Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சரஸ்வதி பூஜையும் விஜயதசமியும்

சரஸ்வதி பூஜை 1-10-2025 விஜயதசமி 2-10-2025

1. முன்னுரை

நவராத்திரி உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. பத்தாம் நாள் தசமி. வெற்றியைத் தரும் விஜய தசமி. அதற்கு முதல் நாள் சரஸ்வதி பூஜை. கல்வி தேவதைக்கான விழா. வீரத்திற்கு மூன்று நாட்களும், செல்வத்திற்கு மூன்று நாட்களும், கல்விக்கு மூன்று நாட்களும், என ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்தி உற்சவத்தில் நிறைவான ஒன்பதாம் தினம், கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதன் மூலமாக, நமக்கு ஒரு அற்புதமான செய்தி உணர்த்தப்படுகிறது. என்னதான் செல்வம் இருந்தாலும், என்னதான் வீரம் இருந்தாலும், கல்வி என்ற வித்தைக்கு முன்னால், அவைகள் நிறைவான பலனைத் தருவது கிடையாது. எனவே தான் முத்தாய்ப்பாக, கல்விக்கான விழாவாக சரஸ்வதி பூஜையை வைத்து, அதன் மூலம் அடைகின்ற வெற்றி விழாவாக விஜயதசமியை சான்றோர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

2. அறிவு விழா “சரஸ்வதி பூஜை”

நம்முடைய சமய மரபில், ஒருவன் பெற்ற செல்வம் அடுத்த பிறவிக்குக் கை கொடுக்குமா என்பது தெரியாது. கை கொடுக்கும் என்று எந்தச் சாஸ்திரத்திலும் எழுதப்படவில்லை. அதைப்போலவே ஒருவன் ஒரு பிறவியில் பெற்ற வீரம் அடுத்தொரு பிறவியில் தொடர்ந்து வரும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. அடுத்த பிறவி என்ன, பல நேரத்தில் அதே பிறவியிலும் கூட, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வீரம் குறைந்து கொண்டே வரும். அதைப்போலவே செல்வமும் குறைந்து கொண்டே வரலாம். ஆனால் வளர்பிறையாக இருப்பது கல்வி மட்டுமே. படிக்கப் படிக்க கல்வி வளருமே தவிர குறையாது. மற்றவர்களுக்குக் கொடுக்கக் கொடுக்க கல்வி பிரகாசமாகுமே தவிர குறையாது. எனவே வளர்பிறையை நோக்கி நகர்கின்ற நிலவின் கலைகளில், ஒன்பதாம் நாள் எனப்படும் நவமி தினத்தை கல்விக் கடவுளான கலைமகளுக்கு ஒதுக்கி வைத்தார்கள். அறிவு விழா சரஸ்வதி பூஜை தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

3. எப்பிறப்பிலும் உதவும் கல்வி

ஒருவன் எத்தனைப் பிறப்பு எடுத்தாலும் அத்தனைப் பிறப்பிலும் அவன் கற்ற கல்வி தொடரும். அதனால் தான் சிலர் பிறக்கும் பொழுது குழந்தை மேதமை தன்மையோடு (child Prodogy) பிறக்கிறார்கள். சிறுவயதில் கவி பாடுவதும், சிறந்த இசைக்கருவிகளை இசைப்பதும், அறிவாற்றலோடு பேசுவதும், அவர்கள் கடந்த பிறவியில் கற்ற கல்வியின் தொடர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். இதனை வள்ளுவரின் குறட்பாவும் வலியுறுத்துகிறது. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. (அதிகாரம்: கல்வி குறள் எண்:398) இக்குறளின் கருத்து ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழு பிறப்பிலும் உதவும். அடுத்த ஒரு பிறவி இல்லை என்பதாகக் கொண்டாலும், செல்வமோ மற்ற மற்ற பொருள்களோ இப்பிறப்பில் மட்டும் தான் உதவும், ஆனால், கல்வியானது பிறப்பில்லாத நிலையை அடைய வைக்கும் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும், கல்வியின் சிறப்பு ஒப்பிடப் பட முடியாதது. அதை சரஸ்வதி பூஜை அன்று தான் நினைத்துக் கொள்வதும், விஜயதசமி அன்று கல்வியைத் தொடங்குவதும் காலம் காலமாகச் செய்யப்பட்டு வரும் வழக்கமாகும்.

4. கல்வியை விட சிறந்த செல்வம் உண்டோ?

