Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சகல நோயும் தீர்க்கும் சாம்பார் சாத பிரசாதம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மனின் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்து சென்றான். மனைவியை மீட்கும் முயற்சியில், தனக்கு உதவிய வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம்தான் இந்தக் ‘குரங்கணி’.ராவணன் தன்னைக் கடத்திச் சென்றபோது, சீதாதேவி, ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள்.

அந்த மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்து, ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியானுக்கு முத்துமாலையின் ஒளி வீச்சு கண்களைக் கூசவைக்க, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர் மக்கள் கூடி முத்துமாலை கிடந்த இடத்தில் சீதாதேவி பெயரால் வழிபாடு நடத்தினர். அங்கே சீதாதேவி தங்கி இருப்பதாக பாவித்து அந்த மண்சட்டிக்கு முத்துமாலை அம்மன் எனப் பெயரிட்டனர்.

பழங்காலத்தில் இங்கே செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடை திறக்கப்பட்டு மதியம், இரவு பூஜைகள் நடைபெற்று வந்தன. அப்போது மண்சட்டித் திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லை. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவு கூரும் வண்ணம், எந்த படையலும் இல்லாமல் தீப, தூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தனர்.

1957ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தபோது முத்துமாலையை மூடியிருந்த ஒட்டுச் சீலை விலக்கப்பட்டு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் அபிஷேகம் நடத்தி, நைவேத்தியம் படைத்து பகல், இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.முத்துமாலையம்மன் சந்நதியின் இருபுறமும் பரிவார மூர்த்திகள் அமைந்திருக்கின்றன. அதோடு, இடப்புறம் ஸ்ரீதேவி-பூதேவி சமேத திருமாலுக்கு கோபுரத்துடன் கூடிய சந்நதி உள்ளது. முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள்,பார்வதி அம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீர

பத்திரர் ஆகியோருக்கு இங்கு தனித்தனி சந்நதிகள் உள்ளன. விநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, நவகிரகங்கள் ஆகியோரும் அருள்பாலிக்க, மூலக்கருவறையில் முத்துமாலை அம்மன் கிழக்கு பார்த்து அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வருகிறாள்.

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையானவை. ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையன்று முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படுகிறது.ஆனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும். முத்துமாலையம்மன் சந்நதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தி பந்தக்கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.

ஆனி மாதம் விழாவையொட்டி திருக்கால் நடப்படும் அன்று இரவு ஆலய பணியாளர் ஒருவர் ‘அம்மன் கொடை நோன்போ, நோன்பு’ என கூவிக்கொண்டே ஊருக்குள் செல்வார். அந்த 15 நாட்களும் கோயிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர். விழாவிற்கு 8 நாட்கள் முன்பாக ஆண்கள் பெரியசாமிக்கு கயிறு சுற்றி ஆடி நேர்த்திக்கடன் செலுத்துவர். பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஆலயத்தை சுற்றி வருவர்.

ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு முன்தினம் மாலையில் அம்மன் தங்கத்திருமேனியை அலங்கார ஆபரணங்களுடன் எடுத்துச்சென்று அம்மன் திருநடை திறப்பு வைபவம் நடைபெறும். அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்படும். இரவு ஸ்ரீநாராயணர், சப்பரத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அம்மன் கோட்டையைச் சுற்றி வீதிஉலா வருவார். ஆனி திருவிழா முடிந்து 8ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். அன்று உற்சவர்கள் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர்.

ஆனி பெருந்திருவிழாவில் பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டிகளில் குடும்ப சகிதம் கலந்து கொள்வர். பொங்கலிட்டு வழிபடுவர்.இத்தலத்தில் அம்மனுக்கு தென்புறம் பெரியசாமி சந்நதி உள்ளது. ஆலய பூசாரி மற்றும் இவ்வூரிலிருந்த நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றினாள். ‘கேரளாவில் இருந்து எனது காவல் வீரன் பெரியசாமி நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலை வடிவில் மிதந்து வருகிறான். அவனை நல்ல முறையில் வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலதுபுறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அமைத்து விடுங்கள்’ என அருளினாள். அம்மன் அருளாணையின்படி தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். பெரியசாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.

இத்தல வளாகத்தில் ஒரு வீடு உள்ளது. இதனை ‘கோயில் வீடு’ என்பர். செவ்வாய்க்கிழமை தோறும் தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள். பெரியசாமிக்கு பூஜை முடிந்த பிறகு அங்கே கூடியிருக்கும், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் பூசாரி தீர்த்தத்தை தெளிப்பார். அன்று மதியம் சாம்பார் சாதம் தயார் செய்து, பனை ஓலையில் வைத்துப் படைப்பார்கள். இந்த சாம்பார் சாதத்தை உடல்நலம் சரியில்லாதவர்கள் உட்கொண்டால் உடற்பிணி நீங்கி குணமடைவதாக ஐதீகம்.

இந்த சாம்பார் சாதத்தை பெற இன்றும் செவ்வாய்க்கிழமைதோறும் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுகிறார்கள். காலை 5 முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையிலுள்ள தென்திருப்பேரை ஊரிலிருந்து 2 கி.மீ. தூரம்.

தொகுப்பு: மகி