Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சதயம்

கால புருஷனுக்கு இருபத்தி நான்காவது நட்சத்திரம் (24) சதய நட்சத்திரமாகும். இது ஒரு முழுமையான நட்சத்திரம். இது ராகுவின் முழுமையான நட்சத்திரமாகும். இதனை சமஸ்கிருதத்தில் ‘‘ஷதாபிஷா’’ நட்சத்திரம் என்று சொல்கின்றனர். ஷதாபிஷா என்பது மறைமுக நட்சத்திரம் என்றும் முக்காடு நட்சத்திரம் என்றும் அழைக்கிறார்கள். இது தெய்வீகத் தன்மை கொண்ட நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் மிகவும் பிடிவாதம் கொண்டாதாக உள்ளது. அதிக வசீகரத்தன்மை கொண்ட நட்சத்திரம். சோழ பேரரசன் ராஜராஜ சோழன் அவதரித்த நட்சத்திரம் சதயம். சதயம் என்ற சொல்லுக்கு ‘நூறு மருத்துவர்கள்’ என்ற பொருளும் உண்டு. இந்த நட்சத்திரம் நோய்களை குணப்படுத்தும் சக்தியை கொண்ட நட்சத்திரமாகும். புராணங்களின் அடிப்படையில் பல தெய்வங்கள் அவதரித்த நட்சத்திரமாக சதயம் உள்ளது சிறப்பாகும். சிவபெருமான், சரஸ்வதி தேவி, சமுத்திரம் மற்றும் ஜலத்திற்கான கடவுளான வருண பகவானன், வாயு பகவான் மற்றும் துர்க்காதேவி அவதரித்த நட்சத்திரம் எல்லாம் இந்த சதய நட்சத்திரமாகும். யமன் அவதரிசத்த நட்சத்திரம் என்பதால் மரணபயம் இல்லாதவர்கள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர்கள்.

சதயம் நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் சுண்டன்,குன்று,செக்கு ஆகும். சதயம் என்பது லிங்கத்தையும் லிங்கோத்பவரையும் குறிக்கிறது.கால புருஷனுடைய முழங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகளுடன் தொடர்புடைய நட்சத்திரம். வான மண்டலத்தில் நூறு நட்சத்திரக் கூட்டங்களின் கூட்டாக இருக்கக் கூடிய நட்சத்திரம் சதயம். கோள வடிவில் இருக்கும்.இந்த நட்சத்திரம் ஸ்திரமாக இருக்கும். ஆகவே, எந்த விஷயமாக இருந்தாலும் அழுத்தமாக பிடித்து கொள்வார்கள். அதிலிருந்து மாறமாட்டார்கள்.கால புருஷனுக்கு 11ம் பாவகத்தில் உள்ள ராகுவின் நட்சத்திம் வெற்றிக்குரிய நட்சத்திரமாகும். முழுமையான நட்சத்திரமாகும்.

வருண புராணம்

வருணன் நமது ஐந்திணைகளில் நெய்தல் நிலக் கடவுளாக உள்ளார். இவரே சதய நட்சத்திரத்தின் அதிபதியாக உள்ளார்.கருத்தம பிரஜாபதி என்பவருக்கும் தும்ரை என்பவருக்கும் மகனாக சுசிட்டுமான் (வருணன்) பிறந்தார். சிறுவன் சுசிட்டுமான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் சென்றான். அப்போது அங்கு வந்த முதலை ஒன்று சிறுவனாக சுசிட்டுமானை முதலை விழுங்கியது. பிறகுதான் தான் விழுங்கியது கர்த்தம பிரஜாபதியின் மகன் என்பதை உணர்ந்த முதலை அச் சிறுவனை உயிர்பித்தது. மீண்டும் அச்சிறுவனை தன் மீது ஏற்றிக் கொண்டு அவனுக்கு முத்துமாலை அணிவித்து கங்கையின் கரையில் விட்டுச் சென்றது.நடந்ததை தந்தையிடம் கூறினான் சுசிட்டுமான். தந்தையின் ஆசிர்வாதம் பெற்று சிவனை நோக்கி தவம் செய்ய விரும்பினான். காட்டை அடைந்து நீண்ட நாள் கடுந்தவம் புரிந்தான். தவத்தினை உணர்நது சிவபெருமான் வருண பதவியும் வருண உலகத்திற்கும் நீருக்கும் அதிபதியாக விளங்க வரம் கொடுத்தார்.

வருணனே ராமனின் பட்டா அபிஷேகத்தின் போது கலந்து கொண்டு சீதா தேவி தூய்மையானவள் என கூறினார்.வருணன் சுப்ரமணியருக்கு யானையையும் மற்றும் இரண்டு சீடர்களையும் கொடுத்தார் என புராணங்கள் சொல்கின்றன. அந்த சீடர்களே யமன் மற்றும் அதியமா ஆவர்.ராவணனை தோற்கடித்த பெருமைக்கு உரியவர்களில் வருணனும் ஒருவன் ஆவான்.அர்ஜீனனிடம் இருந்த காண்டீவ வில்லும் அம்பும் வருணன் உடையது. அர்ஜீனன் திருப்பி கொடுப்பதற்காக அந்த வில்லை கடலில் சமர்பித்தான் என்கிறது புராணம்.

பொதுப்பலன்கள்

தீர்க்கமாக சிந்திக்கும் குணம் கொண்டவர்கள். ஆனால், அதீத கோபத்தால் உணர்ச்சி வசப்படுவதால் அனைத்தையும் இழந்து துன்பப்படும் நிலையில் இருப்பார்கள். யாருக்கும் அஞ்ச மாட்டார்கள். இவர்களின் நட்சத்திரம் ராகுவாக இருப்பதால் திடீரென மனமாற்றத்துடன் வேறுமாதிரி நடந்து கொள்வார்கள். சிலர் பணத்தை நோக்கியே பயணிப்பர். சிலர் பணத்தை நோக்கி பயணிப்பதை தவிர்ப்பர். கூட்டமாக எல்லோருடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மனிதாபிமானம் கொண்டவர்கள். இவர்கள் அவசரப்படாமல் இருந்தால் எல்லாம் சிறப்பாக முடியும். அவசரத்தால் அவதியை அனுபவிப்பர்.

ஆரோக்கியம்

சந்திரன் ராகுவின் சாரத்தில் உள்ளதால் அதிகமாக சிலரிடம் எதிர்பார்த்து ஏமாந்து போவார்கள். முன்கோபிகளாக இருப்பர். ரத்த அழுத்தம் அதன் காரணமாக இதய துடிப்பு அதிகரிக்க காரணங்கள் உண்டு. ராகு சர்ப்பம் என்பதால் தோல் தொடர்பான வியாதிகள் வரும். சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நலம் பயக்கும்.

சதயத்திற்குரிய வேதை நட்சத்திரம்...

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும்.ரோகிணி மற்றும் புனர்பூசம் என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது.இந்த நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்குவது வேண்டாம்.

பரிகாரம்

கடம்ப மரங்கள் தல விருட்சங்களாக உள்ள கோயிலில் ராகு காலத்தில் வழிபாடு செய்வது சிறப்பாகும். குறிப்பாக திங்கட் கிழமை ராகு காலத்தில் சந்திரனுக்கும் ராகுவிற்கும் வழிபாடு செய்வது சிறப்பான அமைப்பாகும்.