இன்னும் ஒரு வகையில் பார்த்தால், கல்வியில் தான் செல்வமும் இருக்கிறது. கல்வியில் தான் வீரமும் இருக்கிறது. ‘‘கேடில் விழுச் செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” என்ற குறட்பாவில் இக்கருத்து வெளிப்படுகிறது. கேடில் விழுச்செல்வம் என்பது அற்புதமான விஷயம். மற்ற எல்லா செல்வங்களுக்கும் ஏதேனும் குறைபாடு இருக்கும். ஆனால் குறைபாடு இல்லாத செல்வம் கல்விதான். அந்தக் கல்வியை, தீயிட்டுக் கொளுத்த முடியாது. திருடர்களால் திருட முடியாது. அள்ளி அள்ளி மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் குறையாது. அது வளர்பிறைபோல நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கும். சிந்திக்கும் தோறும் சிறந்து கொண்டே இருக்கும். எனவேதான், ‘‘மாடல்ல மற்றையவை’’ என்று மிக உறுதியாக திருவள்ளுவர் தெரிவித்தார். மாடு என்பது செல்வம். இதை சங்க காலப் புலவர்களும் நன்கு உணர்ந் திருந்தனர். கல்வி தரும் முதல் ஆசிரியர் கலைமகள் தான். எனவே கவிபாடும் நாவலர்கள் கலைமகளைத் துதித்து விட்டுத்தான் தங்கள் நூல்களைத் தொடங்கினர்.

5. ஆசிரியர் விழா

கலைமகள் விழாவை “முதல் ஆசிரியர் விழா” என்றும் சொல்லலாம். சமூகத்தின் முதல் மரியாதை ஆசிரியர்களுக்குத்தான் தரப்படுகிறது. காரணம், அவர்கள்தான் மற்றவர்களை உருவாக்குகின்றார். மருத்துவராக இருந்தாலும், வழக்கறிஞராக இருந்தாலும், தொழில்நுட்ப வல்லுநராக இருந்தாலும், ஒரு ஆசிரியர் மூலம்தான் உருவாகிறார். எனவே சரஸ்வதி பூஜை ஆசிரியர்களுக்கு ஆசிரியரான கலைமகளின் விழாவாகச் சொல்லலாம். சங்க காலப் புலவர்கள் பலர் ஆசிரியர்களாக விளங்கி யுள்ளனர் என்பதை ஆசிரியன் பெருங் கண்ணன், குலபதி நக்கண்ணனார், மதுரை ஆசிரியர் கோடங்கொன்றனார், மதுரை இளம் பாலாசிரியன் முதலிய பெயர்களைக் கொண்டே அறியலாம். புறநானுற்றில் அடைநெடுங் கல்வியார் என்னும் புலவர் ஒருவர் பெயர் காணப்பெறுகிறது. இப்பெயர் கல்வியால் பெற்ற சிறப்புப் பெயராகும்.

6. சரஸ்வதி தேவி யார்?

கல்வியில் இருந்துதான் வீரம் பிறக்கிறது என்பதற்கு என்ன சான்று என்று கேட்கலாம். சரஸ்வதி தேவியின் அவதாரமே சான்று. இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. விருத்ரா என்ற அசுரன் தனது தவம் மூலம், அபரிமிதமான சக்தியைப் பெற்று, தேவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறினான். வலிமையான அசுரனை எதிர்த்துப் போராட, தேவர்கள் பிரம்மாவின் உதவியை நாடினர், அவர் ஞானத்தையும் நுண்ணறிவையும் வழங்குவதற்காக சரஸ்வதியை அவரது வாயிலிருந்து உருவாக்கினார். அறிவின் தெய்வீக சக்தியுடன் ஆயுதம் ஏந்திய சரஸ்வதி விருத்திரனை எதிர்கொண்டு அவனைத் தோற்கடித்து, பிரபஞ்சத்திற்கு சமநிலையையும் அறிவையும் மீட்டெடுத்தாள்.

7. மூல நட்சத்திரமும் சரஸ்வதியும்

மூல நட்சத்திரத்தில் சரஸ்வதி தேவியின் அவதாரம் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ‘‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’’ என்றெல்லாம் சில பழமொழிகளை, எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் சொல்லி, மூல நட்சத்திரப் பெண்களை, கடுமையாக பாதிப்பு அடையும்படியாகச் செய்தார்கள். உண்மையில் ஜோதிட சாஸ்திரம் அப்படி கூறவில்லை. ஜோதிடத்தின் அடிப்படை தெரிந்தவர்கள் கூட ஒரு நட்சத்திரத்தில் பிறந்ததால், அந்த நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே முழு வாழ்க்கையும் அமைந்து விடாது என்பதை உணர்வார்கள். உண்மையில் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கல்வியிலும், நுண்ணறிவுச் சிந்தனையிலும், தெய்வபக்தியிலும், ஞான விஷயங்களிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதற்காகத்தான் கலைமகளே மூல நட்சத்திரத்தில் அவதாரம் செய்தாள்.

