Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சனி நன்மை செய்யுமா? செய்யாதா? : ஜோதிட ரகசியங்கள்

பொதுவாக சனியினால் எந்த யோகமும் இல்லை. அவர் எப்பொழுதும் தீமையையே செய்வார் என்கிற கருத்து பெரும்பாலாரிடையே உண்டு. ஆனால், ஜோதிட சாஸ்திரம் அப்படிச் சொல்லவில்லை. சனி, சில அற்புதமான யோகங்களைச் செய்யும் என்றே சொல்கிறது. “சனி கொடுத்தால் தடுப்பவர் யாரும் இல்லை” என்று ஜோதிட பழமொழியே உண்டு. மற்ற கிரகங்கள் கொடுப்பதை, சனி சமயத்தில் தடைசெய்யும். ஆனால், சனி யோக தசையில் கொடுக்க ஆரம்பித்தால் மற்ற கிரகங்களால் அதைத் தடுக்க முடியாது என்று பொருள்.

பஞ்ச மகா புருஷ யோகங்களில், சனியினால் ஏற்படக்கூடிய யோகம் உண்டு. அதற்கு ``சச யோகம்’’ என்று பெயர். சனியின் கேந்திர வீட்டில் (அதாவது 1,4,7,10 ஆம் வீட்டில்) லக்னம் அமைந்திருப்பதும், மகரத்திலோ, கும்பத்திலோ சனி ஆட்சிப் பெற்று இருப்பதும் மற்றும் துலா ராசியில் உச்சம் பெற்றிருப்பதும் யோகமாகும். ஆனால், அது மட்டும் போதாது. சனிக்கு அந்த ராசியில் சுபத்துவம் இருக்க வேண்டும். சுபகிரகங்களுடைய சேர்க்கை இருக்க வேண்டும். குருவினால் பார்க்கப்பட வேண்டும். துலா ராசியில், சனி உச்சம் பெற்றாலும்கூட, அந்த துலா ராசிக்கு உரிய சுக்கிரனும் பூரண சுபத்துவத்தோடு இருக்கும் பொழுது, அந்த வீடு அற்புதமான யோக பலனைச் செய்யக் கூடியதாக இருக்கும்.

யோகங்களில் சனி, ராகுவுடன் இருக்கலாம். ஆனால் கேதுடன் இருக்க முடியாது. காரணம், ராகு தடுக்க முடியாத ஆசைக்கு உரியவர். போக காரகர். சனி கொடுக்கக் கூடிய யோக பலன்களை ராகு வளர்க்கும். ஆனால், கேது என்பது எப்பொழுதும் ஆசைகளை நிராசையாகச் செய்வது. சன்யாச நிலையை வளர்ப்பவர். எனவே கேது, சனி கொடுக்கக்கூடிய யோக பலன்களைத் தடுத்துவிடும்.குருவால் பார்க்கப்படும் பொழுது அல்லது யோக நட்சத்திர சாரத்தை பெற்றிருக்கும் பொழுது, சனி பலமடைகிறது. சுப பலன்களைச் செய்யும் தகுதியைப் பெறுகின்றது. சில நேரங்களில் சனி அற்புதமான ராஜயோகத்தைத் தரும் என்பதை மறக்கவேண்டாம்.

குழந்தைகளால் நன்மையா? மன வருத்தமா?

ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் இடமோ அல்லது ஐந்தாம் இடத்தின் அதிபதியோ அல்லது புத்திர காரகனாகிய குருவோ வலுப்பெற்று இருந்தால், அவர்களுக்கு சத் புத்திரர்கள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம். ஸு புத்ர யோகம் என்று ஒரு யோகம் உண்டு. ஸு என்றால் நல்ல. புத்திரர்கள் என்றால் குழந்தைகள். நல்ல குழந்தைகளை கொடுக்கக்கூடிய யோகம் என்று வேத ஜோதிடத்தில் இது சொல்லப்படுகிறது. இது சந்ததியை சுபவிருத்தி செய்யும். தோஷங்களை அகற்றி, நல்ல சந்ததியை பெற்று மகிழ வைக்கும் யோகம். குரு வலுவாக இருப்பதும், ஐந்தாம் வீட்டுக்காரர் குருவோடு இணைந்திருப்பதும், ஐந்தாம் வீட்டுக்காரர் பலம் பெற்றிருப்பதும், ஐந்தாம் வீட்டுக்கு ஐந்தாம் வீடான பாக்கியஸ்தானம்  பலம் பெறுவது முதலிய நிலையில் அதற்கான தசாபுத்திகளும், கோசாரமும் இணைகின்ற பொழுது இந்த ஸு புத்திர யோகம் நன்கு வேலை செய்யும்.

ஏன் ஜாதக பலன்கள் நடப்பதில்லை?

