Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தலைமைப் பதவி தந்த சனி

சனி இருட்டைக் குறிக்கும் கோள் என்றாலும், சில நேரங்களில் அது வெளிச்சம் பட்டு பிரதிபலிக்கும் பொழுது அற்புதமாக இருக்கும். இருட்டில் வாழத் தெரிந்தவர்களுக்கு வெளிச்சத்தில் வாழ்வது மிக எளிது.

சின்ன உதாரணத்தால் இதை நாம் தெரிந்து கொள்ளலாம். இருட்டின் பழகியவர்கள் மிக எளிதாக அவர்களுடைய செயலைச் செய்து விடுவார்கள். ஆனால், வெளிச்சத்தை மட்டுமே பார்த்துப் பழகியவர்கள், திடீர் இருள் வருகின்ற பொழுது தடுமாறி விடுவார்கள்.

அந்தக் காலத்தில் மிகக் குறைந்த வெளிச்சத்தில் காரியங்களைச் செய்தார்கள் கண்பார்வை நன்றாக இருந்தது. இப்பொழுது அதிக வெளிச்சத்தில் காரியம் செய்து பழக்கப்பட்ட கண்கள், கொஞ்சம் வெளிச்சம் குறைந்தாலும் கஷ்டப்படுகிறது.

இது சனிக்கும் பொருந்தும். சனி ஒரு மனிதனை கஷ்டத்தில் பழக்கப்படுத்தும். அப்படிப் பழகியவர்களுக்கு, அது தரும் உத்வேகமும் வைராக்கியமும், துணிச்சலும் உழைப்பும் மிகப்பெரிய உயரத்திற்கு அவர்களைக் கொண்டு செல்லும். ஆனால், நிதானமான முன்னேற்றம்தான் கிடைக்கும். சோதனைக்குப்பின் தான் சாதனையைச் செய்ய அனுமதிக்கும்.

சனியைக் குறித்து நாம் அச்சப்படத் தேவையில்லை. மிகச் சரியாக நம்முடைய வாழ்க்கையில் செயல்களைச் செய்தால், சனி நமக்குப் பரிசு தரத் தயங்காது.

நாம் நன்கு உழைப்பவர்களாக இருந்தால், அந்த உழைப்பின் ஊதியத்தை சனி தருவதற்குத் தயங்காது.

ஆனால், சனியின் மாயைகளில் அகப்படக் கூடாது. அது சில நேரங்களில் தவறான வழியைக் கூடக் காட்டும். பேராசையைத் தூண்டும். அகப்பட்டால் பெருங்குழிக்குள் தள்ளி விடும்.

சனியின் குணங்கள் ஆர்ப்பாட்டம், ஆடம்பரம் அல்ல. அடக்கமும் எளிமையும் உள்ளவர்களை, எதையும் பொறுமையோடு அணுகுபவர்களை சனி மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

நம்முடைய நடத்தையை திருத்திக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனமா, நிதானமா என்பதைப் பகுத்தறிந்து, சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து நிதானத்தைக் கைக்கொண்டால் சனியால் கிடைக்கும் வெற்றி நிச்சயம்.

இனி சில ஜாதகங்களில் சனி எப்படி பலன் தந்தது என்பதைப் பார்க்கலாம்.

நம்முடைய உறவினர் ஜாதகம் இது. சென்னையில் மிகப்பெரிய ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறார். மிகப்பெரிய சம்பளம். கார் அந்தஸ்து என வாழ்கிறார்.

நடப்பது சனி திசை. கும்ப லக்னம். லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் (மிதுனம்) லக்னாதிபதி சனி இருக்கிறார் . சனிக்கு வீடு கொடுத்த புதன் லக்னத்திற்கு 11-ஆம் இடத்தில் தனுசு ராசியில் இருக்கிறார். புதன் சனி பார்வை இருக்கிறது.

1. லக்கினாதிபதி சனி பூர்வ புண்ணியமான ஒன்பதால் இடத்தில் அமர்ந்திருப்பது முதல் நன்மை. லக்னாதிபதி பலம் பெறுகிறார். சனிக்கு மிதுனம் நட்பு வீடு. வீட்டுக்குரிய புதனும் தனுசிலிருந்து பார்க்கிறார்.

2. ஜீவனகாரகனான சனி லக்கினாதிபதியாகி, ஐந்தாம் வீட்டில் அமர்ந்து ஒன்று ஐந்து ஒன்பது என்ற திரிகோண இணைப்பை ஏற்படுத்துகின்றார். அவருடைய பார்வை இரண்டாம் இடத்தில் பதிகிறது. எனவே, பூர்வ புண்ணிய பலத்தினால், பொருளாதாரம், வேலை, சிந்தனை (ஐந்தாமிடம் சிந்தனை, அதிர்ஷ்டம்) என எல்லாவற்றிலும் முன்னேற்றமாக இருக்கின்றார்.

ஒரு நன்மை என்றாலும், மருந்து சாப்பிடும் பொழுது பக்க விளைவு இருப்பதுபோல சில விளைவுகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

பன்னிரண்டாம் இடத்திற்கும் அவரே ஆதிபத்தியம் பெறுவதால் கடுமையான அலைச்சல் உண்டு. நிறைய பணம் வந்தாலும், காலை முதல் இரவு 11:00 மணி 12:00 மணி வரை வேலை வேலை என இருந்து கொண்டே இருக்கும். பொறுப்புகள் இருக்கும். எனவே தூக்கம் கெடும்.