8. கேதுவும் ஞானமும்

கல்வியின் உச்சம் ஞானம். அந்த ஞானத்தைத் தருகின்றவர் கேது. கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்று தான் மூலம். மூல நட்சத்திரம் முதல் நட்சத்திரம் என்று கூடச் சொல்வார்கள். எல்லாவற்றுக்கும் மூலம் என்று சொல்லுகிறோம் அல்லவா. அட்சரங்களுக்கு (எழுத்துக்களுக்கு) எல்லாம் மூலம் அகாரம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று திருவள்ளுவர் ‘‘அ’’ என்கிற எழுத்தில் தான் தம்முடைய திருக்குறளைத் தொடங்குகின்றார். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதற்கேற்ப அட்சர மாலையை கையில் வைத்துக்கொண்டு ஆதி மூல நட்சத்திரத்தில் அவதரித்தாள் கலைமகள்

9. கல்வியாளர்களும் மூலமும்

மூல நட்சத்திரம் குருபகவானின் தனுர் ராசியில் அமர்ந்திருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும், (மற்ற கிரகங்கள் தடை செய்யாத பொழுது) நல்ல கல்வியாளர்களாக இருப்பார்கள். மூல நட்சத்திரத்தில் எத்தனையோ மகான்கள் அவதரித்திருக்கிறார்கள். “எல்லா வேதங்களையும் குறைவின்றி கற்றவர் என்று சொல்லும்படி மிக இனிமையாகப் பேசும் இந்தச் சொல்லின் செல்வன் யார்?” என்று சாட்சாத் ஸ்ரீராமபிரானால் பாராட்டப்பட்ட ஸ்ரீ ஸ்ரீஆஞ்சநேயரின் நட்சத்திரமும் மூல நட்சத்திரம் தான். ஸ்ரீராமானுஜரின் புனர் அவதாரமாக கருதப்பட்ட, சிறந்த ஞானாசிரியரான, மணவாளமாமுனிகள் அவதரித்த நட்சத்திரம் மூல நட்சத்திரம் தான். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், திருநீலகண்டர், திருநீலநக்கர், முருகனார், ஐயடிகள் காடவர்கோன், குங்கிலியக் கலயனார் போன்ற நாயன்மார்களின் குரு பூஜை தினங்களும் மூலம்தான். அதனால்தான் திருமூலம் என்று இந்த நட்சத்திரத்தை திரு சேர்த்து அழைக்கிறார்கள்.

10. சரஸ்வதி சப்தமி

நவராத்திரி பூஜை முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கும், சப்தமி முதல் நவமி வரை மூன்று நாட்கள் கலைமகளுக்கும் என வகுத்துக் கொண்டாடுகிறார்கள். சரஸ்வதி சப்தமி என்று நவராத்திரி ஏழாம் நாளை அழைப்பார்கள். சப்தமி திதி என்பது மிக உயர்வான திதி. கலைகளுக்கெல்லாம் ஒளியாக திகழ்கின்ற கதிரவன் அவதரித்த தினத்தை ரதசப்தமி என்று கொண்டாடுகின்றோம். அதைப் போலவே கலைமகளின் அவதார தினத்தையும் சரஸ்வதி சப்தமி எனக் கொண்டாடுகின்றோம்.

11. மகா நவமியில் சரஸ்வதி பூஜை

நவ கலைகள் எனும்படி ஒன்பதாம் கலைக்குரிய நவமியை சரஸ்வதி பூஜை தினமாக வைத்தார்கள். ஒன்பதாவது திதி நவமி. ராசிகளில் ஒன் பதாவது ராசி தனுசு. அந்த ராசியில் தான் சரஸ்வதியின் அவதார நட்ஷத்திரமான மூலம் இருக்கிறது. தனுசு ராசி உயர் கல்வியைக் குறிப்பது. அந்த ராசிக்கு உரியவர் குரு பகவான். அதிதேவதை தட்சிணாமூர்த்தி. எனவே வித்தையில் சிறக்க குருவினுடைய அருள் தேவை. மூல நட்சத்திர கிரகமான கேது மூர்த்தியும் நவமி அன்று சரஸ்வதி நதி பூரிக்கும் சங்கமத் துறைகளில் நீராடி அந்தர்யாமியாகிய சரஸ்வதி நதியைத் தரிசித்துப் பூஜிக்கிறார். எனவே சரஸ்வதி ஆவாஹன நாள் முதல் சரஸ்வதி பூஜை நாள் வரைத் தினமும் கேது மூர்த்தி வழிபாடு, ஞான சரஸ்வதி, மேதா தட்சிணா மூர்த்தி, ஞானேஸ்வரர், ஞானாம்பிகை போன்ற ஞான சக்தி மூர்த்திகளை வழிபடும் வழக்கமும் உள்ளது.

12. சரஸ்வதி என்ற சொல்லுக்கு வெவ்வேறு அர்த்தங்கள்

கல்வி என்பது உயிரான விஷயம். நீர் என்பதும் உயிரான விஷயம். நீர் இல்லையேல் உலகில்லை. கல்வி இல்லையேல் மனிதன் இல்லை. நீர் நிலைக்கு “சரஸ்” என்கிற பெயர் உண்டு. “சரஸ்” என்ற சொல் தூய்மையைக் குறிக்கிறது. சரஸ்வதி, சரஸ் மற்றும் வதி ஆகிய இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது. சரஸ் என்றால் நீர் நிலை என்றும், வதி என்றால் பெண் என்று பொருள். எனவே, சரஸ்வதி என்றால் ஒரு பெரிய நீர்நிலையை வைத்திருப்பவர். சரஸ்வதி என்ற நதியும் பாரதத்தில் உண்டு. அது ஞான நதி. சரஸ் என்ற சொல்லின் மற்றொரு பொருள் பேச்சு. எனவே, சரஸ்வதி என்றால் ‘‘பேச்சு தெய்வம்”. மற்றொரு வரையறையின்படி, சரஸ்வதி என்ற வார்த்தை மூன்று வார்த்தைகளை உள்ளடக்கியது, அதாவது. சாரா, ஸ்வா மற்றும் வதி, அதாவது ‘‘சுயத்தின் சாரம்.’’

