வாழ்வியலில் சுகபோகத்தை கொடுக்கக் கூடியது அசுப குருவான சுக்ரன்தான். சுகபோகம் என்பது மனதிற்குப் பிடித்த உணவை விரும்பிய நேரத்தில் உண்பது. நீங்கள் விரும்பக்கூடிய விதத்தில் உங்களுக்கு வாகனங்கள் அமைவது. ரம்மியமான வாசனைத்திரவியங்களை பூசிக் கொள்வது. மனதிற்குப் பிடித்த நபர்களுடன் அதிக நேரம் உரையாடுவது. திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்து அதன் அழகியலை அல்லது அந்தக் கலையை வர்ணிப்பது. இவைகளையெல்லாம் ரசனையோடு மற்றவர்களுக்கு புரிய வைப்பதும், உணர வைப்பதும் சுக்ரனின் தன்மைதான். அழகியல் தன்மையோடு மற்றவர்களை கவர்வதும் சுக்ரனின் அனுக்கிரகம்தான். சுக்ரன் வாழ்வியல் அழகோடு அழகாக பிணைந்துள்ளான் என்பதை அறிந்து கொள்ளலாம். சுக்ரன் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவர்களை ஈர்க்கும் தன்மையையும் மயக்கும் தன்மையையும் கொண்டுள்ளான். எந்தக் காரணமும் இன்றி ஒருவரை பின்தொடர்வதும் சுக்ரனின் ஈர்ப்பின் அம்சம்தான். சுக்ரன் நவக்கிரக நாயகர்களோடு இணையும் பொழுது ஒவ்வொரு வகையான பலன்களைத் தருகிறான். அவ்வாறே, சுக்ரன் சாயா கிரகங்களான ராகு / கேது போன்றவைகளுடன் இணைவது வெவ்வேறு பலன்களைத் தரவல்லது. அவ்வாறு சுக்ரன் ராகுவுடன் இணைவதும் யோகம்தான்.
சாயா சுக்ரன் இணைவு என்பது என்ன?
சாயா என்பது ராகுவையோ - கேதுவையோ குறிப்பதாகும். இவர்களுடன் அசுர குருவான சுக்ரன் பலவாறு தொடர்பு கொள்ளுதல் சாயா - சுக்ர யோகம் எனச் சொல்லலாம். சுக்ரனுக்கு மூன்றில் (3ல்) ராகு இருந்தாலும்; சுக்ரன் - ராகு ஒரே ராசிக் கட்டத்தில் இணைந்திருப்பதும்; சுக்ரனும் ராகுவும் சமசப்தமாக பார்த்துக் கொள்வதும். சுக்ரனுக்கு நான்கில் (4ல்) ராகு இருப்பதும்; சுக்ரன் ராகுவின் நட்சத்திர சாரத்தில் இருப்பதும்; ராகு சுக்ரனின் நட்சத்திர சாரத்தில் இருப்பதும், சுக்ரன் - ராகு இணைவாக எடுத்துக் கொள்ளலாம்.
சுக்ரன் - ராகு இணைவின் அமைப்பு என்ன?
சுக்ரன் - ராகு இணைவானது நேர்மறை யோகமா? எதிர்மறை யோகமா? என்ற கேள்வியை எப்பொழுதும் எல்லோரும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சுக்ரன் - ராகுவின் திரிகோணத்தில் அல்லது கேந்திரத்தில் இணைவிற்காக சுபகிரகங்கள் இருந்தால் அது நன்மை தரும்படியான இணைவாக கொள்ளலாம். அதே சுக்ரன் - ராகுவின் திரிகோணத்தில் அல்லது கேந்திரத்தில் அசுப கிரகங்கள் இருக்குமேயானால் அது எதிர்மறை யோகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இவ்வாறான எதிர்மறை யோகம் எப்பொழுது எந்த மாதிரியான பலன்களைத் தரும் என்று சொல்ல முடியாது. இது ஆபத்தான கிரக இணைவாகும். வானில் உச்சியில் கயிற்றின் மேல் நடப்பது போலத்தான் என்று சொல்லலாம். சுக்ரன் - ராகு இணைவு எந்த பாவகத்தை தொடர்பு கொண்டுள்ளதோ அதை சார்ந்து பலன்கள் மாறுபடும். குறிப்பாக துலாம் வீட்டில் சுக்ரன் - ராகு இணைவானது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், சனி உச்சம் பெறும் பாவகம் அதுதான். நேர்மையாகவும் கண்ணியமாகவும் இருந்துவிட்டால் இவர்கள்தான் கோடீஸ்வரர்கள் என்பதை சொல்லும் கிரக அமைப்பு. ஆனால், கிரகங்கள் அவ்வாறு இருக்க விடாது.
சுக்ரன் - ராகு பலன்கள்
* ஆணாக இருந்தால் அதிகமான பெண் தொடர்புகளை ஏற்படுத்தும். அதிகமான பெண் நண்பர்கள் இருக்க வாய்ப்புண்டு.
* இந்த இணைவு உள்ளவர்கள் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற விருப்பம் ெகாண்டவர்களாக இருப்பர்.
* அதிகமாக வண்டி, வாகனங்கள் கிடைக்கும். சிலர் வாகனத்தை புதிது புதிதாக மாற்றிக் கொண்டே இருப்பர். சிலருக்கு வாகனத்தில் பழுது ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
* எந்த ஒரு முயற்சியையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து முடிவெடுப்பது வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும்.
* சிலருக்கு நகை வியாபாரம் செய்வது சிறப்பாக இருக்கும்; சிலருக்கு வாகனம் தொடர்பான டீலர்ஷிப் சிறப்பாக இருக்கும்.
* மாடி வீடுகளை கட்டும் பாக்கியங்கள் உண்டாகும். வீட்டில் மாடியில் தங்குவது போன்ற வீடுகள் உண்டாகும்.
* உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்ரன் உடலில் உள்ள ஹார்மோன்களுக்கு அதிபதியாக உள்ளார். ஆகவே, அசுப கிரகங்கள் தொடர்பு உண்டாகும் பொழுது புதியதான உடல் உபாதைகள் உண்டாகும்.
* சிலருக்கு சினிமா துறையில் அதிகமான பொருள் சம்பாதிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.
* புதுப்புது ஆடைகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் கொள்வார்.
* சிலருக்கு பொருளாதாரம் மேம்படையும் என எதிர்பார்த்து பணம் வராமல் பெரிய தொகை ஏதேனும் ஒரு இடத்தில் சிக்கிக் கொள்ளும்.
* சுக்ரன் மற்றும் ராகு திசா காலங்களில் அதிக ஆசைப்படுவதை குறைத்துக் கொண்டால் யோகமான அமைப்பாகும்.
சாயா சுக்ர யோகத்தின் பரிகாரம்
* பேராசை என்பது கூடாது என்பதை புரிந்து கொண்டாலே நல்ல பரிகாரம்.
* சூரியன், சுக்ரன் மற்றும் ராகு இணைந்து கிரகணம் ஏற்படும் பொழுது கிரகண தோஷப் பரிகாரம் செய்து கொண்டால் நன்மை உண்டாகும்.
* வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் அஷ்டலட்சுமியை இனிப்பால் நெய்வேத்தியம் செய்து அதனை கோயிலில் வரும் பக்தர்களுக்கு தானம் செய்து வந்தால் சிறப்பாக இருக்கும்.