Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அபூர்வ தகவல்கள்

திரிபங்க கிருஷ்ணர்

மன்னார்குடியில் உள்ளது புகழ்பெற்ற ராஜகோபாலன் ஆலயம். இத்தலத்தில் கிருஷ்ணர் திரிபங்க நிலையில் அதாவது மூன்றாக வளைந்து, ஒரு காதில் குண்டலத்தோடு ஆநிரை மேய்க்கும் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக அருள்கிறார். அம்பிகையும் கிருஷ்ணரும் இணைந்த திருக்கோலம், கோபால சுந்தரி என தேவி உபாசகர்களால் வழிபடப்படுகிறது. தேவிக்குரிய ஸ்ரீசக்ரம் கிருஷ்ணரின் காலடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ராஜகோபாலனுக்கு தினமுமே திருவிழா என்பதால் இவரை நித்யோத்சவர் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.

உறியில் தின்பண்டங்கள்

தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது வரகூர். வெங்கடேசப் பெருமாள் அருள்புரியும் இத்தலத்தில் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜபத்தன்று தொடங்கி கிருஷ்ண ஜெயந்தி வரை உறியடி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆலயத்திற்கு எதிரில் மூங்கில் கழி நடப்பட்டு அதன் உச்சியில் முறுக்கு, சீடை போன்ற தின்பண்டங்களை மூட்டையாகக் கட்டித் தொங்கவிடுவர். பக்தர்கள் கைகளில் கம்பை ஏந்தி அந்தப் பிரசாதக் கூடையை அடிப்பர். கயிறை மேலும் கீழுமாக இழுப்பதும், உறியடிப்பவர் மீது தண்ணீரை வீசுவதும் நடக்கும். உறியடியில் வெற்றி பெற்றவர், அந்த தின்பண்டங்களை பெருமாளுக்கு நிவேதித்து பிரசாதமாக அனைவருக்கும் தருவர்.

தாம்பூலம் உண்ணும் கண்ணன்

ராஜஸ்தான் மாநிலத்தில், நாத்வாரா என்ற ஊரில் உள்ளது புகழ் பெற்ற கிருஷ்ணன் கோயில். இத்தலத்தை வடநாட்டு திருப்பதி என்று அழைக்கின்றனர். இங்கு அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கி இரவு முடிய ஏழுவகையான தரிசனங்களும் அலங்காரங்களும் மூலக் கருவறையில் அருளும் கிருஷ்ணருக்கு நடைபெறுகிறது. இதில் இரவு வேளையில் நடைபெறும் சயன தரிசனத்தின் போது வெற்றிலை தாம்பூலம் நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த பிரசாதத்தைப் பெற குறிப்பிட்ட கட்டணமும் ஆலயத்தின் சார்பில் பெறப்படுகிறது.

கல்வீணை

ஆழ்வார்திருநகரி திருத்தலத்தின் இறைவன், ஆதிநாதர். இவர் திருக்குறுங்குடி நம்பி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கே கருங்கல்லைக் குடைந்து உருவாக்கப்பட்ட வீணை ஒன்று காணப்படுகிறது. இவ்வீணையின் அடிப்பாகம் மட்டும் பித்தளையினால் செய்யப்பட்டிருக்கிறது. மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் வீணையை மோகனவீணை என்று குறிப்பிடுகிறார்கள்.

தளவாய்புரம் துர்க்கை

பொதுவாக சிவாலய கோஷ்டத்தில்தான் துர்க்கை அமைந்திருப்பாள். அபூர்வமாக சில தலங்களில் மூலவராகத் தனிக்கோயில் கொண்டிருப்பாள். அப்படிப்பட்ட ஒரு தலம்தான் தளவாய்புரம். துர்க்கை அம்மன் இங்கு நான்கு திருக்கரங்களுடன் கிழக்குத் திசை நோக்கி சாந்த சொரூபிணியாக வீற்றிருக்கிறாள். பௌர்ணமி தினத்தன்று வியாபாரம் செழிக்கவும், குழந்தை பாக்கியத்திற்காகவும் என்று பிரத்யங்கரா யாகம் நடைபெறுகிறது. மிளகாய் வற்றல் யாகத்தின் போது சிறு கமறல்கூட இருக்காது. இந்த யாகத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரை-திருநெல்வேலி ரயில் பாதையில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கயத்தாறு செல்லும் பாதையில் பயணித்தால் தளவாய்புரத்தை அடையலாம்.

திருமணப்பேறு அளிக்கும் துர்க்கை

சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் உள்ள பள்ளி கொண்டேஸ்வரர் ஆலயத்தில் நின்ற திருக்கோலத்தில் துர்க்கை எழுந்தருளியுள்ளாள். திருமணமாகாதவர்கள் பதினோரு செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து இக்கோயிலுக்குச் சென்று எலுமிச்சம்பழ மூடியில் நெய் விளக்கேற்றி துர்க்கையம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் திருமணமாகும். திருமணம் முடிந்த பிறகு தம்பதியராக ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு பூஜைைய முடித்திடல் மரபாக உள்ளது.