ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 103 (பகவத்கீதை உரை)
அறிந்துகொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று ஞானம், இன்னொன்று விஞ்ஞானம் என்கிறார், கிருஷ்ணன். அதாவது, நம்மை உணர்வது ஞானம்; நம்மைச் சுற்றிலுமுள்ள பிறவற்றை அறிவது விஞ்ஞானம்.
ஞான விஞ்ஞான த்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய
யுக்த இத்யுச்யதே யோகீ சமலோஷ்டாசமகாஞ்சன (6:8)
‘‘ஞானத்திலும், விஞ்ஞானத்திலும் திருப்தி அடைந்தவன், புலன்களை வென்றவன், மண் - கல் - பொன் மூன்றையும் சமமாகக் கருதுபவன் - இவனே யோகி. இவனே ஆன்ம திருப்தியில் உறுதி பெற்றவன்.’’ கிருஷ்ணனின் இந்த ஸ்லோகம், புதுப்பாதை மூலமாக விளக்கம் அளிக்கிறது - ஞானம், விஞ்ஞானம். முதலாவதான ஞானம் தன்னை அறிவது. அது தன்னோடு முடிந்துபோகிறது. தன் ஆன்மாவை அடையாளம் காணும் முயற்சி அது. ஆனால், விஞ்ஞானம் என்பது விடை காண முயற்சிப்பது. ‘கண்டுபிடிப்பு என்பது தாய் என்றால், தேவை என்பது தந்தை’ என்பார்கள். ஆமாம், தேவை ஏற்படும்போதுதான் புது விஷயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. பச்சை மாமிசத்தைவிட சுட்ட மாமிசம் சுவையானது என்ற தேவைதான் நெருப்பின் ஒரு பயனைக் கண்டுபிடித்தது.
ஏன், எதற்காக, எப்படி என்ற கேள்விகளே கண்டுபிடிப்பின் ஆசான் என்றும் சொல்லலாம். வேடிக்கையாகச் சொல்வதானால், குழந்தைத்தனம்தான் கண்டு பிடிப்பின் மூலகாரணம். ஆமாம், எதையும் அறிந்துகொள்ளத் துடிக்கும் குழந்தைகள்தான் கேள்விகள் கேட்பார்கள். தமக்குத் திருப்தியாகிற வகையில் பதில் வந்தால் சரி, இல்லையென்றால் மேலும் மேலும் கேள்விகள்.
இந்தக் கேள்விகள் ஆர்வத்தின் விளைவுகள் என்பதோடு அறிவு முதிர்ச்சி இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன. அதாவது அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரிந்தவரைவிட குறிப்பிட்ட விஷயத்தில் குழந்தைகளுக்கு அறிவுக் குறைவுதானே? அதோடு, குழந்தைத்தனமான ஆராய்ச்சிகள்தான் விஞ்ஞானத்தைப் பிறப்பிக்கின்றன என்றும் சொல்லலாம். ஞான - விஞ்ஞானத்தால் திருப்தியான மனம் என்றால் என்ன? எதற்கும் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லாதவனுக்கு, ‘இது இப்படித்தான்,‘ என்பதே கொள்கையாக இருக்கும். அவனுக்கு எதற்காகவும், யாரிடத்திலுமிருந்தும் பதில் தேவைப்படவில்லை. திருப்தி அடைவது என்றால், போதும் என்ற நிறைவை எட்டுவதுதானே? ஆகவே இவனைப் பொறுத்தவரை கேள்விகள் தொடர வாய்ப்பே இல்லை.
அதே சமயம், திருப்தியுற்ற யோகியை, எல்லா கேள்விகளுக்கும் பதில் கிட்டியவன் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளக் கூடாது. அப்படி அவனுக்கு எல்லா பதிலும் கிடைத்து விடுமானால், பரமாத்ம சக்திக்கே எல்லை வகுத்தது போலாகிவிடும்! சில விஷயங்கள் பகவத் கிருபையால் அறியப்படாமலேயே இருக்கின்றன. அதோடு ஒரு ஜன்மம் என்று ஆயுளும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால், அறிந்து கொள்வதற்கான நிறைய விஷயங்கள் அந்த காலகட்டத்துக்குள் பாக்கி இருக்கும்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், எல்லா பதில்களுமே முழுமையானவை அல்ல.
