ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 107 (பகவத்கீதை உரை)
‘‘உன் மனதை உன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வா, அதை என்னில் நிலைக்கச் செய், என்னை முழுமையாக சரணடைந்து, என்னுடன் ஐக்கியமாகிவிடு,'' என்று கிருஷ்ணன் நேரடியாகவே அர்ஜுனனுக்குச் சொல்கிறார்.தானே பரப்பிரம்மம் என்பதை நிலைநாட்டுகிறார் கிருஷ்ணன். நெருங்கிப் பழகும் அர்ஜுனனே தன்னைப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் அவருக்குத் தோன்றியிருக்கிறது! அர்ஜுனன் அவரிடம் சரணாகதி அடைந்திருக்கலாம், ஆனால் அவரோடு ஐக்கியமானானா என்பது கொஞ்சம் யோசனைக்குரியதுதான். அவனை விட, அவன் மூலமாக நமக்கும் அதே அறிவுரையை அவர் சொல்கிறார் என்பதுதான் உண்மை.
அவ்வாறு ஒன்றிணையும்போது யோகியின் நோக்கமும் ஈடேறுகிறது. இங்கே யோகி என்பவரை வயது முதிர்ந்த பெரியவராகக் கற்பனை பண்ணிக் கொள்ளக் கூடாது. அப்படிப் பண்ணிக் கொண்டால், அந்த வயதில்தான் யோகம் கைகூடும் என்ற தவறான எண்ணமும் தோன்றிவிடும். யோகிக்கு வயது ஒரு பொருட்டே அல்ல. ஞானக் குழந்தை திருஞான சம்பந்தர் யோகியாக அறியப்பட்டது, அவருடைய மூன்றாவது வயதில்! சுவாமி விவேகானந்தர், ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர் மூலமாக யோகியாக அறியப்பட்டது அவருடைய பதினெட்டாவது வயதில்.
ஆக, ‘யோகி'த் தன்மை அடைய வயது ஒரு பொருட்டே அல்ல. அதனால் பகவானுடன் இரண்டறக் கலக்க, வயதாக வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டு நாளைக் கடத்த வேண்டாம் என்பதுதான் கிருஷ்ணரின் மறைமுக அறிவுரை.இந்த அனுபவத்தைப் பின்னாளில் அடையலாம், அதுவரை லௌகீகமான விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்பது பலருடைய பொதுவான எண்ணமாக இருக்கிறது. ஆனால் அந்த வயோதிக சமயத்தில் அந்த எண்ணம் ஈடேறாமல் போய்விடுகிறது. எப்போது மிகத் தேவையோ அப்போது கைகூடாமல் நழுவி விடுகிறது!
வாலிபன் ஒருவனுக்கு ஒரு மகான் ஒரு மந்திரத்தை உபதேசம் செய்தார். ‘‘இந்த மந்திரத்தை மூச்சிழையாக உச்சரித்துக் கொண்டே இரு. நீ இந்த உலகை விட்டு விடைபெறும் சமயத்தில், அந்த பகவானே உன்னைக் கைத்தாங்கலாக ஏற்று, தன்னுடன் இணைத்துக் கொள்வான்,'' என்றார். உயிர் பிரியும் காலத்தில் சொல்ல வேண்டிய புண்ணிய மந்திரத்தைத் தான் கற்றுக் கொண்டதில் அவனுக்கு சந்தோஷம்தான். ஆனால் தன் உலகதாய கடமைகளில், பொறுப்புகளில் இறங்கியபோது அவ்வாறு மூச்சிழையாகச் சொல்லத் தவறியது மட்டுமல்ல, அந்த மந்திரத்தையே அவன் மறந்தும் போனான்.
அவ்வப்போது நினைவுக்கு வந்தபோது, ‘இப்போதே என்ன அவசரம், முதுமை காலத்தில் பார்த்துக் கொள்ளலாம்,' என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான். இத்தனை அலட்சியம் இருந்தாலும், நடுத்தர வயதில் அவன் கொஞ்சம் எச்சரிக்கை மிகுந்தவனாகவே இருந்தான். நினைவுபடுத்திக் கொள்வதற்காக எழுதி வைத்திருந்த அந்த மந்திரத்தைப் பல நாட்களாகத் தேடி ஒருவழியாகக் கண்டு பிடித்தான். தன் மனைவி, பிள்ளைகளிடம் அந்தத் தாளை எடுத்துக் கொடுத்து, ‘‘ஒருவேளை என் அந்திம காலத்தில் எனக்கு இந்த மந்திரம் நினைவுக்கு வராமல் போனால், நீங்கள் என் காதுகளில் இதை ஜபித்து எனக்கு முக்தி கிட்ட வழி செய்யுங்கள்,'' என்று கேட்டுக் கொண்டான்.
