Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சரணாகதியை நோக்கி...

ஆன்மிக வாழ்க்கை என்பது வழிபாடு மட்டுமல்ல. பூஜை செய்தலோ, கண்களை மூடி தியானம் செய்வது மட்டுமல்ல. ஆன்மிக வாழ்க்கை என்று தனியாக ஒரு வாழ்க்கை இல்லை. நாம் இப்போது வாழும் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பார்வையை தருவதுதான் ஆன்மிகம். இன்னும் சொல்லப்போனால், லௌகீகம், ஆன்மிகம் என்றெல்லாம் பிரித்துக் கொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட எந்தப் பிளவும் தேவையில்லை.

நீங்கள் யார்? என்னதான் உண்மையில் உங்களுக்கு வேண்டுமென்று தொடர்ச்சியான கேள்விகளால் நீங்கள் துளைத்தெடுக்கப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் ஆன்மிக வாழ்க்கைக்குள் உள்ளீர்கள் என்று அர்த்தம். அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்கிற தெளிவு உங்களுக்குள் அரும்பத் தொடங்கும். இந்த உடலால் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வீர்கள். அது குமாஸ்தா வேலைமுதல் தொழிலதிபர் வரை எல்லாமுமே மிகச் சரியாக நடக்கும். ஆனால், உள்ளுக்குள் இந்த வேலையெல்லாம் நான் இந்த சரீரம் எடுத்தாலும் எடுத்திராவிட்டாலும் அது நடந்தே தீரும் என்று திடமாக உணர்வான். காரணம், நம்மைச் சுற்றியுள்ள உலகம் இயங்கும் விதத்தை, வியப்பை, தன்னை மீறி நடக்கும் செயலால் வரும் ஆச்சரியத்தால் அமைதியை அடைந்தபடியே இருப்பான்.

நாம் நம்மையோ அல்லது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையோ உற்றுப் பார்க்கத் தவறுகிறோம். குறைந்தபட்சம் இயற்கையைக்கூட நாம் கவனிக்கத் தவறுகிறோம். இயற்கையை கவனிக்கும்போதே நம்மையும் சேர்த்து கவனிக்கத் தொடங்குவோம். அப்போது பிரமாண்டமான சக்தியொன்று இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் இயக்குகிறது என்கிற உண்மை லவலேசமாக உணர்வோம்.

இப்போது, இந்த உலக வாழ்க்கையில் இந்த சிறிய உடலின், மனதின் செயல் என்ன என்று மட்டுமே யோசிப்பான்.

அப்போது அவனுக்குள் இதுவரை அவனை தொந்தரவு கொடுத்து வந்த அந்த அகங்காரம் தலை சாய்வதை உணர்வான். அந்தக் கணம் முதல் வெறுமே உழைப்பு... உழைப்பு... என்று நகர்ந்தபடி இருப்பான். அந்த வேலைக்கான களத்தை இந்த இறைவனே அளித்த அரங்கமாக மாற்றிக் கொள்வான். தன் எதிரே வரும் மனிதர்கள் அனைவரையும் இறையே அனுப்பியதாக நினைத்துக் கொண்டே செயலாற்றியபடி இருப்பான். அங்கு அவனுக்குள் இருந்து இறையே குரலாக மாறி அவனை வழி நடத்தும்.

இந்த நிலையே உண்மையான ஆன்மிக மயமான வாழ்வாகும். இந்த நிலையையே பக்தி யோகம் சொல்கிறது. அப்போது பக்தி என்பது கை கூப்புவதினாலோ, பரிகாரங்கள் செய்து வெளிப்படுத்துவதினாலோ இருக்காது. இந்த உடல், மனம் எடுத்ததன் பயன் இந்த ஒரு விஷயத்தை, இந்த செயலை ஆற்றிவிட்டு செல்வதே என்கிற உறுதி உண்டாகி விடும். இதுவே வாழ்வின் உச்சபட்ச பிரார்த்தனையாகும்.

கர்ம யோகத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டால் செயலைச் செய்து கொண்டே இருப்பதும், அதன் மூலம் ஆங்காங்கு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருப்பதையும் உணரலாம். இறைச் சக்தி சிலவற்றை நமக்கு நேரே காட்டும். சிலவற்றை மறைத்து வைத்து சமயம் வரும்போது புரிய வைக்கும். ஏனெனில், காத்திருத்தலே சரணாகதியின் அடிப்படையாகும்.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)