உலகின் பெரிய மிருகம் எதுவென்று கேட்டால் எல்லோரும் டைனோசர், டிராகன் என்றுதான் சொல்வார்கள். ஏனெனில், இதனை நாம் நேரில் பார்த்தது கிடையாது. சினிமாவில்தான் பார்த்துள்ளோம். அதைவிட அசுப மிருகங்கள், பறவைகள் பூமியில் இருந்துள்ளன. அந்த அசுர பறவைதான் சரபம். இந்தப் பறவை இப்பொழுது இல்லை. இந்தப் பறவை சிங்க முகத்துடன், எட்டு (8) கால்களுடன், இருபுறமும் இறக்கைகளும், சிங்க வாலை கொண்ட பறவையினம். அதே போன்று, யாளி என்ற மிருகம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கோயில்களில் தூண்களிலும் சுவாமியின் மேல் உள்ள அலங்கார வளைவுகளிலும் ஒரு சிங்க முகத்துடன் உருவம் அமைந்திருக்கும். இதற்கு ‘யாளி’ என்று சொல்வார்கள். இதுவும் இப்பொழுது இல்லை. ஆனால், உபநிடதங்களிலும் சித்தர் பாடல்களிலும் இதனைப் பற்றிய வார்த்தைகள் உள்ளன. அசுப கிரகங்கள் என சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், சனி என்பது மிகவும் கடுமையான அசுப கிரகக்கூட்டுச் சேர்க்கை. இந்த கிரகச் சேர்க்கைக்கு சரபம் என்கிறோம்.
சரப யோகம்...
அசுபத் தன்மையுடைய கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் இணைந்து ஒரு பாவத்தில் அமர்ந்திருந்தாலும் இந்த மூன்று கிரகங்களும் கேந்திரங்களில் அமர்ந்து ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டாலும் அல்லது இந்த மூன்று கிரகங்களும் நட்சத்திர சாரங்களின் வழியே இணைந்திருந்தாலும் சரப யோகமே. சரப யோகம் என்பது சுபத் தன்மையும் அசுபத் தன்மையும் கலந்த அமைப்பாகும். இதில் சூரியன், செவ்வாய், சனி மூன்று கிரகங்களும் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் நீசம் பெற்று ஒன்றையொன்று பார்வை செய்தாலும் சரப யோகமே. வாழ்வில் ஒரு முறையாவது அசுபத் தன்மையை சந்திக்க நேரிடும்.
சரப யோகத்தின் தன்மைகள் என்ன?
சரப யோகம் அசுபத் தன்மையை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தும். சூரியன், சனி, செவ்வாய் மூன்றும் அசுப கிரகங்களாக இருந்து ஒன்றுக்கொன்று பகை யுத்தத்தை கொண்டிருக்கின்றன. ஆகையால், இது இணையும் இடத்தில் ஒரு யுத்தம் அல்லது அபரிமிதமான அசுப சக்தியை உற்பத்தி செய்யும். சூரியன் அதீத வெப்பத்தையும் சனி அதீத குளிர்ச்சியையும் கொண்டது. ஒன்றுக்கொன்று மாறுபட்ட கிரகங்கள் இணைவதால் அவை அசுப மாற்றத்தை உருவாக்கும். இந்த கிரகங்கள் முறையாக கேந்திரங்களில் அமைவது ஒரு ராட்சஷ இயக்கத்தை ஏற்படுத்தும். இதனை தாங்கும் சக்தி ஜாதகருக்கு இல்லையெனில், அவர்களை படுக்க வைத்துவிடும். அதாவது, ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். இவற்றுடன் ராகு இணைந்தால் நீங்கள் கேட்கவே வேண்டாம். எல்லா அசுபத் தன்மைகளையும் வைத்திருக்கும் அமைப்பாகும்.
சரப புராணம்...
