உபன்யாசம் முடிந்த பிறகு புறப்படும் நேரத்தில் ஒருவர் வந்து கேட்டார். ‘‘ஆன்மிகத்திலும் வாழ்க்கையிலும் முன்னேற ஒரு ஆலோசனை சொல்லுங்கள்’’.உபன்யாசகர் ‘‘உப்பைப் பிடித்துக்கொள்ளுங்கள், உயர்வாக வாழலாம்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இவருக்குக் குழப்பம் மிஞ்சியது.“உப்பைப் பிடித்துக்கொண்டு எப்படி உயர்வாக வாழ்வது?” என்று யோசித்துக் கொண்டே வந்தார்.வழியில் ஒரு நண்பரின் வீட்டில், அவரைச் சந்தித்து, இதைப்பற்றிச் சொன்ன பொழுது அவர் சொன்னார்.‘‘உப்பு என்பது நன்றியைக் குறிப்பது. உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொல்வார்கள். எனவே வாழும் போது மற்றவர்கள் நமக்குச் செய்த உபகாரத்தை நன்றி உணர்ச்சியோடு நினைக்க வேண்டும். அப்படி இருந்தால் உயரலாம். அதைப்போலவே நம்மைப் படைத்த இறைவன் நமக்கு அற்புதமான புலன்களையும் பொறிகளையும் தந்து, இந்த உடல் வாழ்வதற்காக காற்றுதண்ணீர் போன்ற அத்தனை வசதிகளையும் படைத்துத் தந்திருக்கிறான். அந்த இறைவனை நன்றியோடு நினைத்து வழிபாடு செய்வது, ஒரு மனிதனை எல்லா வகையிலும் உயர்த்தும். இதைத்தான் அவர் சொல்லி இருக்க வேண்டும்’’ என்றார்.சரிதான் என்று நினைத்துக் கொண்டாலும், இதில் இன்னும் ஏதேனும் விஷயம் இருக்கிறதோ என்று யோசித்தார். வழியில் ஒரு மருத்துவ நண்பரைப் பார்த்து விஷயத்தைச் சொன்னார்.அவர் அதற்கு விளக்கம் அளித்தார்.
“இதோ பாருங்கள். நமது உடம்பில் உப்பு தான் முக்கியம். இந்த உப்பைக் குறித்து பலரும் கவலைப்படுவதில்லை. நம் உடம்பில் உள்ள உப்புக்கள் பெரும்பாலும் சோடியம் மற்றும் குளோரைடு. இந்த இரண்டுமே எலக்ட் ரோலைட்டுகள். இவை உடலின் திரவ சமநிலையைப் பராமரிக்கவும், நரம்பு மற்றும் தசைகளில் நரம்புத் தூண்டுதல்களைக்கடத்தவும், தசைகளின் சுருக்கத்திற்கும் உதவுகின்றன. இரத்தத்தின் PH அளவைச் சீராக வைத் திருக்க உதவுகின்றன. சில ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கு உப்பு அவசியம். பொதுவாக, ஒரு நாளைக்கு 1-2 கிராம் உப்பு (460-920 மிகி சோடியம்) தேவைப் படுகிறது, அதிகளவு உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் போன்ற அபாயங்களை அதிகரிக்கும். இது தவிர, வீக்கம், தலைவலி, சோர்வு போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.இத்தனை விஷயங்கள் உப்பு குறித்து இருப்பதால், உப்பை அறிந்து சரியானபடி பயன்படுத்தி வாழ்ந்தால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். என்று அவர் சொல்லி இருக்கலாம். மருத்துவ நண்பர் சொன்னதும் சரியாகத்தான் பட்டது.
“சரி வந்ததுதான் வந்தோம். வழியில் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுச் செல்லலாம்” என்று நுழைந்த பொழுது கோயிலில் யாரும் இல்லை. பழக்கமான குருக்கள் மட்டுமே இருந்தார். அவரிடம் உப்பு விஷயத்தைக்கேட்டேன். உடனே அவர் அற்புதமான ஆன்மிக விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார். ‘‘எத்தனை அற்புதமான விஷயத்தை உங்களுக்கு அவர் சொல்லி இருக்கிறார்? உப்பு என்றால் சாதாரணமா என்ன? பகவானின் அம்சம் உப்பு. கடலில் இருந்து கிடைப்பதால், மகாலட்சுமியின் அம்சம். சமுத் திரமணி’, ‘நீர்ப்படிகம்’, ‘கடல் தங்கம்’, ‘பூமிகற்பம்’, ‘சமுத்திர ஸ்வர்ணம்’, ‘வருண புஷ்பம்’, ‘சமுத்திரக்கனி’, ‘ஜலமாணிக்கம்’ என்றெல்லாம் உப்பு போற்றப்படுகிறது. உப்பு, எதிர்மறை ஆற்றல்களை நீக்கும் சக்தி கொண்டது. வீட்டில் உப்பு வைப்பது நல்ல பலன்களைத் தரும். வீட்டில் மண் சட்டியில் உப்பு வைப்பது, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கும். செல்வத்தை ஈர்க்கும் வீட்டின் வாசலில் உப்பு வைப்பது, தீயசக்திகளை விரட்டும். மகாலட்சுமியின் அம்சமாக ‘உப்பு’ சொல்லப்படுவதால்தான், `உப்பைச் சிந்தக் கூடாது’ காலில் மிதிக்கக் கூடாது’ என்று சொல்வார்கள்.வீட்டில், ‘திருஷ்டி’, ‘துர்சக்திகள் தொல்லை’ ஏதாவது இருந்தால், உப்பு நீரைப் பாத்திரத்தில் இட்டு, வீட்டின் மையத்தில் இருக்குமாறு வைத்து மூன்று நாட்கள் கழிந்த பிறகு கால்படாத இடத்திலோ நீர் நிலைகளிலோ ஊற்றிவிடுவது வழக்கம். இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப் போடுவது வழக்கம்.
உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது. உப்பைக் கடனாகக் கொடுக்கக் கூடாது’ என்பது இன்றும் உள்ள வழக்கம். உப்பைக் கொடுத்தால், அந்த இடத்திலிருந்து மகாலட்சுமி நீங்கிவிடுவாள் என்பதுஐதீகம். உப்பை விற்கக் கூடாது என்று முன்னர் வழக்கத்தில் இருந்தது. உப்பை மண்பானை அல்லது பீங்கான் ஜாடியில் போட்டுவைப்பதே நல்லது. அப்படித்தான் வைத்தும் இருந்தோம். மண்பானைக்கு ‘ஸ்வர்ண பாத்திரம்’ என்றே ஒரு பொருள் உண்டு. அதனாலேயே ஸ்வர்ணத்தின் அதிபதியான மகாலட்சுமி மண் பானையில் உப்பு வடிவில் இருக்கிறாள் என்றும் சொல்வார்கள்.உப்பைத் தலையில் வைத்து ஆசீர் வதித்து, மந்திரங்கள் சொன்னால் நோய்கள் விலகும். உப்பையும் மிளகையும் கோயிலின் பலிபீடத்தில் போட்டு வழிபடுவதை நாம் பல கோயில்களில் பார்த்திருப்போம். முக் கியமாக, அம்மன் கோயில்களில் இது சகஜம். உப்பையும் மிளகையும் பலி பீடத்தில் போட்டு வழிபட்டால் எதிரிகள் ஒழிந்துவிடுவார்கள் என்பதும் நம்பிக்கையாக இருந்துவருகிறது. உப்பும் மிளகையும் கொட்டி வழிபடுவதை மரு, வீக்கம் போன்றவை நீங்க கொட் டுவதாகவும் சிலர் சொல்வார்கள். ஆனால், உண்மையில் நம்மை எதிர்நோக்கி வரும் துன்பங்கள் யாவும் உப்பைப்போல கரைந்துவிட வேண்டும் என்பதற்கே கொட்டப் படுகிறது.
வடமொழியில் உப்பை `லவணம்’ என்பார்கள். இந்த லவணத்தைக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனைகள், வடமாநிலங்களில் அநேகம் உண்டு. லட்சுமியின் அருள்வேண்டி பலவிதங்களில் லவண பூஜைகள் அதிகாலை நடைபெற்று வருகின்றன.`ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம்: மம சௌக்யம் தேகிமே ஸதா’ என்று வேண்டியபடி உப்பை வைத்து சூரியனை வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது.இவ்வளவையும் சொல்லிவிட்டு நிறைவாக ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘‘உப்புக்கு இன்னும் ஒரு குணம் உண்டு. அது தண்ணீரில் கரைந்து விடும். ஒரு பாத்திரத்தில் உப்புள்ள நீரையும் உப்பில்லாத நீரையும் தனித்தனியாக வைத்தால் நீங்கள் எளிதாக இது உப்பு உள்ள நீர், இது உப்பில்லாத நீர் என்று சொல்ல முடியாது. காரணம் தண்ணீரில் கரைந்துள்ள உப்பு தன்னை வெளிப்படுத்தாது. சுவைக்கும் போது தான் தெரியும். அதைப்போலத்தான் மனிதர்களும், தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தங்கள் செயலால் தாங்கள் இருப்பதைப் புரிய வைக்க வேண்டும்.அதைப்போலவே உணவின் சுவைக்கு உப்பு அவசியம். ஆனால், உப்பு தன் சுவையை வெளிப்படுத்தாது. உணவின் சுவையைத் தான் கூட்டும். இதைத்தான் மனிதர்களும் செய்ய வேண்டும். இப்படி உப்பின் குணத்தைக் கொண்டு ஒருவன் வாழ்ந்தால் அவருடைய வாழ்வுஆன்மிகத்திலும் உலகியலிலும் உயர்ந்த வாழ்வாகத்தான் இருக்கும்.