உள்ளே கொஞ்சம் தொக்கி நிற்கும். அதையும் உடைக்கக் கேள்விகள் எழத்தான் செய்யும். ஆக, விடை தேடும் பயணம் நீண்டுகொண்டே போகும். சிறுவயதுக் கேள்விகள் பல, முதிய வயதில் அபத்தமாகத் தோன்றும். இதற்கு, அந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைத்துவிட்டது என்று அர்த்தமல்ல; இத்தனை வெகுளியாக குழந்தை வயதில் தன்னைக் காண்பித்துக் கொண்டு விட்டோமே என்ற வெட்க உணர்வுதான். துரதிருஷ்டவசமாக அந்த வெட்க உணர்வு மட்டும் தங்கிவிடுவதால், முதிய வயதிலும் கேள்விகள் கேட்கத் தயக்கம் உண்டாகிறது. தெரியாததைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் போலித்தனம் ஏற்பட்டு விடுகிறது. அதே சமயம், தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஒரு நிலை.
ஏனென்றால், எல்லாமே அந்தப் பரம்பொருள்தானே, இதில் சந்தேகம் எழாத பட்சத்தில், புற விஷயங்களில் என்ன சந்தேகம் எழப்போகிறது, அதனால் தெரிந்து கொள்வதில் பற்றறுத்த தன்மை உருவாகுமானால், அதுவே திருப்தி அடைந்தவனின் தன்மையாகும். ‘கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அதாவது ஒரு ஜன்ம காலத்துக்குள் நம்மால் அறிந்து கொள்ள முடிந்தவை ஓர் அளவில்தான் இருக்கும்.
கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கும். ஏனென்றால், விஞ்ஞானம் என்று பார்ப்போமானால் அது தேவைகளைப் பொறுத்து பலவாறாகக் கிளை பரப்பி, வளர்ந்தும் வருகிறது. வீட்டினுள் பெரிய அளவில் இருந்த தொலைபேசி, இப்போது கையடக்கக் கருவியாக மாறிவிட்டது. முந்தைய காலத்து கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், இப்போது செயற்கை நுண்ணறிவாக திடீர் வளர்ச்சி கண்டிருக்கிறது. இதிலும் புதிது புதிதாக எத்தனையோ வசதிகள் வரவிருக்கின்றன. நம்மை விட்டு நீங்கிய மூதாதையருக்குக் கம்ப்யூட்டர், மொபைல் ஃபோன் தெரியாது. இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்களுடைய ஆயுள் நீட்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு அது போதும் என்று விதி தீர்மானித்துவிட்டது.
ஆகவே அடுத்த தலைமுறையினருக்கு இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் விதித்திருக்கிறது! இவர்களுடைய காலத்திற்குப் பிறகும் புதியன தோன்றும், அவற்றை எதிர்காலத் தலைமுறையினர் அனுபவிப்பார்கள். முந்தைய தலைமுறை காலத்திய பெட்ரோமாக்ஸ் விளக்கு, டைப்ரைட்டர் முதலானவற்றை நாம் சொல்லும்போது இன்றைய பேரக்குழந்தைகள் அதிசயமாகக் கேட்கிறார்கள். அவற்றை கூகுளில் பார்த்து ‘நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையை ஓட்டினீர்கள்?’ என்று பிரமிப்புடன் நம்மை நோக்குகிறார்கள். இதே கேள்வியை இவர்களுடைய பேரன்மார்களும் கேட்கக் கூடிய காலமும் வரும். இதுதான் விஞ்ஞானம். அதாவது உலகப்பற்று கொண்டவர்களின் உலகம்.