அதேபோல முதுமை காரணமாக அவன் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் படுத்திருந்தான். அந்த மந்திரம்…. அந்த மந்திரம்…. அடடா, அது மறந்து போயிற்றே! பேசவும் இயலாமல் போய்விட்டதால், பக்கத்திலிருந்த மனைவி, மகன், மருமகள், மகள், மருமகனிடம் கையால் சைகை செய்தான். ‘அந்த மந்திரத்தை என் காதுகளில் ஓதுங்கள்,' என்று கேட்டுக் கொண்டான். அவனுடைய கண்களிலிருந்து நீர் வழிந்தது.
உற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘நான் எழுதியும் கொடுத்திருந்தேனே, அந்த மந்திரம்….' என்று மீண்டும் சைகையால் அவர்களுக்கு விளக்க முற்பட்டான். அவர்களுக்கு அந்த மந்திரச் சீட்டும் ஏன் மந்திரமும்கூட நினைவில் இருந்தது. ஆனால் இப்போது அவருடைய காதில் அதை ஓதினால், தங்களுக்கு மரண அனுபவம் போன்ற துன்பம் ஏதாவது நேர்ந்து விடுமோ என்று அமானுஷ்ய பயம் கொண்டார்கள். அதனால் அவர் காதருகே அவர்கள் யாருமே போகவில்லை. அவர்களும் சைகையால், ‘எங்களுக்கும் மறந்து போச்சு, அந்தச் சீட்டை எங்கே வைத்தோம் என்றும் நினைவில்லை' என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
அவன் வெறுமையாகச் சிரித்துக் கொண்டான். ஐந்திலே பழகாதது, இப்போது ஐம்பதிலே பழகுமா? நினைவாற்றலுக்கும் வயதாகும் என்பதால், அதை தினசரிப் பழக்கமாக மேற்கொண்டிருந்தால், இந்தக் கட்டத்தில் யாருடைய உதவியையும் நாட வேண்டி யிருந்திருக்காதே! அவன் மறந்த மந்திரத்தை மீண்டும் நினைவிலிருந்து தேடவில்லை; அந்தப் பரம்பொருளையே நினைத்துக் கொண்டான். நிம்மதியாக உயிர் பிரிந்தான்!
யுஞ்ஜன்னேவம் ஸதாத்மானம் யோகீ நியதமானஸ
சாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தா மதிகச்சதி (6:15)
‘‘அவ்வாறு எப்போதும் மனதை தியானத்தில் நிறுத்தி, அதனை அடக்கி ஆளும் ஒரு யோகி, என்னிடமுள்ள முக்தியிலே நிறைவு பெறும் சாந்தியை அடைந்து விடுகிறான்.’’
புசித்தால் பசியுணர்வு அடங்கி விடுகிறது; அதைப்போல ஆழ்நிலை தியானத்தால் மனசு அடங்கி விடுகிறது. அக்னியிலிருந்து சூட்டைப் பிரிக்க முடியாது என்பதைப் போல, பகவானுடன் ஐக்கியமாகி, பிரிக்கவே முடியாத புது பந்தத்தில் ஒரு யோகியைக் கொண்டு சேர்த்து விடுகிறது. இவ்வாறு ஒன்றிவிடும் பேரின்பம், தியானத்தால் கைகூடுகிறது.
