Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோடி புண்ணியம் தரும் மகா சனி பிரதோஷம்.. வழிபாடு செய்வது எப்படி?

சிவ பெருமானையும், சிவனின் வாகனமான நந்தி தேவரையும் பிரதோஷ நாளில் வழிபடுவது நமக்கு சிவலோக பதவியை பெற்றத் தரும். தொடர்ந்து பிரதோஷ விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பிறப்பு-இறப்பு இல்லாத முக்தி நிலையை அவர் அருளுவார் என புராணங்கள் சொல்கின்றன. பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாகி கருதப்படுகிறது.

பிரதோஷ மகிமை :

சிவ பெருமான், ஆலகால விஷத்தை உண்டு, அகிலத்தை காத்தருளிய காலமே பிரதோஷமாகும். திரியோதசி திதி வரும் நாட்களில் மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலமே பிரதோஷ காலமாகும். பிரதோஷத்தன்று சிவ பெருமானையும், நந்தி தேவரையும் வழிபடுவதால் சகல விதமான தோஷங்களும், பாவங்களும், துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோஷங்களில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை மகா சனி பிரதோஷம் என சொல்வதுண்டு. இந்த நாளில் சிவனை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி விடும்.

பிரதோஷம் :

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டது, ஏகாதசி தினத்தன்று. மறுநாளான துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருக்கும் சிவ பெருமான், மூன்றாம் நாளான திரியோதசி திதியில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா கால வேளையில் மலக்க நிலையில் இருந்து விழித்து, சந்தியா நிருத்த தாண்டவம் ஆண்டினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் சிவ பெருமானின் ஐந்த விதமான தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை குறிப்பதாகும். சிவ பெருமான், பார்வதி தேவியுடன் ஆனந்த தாண்டம் ஆடி, உலக உயிர்கள் அனைத்திற்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் நாமும் சிவ பெருமானை வழிபட்டால், சிவனின் அருள் நமக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சனி மகா பிரதோஷம் :

ஒரு சனி பிரதோஷத்தன்று சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனம் செய்தால் ஐந்து ஆண்டுகள் சிவாலயம் சென்று தரிசித்த புண்ணிய பலன் கிடைக்கும். சனி பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது, மந்திர ஜெபம் செய்வது ஆகியவற்றை செய்வதால் பல மடங்கு புண்ணிய பலன்கள் நமக்கு கிடைக்கும். பிரதோஷ அபிஷேகம் மற்றும் பிரதோஷ பூஜைக்கு நம்மால் முடிந்த பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். இந்த ஒவ்வொரு பொருளும், சிவ பூஜைக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மலர்களும் ஒவ்வொரு விதமான பலன்களை தரக் கூடியதாகும். அதனால் நமக்கு என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ அதற்கு ஏற்ற பொருளை வாங்கிக் கொடுப்பது சிறப்பு.

பிரதோஷ விரத முறை :

காலையில் எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து, சிவ நாமத்தை சொல்லியபடி இருக்க வேண்டும். எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்யலாம். நாள் முழுவதும் உபவாசமாக இருந்து, மாலையில் சிவ தரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அல்லது கோவிலில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டம். கோவிலுக்கு சென்று நந்தி தேவரையும், சிவனையும் வழிபடுவது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டிலேயே பிரதோஷம் விரதம் இருந்து, சிவ வழிபாட்டினை செய்யலாம்.

வீட்டிலேயே பிரதோஷ வழிபாடு செய்யும் முறை :

*வீட்டில் உள்ள சிவன்-பார்வதி அல்லது சிவன், பார்வதி, விநாயகர், முருகன் இருக்கும் படத்தை சுத்தம் செய்து பூ போட்டு அலங்கரிக்க வேண்டும்.

*வீட்டில் சிவ லிங்கம் இருந்தால் அதற்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், அரிசி மாவு, இளநீர், திருநீறு என என்னென்ன பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்ய முடியுமோ அத்தனை பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். முடியாதவர்கள் எளிமையாக சுத்தமான தண்ணீர், பால் மட்டும் வைத்துக் கூட அபிஷேகம் செய்யலாம்.

*வில்வம், சிவப்பு அரளி, தாமரை, மல்லிகை உள்ளிட்ட மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். எந்த மந்திரமும் தெரியாவிட்டால், ஓம் நமச்சிவாய மந்திரத்தை 11 முறை சொல்லி அர்ச்சனை செய்யலாம்.

*நம்மால் என்ன முடிகிறதோ அந்த பொருளை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். எதுவும் முடியவில்லை என்றால் இரண்ட வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து வழிபடலாம்.

*தீப, தூப ஆராதனை காட்டி, மற்றவர்களுக்கு பிரசாதத்தை கொடுத்து விட்டு, நாமும் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.