அற்புதமான யோக ஜாதகமாக இருக்கும். யாரிடம் காட்டினாலும்கூட இந்த ஜாதகம் நாடாளும். இந்த ஜாதகத்துக்கு வறுமையே இல்லை. இந்த ஜாதகம் அற்புதமான ஜாதகம் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால், நடைமுறையில் அவர்கள் சோற்றுக்கு அல்லல் படுபவர்களாக இருப்பார்கள். இல்லாவிட்டால் கஷ்டம் மேல் கஷ்டம் வந்து கொண்டிருக்கும். ஆனால், சில ஜாதகம் சரி இல்லாத ஜாதகமாக இருக்கும். ஆனாலும் வறுமையில்லாமல் இருப்பார்கள். நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.ஒரு ஜாதகத்தின் கட்டத்தைப் பார்த்த உடனேயே அவருக்கான பலன்களை நாம் உடனடியாகச் சொல்ல முடியாது. அந்த பலன்கள் நடக்கக்கூடிய தசாபுத்தி வருகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, பிராரப்த கர்மபலன் வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த தசாபுத்திதான் ஒரு ஜாதகத்தினுடைய பலன் நடக்குமா? நடக்காதா? என்பதை தீர்மானிக்கும்.

உதாரணமாக; குறிப்பிட்ட தசாபுத்தி அவருடைய வாழ்நாளில் வரவில்லை அல்லது மிக இளமையிலே வந்து போய்விட்டது என்று சொன்னால், அவருடைய காலத்திலே அந்த யோக பலன்கள் நடக்காமல்கூட போகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் முதன் முதலில் ஜாதகத்தை எடுத்தவுடன் தசாபுத்தி கணிதத்தைப் போட்டு பார்த்து நடப்பு தசாபுத்தி என்ன என்பதையும் பார்த்து, அதற்கு ஏற்றார் போல் கோசாரம் இருக்கிறதா என்பதையும் பார்த்து பலன் சொல்வார்கள், ஜோதிடர்கள்.

சில கிரகங்களால் ஏன் நல்ல பலன்களைக் கொடுக்க முடிவதில்லை?

ஜாதகங்களில் ``பாபகர்த்தரி யோகம்’’, ``சுபகர்த்தரி யோகம்’’ என்று இரண்டு யோகங்கள் உண்டு. ஒரு கிரகத்தை செயல்பட தூண்டுவதற்காக அவருடைய முன்னும் பின்னும் இரண்டு நன்மை தரும் கிரகங்கள் இருந்தால், அதை சுபகர்த்தரி யோகம் என்று சொல்லுவார்கள். பாபகர்த்தரி யோகம் என்பது ஒரு கிரகத்தின் முன்னும் பின்னும் டிகிரி அடிப்படையிலோ, வீடுகள் அடிப்படையிலோ பாவர்கள் அமைந்து இருப்பதை பாவகர்த்தரி யோகம் என்று அழைப்பார்கள். அந்த குறிப்பிட்ட கிரகம், பலம் தரவேண்டும். என்றாலும்கூட அவருடைய இரண்டு பக்கங்களிலும் இரண்டு பாபகிரகங்கள் இருப்பதால், அவரால் செயல்பட முடியாத நிலைமை ஏற்படும். ஒருவர் இருக்கிறார் அவருக்கு இரண்டு புறமும் இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவரால் எப்படி செயல்பட முடியும்? அதுபோல், ஒரு கிரகம் தன்னுடைய இயல்பான வலிமையோடு செயல்பட முடியாத தடைகள் இந்த கிரகங்களால் ஏற்படும் என்பதால், இதனை பாவகர்த்தரி யோகம் என்று சொல்வார்கள்.

உதாரணமாக, குரு சுபகிரகம். அந்த குரு, துலாம் ராசியில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். துலா ராசியினுடைய முதல் ராசி கன்னி ராசி, அந்த கன்னி ராசியிலே செவ்வாய், சனி முதலிய கிரகங்கள் இருக்கிறார்கள். துலா ராசிக்கு அடுத்த ராசி விருச்சிக ராசி. அந்த விருச்சிக ராசியிலே ராகு முதலிய பாபகிரகங்கள் இருக்கிறார்கள். ஆக, குருவுக்கு முன் ராசியிலும், குருவுக்கு பின் ராசியிலும் இரண்டு பாவகிரகங்கள் இருப்பதால், குருவால் தன்னுடைய முழு வலிமையோடு செயல்பட முடியாத நிலைமை ஏற்படும். ஒருவருக்கு யோக தசையாக குருதசை அமைந்தாலும்கூட முழுமையான பலனைக் கொடுக்காமல் இந்த யோகம் தடுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதையும் யோசித்துத்தான் பலன் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.