ஹிரண்ய கசிபு என்னும் அரக்கன் பிரம்மனை நோக்கி தவமிருந்தான். அவன் தவமிருந்து என்னை மனிதர்களாலோ மிருகங்களாலோ இரவிலோ அல்லது பகலிலோ எந்த ஆயுதங்களாலும் அழிக்கக் கூடாது எனவும், முவுலகிற்கும் தானே தலைவனாகவும் இருக்க வேண்டும் என வரம் வாங்கினான். இப்படி அவன் வரம் கேட்க காரணம் தன்னுடைய அண்ணனை வதம் செய்த விஷ்ணுவை வதம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்தான். பல காலம் அரக்கச் செயல்களையும் அசுபச் செயல்களையும் செய்தான். காலம் தொடர்ந்தது பிரகலாதன் மகனாக பிறந்தான். சதாசர்வ காலமும் நாராயணன் மந்திரத்தை உச்சரித்தான். அதை அறிந்த ஹிரண்யன் தன் பெயரினை மந்திரமாக உச்சரிக்க வேண்டும் என வற்புறுத்தினான் பிரகலாதனை. பிரகலாதன் மறுத்து நாராயணன் மந்திரத்தை உச்சரிக்கவே, கடும் கோபம் கொண்டான். ‘நாராயணனை வரச்சொல்’ என கூறவே... பிரகலாதனின் பக்தியினால் தூணிலிருந்து நாராயணன் நரசிம்ம ரூபத்தில் பிரசன்னமானார். ஹிரண்யகசிபுவை வதம் செய்தார். பின்பு, அதீத உக்ரத்தால் கோபம் கொண்டார். தேவர்களும் ரிஷிகளும் அஞ்சி சிவபெருமானிடம் முறையிடவே சிவபெருமான் சரப ரூபம் கொண்டு நரசிம்மரை ஆரத்தழுவி அவரின் உக்ரத்தை தணித்தார் என்கிறது புராணம். இந்த சரப ரூபமானது 18 சிங்க கால்களையும் இரண்டு தலைகளையும் கொண்டு இருபுறமும் பட்சியின் இறக்கைகளை கொண்டு மனித உடலுடனும் இருந்தது.
சரப யோகத்தின் பலன்கள் என்ன?
* கேந்திரங்கள் இணையும் பொழுது ஜாதகர் இயக்கம் அபரிமிதமாக இருக்கும். எதையும் தொடர்ந்து இயக்கும் சக்தியை கொண்டிருப்பார். சரப யோகத்தில் பிறந்த நபர்கள் அசாத்திய சக்தியையும் உழைக்கும் திறனையும் கொண்டிருப்பர்.
* இந்த சூரியன், செவ்வாய், சனி கிரகங்கள் இணையும் பொழுது அடிக்கடி நோய்களுக்காக மருத்துவமனை செல்ல வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும்.
* ஜாதகருக்கு சில நேரங்களில் நமக்கு யாரேனும் பில்லி, சூன்யம், ஏவல் செய்துவிட்டார்களோ என்ற அச்சம் உருவாகும்.
* எவ்வளவு அசாத்திய மனிதர்களையும் படுக்க வைத்துவிடும்.
* உயிரை பறிக்கும் கொடிய நோய்களை உற்பத்தி செய்யும் வாய்ப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு.
* வாழ்வில் இண்டஸ்ரிஸ் மற்றும் பெரிய பெரிய தொழில் நிறுவனங்களையும் உருவாக்கும் நிர்வகிக்கும் வாய்ப்புகள் இவர்களுக்கு இருக்கும்.
* இந்த யோகம் கொண்டவர்களுக்கு லக்னாதிபதி வலிமையாக இல்லாவிடில் ஜாதகர் மிகுந்த சிரமத்திற்கு உட்படுவார்.
* இவரிடம் எப்பொழுதும் அரக்கத்தனமான உழைப்பை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பார். இவரை போல் உழைக்க சாதாரண மனிதர்களால் இயலாது.
* சிலருக்கு வாகனங்கள் ஓட்டும் வாய்ப்புகள் இருக்காது.
சரப யோகத்திற்கான பரிகாரங்கள் என்ன?
செவ்வாய், சனி, ஞாயிறுக் கிழமை களில் சரப ஹோமம் செய்து, சரபேஸ்வரருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து கொள்வது நன்மை தரும்.
தவறாமல் எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரையும் பிரத்யங்கரா தேவியையும் வழிபடுதல் சிறப்பை தரும்.
நம்மிடம் அசுரத்தன்மைகளாக உள்ள நெகடிவ் எனர்ஜி நம்மை விட்டு விலகும்.

