?மாலை மாற்றும் சடங்கின்போது மணமக்களை சடக்கென்று, சிலர் பின்னால் இழுக்க மாலை போடுபவர் நிலை தடுமாறி மாலை கீழே விழுந்து விடுகிறதே... மாலை மாற்றும் சடங்கில் இந்த விளையாட்டு தேவைதானா?
- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்.
இந்தச் சடங்கே விளையாட்டிற்காகச் செய்யப்படுவதுதானே. இதில் ஏன் உங்களுக்கு இத்தனை வருத்தம்? பால்ய விவாஹம் செய்து வந்த அந்தக் காலத்தில் சிறு பிள்ளைகளாக இருக்கும் மணமக்களுக்கு விளையாட்டு காட்டுவதற்காகவும், வேடிக்கைக்காகவும் இந்த மாலை மாற்றுதல் சடங்கினை நமது சம்பிரதாயங்களில் ஒன்றாக வைத்தார்கள். மணமக்களின் தாய் மாமன்கள் பிள்ளைகளை தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு நடனமாடி மாலை மாற்றினார்கள். இந்த வேடிக்கையான நிகழ்வில் மாலை கீழே விழுவதை அபசகுனமாக எண்ணுவது அறியாமை. நீங்கள் குறிப்பிடும் இந்த வேடிக்கையான நிகழ்வு தாலி கட்டுதலுக்கு முன்னர் நடப்பதாகும். அதேநேரத்தில் மாங்கல்யதாரணம் முடிந்து, பாணிக்ரஹணம், சப்தபதி முதலான நிகழ்வுகள் ஆன பின்பு இதுபோன்ற வேடிக்கைகளைச் செய்ய மாட்டார்கள். இன்றும் மாங்கல்யதாரணம் ஆன பின்பு தமிழகத்தில் பல இனத்தவர்களில் மாலை மாற்றும் சம்பிரதாயம் உண்டு. தாலி கட்டிய பிறகு மாலை மாற்றும்போது இவ்வாறு வேடிக்கையாக யாரும் செயல்படுவது இல்லை. காசி யாத்திரையைத் தொடர்ந்து வரும் மாலை மாற்றும் சம்பிரதாயத்தில் வேடிக்கையாகச் செயல்படுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. இதுபோன்ற சம்பிரதாயங்கள் மணமகன், மணமகள் என இரு வீட்டாரையும் சந்தோஷமான மனநிலைக்குக் கொண்டுவருகின்றன என்பதால் இதில் குறைகாணத் தேவையில்லை.
? என்னதான் நாகரிகம் என்ற போர்வை சமூகத்தை மூடப் பார்த்தாலும் இன்னமும் சம்பிரதாயமும் சடங்கும் நிலைப் பெற்றிருப்பதன் காரணம் எது?
- விநாயகராமன், திசையன்விளை.
ஆன்மிகம்தான். ஆன்மிகம் என்பது இந்த உலகில் இருக்கும் வரை சம்பிரதாயமும் சடங்கும் என்றென்றும் நிலைத்திருக்கும். நமது தேசத்தின் ஆணிவேரே அன்பும் ஆன்மிகமும்தான். அன்பு இருக்கும் இடத்தில் ஆன்மிகம் என்பது தானாக இடம் பிடித்துவிடும். அதனால்தான் அன்பே சிவம் என்றார்கள். ஆங்கிலத்தில் love is god என்கிறார்கள். எங்கெல்லாம் உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கெல்லாம் இறைவன் இருக்கிறான் என்பதை உலகத்தோர் எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். இந்தியர்களிடையே அன்பு உணர்வு அதிகம் இருப்பதால் அங்கே ஆன்மிகமும் நிலைப்பட்டு நிற்கிறது. ஆன்மிகம் நிலைப்பட்டு நிற்பதால் சம்பிரதாயமும், சடங்குகளும் மாறாமல் இடம் பிடிக்கின்றன. நாகரிகம் மாறினாலும் இந்த அடிப்படை உணர்வு நம்மை விட்டு என்றுமே அகலாது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?புலால் சேர்க்கையில்லாத உணவை சைவ உணவு என்று கூறுகிறோம். ஏன் அதனை வைணவ உணவு என்றோ ஆறுமுகன் சாப்பாடு என்றோ கூறுவதில்லை?
- சந்திரசேகரன், வில்லிவாக்கம்.
நீங்கள் வட இந்திய பகுதிக்கு இதுவரை சென்றதில்லை என்பது உங்கள் கேள்வியில் இருந்து புரிகிறது. நம் ஊரில் சைவச் சாப்பாடு என்று அழைக்கப்படும் தாவர வகையைச் சார்ந்த உணவு வட இந்தியாவில் வைஷ்ணவ போஜனம் என்றே அழைக்கப்படுகிறது. இன்றளவும் பஞ்சாப் உள்பட நீங்கள் வட இந்திய பகுதிக்குச் செல்லும்போது ஹோட்டல் வாயிலில் வைஷ்ணவ போஜனம் என்ற பெயர் பலகையைக் காண முடியும். சைவ சமயம் என்று கருதப்படும் சிவவழிபாடு செய்பவர்களில் மாமிச உணவு சாப்பிடுபவர்களும் உண்டு, மாமிசம் அல்லாத தாவர உணவினைச் சாப்பிடுபவர்களும் உண்டு. அதேபோல ஒரு காலத்தில் அதாவது ராமானுஜருக்கு முந்தைய காலத்தில் விஷ்ணு வழிபாடு செய்த வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர்களிலும் புலால் உணவு சாப்பிடுபவர்கள், தாவர உணவு வகைகளை மட்டும் சாப்பிடுபவர்கள் என்ற இரு பிரிவுகள் உண்டு. இவர்களில் தென்னிந்தியாவில் மட்டுமே தாவர உணவினைச் சாப்பிட்டு வந்த சைவர்கள் வசித்தார்கள். அதனால் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தாவர உணவினைச் சாப்பிட்டு வந்த சைவர்கள் பெரும்பான்மையாக வசித்ததால் இந்த வகை உணவிற்கு சைவம் என்றும், புலால் உணவிற்கு அசைவம் என்றும் பெயர் உண்டானது. அதேபோல வட இந்தியாவில் தாவர உணவினை சாப்பிட்டு வந்த வைஷ்ணவர்கள் பெரும்பான்மை பெற்றிருந்தனர். அதனால் அவர்கள் சாப்பிடும் தாவர வகை உணவு ஆனது வைஷ்ணவ உணவு என்று பெயர் பெற்றது. இந்த இரு சமயத்தவரே இந்துக்களில் பெரும்பான்மையினராக இருந்ததால் சைவ சாப்பாடு என்றும் வைஷ்ணவ போஜனம் என்றும் தாவர வகை உணவு நமது தேசத்தில் பெயர் பெற்றிருக்கிறது.
