காரைக்கால் அம்மையார் கதை - 2
வாழ்வு அப்படித்தான். துக்கம்பேசிய மறுகணம், சந்தோசம் கொண்டுவரும். வந்த சந்தோசத்தின் வால்பிடித்துக் கொண்டே துக்கமும் வரும். புரியாதமொழியில் எழுதப்பட்ட இந்தவிதியின் அர்த்தத்தை, எம்மொழிவல்லுனர்களாலும், மொழிபெயர்க்க இயலாது. புனிதவதியின் திருமணம் பற்றி பேசியதும், உற்சாகமாய் கைகளை தட்டியபடி, சரியான நேரத்தில் இதைப்பற்றி என்னிடம் கூறினீர்கள் என பேசிய குருக்களின் சொல் புரியாத தனதத்தர்,
``ஏனப்படி சொல்லுகிறீர்கள்’’ என்றார். குருக்கள் உற்சாகம் மாறாமல் பேச ஆரம்பித்தார்.“தனத்தரே, நேற்று, நாகப்பட்டினத்திலிருந்து, நிதிபதியென்கிற அன்பர், தன் குடும்பத்துடன் கைலாசநாதரைத் தரிசிக்க வந்திருந்தார். முப்பொழுதும் ஈசனைத்தொழும் சிறந்த சிவபக்தரவர். அதுமட்டுமில்லாது, தங்களைப்போன்றே பெரும்வணிகர். பரஸ்பர அறிமுகத்திற்குப்பின், பேசிக்கொண்டிருந்தபோது, திருமணவயதிலிருக்கும் தன்மகனுக்கு, வரும் தைமாதத்திற்குள் திருமணம் நடத்த உத்தேசித்திருப்பதாகவும், நல்லகுணவதியான பெண்ணாக தேடிக்கொண்டிருப்பதாகவும், அதற்கான பிராத்தனைகளோடு கைலாசநாதனை தரிசிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே வணிகத்திற்கு துணையாயிருக்கும் மகனை அறிமுகம் செய்தார்.” தெரிந்தது.
“இளைஞன் எப்படியிருக்கிறான்? எப்படிப்பட்டவனாக தெரிகிறான்?” பெண்பிள்ளையைப்பெற்ற ஒரு தகப்பனுக்கேயுரிய ஆர்வத்துடன் தனதத்தர் கேட்டார். பேசிப்பார்த்ததில், நல்லபையனாக, நல்லகுடும்பத்தின் வளர்ப்பாக தெரிந்தது. பரமதத்தன் என்கிற பெயர்கொண்ட அந்தஇளைஞன், களையான, முகலட்சணத்துடன், தேவருக்கு நிகரான அழகுடனிருந்தான். அவனோடு பேசியபோது, நேர்மையையும், ஒழுக்கத்தையும், அவன் கண்ணிலும், சொல்லிலும், கண்டேன். தனக்கானவளை, உள்ளங்கையில் தாங்குகின்ற பக்குவத்தை அவனிடம் கண்டேன்.
மூத்தோரிடம் மரியாதையும், பேச்சில் நிதானத்தையும் கொண்ட அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது, நம்புங்கள், நான் நம்புனிதவதியைத்தான் நினைத்துக்கொண்டேன். இவனை நம்புனிதவதிக்கு பேசினாலென்ன? என்கிற எண்ணம்தான் எனக்குள் ஓடியது. அத்தனை நல்லவனாயும், ஒழுக்கச்சீலனாயும் இருந்தான்.’’ குருக்கள் பேசப்பேச, ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த தனதத்தரின்மனது, தான் பார்த்திராத பரமதத்தன் என்கிற அந்தஇளைஞன்முகத்தை கற்பனைசெய்து பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், கடற்பயணங்கள்தந்த அனுபவங்களாலோ, வெவ்வேறு தேசங்களின் வேறுபாடுகளை கண்டதாலோ என்னவோ, அநேககேள்விகள் அவனுக்குள் எழுகின்றன.
உலகின் ஏற்றத் தாழ்வுகள் குறித்தஐயங்கள், அவனுக்குள் இருக்கின்றன. அதை அழகாய் கேள்விகளாக்குகிறான். இவ்வளவுஏன், உண்மையில் இறைவன் என்பவனுண்டா என்றுகூட கேள்வியெழுப்புகிறான். ``எம்சிவமே. என்னகேள்வியிது. தென்னாடுமுழுதும் ஆளும் ஈசனின்சந்நதியில் நின்று கொண்டா, அந்தஇளைஞன், அக்கேள்வி எழுப்புகிறான்’’``ஆம் தனதத்தரே. அப்படித்தான் அந்த இளைஞன் கேட்டான். கடவுளுண்டெனில், இந்தபூமியில், ஏனித்தனை குழப்பங்கள். வறுமை, வளமை,ஏழை, செல்வந்தன் என்கிற பேதங்கள். இல்லையெனில், எதற்கு இத்தனைப்பூஜைகளும், அபிஷேகங்களும்” என தொடர்ச்சியான கேள்விகளால் என்னை துளைத்தெடுத்துவிட்டான்.
