கிரகங்கள் பல்வகைகளில் ஒன்றுக் கொன்று தொடர்புகொண்டுள்ளது. அந்தவகையான தொடர்புகள் திருஷ்டி எனப்படும் பார்வைகளால் இணையும். நட்சத்திரங்கள் வழியே இரண்டு கிரகங்கள் இணையலாம். திரிகோண ஸ்தானங்கள் வழியே கிரகங்கள் இணையலாம். ஒரே ராசிக்கட்டத்தில் அதாவது பாவகத்தில் நெருக்கமாக இணைய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இவ்வாறு கிரகங்கள் ஒன்றையொன்று தொடர்பு கொள்வதால் யோகங்கள் எனச் சொல்லப்படும் பலன்கள் உருவாகின்றன. யோகங்கள் யாவும்கூட இருக்கின்ற ராசி அடிப்படையில் முழுப் பலன்களையோ குறைவான பலன்களையோ கொடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. சுப கிரகப்பார்வையின் தன்மையினால் அதிகமாகலாம் சுபகிரகம் எதிர்தன்மையாக இருக்கும் பொழுது அதாவது, ஆறாம் அதிபதியாகவோ அல்லது பாதக அதிபதியாகவோ இருக்கும் பொழுது தரக்கூடிய பலன்களை சுப கிரகங்களே குறைப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு என்பதை அனுபவத்தில் உணரலாம். ஆகவே, எல்லா யோகங்களும் எல்லோருக்கும் ஒரே மாதிரி தருவதில்லை என்பதே நிதர்சனம். யோகங்கள் முறையில் சார யோகத்தை பற்றி அறியலாம்.
சாரயோகம் என்றால் என்ன?
ராகு - கேது என்னும் சாயா கிரகங்களை தவிர மற்ற கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன் மற்றும் சனி ஆகியவை தொடர்ச்சியாக லக்னம் முதல் நான்காம் பாவகம் வரை தொடர்ச்சியாக அமையப்பெறும் யோகம் சார யோகம் என்று சொல்லப்படுகிறது. இங்கே சாரம் என்பது தொடர்ச்சியாக தாங்குதல் என்று பொருள்படுகிறது. சாரம் என்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
சார யோகத்தின் சிறப்பம்சம் யாது?
* நான்கு வீட்டிற்குள் கிரகங்கள் அடைவுகள் ஏற்படும் பொழுது ஒரு கிரகத்திற்கு பதினோராம் பாவகத்தில் மற்றொரு கிரகம் தொடர்பு கொள்ளும் பொழுது வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கிறது.
* கிரகங்கள் ஆட்சி, உச்சம் என்ற வலிமை பெறா விடிலும் அந்த கிரகத்திற்கு பதினோராம் பாவகத்தில் (11ம்) மற்றொரு கிரகம் அமைவது சிறப்பான அமைப்பாக இருக்கும்.
* நான்காம் (4ம்) பாவகத்தில் ஒரு கிரகம் அமையும் அந்த கிரகம் கேந்திர வலிமை பெறுகிறது. அவ்வாறு கேந்திர வலிமை பெற்ற கிரகம் இயக்க பாவகத்தில் வலிமைத்தன்மையை தருகிறது.
* கேந்திர வலிமை பெற்ற கிரகங்கள் (4ம்) பாவகத்தில் அதிகம் இருந்தால் இயக்கும் தன்மை அதிகமாக இருக்கும். மேலும், இவ்வாறு கிரகங்கள் அமையப் பெறும் பொழுது வீடு, வாகனம், நிலம், சொத்துகள், பொருள் சேர்க்கை ஆகியவை எளிதாக அமையப் பெறும். அவ்வாறு எளிதாக அமையப் பெற்றவர்களுக்கு சில நேரங்களில் உடல் சுகவீனங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
* கோச்சாரத்தில் ராகு - கேதுக்கள் இந்த நான்காம் பாவகம் (4ம்) முதல் லக்ன பாவகம் வரை பயணிக்கும் பொழுது எல்லா அமைப்பிலும் பாதிப்புகள் உண்டாக்கும் என்பதை கவனத்தில் கொள்க.
சாரயோகத்தின் பலன்கள்
* தலைமைப் பதவியை வகிக்கும் அமைப்பை ஏற்படுத்தும். உயர் பதவிகள் யாவும் இவர்களை எளிதாக வந்தடையும் அமைப்பை பெற்றவர் களாக இருப்பர்.
* நான்கு பாவகத்திற்குள் எல்லா கிரகங்களும் அடைபடுவதால், சந்திரன் தனித்திருக்கவாய்ப்பில்லை. ஆகவே, சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் கண்டிப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எப்பொழுதும் இந்த யோகம் கொண்டவர்களைச் சுற்றி பலர் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பண வரவுகளும் வந்து கொண்டே இருக்கும்.
* இவர்களுக்கு பொன், பொருள் சேர்க்கை, நிலம், வீடு, வாகனம் போன்றவை எளிதாக சேரும். லட்சுமி காடாட்சம் பெற்றவர்களாக இருப்பர்.
* பொதுவாக லக்னத்திலும் நான்காம் பாவகத்திலும் கிரகங்கள் அமைந்து திக்பலம் பெறுகிறது. அந்த பாவகத்தை தொடர்பு பெறும்பொழுது பாவகத்தை வலிமைப்படுத்துகிறது.
* இவர்கன் ஆரோக்கியத்தை எளிதாக பெறுகிறார்கள். சில ஜாதகங்களில் மட்டுமே பாதிப்புகள் உண்டாகிறது. காரணம் லக்னத்தையும் கிரகத்தை பொறுத்து மாறுபாடு உண்டாகிறது.
* உயர்ந்த கல்வியை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, கல்வி இவர்களை கடைசி வரைக்கும் உயர்நிலை நோக்கி அழைத்துச் செல்லும் அமைப்பை கொண்ட யோகமாக திகழ்கிறது.
சாரயோகம் சிறப்புற என்ன செய்யலாம்?
* தினந்தோறும் சந்தியாவந்தனம் செய்வது நன்மையைத் தரும். சந்தியாவந்தனம் செய்து பழக்கமற்றவர்கள் தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்தால் சிறந்த நன்மைகளும் ஆரோக்கியமும் உண்டாகும்.
* பௌர்ணமி தினங்களில் சந்திரனுக்கு பால், பன்னீர், பச்சரிசி, உப்பு ஆகியவைகளில் நிவேதனம் செய்து வழிபடுவது சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்ல மனோநிலையை மேம்படுத்தும் அமைப்பை தரும்.
* வருடத்திற்கு ஒருமுறை நவகிரக சாந்தி செய்தல் நலம் தரும் அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது நவகிரகங்களுக்கும் அபிஷேகம் அர்ச்சனை செய்து கொள்வது நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளும் அமைப்பையும் தோஷங்கள் போக்கும் அமைப்பையும் தரும்.
* மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது நன்மை பயக்கும்.