இவர்களால் தம்மை அறிவதாகிய ஞானத்தையும் அடையமுடியும் என்றாலும், தற்போதைய வாழ்க்கை முறையில் விஞ்ஞானமே பெரிதும் பரவியிருக்கிறது. ‘‘உலகப் பற்று உள்ளவர்கள் உபயோக மற்ற பொருட்களைத் தேடுகின்றவர் ஆவர். ஆனால், உலகப் பற்றற்ற சுத்தவான்களோ ஈஸ்வரனையே விசுவாசித்து அவனையே சதா சர்வ காலமும் சிந்தித்திருப்பார்கள்’ என்கிறார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். சரி, உயிரற்ற பொருட்களை இவ்வாறெல்லாம் பொருட்படுத்தும் மனிதர்கள் உயிருள்ள பொருட்களை எவ்வாறு பாவிக்கிறார்கள்?
ஸுஹ்ருன் மித்ரார் யுதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர் விசிஷ்யதே (6:9)
‘‘சமத்துவவாதி என்பவன் யார்? நண்பர், பகைவர், உதாசீனர், மத்தியஸ்தர், வெறுப்பவர், விரும்புபவர், சுற்றத்தார், சீலர், பாபிகள் என்று அனைவரிடத்தும் ஒரே மனநிலையுடன் பழகுபவனே உத்தமமானவன், அவனே சமத்துவவாதி’’ ஒருவர் நல்லெண்ணம் கொண்டவராக இருக்கிறார் என்றால், அது அவருடைய நல்ல மனத்திலிருந்து மலர்வதாகும். இவர் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் அனைவருக்கும் நன்மை செய்பவராக இருப்பார். தன் நண்பனுக்காக தூய சிந்தனை கொண்டு, அதன் விளைவான நற்செயல் புரிபவராக இருப்பவன் நல்ல நண்பன் - மித்ரன்.
இதற்கு மாறானவன், பகைவன். இவன் கெடுதலைத் தவிர வேறொன்றும் செய்ய விரும்பாதவன். அடுத்து உதாசீனன் - நல்லதும் செய்ய மாட்டான், கெடுதலும் புரிய மாட்டான். ஒதுங்கி விடுபவன். எதிலும் எந்த அக்கறையும், ஆர்வமும் காட்டாதவன். இன்னொருவன் மத்தியஸ்தன். இவன் இரு தரப்புக்குமிடையே சமாதனத்தை நிலைநாட்ட விரும்புபவன். ஆனால், தன் சொந்த எண்ணப்படியே, இருவருக்கிடையேயான பிரச்னையை ஆராய்பவன் என்பதால் இவனுடைய மத்தியஸ்தத்தில் எப்போதும் நியாயம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மனிதர்கள் வெவ்வேறு வகையான இயற்கைக் குணங்களைக் கொண்டிருப்பவர்கள் என்பதால், சமத்துவன், மகா பெரிய யோகியாகத்தான் இருக்க வேண்டும்.
ஏனென்றால் சுகம், துக்கம் என்று எடுத்துக்கொண்டால், அது மனிதருக்கு மனிதர் வெவ்வேறு வகையான அனுபவங்களைத் தருவதாக இருக்கிறது. சூழ்நிலை, சந்தர்ப்பம், உடனிருப்போர், இழப்பின் மதிப்பு, சேர்க்கை இவை சார்ந்ததாக அந்த அனுபவங்கள் அமைகின்றன. ஒரே மாதிரியான உணர்வு கொண்ட அனுபவங்கள் என்றால், எளிதாக சமத்துவத்தைக் கையாள முடியும். ஆனால், ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக இருக்கும் பட்சத்தில், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமத்துவவாதியின் துலாக்கோல் எந்தப் பக்கமும் சாயாதிருக்க வேண்டும்.
மனித வாழ்வில் ஒருவன் புகழை அடைவதற்கு எத்தனையோ துக்கங்களையும், இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதாவது, ஒரு சந்தோஷத்துக்கு முன்னோடியாகப் பல விசனங்கள். அதேபோல அவப்பெயர் தன்னை அடையாதிருக்க அவன் எத்தகைய துக்கத்தையும், சுக இழப்பையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இவனுக்கு நேர் எதிரிடையாக ஒருவன் தன் சுகத்துக்காக எத்தனையோ அவமானங்களை, கேலிகளை, உதாசீனங்களை ஏற்றுக் கொள்ளத் துணிந்தவனாக இருக்கலாம்.