``ஆனால் ஒன்று, அத்தனைக் கேள்விகளையும் மூர்க்கமாய்கேட்காமல், முட்டாள்தனமாய் தர்க்கம்செய்யாமல், தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான். மொத்தத்தில், அவன் கடவுளில்லையென்று மறுக்கவுமில்லை, உண்டென்று கொண்டாடவுமில்லை.’’``இது சரியாய்வருமாவென தெரியவில்லை சுவாமி. இப்படி தடக்கென்று முடிவு செய்ய வேண்டுமா, நான் வைத்திருப்பது ஒரே மகளல்லவா’’ தனதத்தர் கவலையுடன் பேசினார்.
``இல்லை, இது தடக்கென்ற முடிவில்லை தனதத்தரே. கடந்த மூன்றுநாட்களாக என்மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணமிது. புனிதவதி என்மகளுக்கு நிகரானவள். அவள் திருமண முயற்சியில் எனக்கும்பொறுப்புண்டு தனதத்தரே’’ என உரிமையோடு, சண்டேஸ்வர குருக்கள் நம்பிக்கை தந்தார்.
``அதற்கில்லை, எந்நாளும் சிவசிந்தையுடன் இருக்கிறவள் புனிதவதி. காணும் சிவனடியாரிடமெல்லாம் ஈசனை காண்கிறவள். நாளை அவள்நிம்மதி குலையாதா? இல்லறத்தில் தர்க்கம் வளராதா? வளர்ந்தால் நிம்மதியிருக்குமா?’’``கவலைவேண்டாம் தனதத்தரே, பரமதத்தனுக்குள்ளிருப்பது மெல்லிய தள்ளாட்டமே. மற்றபடி மிக நல்ல இளைஞனாய் தெரிகிறது. அவனது தள்ளாட்டத்தை காலம் சரிசெய்யும். தெய்வகடாட்சம் கொண்ட புனிதவதி. தன்பக்தியினால் பரமதத்தனின் குழப்பத்தை சரி செய்வாள்.
அதுமில்லாது, எப்போதும், நன்கு குழம்பியதே விரைவில் தெளியும் தனதத்தரே. இது சரியாகவரும். நீங்கள் கவலையுறாதீர்கள்’’``சரி, ஈசன்சந்நதியிலிருந்து பேசுகிறீர்கள். இதில் தவறுவராதென நம்புகிறேன். பார்ப்போம்’’``இல்லை, இதை தள்ளிப்போடவேண்டாம். மீண்டும் ஆலயம் வருவதாக சொல்லியிருக்கிற நீதிபதியிடம், இதுகுறித்து நானேபேசுகிறேன்.
அநேகமாக இன்றுவந்தாலும் வரலாம். மீண்டும் சொல்கிறேன். புனிதவதி என்மகளுக்கு நிகரானவள். அவளின் திருமணத்தில் எனக்கும் பங்குண்டு தனதத்தரே’’ ``சரி, எல்லாம் ஈசனின்விருப்பம். தாங்களே பேசுங்கள் சுவாமி’’ என்று சண்டேசுவர குருக்களிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பிய தனதத்தர், தன்மகளை கவலையோடு நினைத்துப்பார்த்தார். பெண்பிள்ளையை பெற்றுவிட்டால், ஏழையென்ன? பெருவணிகனென்ன? அக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் பெண்பிள்ளையை பெற்றவனுக்கு, பெருங்கவலைதான்.
ஆனால், வாசலிலிருந்த புனிதவதி, எக்கவலையுமற்ற ஏகசிந்தனையாய், சிவநினைப்புடன் இருந்தாள். ஆலயத்துக்குள் நுழைகின்ற சிவனடியார்கள்பாதம் தொழுவதும், அவர்தரும் சிவப்ரசாதத்தை அணிவதுமாயிருந்தாள். தன்வாழ்வு முழுவதும் சிவனிடம் ஒப்படைத்த தன்மை அவளிட மிருந்தது. அப்படி ஒப்படைத்த தன்மையால், அவள்முகம் ஒளிரும்நிலவாய் பிரகாசித்தது.
அப்படிப் பிரகாசித்தமுகத்துடன், அழகான புன்னகையுடன், ஒரு வயதான பெண் மணியிடம் மலர்சரம் சூடிக்கொண்டிருந்த புனிதவதியை, தன்மகன் பரமதத்தனுடன் கோயிலுக்குள் நுழைந்துகொண்டிருந்த நீதிபதி கண்டார். பணிவும், அன்பும், பக்தியும், கருணையும் நிரம்பிய அந்தமுகம், அவரை ஏதோசெய்தது. சுடர்போல் ஜொலித்த அவளைக்கண்டகணத்திலேயே, ``என் சிவனே, இதுபோன்ற தங்கத்தை எங்கள் இல்லத்திற்கு விளக்கேற்றும்படியாக வையும்’’ என தன்னையும் மீறி வான்நோக்கி கைகூப்பினார்.
