வேண்டுதலை உடனே நிறைவேற்றும் பரிகார மரமாகும். இம்மரத்தில் சந்தான கணபதியும் மகாலட்சுமியும் ஒருங்கே வாசம் செய்வதால், இம்மரத்தை வணங்கும்போது, புத்திர பாக்கியத்தில் உண்டாகும் வினைகளை விநாயகர் தீர்த்து அருள, லட்சுமியும் தனது அம்சங்களை கொண்ட குழந்தை பிறக்க அருள்பாலிக்கிறார்.
சித்தர் வழிகாட்டிய குழந்தைப்பேறு பரிகாரம்
முதல் படி
டொட்ட மல்லூர் சன்ன பத்னா இது பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு உள்ள நவநீதகிருஷ்ணனை வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:30 முதல் 6:00 மணிக்குள் தரிசனம் செய்து, தங்கள் பெயர், ஜென்ம நட்சத்திரம் சொல்லி குழந்தைவரம் வேண்டும் என்று சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
இரண்டாம் படி
பின்பு, தொடர்ந்து ஆறு வாரங்கள் அருகில் உள்ள நவநீத கிருஷ்ணனின் ஆலயம் சென்று (வெள்ளி மாலை 4:30 முதல் 6:00 மணிக்குள்) வழிபடலாம் அல்லது ஜீவசமாதி சென்று வழிபடலாம். (ஒரே ஜீவசமாதியாக இருக்க வேண்டும்)
நிவேதனமாக
முதல் வாரம் - 27 லட்டு.
இரண்டாம் வாரம் - 27 மகிழம்பூ, முறுக்கு.
மூன்றாம் வாரம் - 27 முந்திரிக் கொத்து.
நான்காம் வாரம் - 27 கற்பூரவல்லி பழம்.
ஐந்தாம் வாரம் - 1/4கிலோ வெண்ணெய்.
ஆறாம் வாரம் - அவல் பாயாசம் படைக்க வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வழிபாடு செய்யும் போது, தங்கள் பெயர், நட்சத்திரம்கூறி அர்ச்சனை செய்து வழிபாட்டின் நோக்கத்தைக் கூறி வழிபட வேண்டும். இப்படி நம்பிக்கையுடன் செய்துவர, கட்டாயம் இறை அருளால், குழந்தைப்பேறு கிட்டும் என்பதில் ஐயமில்லை.