‘‘ஒரு ஊருக்கு ஒருவன் புதிதாக வருகிறான் என்றால், முதலில் தான் தங்குவதற்கு விடுதியோ, சத்திரமோ அல்லது ஏதேனும் ஓரிடத்தையோ அவன் தேர்வு செய்து கொள்ள வேண்டும். கூடவே கொண்டு வந்திருந்த உடைமைகளை அங்கே பாதுகாப்பாக வைத்துவிட்டு ஊர் சுற்றவோ அல்லது எதற்காக வந்தானோ அந்த வேலையைப் பார்க்கவோ அவன் புறப்படலாம். மாறாக இரவு நேரத்தில் அவன் வந்தானானால், தங்குமிடத்தைத் தேடுவதற்கு அவன் மிகவும் சிரமப்படுவான். அதைப்போல இந்த உலகுக்குப் புதிதாக வருபவன் ஈஸ்வரன் என்ற தங்குமிடத்தைக் கண்டு கொண்டு, அங்கே தன் பாரங்களையெல்லாம் இறக்கி வைத்து விட்டு, நிம்மதியாகத் தன்னுடைய வாழ்க்கையை மேற்கொள்ளலாம். இல்லாவிட்டால் மரணமாகிய பயங்கர அந்தகாரம் வரும்போது அவன் மிகுந்த வேதனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்’’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
நம் சுவாசத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அது பாட்டுக்கு நம் உடலுக்குள் செல்கிறது, பிறகு வெளியேறு கிறது - இடையறாமல், தொடர்ந்து, நீடித்து…. அந்த மூச்சோடு பகவான் ஸ்மரணையை கோத்துக் கொள்ளப் பயில வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமான பயிற்சியாகத்தான் இருக்கும். பிற கடமைகளில், சேவைகளில் ஈடுபடும்போது இது மறந்து போகும். திடீர், திடீரென்று நினைவுக்கு வரும்போது மூச்சோடு பகவான் நாமமும் இழையோடும். அதேசமயம் வலுக்கட்டாயமாக இந்தப் பயிற்சியை மேற்கொண்டோமானால், பிற வேலைகளில் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனால். ஒரு பாடகர் அமர்ந்து பாடும்போது அவருடைய கை இயல்பாகத் தன் தொடையைத் தட்டி தாளத்தை சேர்க்கிறதே, அதுபோன்ற பயிற்சியில் பழக்கமாகி விடும், மூச்சிழையுடனான பகவான் ஸ்மரணம்!
அதை இயல்பாக நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நிரந்தரம்தான் ஒருவனைத் தன்னுடன் இணைக்கிறது என்கிறார் கிருஷ்ணன்: ‘‘அவன்தான் இறைவனை அடைகிறான், அவன்தான் இறைவனில் மானசீகமாகக் கலந்து விடுகிறான்.'' இதற்கு இறைவனை மனசின் ஆழத்திலிருந்து அவன் அழைக்க வேண்டும். அதற்காக வேறு எந்தப் பொருள் மீதும் அவன் பற்று கொள்ளாதிருக்க வேண்டும்.
வீட்டில் வேலைக்காரர் தினமும் தன் ஒரே மாதிரியான பணிகளை மேற்கொள்கிறார். வீடு பெருக்குகிறார், சுவர்க் கடிகாரத்தையும் துடைத்து வைக்கிறார். அதற்கு பேட்டரி தீர்ந்து போய்விட்டால், வேறு பேட்டரி மாற்றி அதற்கு உயிர் கொடுக்கிறார். இதுபோன்ற வேலைகளையெல்லாம் அவர் எந்த எதிர்பார்ப்புமின்றியே செய்கிறார். பீரோவில் சாவி தொங்கிக் கொண்டிருக்கிறது. பீரோவைத் துடைக்க வேண்டியதுதான் அவருடைய வேலை. பீரோவைத் திறந்து உள்ளே என்னவெல்லாம் இருக்கின்றன என்று பார்ப்பதல்ல. ஆகவே அவர் தன்னால் தூய்மையாக்கப் படும் எந்த பொருள் மீதும் எந்த அக்கறையும், பற்றுதலும் இல்லாமல் இருக்கிறார்.
ஒருநாள் உயரே சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைத் துடைப்பதற்காகக் கொக்கியிலிருந்து கழற்றி எடுக்கிறார். கை தவறி விடுகிறது. கடிகாரம் தரையில் விழுந்து தூள் தூளாகிறது. வீட்டு எஜமானர் நல்லவர். ‘‘என்னப்பா, பார்த்து வேலை செய்யக் கூடாதா? இப்படி உடைத்து விட்டாயே!’’ என்று ஆதங்கப்படுகிறார். ஐநூறோ, ஆயிரமோ கொடுத்து இன்னொரு கடிகாரம் வாங்கிக் கொள்ள அவர் அப்போதே தீர்மானிக்கிறார்.