?தாலிக் கயிற்றை எப்பொழுது மாற்ற வேண்டும் ?
மஞ்சள் கயிற்றை ஆடி 18, காரடையான் நோன்பு, தீபாவளி நோன்பு போன்ற சமயங்களில் மாற்றிக் கொள்ளலாம். மற்றபடி அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் சுப நட்சத்திர, சுபயோக தினங்களில் மாற்றிக் கொள்ளலாம். செவ்வாய்க் கிழமை, சனிக் கிழமை வேண்டாம். அதைப் போலவே திதிகளில் அஷ்டமி, நவமி, பிரதமை முதலிய தினங்களில் மாற்றிக் கொள்ள வேண்டாம். பெரும்பாலும் முற்பகல் நேரத்தில் மாற்றிக் கொள்வது நல்லது. தெய்வத்தின் பாதத்தில் வைத்து பெரியோர்களிடம் எடுத்துக் கொடுத்து மாற்றிக் கொள்வதும், பிறகு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதும் சிறந்தது .
?பண நெருக்கடி தீர எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
பணத்துக்கு அதிபதி மகாலட்சுமி என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் மகாலட்சுமிக்கு விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்யுங்கள். அதோடு பணம் விரயமாகும் வழியைக் கண்டுபிடித்து நீக்கிக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் தண்ணீர் பிடித்தாலும் ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் நிற்காது. உழைப்பதில் கவனம் செலுத்துங்கள். பத்து ரூபாய் சம்பாதித்தால் ஒன்று இரண்டு ரூபாயாவது சேமிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். வறுமையோ பண நெருக்கடியோ எக்காலத்திலும் வராது.
?சனி பகவானுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?
நவகிரகங்களில் சனிக்குத்தான் எல்லோரும் பயப்படுகிறார்கள். அதனால்தான் அவருக்கு பகவான் பட்டமும் சனீஸ்வரன் என்கிற ஈஸ்வர பட்டமும் தந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர் சனீஸ்வரன் அல்ல சனைச்சரன். அதாவது மெதுவாகச் செல்பவன் என்று பொருள். ஒரு கால் ஊனமுற்றவராக சித்தரிக்கப்படுவதால் மெல்ல நடப்பவராக கருதப்படுகிறார். அதனால் தான் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வதற்கு காலம் எடுத்துக் கொள்கிறார். இந்தக் கதைகள் எல்லாம் சனியின் காரகத்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. சனி பலமாக இருந்தால் அவர் சனிக்கு உரிய காரகத் துவத்தைப் பெற்றிருப்பார். சனியின் காரகத்துவங்களான தாமஸ் குணம் கட்டாயம் அவருக்கு இருக்கும். சுறுசுறுப்பில்லாமல் இருப்பார். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டார். செயல்களில் ஊக்கம் இருக்காது. அதனால் முன்னேற்றம் எளிதில் கிடைக்காது. இந்தக் குணத்தை மாற்றிக் கொள்வதோடு சனியின் தோஷத்தைக் குறைப்பதற்கு வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவ வேண்டும். இது சனி பிரீதியாக அமையும். சனிக்கிழமை அன்று எள் கலந்த சாதத்தை, காக்கைக்கு வைப்பதன் மூலம் இந்த தோஷம் குறையும். குலதெய்வத்தையும் முன்னோர்கள் வழிபாட்டையும் தவறாமல் செய்வதன் மூலம் சனி தோஷம் பெருமளவு குறையும்.
?தூக்கம் அதிகம் வருவதில்லை. எப்பொழுதும் சோர்வாக இருக்கிறது. புத்துணர்ச்சி பெற முடியவில்லை. என்ன செய்ய வேண்டும்?
இயற்கை தந்த கொடைதான் தூக்கம். தூக்கம் குறைந்தால் துக்கம் வந்துவிடும் என்பார்கள். நல்ல உடல் உழைப்பு, மன அமைதிக்கான வழிபாடு, தியானம் செய்தால் நல்ல தூக்கம் வரும். நன்றாக வேலை செய்யுங்கள். தியானம் செய்யுங்கள். தூக்கம் தானாக வரும். நாம் நம்முடைய கடமைகளை ஒழுங்காகச் செய்துவிட்டு பலனை இறைவன் தருவான் என்ற நம்பிக்கையோடு நிம்மதியாக இருப்பது ஒன்றே அமைதிக்கான வழி. அமைதி வந்தால் நல்ல தூக்கமும் வரும். உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.