13. வருடத்தில் 2 சரஸ்வதி பூஜைகள்

சரஸ்வதி பூஜை வருடத்திற்கு இருமுறை கொண்டாடப்படுகிறது. முத லாவது செப்டம்பர்/அக்டோபரில் நவராத்திரி பண்டிகை நாட்களில் ஆயுதபூஜை தினமாக கொலுவோடு 9 நாட்கள், கொண்டாடப்படுகிறது. இரண்டாவது ஜனவரி/பிப்ரவரி 2 ல் வசந்த பஞ்சமி தின அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. வசந்த நவராத்திரியின் கடைசி நாள் துர்கா மகா சரஸ்வதியாகத் தோன்றுகிறாள் வசந்த பஞ்சமி இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் சரஸ்வதி பூஜையாக மாறுகிறது. தென்னிந்தியாவில் வெள்ளை நிறம் போலவே, வடக்கே மஞ்சள் சரஸ்வதி தேவியின் விருப்பமான நிறமாக கருதப்படுகிறது. காரணம் மஞ்சள் குரு பகவானின் நிறம். எனவே வடக்கே சரஸ்வதி பூஜை அன்று, ஆடைகளிலும், மலர்களிலும், நிவேதனங்களிலும், மஞ்சள் நிறம் பிரதானமாக அமைகிறது. பூஜையில் வைக்கப்படும் பிள்ளையார் கூட, மஞ்சளில் பிடித்துதான் வைப்பார்கள். சரஸ்வதிக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களும், லட்டு உள்ளிட்ட மஞ்சள் நிற நைவேத்தியங்களாகவே இருக்கும். வசந்த காலத்தின் வருகையை குறிக்கும் சரஸ்வதி பூஜை, வண்ணங்களின் திருவிழாவான ஹோலியின் தொடக்கத்தைக் குறிக்கவும் அனுசரிக்கப்படுகிறது.

14. புரட்டாசியில் சரஸ்வதி பூஜை ஏன்?

நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம் புதன். வித்தைக்கு அதிபதி புதன். வித்யாகாரகன் என்று புதனைச் சொல்லுகின்றோம். ஜாதக ரீதியாக புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வி மற்றும் ஞாபக சக்தி மற்றும் கற்பனை வளம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. புதனுடைய ராசிகளில் ஒன்று கன்னி ராசி. கன்னி ராசியில் ஆன்ம வித்தைக்கு அதிபதியான சூரியன் பிரவேசிக்கும் மாதமாகிய புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியில் சரஸ்வதி பூஜையும் விஜய தசமியும் கொண்டாடுகின்றோம். நவராத்திரி ஆரம்ப நாளில் கலைகளுக்கு உரிய இரண்டு கிரகங்களான சூரியனும் சந்திரனும் கன்னி ராசியில் இருப்பார்கள். சந்திரன் ஒவ்வொரு கலையாக நகர்ந்து ஒன்பதாவது கலையான நவமி திதியை அடைகின்ற பொழுது சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

15. கல்வியைத் தொடங்கும் நாள்

கல்வியைத் தொடங்குவதை வித்யாரம்பம் என்பார்கள். வித்தைகளுக்கு அதிபதியான கலைமகளை வழிபட்டு அட்சராப்பியாசம் தொடங்க வேண்டும். கலைமகள் சந்நதிகளிலோ, தட்சணாமூர்த்தி சந்நதிகளிலோ, ஹயக்ரீவர் சந்நதிகளிலோ, அல்லது அம்பாள் சந்நதிகளிலோ விஜயதசமியன்று வித்யாரம்பம் தொடங்குவது வழக்கம். விஜயதசமி அன்று வித்தைகளைத் தொடங்க பெரும் வெற்றியைத் தரும். அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் கல்வியைத் தொடங்கலாம். துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, முதலிய திதிகளில் வித்யாரம்பம் செய்யலாம். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் முதலிய லக்னங்கள் இருக்கும் நேரத்தில் தொடங்கலாம். லக்னத்திற்கு நான்காம் வீடும் எட்டாம் வீடும் சுத்தமாக இருக்க வேண்டும்.

16. கலைமகளுக்கு தான் எத்தனை பெயர்கள்?