திருமணமாகாத அடையாளங்களை கொண்டிருந்த இந்தப்பெண்ணையே, தன்மகன் பரம தத்தனுக்கு பேசினாலென்ன என்றும் அவர் யோசித்தார். அந்த முகத்திலிருந்த தெய்வ கடாட்சம், ஏனோ அவரை அப்படி யோசிக்கவைத்தது. கையில் ஐந்து ஆழாக்கு கொள்ளளவு உள்ள, நெய்தூக்குச்சட்டியுடன், தன்பின்னே வருகிற, மகன் பரமதத்தனை திரும்பிப்பார்த்த போது, அவன் வைத்தக்கண் வாங்காமல், புனிதவதியையே பார்த்துக் கொண்டு வருவதைக் கண்டு சந்தோசமானார்.
``இதுவே சிவனின் சித்தமாகட்டும்’’ என்கிற எண்ணத்துடன் வந்து கொண்டிருந்தவர், ``வாருங்கள், உங்கள் வருகையைத்தான் எதிர்பார்த்து, காத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்கிற சண்டேசுவரகுருக்களின் குரலை கேட்டு எண்ணம் கலைந்தார். இயல்புக்கு திரும்பிய நீதிபதி, குருக்களை கண்டு, ``வணக்கம் சுவாமி’’ என கைகள் கூப்பினார்.``வணக்கம், தாங்கள்மட்டும் வருகிறீர்கள். குடும்பத்தார் வரவில்லையா?’’ குருக்களின் கேள்வியை காதில்வாங்காது, திரும்பி பார்த்துக் கொண்டிருந்தவரை, ``அப்படியென்ன பார்த்துக்கொண்டே வருகிறீர்கள்’’ என்ற குருக்களின் கேள்விக்குத்திரும்பிய நீதிபதி, ``இல்லையில்லை, என்மகன் பரமதத்தன் பின்னேவருகிறான்’’ என கைகாட்டினார்.
நெருங்கிவந்து, கண்டதும் புன்னகைத்த பரமதத்தனை, ``வா பரமதத்தா’’ என உரிமையுடன் வரவேற்ற குருக்கள், கையிலிருந்த தூக்குச்சட்டியை என்னவென்று கேட்டார். பதில்சொல்ல முந்திமுனைந்து, பின் நிறுத்திய நீதிபதி, மகனைப்பார்த்து, ``நீயே சொல்’’ என்றார். பரமதத்தன், ``என்தாயார் தன் கைங்கர்யமாக, தன் பிராத்தனையாக, என்திருமணம் விரைவில் நிகழவேண்டுமென்கிற வேண்டுதலோடு, சுவாமியின் நைவேத்தியத்திற்காகவும், கருவறை விளக்குகளுக்காகவும், பசுநெய் கொடுத்தனுப்பினார்’’ என்றான்.
``நல்லது, ஒன்றுசெய் பரமதத்தா, நீயே உன்கரங்களால், தென்கிழக்குமூலையிலுள்ள மடப் பள்ளியில் இதை சேர்ப்பித்துவிடு’’ என்றார். அவரே வழியும் காட்டினார். பரமதத்தன் நகர்ந்ததும், சண்டேஸ்வரக் குருக்கள், ``நான் உங்களோடு ஒருவிஷயம் பேசவேண்டும்’’ என்றார். ``அதற்குமுன், நான் உங்களுடன் பேச அனுமதிக்க வேண்டுகிறேன்’’ என இடை மறித்த நீதிபதி, புனிதவதியைக்காண்பித்து, ``யாரந்தப்பெண்’’ என்றார். திரும்பிப்பார்த்த சண்டேஸ்வர குருக்களுக்கு, ``இந்த திருமணமுயற்சி தெய்வசங்கல்பம்’’ என்பது புரிந்தது. தன்வேலையை சுலபமாக்கிய, கைலாசநாதரின் சந்நதிநோக்கி கைகள் கூப்பினார்.
மிகுந்த உற்சாகத்துடனும், சந்தோசத்துடனும், தனதத்தரைக் குறித்தும், அவரது மகள் புனிதவதி குறித்தும் பெருமையுடன் பேச ஆரம்பித்தார். புனிதவதியைப் பற்றி பேச ஆரம்பித்தபோது, கிழக்கு பக்கத்திலிருந்து கோயில்யானை பிளிறியது. நல்லசகுணமென்று நீதிபதி சந்தோசமானார். நிச்சயம் இந்தத் திருமணம் கைகூடுமென நம்பினார். இந்தப் பேச்சின் போது, இவன் உடனிருக்கவேண்டுமேவென, மடப்பள்ளிக்கு போயிருந்த பரமதத்தனைத் தேடினார்.
ஆனால், பரமதத்தன் முதல் பார்வையில் தன்னை ஈர்த்த புனிதவதியை மீண்டும் காணும் ஆவலுற்று, மடப்பள்ளியிலிருந்து கிழக்குகோபுரத்தின் வாசல்வரை சென்று, புனிதவதியைத்தேடினான். அங்கு புனித வதியைக்காணாது வருத்தமானான். மொத்தத்தில், ஈசனின் கணக்கிற்கு, மனிதர்களெல்லோரும் செயல்பட ஆரம்பித்தார்கள்.
(தொடரும்...)
குமரன் லோகபிரியா