ஐந்தாமிடத்திற்கு 12ம் இடம் எட்டாம் இடமாக வரும். ஆயினும் சனி இரண்டாம் இடத்தோடு தொடர்பு கொண்டதால் உழைக்க வைத்து செல்வத்தைத் தந்தது. வீடு, வாசல் என்று நல்ல முன்னேற்றத்தை இந்த ஜாதகருக்குத்

தந்தது. 6ம் இடத்திற்கு 12ம் இடமான 5ம் இடத்தை இயக்குவதால் நோய் இல்லை. பகை இல்லை. கடன் உண்டு. அதைவிட வருமானம் உண்டு.

இதில் ஒரு வேடிக்கை பாருங்கள். இவருடைய மனைவிக்கு சிம்ம லக்னம். சனி கடகத்தில் இருக்கிறது. 6, 7க்கு உடைய சனி கடகத்தில் இருப்பதால், கணவர் வேலை வேலை என்று இருப் பதால்(ஆறாம் இடம்)மனைவி, குடும்பத்தோடு இருக்கும் நேரம் குறைவு (12ம் இடம்) என்பதை மனைவியின் ஜாதகமும் காட்டுகிறது. அப்படித் தான் அமையும். இப்படி ஜாதகங்களை இணைத்துப் பார்க்கும் பொழுது சில விஷயங்கள் நமக்குப் புலப்படும்.

6, 7 க்குரியவன் 12ல் இருக்கிறாரே. (12 பிரிவினை தானே) அப்படியானால் ஏன் இருவருக்கும் பிரிவினை வரவில்லை என்கிற கேள்வி வரும்.

மனைவி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். பிறக்கும் போதே சனி திசை முடிந்து விட்டது. எனவே பிரிவினையைத் தராது. சில புத்திகளில் மட்டும் குட்டிச் சண்டை ஏற்படும்.

ஆயினும் இவர் மனைவி குழந்தைகள் வளர்ப்பதில் கவனம் செலுத்தி, கணவருடன் சண்டை போடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டதால், அதாவது புத்திசாலித்தனமாக இருப்பதால் தப்பித்துக் கொள்கிறார்.

இது ஒரு நண்பரின் ஜாதகம். ஒரு கிராமத்தில் பிறந்து கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து (டிப்ளமோ, பிறகு பகுதி நேர கல்லூரி என விட்டு விட்டுப் படித்தவர்) உயர்ந்த உத்தியோகத்துக்கு வந்தவர்.

இவருக்கு சனி திசை அள்ளித் தந்தது. சாதாரண பொறுப்பில் இருந்தவர் அடுத்தடுத்து உயர் பதவிகளில் முன்னேறி தலைமைப் பொறுப்புக்கு வந்து ஓய்வு பெற்றவர். அந்த முன்னேற்றம் முழுக்க சனி திசையில் நடந்தது.

மேஷ லக்னம். ஒன்பதில் (தனுசு) சனி. லக்னாதிபதி செவ்வாய் ரிஷபத்தில் இருந்து எட்டாம் பார்வையாக சனியோடு தொடர்பு கொள்கிறார். சனி 10-ஆம் இடத்திற்கும் 11-ஆம் இடத்திற்கும் ஆதிபத்தியம் கொண்டதால், இரண்டு இடங்களையும் தூக்கி நிறுத் தினார். இரண்டாமிடம் லக்னாதிபதியுடன் தொடர்பு கொண்டதால், பணம், செல்வாக்கு ,வண்டி, வாகனம், வீடு, நிலம் என வசதியானார்.

ஆனால், மேஷ லக்னத்திற்கு சனி பாதகாதிபதியும் கூட. எனவே, சனி திசை காலத்தில் சில கஷ்டங்களையும் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. அது வேறு கதை.

ஒன்பதாம் இடத்தில் சனி இருக்கும் பொழுது சனி பார்வை 3, 6, 11 முதலிய உப ஜெய ஸ்தானங்களுக்கு ஏற்பட்டு பல விதங்களில் செல்வச் சேர்க்கை ஏற்படும்.

அதேநேரம் ஜாதகருக்கு மறைமுக எதிரிகளும் இருப்பார்கள். சில குறுக்கு வழிகளையும் கையாண்டு ஜாதகர் வெற்றி கொள்வார். இந்த ஜாதகர் விஷயத்தில் அத்தனையும் நடந்தது. செவ்வாயின் தொடர்பு சனிக்கு கிடைத்ததால் இயல்பாகவே பிறரை அடக்கி ஆளும் திறமை இருந்தது.

இன்னொரு ஜாதகம். இது சனி பழி தீர்த்த ஜாதகம். இவரும் மேஷம்தான். ஆனால், மேஷத்தில் சனி அமர்ந்தார். எட்டாமிடமாகிய விருச்சிகத்தில் செவ்வாய். அதுவும் அனுஷம் நட்சத்திரத்தில் சனி சாரத்தில் அமர்ந்தார். லக்னாதிபதியுடன், அஷ்டமாதிபதி தொடர்பு மற்றும் பாதகாதிபதி தொடர்பு ஏற்பட்டதால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். அதோடு மேஷத்தில் நீசம் பெற்ற சனி, ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் திருமணம் ஆகவில்லை. தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவும் சனியின் கைங்கரியம்தான்.

சனி கொடுக்கவும் செய்வார்; கெடுக்கவும் செய்வார் என்பதற்கு இந்த ஜாதகம் உதாரணம்.