சகல கலைகளும், கல்வியும், ஞானமும் அருளும் தெய்வமானதால் கலைமகள் என்று அழைக்கப்படுகிறாள். வித்யா தேவதை என்று சொல்வார்கள். யாரை உபாசித்தால் கலைகளெல்லாம் ஒருவருக்கு வசப்படுமோ அந்தக் கலைகளுக்கு அதிதேவதை என்பதாலும் கலைமகள் என்று அழைக்கப்படுகிறாள். வீணையை வைத்திருப்பதால் வீணாவாதினி என்றும், நாடிச் சுவடிகளை வைத்திருப்பதால் புஸ்தக வாணி என்றும் வழங்கப்படுகிறாள் ஓங்காரஒலியில் உறைந்திருப்பவளும், நாத மயமான இசையில் கலந்திருப்பவளும், அறிவின் உறைவிடமாகவும், நினைவின் நிறைவிடமாகவும், சகல மொழிகள் மற்றும் எழுத்தின் வடிவமானவளும், அறிவியல், ஜோதிடம் போன்ற அனைத்து கலைகளின் ஒருமித்த முழு வடிவமாகவும் விளங்கும் கலைமகளுக்கு பற்பல பெயர்கள் உண்டு. அவற்றில் சில நாமங்கள்: பத்மாக்ஷி, விமலா, ஞானமுத்ரா, சாவித்ரி, சௌதாமினி, பிரம்மி, சுபத்ரா எனப்பல பெயர்கள் உள்ளன. கிளத்தி, நாமகள், நாமடந்தை, நாமாது, வாணி, திருமகள், கல்யாணி, கானமனோகரி, சரஸ்வதி, பாரதி, மாதவி, மாலினி, வாணி.

17. கலைமகளின் திருவுருவம்

நிறைந்த கல்வியின் அடையாளங்களை நிரல் பட தொகுத்தால் தேவியின் திருவுருவம் நம் மனதைக் கொள்ளை கொள்ளும். வெள்ளைத்தாமரையில், வெண் பட்டாடை அணிந்து, அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பாள். அதாவது ஒரு திருவடி மடக்கியும், ஒரு திருவடி தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பாள். நான்கு கரங்களில், வியாக்யான முத்திரை, அக்க மாலையை வலது கரங்களிலும், இடது கரங்களில் புத்தகமும், தலையில் சடா மகுடமும் தரித்திருப்பாள். அனைத்து விதமான அணிகலன்களும் அணிந்திருப்பாள். கலைமகளின் திருக்கரத்தில் திகழும் மணிமாலையை அட்ச மாலை எனப் போற்றுவர். தான் மொழி வடிவானவள் என்பதை உணர்த்த, அட்ச மாலையுடன் திகழ்கிறாள் சரஸ்வதி.

18. கலைமகள் எங்கெங்கே இருப்பாள்?

கலைமகள் இருக்கும் இடத்தை மகாகவி பாரதி பட்டியலிட்டுச் சொல்லுகின்றார். வீணை எழுப்புகின்ற நாதத்தில் இருப்பாள். மிகுந்த இனிமையும் இன்பமும் தரவல்ல பாடல்களை இயற்றுகின்ற கவிஞர்களின் இதயத்தில் கொலுவிருப்பாள். மெய்ப்பொருளை ஆராய்ந்து தரும் வேதத்தின் உள் இருந்து பிரகாசிப்பாள். மனம் மாசு இல்லாத முனிவர்கள் கூறுகின்ற அருள் வாசகங்களில் அர்த்தமாக இருப்பாள். இனிய குரலில் பாடும் பாடல்களில் பொருந்தி இருப்பாள். குழந்தைகள் பேசுகின்ற மழலையில் இருப்பாள். பாடல் இசைக்கும் குயிலின் குரலிலும், இனிய மொழி பேசும் கிளிகளின் நாவிலும் இருப்பாள். இவற்றைத் தவிர குற்றம் குறை இல்லாத ஓவியங்கள், கோபுரம், ஆலயங்களின் வேலைப்பாடுகளில் உள்ள அழகிலும் குடியிருப்பாள். மொத்தத்தில் இனிமையான எல்லாவற்றிலும் சரஸ்வதியின் இருப்பை உணர்கிறார் பாரதி.

19. அன்னப் பறவை

சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவை. இது, கல்வியாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது. பிரம்மோற்சவ காலங்களில், இறைவன், இரண்டாம் நாள் மாலையில், அன்ன வாகனத்தில் கையில் வீணையுடன், வெண்பட்டாடை அணிந்து வீதி உலா வருவதைக் காணலாம். (திருமலை இரண்டாம் நாள் உற்சவம்) அன்னப்பறவை என்ற ஒரு பறவை இருந்ததா? அது பாலையும் நீரையும் பகுத்துண்டதா என்று கேள்வி எழும். நல்லவற்றையும் தீயவற்றையும் பகுத்தறிந்து, தீயவற்றை தள்ளி, நல்லவற்றைக் கொள்ளும் ஒரு குறியீடாக அன்னப் பறவையைச் சொன்னார்கள். குருமார்களுக்கும் அன்னப் பறவையை உவமையாகச் சொல்லும் வழக்கம் இலக்கியத்தில் உண்டு. எனவேதான் கல்விக் கடவுளான சரஸ்வதியின் வாகனத்தை அன்னப்பறவை என வைத்தார்கள். இதில் இன்னொரு செய்தியும் உண்டு. பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ஒரு அவதாரம் அன்னப்பறவை அவதாரம். அன்னப்பறவை அவதாரம் எடுத்து கலைகள் ஆகிய வேதங்களை மீட்டெடுத்தான் என்று ஒரு வரலாறு உண்டு. “அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ; அவை உன்னைமுன்னம் ஆர் ஓதுவித்தார்?” என்ற பாசுர வரி இதனை உணர்த்தும்.

