Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சச யோகம் என்னும் ஜனவசிய யோகம்

பஞ்ச மகா புருஷ யோகத்தில் முக்கியமான யோகமாக சச யோகம் உள்ளது. ‘சச’ என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது. ‘சச’ என்றால் ‘முயல்’ என்று பொருள். முயலை போன்றே சனி கிரகமும் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் ஒரே இடத்தில் நீண்ட காலங்கள் தங்கியிருக்கக்கூடிய இயல்பை கொண்டுள்ளதால் சச என்ற வார்த்தை சனி பகவானுக்கு பொருத்தமான வார்த்தையாக உள்ளது. நவக்கிரகங்களில் ஒரு ராசிக் கட்டத்தில் வெகுநாட்கள் சஞ்சாரம் செய்து பொறுமையாக நிதானமாக எல்லா வேலைகளையும் முடித்து பின்பு மற்றொரு ராசிக்கட்டத்திற்கு பயணிக்கக் கூடிய கிரகம் சனி மட்டுமே. சனியை மட்டுமே மையப்படுத்தி சொல்லக்கூடிய யோகம்

சச யோகம்.

சச யோகம் என்பது என்ன?

லக்னத்திற்கு அல்லது ராசிக்கு கேந்திரங்கள் என்று சொல்லக்கூடிய லக்னம் (1ம்) , சுகஸ்தானம் (4ம்) , சப்தம ஸ்தானம் (7ம்), கர்மஸ்தானம் (10-ம்) பாவகங்களில் சனி பகவான் அமர்வதும் அல்லது ஆட்சி உச்சம் பெறுவதும் சச யோகம் என்றாகிறது. சில தருணங்களில் கேந்திரங்களில் பரிவர்த்தனை பெற்றும் இந்த சச யோகம் செயல்பட்டு நற்பலன்களை வாரி வழங்குகிறது. சுப கிரகங்கள் பார்வை செய்தால் இன்னும் நற்பலன்கள் ஏராளம் ஏராளம்.

சச யோகம் குறைபடும் அமைப்புகள்...

* சனி பகவான் சில நேரங்களில் கேந்திரங்களில் அமர்ந்து கேந்திர ஆதிபத்திய தோஷத்தையும் செய்யும் நன்மையும் செய்யும்.

* சனி பகவான் ராகுவோடு இருப்பதோ ராகுவின் பார்வையில் இருப்பதோ கூடாது. அதே போல சனி பகவானோடு கேது இருப்பதோ கேது பார்வையில் இருப்பதோ கூடாது.

* சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கம் அடைவது சச யோகத்தை தடுக்கும் அமைப்பாக உள்ளது.

* முக்கியமாக சனி எதிர்மறையான செவ்வாய், ராகு, சூரியன் கிரகங்களோடு இணைந்திருப்பது பார்த்திருப்பது சச யோகத்தில் தடையை ஏற்படுத்தும்.

* அசுப கிரகங்களுக்கு நடுவில் சனி இருந்தாலும் சச யோகம் தடைபடும் அமைப்பாகும்.

சச (சனி) யோகத்தின் பொதுவான பலன்கள்...

* கடுமையான உழைப்பாளிகள் என்று சொன்னால் அது மிகையில்லை. அதைவிடவும் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள்.

* நான்காம் பாவகத்தில் (4ம்) அமர்ந்திருந்தால் இவர்களுக்கு கனரா வங்கி, ஸ்டேட் பேங்க் போன்றவைகளில் கணக்கு வைத்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். (இந்தியாவில் இருப்பதனால்). இவர்கள் உடுத்தும் ஆடைகள் மிகச் சாதாரணமாக இருக்கும். புதிய ஆடைகளையோ அல்லது அதிக மதிப்புடைய ஆடை களையோ இவர்கள் விருப்பம் காட்ட மாட்டார்கள்.

* யாராலும் செய்ய முடியாத வேலைகளை செவ்வனே செய்து பாராட்டை பெறும் அமைப்ைப உடையவர்கள்.

* சச யோகம் கொண்டவர்கள் தலைவனாக இருப்பதைவிட மக்களோடு மக்களாக தொண்டனாக இருப்பதையே விரும்புவார்கள்.