தன் துக்கத்திலிருந்து விடுபட, நற்புகழையும் இழக்க முன்வரக்கூடியவனும் சமுதாயத்தில் இருக்கிறான். இவர்களுக்கு மத்தியில் நற்பெயர், அவப்பெயர் இவற்றில் சமபுத்தியோடு விளங்குப வரும் இருக்கக் கூடும். ஒரு நாடகத்தில், ராமனாக நடிப்பவர் மேல் பார்வையாளர்கள் அன்பு செலுத்தி, பாராட்டுவார்கள்; அதே சமயம், ராவணனாக நடிப்பவர் மேல் விரோதம் பாராட்டி விமரிசனம் செய்வார்கள். அது நாடகம்தான். கதாபாத்திரங்கள் மீதான பார்வையாளர்களின் அபிப்ராயங்கள்தான் அவை.
ஆனால், நாடக மேடைக்கு வெளியே ராமனாக நடித்தவன் அயோக்கியனாக வாழலாம், ராவணனாக நடித்தவன் சமுதாயநலம் விரும்பியாக வாழலாம். இதனால், நாடக மேடை அபிப்ராயங்கள், நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாமல் போய்விடும். இந்த ஸ்லோகத்தில் மீண்டும் இரட்டையைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கிருஷ்ணன். நட்பு - விரோதம் இரண்டிலும் சமநிலையில் இருப்பவன் என்கிறார். கொடுத்த வாக்கை எந்த நிலையிலும் இழக்காமல் நண்பனுக்காக ஒருவன் வாழ்வான். தன் உயிரே போனாலும், நண்பன் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் இவன் பார்த்துக் கொள்வான்.
ஆனால் பணத்தாசை கொண்ட ஒருவன், தான் கொடுக்கும் வாக்குறுதிகளை அவனே மதிக்கமாட்டான், அவற்றை நிறைவேற்றவில்லையே என்று கவலைப்பட மாட்டான், அதனால் பல நண்பர்களையும், உற்றோரையும் இழக்கவும் அவன் தயாராக இருப்பான். ஏனென்றால் அவனுடைய ஒரே லட்சியம், பணம் சேர்ப்பது. அதற்காக எதையும், யாரையும் தியாகம் செய்ய அவன் தயங்குவதேயில்லை. இந்த இரட்டைத்தனம், சமுதாயத்தின் அடையாளம், இலக்கணம். இந்த இரு தரப்பு மனிதருடனும் பழகினாலும், நட்பில் வெகுவாக ஆழ்ந்துவிடாதவனும், பகைக்குக் கொஞ்சமும் நெருங்கி விடாதவனுமாக இருப்பவன்தான், உத்தமன்.
இவன் எல்லாவற்றையும் பரந்தாமனிடம் ஒப்படைத்துவிடுபவன். அதனால் சலனமற்றவனாகவும் விளங்குபவன். ‘இத்தகைய உத்தமனால் யாருக்கு என்ன லாபம்?’ என்று கேட்கலாம். இரண்டிலும் சார்பற்றவனாக அவன் காட்சி தருகிறான் என்றால், மறைமுகமாக அனைவருக்கும் பரம்பொருளின் உண்மைத் தன்மையை அறிவுறுத்துபவனாக இருக்கிறான் என்றுதான் பொருள். யாருடனும் பழகு முறையில் பாரபட்சம் காட்டாமல் வாழ்வது என்பது பகவான் கொடுத்த வரம். அதைப் புரிந்து கொண்டு, அவனுடைய வாழ்க்கையை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, பிறரும் புலன்களுக்கு அடிமையாகாமல், பரம்பொருளின் சிந்தனையுடனேயே வாழ முயற்சி செய்யவேண்டும் என்றுதான் அர்த்தம்.
(கீதை இசைக்கும்)
தொகுப்பு: பிரபு சங்கர்