20. வேத உபநிடதங்களில் சரஸ்வதி

ரிக் வேதத்தின் 2.41.16 ம் பாடல் ‘அம்பிதமே நதீதமே தேவிதமே சரஸ்வதி அப்ரசஸ்தா இவ ஸ்மஸி ப்ரசஸ்திம் அம்ப நஸ் க்ருதி’ என்று சரஸ்வதியை இருகரம் கூப்பித் தொழுதழைக்கிறது. பேச்சாற்றலைத் தரும்படி வேண்டுகிறது. ரிக் வேதத்தில் தான் சரஸ்வதி ஸூக்தம் எனும் பிரத்தியேகமான மந்திரங்கள் உள்ளன. அதில் நல்ல எண்ணங்கள் தேவர்களாகவும் கெட்ட எண்ணங்கள் அசுரர்களாகவும் உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றன. கெட்ட எண்ணங்களை அழிக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் வளர வேண்டும் என்று சொன்னால் முதலில் எது நல்ல எண்ணம் எது கெட்ட எண்ணம் என்று பகுத்தறியும் அறிவு வேண்டுமல்லவா அந்த அறிவைத் தர வேண்டும் என்று சரஸ்வதி தேவியை இந்த சூக்தம் வேண்டுகிறது. ரிக்வேதம் தவிர மற்ற மூன்று வேதங்களிலும் தைத்திரீய உபநிஷத் போன்ற உபநிடதங்களிலும் சரஸ்வதி தேவியைப் பற்றிய மந்திரங்கள் உள்ளன.

21. சாரதா பீடம்

பண்டைய காலத்தில் அரசர்களும் புலவர்களும் மொழிவிவாதம் செய்யும்போது, அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் கொடியும் இணைக்கப்பட்டிருக்குமாம். இதை சாரதா த்வஜம் என்பர். இதில் சரஸ்வதி தேவியின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும். கல்விக்கு புகழ்பெற்ற பல நகரங்கள் இந்தியாவில் இருந்தன. காஷ்மீரத்தில் அப்படிப் புகழ்பெற்றிருந்த இடம்தான் சாரதா பீடம். அங்கே இருந்து தான் பிரம்ம சூத்திரத்தின் போதாயன விருத்தி உரையை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீராமானுஜர் கொண்டு வந்து, ஸ்ரீபாஷ்யம் எனப்படும் விளக்கவுரையை இயற்றினார். அதுமட்டுமின்றி, ஸ்ரீராமானுஜருக்கு அறிவாற்றலின் அடையாளமாக ஸ்ரீபாஷ்யக்காரர் என்ற விருதையும் சரஸ்வதி தேவி வழங்கியதாக வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். சில நூல்கள், கலைவாணியின் வாகன மாக மயிலைக் குறிப்பிடுகின்றன. ராஜஸ்தானில் சில தலங்களிலும், மும்பையிலும் மயில் மீது வீற்றிருக்கும் சரஸ்வதியை தரிசிக்கலாம். தவிர, ஆட்டின் மீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் திருவடிவங்களும் உண்டு.

22. பாரதி

வேதங்கள் சரஸ்வதிதேவியை துதிகளின் வடிவாக `இடா’ என்றும், அறிவின் விளக்கமாக `பாரதி’ என்ற பெயரிலும், ஞான வடிவில் திகழும் அவளை `சரஸ்வதி’ என்றும் போற்றுகின்றன. இடாதேவியா அவள் நம் வீடுகளில் வீற்றிருந்து மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கிறாள். பாரதி தேவி என்ற பெயரில் மக்களுக்கு கல்வி-கலை ஞானத்தை அருள்கிறாள். சரஸ்வதிதேவி வேள்விகளைக் காப்பதுடன் சகல செல்வத்தையும் நம்முடைய கல்வியின் மூலம் கிடைக்க அருள் செய்கிறாள் என்கின்றன ஞான நூல்கள். சில கோயில்களில் கலைவாணி கரத்தில் பூரணக் கலசத்துடன் திகழ்வாள். அவள் நதியின் வடிவிலும் அருள்பாலிப்பவள் ஆதலால், கரத்தில் பூரணக் கலசத்துடன் அவள் அருள்வதாக ஐதீகம்.

