Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் ராஜகோபுர கோஷ்ட சிற்பங்கள்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: தியாகராஜர் கோயில் வளாகம், திருவாரூர்.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே அதிகபட்ச சிற்றாலயங்களைக் கொண்ட பெரும் கோயில் வளாகமாகும். இக்கோயில் வளாகம் மற்றும் அதன் மேற்கே உள்ள `கமலாலயம்’ குளத்துடன் சுமார் 30 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 9 கோபுரங்கள், 80 விமானங்கள், தீர்த்த முக்கியத்துவம் வாய்ந்த 15 கிணறுகள், 5 பிராகாரங்கள், 360க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள், 100க்கும் மேற்பட்ட சந்நதிகள், 86 விநாயகர் சிலைகள் என அனைத்துமே இக்கோயிலின் பிரமாண்டத்தைப் பறை சாற்றுகின்றன.

கிழக்கு ராஜ கோபுரம்

பிரதான கிழக்கு கோபுரமானது, 98 அடி உயரம் கொண்டது. இந்த 5 அடுக்கு கிழக்கு ராஜகோபுரம், சோழர் கட்டிடக்கலைக்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக உள்ளது. ஆரம்பத்தில், சோழ வம்சத்தால் கட்டப்பட்டு பின்னர், பிற ஆட்சியாளர்களால் மேம்படுத்தப்பட்ட இக்கோபுரம் தமிழ்நாட்டின் பழமையான கோபுரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கோயில் கோபுரத்தின் புறச்சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள கோஷ்டச் சிற்பங்களின் பேரழகு காண்போரைக் கவர்ந்திழுக்கும்.

கிழக்கு கோபுரத்தின் வெளிப்புறத்தில் அச்சுறுத்தும் தோற்றத்துடன் துவாரபாலகர்கள், மஹாவிஷ்ணு, அக்னிதேவர், சூரியதேவர், சரஸ்வதி, லட்சுமி, விஷ்ணு துர்க்கை ஆகிய எழில் மிகுந்த தெய்வ சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தில் உள்ள இரண்டு மானுடர் சிற்பங்கள் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் அவரது குரு என்று நம்பப்படுகிறது. சிம்மங்கள், யாளிகள், புருஷா மிருகம், நடன மாதர் சிற்பங்கள் உட்புறத்தை அலங்கரிக்கின்றன.

கோயில் வரலாறு

இக்கோயில் சோழர் காலத்திற்கு முன்னும், நால்வருக்கும் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் / அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்) முன்னரும் இருந்ததாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் தம்முடைய தேவாரப் பதிகத்தில் `ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே’ என்று பாடி இருப்பதில் இருந்து திருநாவுக்கரசர் காலத்திற்கு (7 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே திருவாரூரில் தியாகேசர் வழிபாடும், ஆழித் தேரோட்டமும் நிகழ்ந்துள்ளது என்பதனை அறியலாம்.

முற்காலச் சோழர்களின் ஐந்து தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது திருவாரூர். திருவாரூரில் இருந்து ஆட்சி செய்தவர்களில் மனுநீதிச் சோழன் குறிப்பிடத்தக்கவர். பின்னர் 9-10 ஆம் நூற்றாண்டில் துவங்கி பிற்காலச் சோழர்கள் இவ்வாலயத்தில் ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர்.முதலாம் இராஜேந்திரனின் (1012 - 1044) 20ஆம் ஆட்சியாண்டில் ``திருமன்னி வளர’’ என்று தொடங்கும் கல்வெட்டு, தியாகராஜர் சந்நதியின் வடக்கு மற்றும் மேற்குச் சுவர்களில் காணப்படுகிறது.

இது திருக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நகைகள், விளக்குகள், நிவந்தங்கள் குறித்த செய்திகளைப் பதிவு செய்கின்றது. மூன்றாம் குலோத்துங்கன் (13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) வரை சோழ மன்னர்கள் ஏராளமான திருப்பணிகளும், நிவந்தங்களும் அளித்துள்ளனர். பின்னர் விஜயநகர, மராத்திய மன்னர்கள் காலத்தில் கோபுரங்கள், சிற்றாலயங்கள் எழுப்பப்பட்டு பல்வேறு புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இறைவன்: புற்றிடங்கொண்ட நாதர் - புற்றின் கீழே மறைந்திருந்து லிங்கமாக

உருவானதால் இப்பெயர் பெற்றார்.

இறைவி: நீலோத்பலாம்பிகை.

மது ஜெகதீஷ்