இதுவரை வேலைக்காரருக்கு அந்த கடிகாரம் உடைந்ததில் பொறுப்பற்றிருந்திருக்கிறோமே என்ற குற்ற உணர்வு வேண்டுமானால் இருந்திருக்கலாமே, அந்த நஷ்டத்தைக் கண்டு மனம் வருந்தாது. அன்றிரவு அவர் தன் வீட்டிற்குப் போய் நிம்மதியாக உறங்குகிறார்; மறுநாள் வேலைக்கு அதே வீட்டுக்கு இயல்பாக வரவும் செய்கிறார்.
ஆனால், வீட்டுக்காரர் மட்டும், ‘‘அடடா, உடைத்து விட்டாயே! இதை என் அன்பளிப்பாக உனக்குக் கொடுக்கலாம் என்றிருந்தேனே,'' என்று சொல்லியிருக்கட்டும், அவனுடைய தூக்கம் தொலைந்து போயிருக்கும்! தனக்குக் கிடைக்க வேண்டிய ஒரு பொருள் தன்னாலேயே உடைபட்டு, தனக்கு இல்லை என்றாகிவிட்ட வேதனை அவனைப் பாடாய்ப் படுத்தும். வீட்டுக்காரர் அவ்வாறு சொல்லாதவரைக்கும் அவனுக்கு எந்தப் பற்றுதலும் இல்லை; இப்போது முந்தின நாள்வரை தனக்கு உரிமையாக இல்லாத ஒரு பொருளைப் பற்றி எந்த அக்கறையும் காட்டாத அவன், இன்று தனக்குரியதாகக் கிடைக்கவிருந்து இழந்து விட்டதை நினைத்து சோகத்தில் ஆழ்ந்து விடுகிறான்!
நமக்குரியது, நம்முடையது என்ற உரிமையிலும், ஆசையிலும் நாம் ஒரு பொருளுடன் பாலம் அமைத்துக் கொண்டு சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். பாலத்தின் அடியில் வாழ்க்கை ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே மனிதருக்கும் மனிதருக்கும் இடையேயான பாலம் என்றால் அங்கே மானுடம் போற்றப்படும்; ஆனால் மனிதனுக்கும் பொருளுக்கும் பாலம் என்னும்போது சுயநலம், வேட்கை, கோபம், வன்மம் எல்லாம் சேர்ந்து அந்தப் பாலத்தில் பயணிக்கிறது. மனிதருக்கிடையேயான பாலங்கள் அருகிவிட்டதுதான் இப்போதைய துக்கம்.
கிருஷ்ணனோ, ‘எனக்கும் உனக்கும் இடையே பாலம் அமைத்துக்கொள். ஒரு கரையில் தூண்களுடன் பாலம் எழும்பினால் போதாது, அது நீண்டு வாழ்க்கை ஆற்றைக் கடந்து என் கரைக்கும் வந்து தூண்களில் அமர வேண்டும். பொருட்கள் மீதான பற்றைவிட என் மீதான லயிப்பை அதிகரித்துக் கொள்,''என்கிறார்.
உயிர் வாழ்ந்து கொண்டே முக்தி நிலையை அடைவது என்பது இதுதான்! பிராணன் நிலைத்திருக்க மூச்சு தேவை; அந்த மூச்சே பகவான் ஸ்மரணையாகப் பயிற்சி பெறும்போது இப்போதே ஈஸ்வரனுடன் ஒன்றிவிட்ட அனுபூதி உண்டாகிறது. இந்நிலையில் பிற பொருட்களின் மீதான பற்று, ரயில் பயணத்தில் பின்னோக்கி ஓடி மறையும் தன்மையானதாக ஆகிவிடும். ரயிலை ஓட்டுபவர் யாரென்று தெரியாது; பகலில் மட்டுமல்லாமல், இரவிலும், புயல் மழை நாட்களிலும் அவர் மீதான நம்பிக்கையில் நாம் பயணம் மேற்கொள்கிறோமே, அந்த நம்பிக்கைக்குக் கொஞ்சமும் குறைவின்றி பரம்பொருளுடன் ஒன்றிவிடும் பக்குவத்தை தியானப் பயிற்சி நமக்கு அளிக்கும்.
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்


