Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஸ்ரீரங்கநாதருக்கு தீபாவளி சீர்!

தீபாவளி என்றாலே மாப்பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான். புது மாப்பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம். அதில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஸ்ரீரங்கநாதரும் அடங்குவார். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளிக்கு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம் மேளதாளத்தோடு பெருமாளுக்கு சாத்தப்படும். மேலும், கோயில் சிப்பந்திகளுக்கும் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் பெருமாள் சார்பாக வழங்கப்படும்.

தொடர்ந்து கோயிலில் அருள்பாலிக்கும் ஆழ்வார், ஆசார்யர் சந்நதிகளுக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், விரலிமஞ்சள் பெருமாள் சார்பாக அந்தந்த சந்நதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வாருக்கு ஆசார்யர் சந்நதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு புத்தாடை, மலர்மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள், ஆசார்யர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு, மூலஸ்தானத்துக்கு கிழக்கில் உள்ள கிளி மண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காக காத்திருப்பார்கள்.

அப்போது பெருமாளின் மாமனார் பெரியாழ்வாரும் ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகத் காத்திருப்பார். உற்சவர் நம்பெருமாள் சந்தன மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிவார்.இந்த நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார் தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வழக்கம் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.

நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். அப்போது வேதபாராயணங்கள் முழங்க மங்கள வாத்தியம் வாசிக்கப்படும். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நிகழ்ச்சிக்கு பிறகு பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிஅளிப்பார்.

அதன்பின் கிளிமண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அனைவருக்கும் பெருமாள் புது வஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து கௌரவிப்பார். இந்த திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடைகளுக்கும் பண வரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது. குடும்பத்தில் மகிழச்சி பொங்கும். ஆரோக்கியமான வாழ்வும், செல்வமும் கிட்டும்.

- ஆர்.அனுராதா ரவீந்திரன், ஸ்ரீரங்கம்.