23. வாக் தேவி

‘‘வாணியை சரண் புகுந்தேன் அவள் வாக்களிப்பாள் என திடமிருந்தேன்’’ என்பது பாரதியின் வாக்கு. கலைமகளின் அருளைப் பெற்றதால் தான் அவருக்கு பாரதி என்கிற பெயரும் புகழ் தந்தது. கலைவாணியை வாக்தேவியாகவும் போற்றுகின்றன புராணங்கள். வாக்தேவியானவள் மூன்று சந்தியா காலங்களில் காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் திகழ்கிறாளாம். இந்த மூன்று திருவடிவுடன் திருவீழிமிழலை தலத்தில் அவள் ஈசனை வழிபட்டதாக, அவ்வூர் தலபுராணம் சொல்கிறது. இங்குள்ள மூன்று லிங்கங்களை முறையே காயத்ரீஸ்வரர், சாவித்திரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடுகின்றனர். கிராமங்களில் பேச்சியம்மன் என்ற தேவதையும் சரஸ்வதியின் ஒரு வடிவம் தான் என்பார்கள்.

24. கலைமகளின் வீணை

கலைவாணி ஏந்தியிருக்கும் வீணைக்கு கச்சபி என்று பெயர். அதை அருளியது சிவபெருமான் என்பர். தேவியின் கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் கல்வியின் மேன்மையையும் கலைகளில் திறமையையும் அருள்பவள் என்பதை உணர்த்துகின்றன. தமிழகத்தில் கூத்தனூர் போன்று ஆந்திர மாநிலத்தில், பாசரா என்ற திருத்தலத்தில் தனிக் கோயிலில் அருள்கிறாள் சரஸ்வதி. விநாயகப் பெருமான் சரஸ்வதியை வழிபட்ட திருத்தலம் இது என்கிறார்கள். குமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் தனிக் கோயிலில் அருள் புரியும் சரஸ்வதிதேவியை கவிச் சக்ரவர்த்தி கம்பர் வழிபட்டார் என்கிறது வரலாறு.

25. சரஸ்வதி ஆலயங்கள்

தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைக் கோட்டத்தில்... மேலிரு கரங்களில் அட்சமாலை சுவடியும், கீழிரு கரங்களில் அபய, ஊரு முத்திரைகளுமாக நான்கு திருக்கரங்களுடன் காட்சித் தருகிறாள் சரஸ்வதிதேவி. திருக்கண்டியூர் சிவாலயத்தில் பிரம்மாவுடன் அருளும் கலைவாணியைத் தரிசிக்கலாம். காஞ்சி கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சரஸ்வதிக்குத் தனிச் சந்நதி உண்டு. இவளை லலிதா திரிபுர சுந்தரியின் படைத் தலைவிகளில் ஒருவளான சியாமளா தேவி சொரூபமாக வணங்குகிறார்கள். சியாமளா தேவியை உபாசனை செய்துதான் காளிதாசன் வரம் பெற்றதாகவும், சியாமளா தண்டகம் என்ற நூலை இயற்றியதாகவும் சொல்வார்கள்.

26. திருமால் ஆலயங்களில் சரஸ்வதி பூஜை

“மகா நவமி உற்சவம்” அனந்தாக்கிய சம்ஹிதையில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. புரட்டாசி (பாத்ரபத மாதம்) மாதத்தில் வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் இவ்வுற்சவத்தை, பிரம்ம உற்சவம் போலவே கொண்டாட வேண்டும் என்று வைணவ ஆகம நூல்கள் தெரிவிக்கின்றன. ஒன்பது நாட்களும் தாயார் புறப்பாடு நடக்கும். கொலு மண்டபத்தில் உற்சவ வைபவங்கள் நடைபெறும். பெருமாள் விஜய தசமி அன்று குதிரையில் ஏறி, பார்வேட்டைக்குக் கிளம்புகிறார். வன்னி மரத்துக்கு திருவாராதனம் ஆன பிறகு, வேட்டை உற்சவம் தொடங்குகிறது. விஜயதசமி அன்று வன்னிமரத்தை பூஜிக்க வேண்டும். அன்று வன்னி மரத்தில் அம்பு போட வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. நவராத்திரி உற்சவங்களில் ஒரு நாள் பெருமாள், வெண் பட்டாடை உடுத்தி, கையில் வீணையை வைத்துக் கொண்டு, கலைமகளின் கோலத்தில் காட்சி தருகின்றார்.

27. சரஸ்வதி பூஜை வழிபாடு

சரஸ்வதி பூஜை எனப்படும் ஆயுத பூஜை அன்று அலுவலகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஓய்வு தரப்படும். இயந்திரங்கள் துடைக்கப்பட்டு குங்குமம், பொட்டு வைத்து மலர்கள் தூவப்படும். சந்தனத் தெளியல்களும் உண்டு. அன்று வீட்டிலுள்ள அருவாள் மனை, சுத்தி, கத்தி போன்ற கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் இட்டு வழிபடுவர் சரஸ்வதியை வெண்ணிற மலர்கள் கொண்டு வழிபடுவது விசேஷம். சரஸ்வதிக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம். புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் கல்வி தொடர்பான பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம். கல்விக்குரிய அனைத்துப் பொருட்களையும் பூஜையில் வைப்பர். முடிந்தவர்கள் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சாதம், பாயசம் மற்றும் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, ஜாதிக்காய் போன்றவற்றை சேர்த்து செய்த தாம்பூலத்தையும் நிவேதம் செய்து வழிபட்டால், கலைமகளின் திருவருள் சித்திக்கும்.