* நுண்ணிய வேலைப்பாடுகளை செய்வதில் கைதேர்ந்தவர்களாக சச யோகம் உள்ளவர்கள் இருப்பார்கள். குறிப்பாக, சிற்ப வேலை செய்பவர்கள், ஓவியர்கள் போன்றோர்கள்.

* சிலருக்கு இரும்பு தொடர்பான துறையில் பெரிய வெற்றியைத் தரும்.

* ரசாயனம் மற்றும் டாஸ்மாக் போன்ற மதுபானம் விற்பனை துறையில் இருப்பவர்களுக்கும் இந்த சச யோகம் அமையும்.

* ஜனஈர்ப்பு சக்தி இந்த சச யோகம் உள்ளவர்களுக்கு உண்டு.

* அதிகமாக உண்மை பேசுபவர் களாக இருப்பதும் உண்மையை உரக்கச் சொல்பவர்களாக இருப்பதும் இவர்களின் இயல்பான குணமாக இருப்பது மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

* வானளாவிய புகழ் வந்தாலும் அதற்கு மயங்கும் குணம் இவர்களிடம் இல்லை.

* சிலர் மக்களின் கர்ம வினைகளை கண்டறிந்து அவர்களின் கர்மங்களுக்கான வழியை சொல்லும் நபர்களாக இருப்பர். கர்ம வினை தீர கர்மாதான் வழிவிட வேண்டும். அந்த பாக்கியம் யாருக்கு ஏற்பட்டாலும் அவர்கள் சச யோகம் உள்ளவர்களையே நாடிச் செல்வர்.

* குபேர யோகம் உள்ளவர்களின் ஸ்தாபனத்தில் இவர்களே பல பெரிய பதவிகளில் இருப்பார்கள்.லக்னம் மற்றும் ராசியை அடிப்படையாகக் கொண்ட பலன்கள்...

* மேஷத்திற்கு கேந்திரங்களான கடகம், துலாம், மகரத்தில் அமர்ந்து சிறப்பான சச யோகத்தை தருவதாக உள்ளது. ஆகவே, தொழில் ரீதியாகவும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தை உண்டாக்கும் அமைப்பாக இருக்கும்.

* ரிஷபத்திற்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானமான கும்பத்தில் அமர்ந்து சிறப்பான சச யோகத்தை தொழிலில் உண்டாக்குகிறது.

* கடகத்திற்கு நான்காம் (4ம்) இடத்திலும், பத்தாம் இடமான (10ம்) மகரத்திலும் அமர்ந்து சிறப்பான சசயோகத்தை தருகிறது. திறமையின் அடிப்படையிலும், மனைவி மற்றும் நண்பர்களின் மூலம் சிறப்பான அந்தஸ்தை சமூகத்தில் இவர்களுக்கு கொடுக்கும் அமைப்பாக உள்ளது.

* சிம்மத்திற்கு ஏழாம் இடமான சப்தம ஸ்தானத்தில் (7ம்) அமர்ந்து சிறப்பான சச யோகத்தை தருகிறது.

* துலாம் ராசியிலிருந்து (1ம்) இடமான லக்னத்திலும் நான்காம் (4ம்) இடமான மகரத்திலும் அமர்ந்து சிறந்த பலனை தரும். இவர்களில் சிலர் நீதிபதிகளாகவும், கிராமங்களில் பஞ்சாயத்தில் நாட்டாமை என்ற பதவியிலும் உள்ளவர்களாக இருப்பர்.

* விருச்சிகத்திலிருந்து நான்காம் பாவமான (4ம்) கும்பத்தில் அமர்ந்து திறமையினால் பெரும் புகழை பெறும் அமைப்பாக இருக்கும்.

* மகரத்திலிருந்து லக்னம்(1ம்) மற்றும் பத்தாம் ஸ்தானமான (10ம்) துலாத்தில் சனி உச்ச பலத்தை பெற்று தொழில் மற்றும் உத்யோகத்தில் பெரிய அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் வாய்ப்பை வழங்கும் சச யோகம்.

இவை கேந்திரங்களில் அமர்வதால் உண்டாகும் சச யோகத்தின் அமைப்பு பரிவர்த்தனை பெற்றாலும் நட்சத்திர சாரங்களில் அமர்ந்திருந்தாலும் பலன்கள் வேறு வழியிலும் வெற்றியைத் தரும் ஜன வசிய யோகம்.