28. ஆயுத பூஜை வேறு? சரஸ்வதி பூஜை வேறா?

ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் ஒன்றுதான். ஒவ்வொரு கருவியும் கலைமகளின் வடிவம்தான் காரணம். அதைக் கொண்டு தானே பல விஷயங்களைப் படைக்கிறோம். ‘‘செய்யும் தொழில் தான் தெய்வம்’’ என்பதற்காகவே, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி பூஜையை ஆயுத பூஜை தினமாகவும் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு தொழிலும் ஒவ் வொரு கலைதான். ஆய கலைகள் அறுபத்து நான்கும், அந்த 64 கலைகளுக்கு துணையாகத் தோன்றியிருக்கும் ஆயிரக்கணக்கான கலைகளுக்கும் அதிபதி கலைமகள் அல்லவா. எனவே ஒவ்வொரு தொழிலாளியும் தான் செய்கின்ற வேலையில் திறன் பெறவும், புகழ் பெறவும் சரஸ்வதி பூஜையை ஆயுதபூஜையாகக் கொண்டாடுகிறார்கள். அடுத்த நாளான விஜயதசமியன்று புனர் பூஜை செய்து இவற்றை எடுத்து பணிகளில் ஈடுபட்டால் தொழில் வளம் பெருகும்.

சரஸ்வதி பூஜை (ஆயுத பூஜை) அன்று அவசியம் பொரிகடலை வைத்துப் படைக்க வேண்டும். பொரி என்பது தேவர்களுக்கு முக்கியமான உணவு. ஹோமங்களில் பொரி இட்டுச் செய்வதை லாஜ ஹோமம் என்பார்கள். திருமணத்தில் தீர்க்காயுள் கிடைக்க இந்த ஹோமத்தைச் செய்வார்கள். சரஸ்வதி பூஜை என்பதும் ஒரு ஞான வேள்வி தான். எனவே அன்றைக்கும் பொரியை அவசியம் படைக்க வேண்டும். அதைப் பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவல் பொரியை வெல்லம் கலந்து குழந்தைகளுக்கும் பசுக்களுக்கும் பறவைகளுக்கும் தரவேண்டும்.

29. ஆயுத பூஜையும் விஜயதசமியும்

நவராத்தியின் நிறைவாகக் கொண்டாடப்படுவது விஜயதசமி திருநாளாகும். இது அம்பிகை, அசுரர்களை வதம் செய்து, போரில் வெற்றி பெற்ற திருநாளாகும். அம்பிகையின் வெற்றியைக் கொண்டாடும் திருநாளாக கருதப்படுகிறது. மகா பாரதத்தில் பாண்டவர்கள் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து வாழும் அஞ்ஞாத வாசத்தை மேற்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் விராட தேசத்தில் வேலைக்காரர்களாக இருந்தனர். அவர்களை எப்படியாவது கண்டு பிடித்து மறுபடியும் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று துரியோதனன் மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தான். அப்போது ஒற்றர்கள் மூலம் பாண்டவர்கள் விராட தேசத்தில் மறைந்து இருக்கிறார்கள் என்பதை ஊகித்து, அந்த நாட்டின் மீது படை எடுத்தான். அங்கு பெண் வேடம் பூண்டு இருந்த அர்ஜுனன் விராடனின் மகனான உத்தரனை முன்னிறுத்தி தேரில் வருகின்றான். அந்த ஊர் மயானத்தில் உள்ள வன்னி மரத்துப் பக்கம் தேரைச் செலுத்தி, அம்மரத்தின் மீது மறைத்து வைத்திருந்த தனது ஆயுதங்களை எடுக்கின்றான். அப்பொழுது அந்த ஆயுதங்களுக்கு, ஒரு படையல் போட்டு விட்டு, போர் செய்யத் தொடங்குகிறான். இது மகாபாரதத்தில் நாம் காணும் ஆயுத பூஜை விழா. வெற்றி பெற்ற நாள் விஜயதசமி.

30. விஜயதசமியில் துவங்குங்கள் வெற்றி காணுங்கள்

விஜயதசமி அன்று துவங்கும் எந்த காரியமும் வெற்றியைக் கொடுக்கும். குறிப்பாக குழந்தைகளை விஜயதசமி நாளில் தான் முதன் முதலில் பள்ளியில் சேர்த்து விடுவார்கள். நவராத்திரி நாள்களில் எல்லாவற்றுக்கும் மேலானதாக சண்டி ஹோமம் கருதப்படுகின்றது. சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்த வடிவானவள். சண்டி ஹோமத்தின் சிறப்பு மூன்று தேவிகளையும் ஒரே வடிவமாக பூஜை செய்வதே ஆகும். விஜயதசமி நாளில் இதை செய்வதால் அதிக அளவில் நற்பலன்கள் உண்டாகும். சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி அன்று சில வரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை. எனவே கலைமகளை மஹா நவமியில் வணங்கி, விஜயதசமியில் அடுத்து நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் துவங்கி, வெற்றி பெறுவோம்.