Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சகடை யோகம்!

எல்லோர் வாழ்வும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கை மேலே நன்மைகளோடு உயரத்திற்கு செல்வதும், நன்மைகள் அற்ற வாழ்விற்கு வரும் அமைப்பை கொண்டுள்ளதாகவும், சிலருக்கு வாழ்வில் என்றுமே மேல் நோக்கி நகர முடியாத நிலையை கொண்டுள்ளனர். இன்னும் சிலருக்கு, வாழ்வு என்பது பூங்காவனம் போலவும் எப்பொழுதும் மேல் நோக்கியே சென்று கொண்டிருக்கும் அமைப்பாக உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் கிரகங்களே காரணங்கள். இந்தக் காரணங்களை துல்லியமாக அறிந்து கொண்டாலும் மாற்றத்தை அதன் மாற்றத்தின் வழியே சந்திக்க வேண்டிய சூழ்நிலையை கொண்டுள்ளது. தீமைகளை குறைத்துக் கொள்வதும் நன்மைகளை பெருக்கிக் கொள்வதும் அவரவர் நம்பிக்கை மற்றும் நல்லெண்ண சிந்தனைகளால் மாறுபடுகிறது. இவற்றில் ஏற்றம் இறக்கங்களை கொண்ட யோகங்கள் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அந்த யோகம் எதனால் ஏற்படுகின்றது என்பதை விரிவாகக் காண்போம்.

சகடை யோகம் என்றால் என்ன?

சகடை என்ற சொல்லுக்கு வடமொழியில் சக்கரம் என்ற பொருளுண்டு. அதாவது, மேலும் கீழும் மாறும் தன்மை கொண்ட ஒரு இயக்கம் கொண்டதை சகடை எனச் சொல்வார்கள். இந்த அமைப்பானது ெபாருளாதாரம், வாழ்க்கை, தொழில், அந்தஸ்து ஆகியவற்றிலும் இந்த மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இவ்வாறு மாற்றங்கள் இருக்கின்றன. ஆகவே, இந்த யோகம் கொண்டவர்களின் ஜாதகத்தின் அமைப்பானது, வியாழன் என்ற கிரகம் தன காரகன், புத்திரக் காரகன், அறிவுக் காரகன், யோகக்காரகன் எனச் சொல்லிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட வியாழன், சந்திரனுக்கு ஆறாம் (6ம்) பாவகம், எட்டாம் (8ம்) பாவகம், பன்னிரெண்டாம் (12ம்) பாவகங்களில் அமையப் பெற்றால் அந்த ஜாதகம் சகடை யோக ஜாதகம் என்று பெயர். இந்த சகடை யோகத்திலும் சில விதி விலக்குகள் உண்டு.

சகடை யோகத்தின் சில உள் அமைப்புகள்

இந்த சகடை யோகத்தில், சந்திரனின் வலிமை, வியாழனின் வலிமை ஆகியவற்றை துல்லியமாக கணக்கில் கொள்ள வேண்டும். சில லக்னங்களுக்கு ஓரளவுதான் சிரமத்தை கொடுக்கும். ஆனால், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்பம் லக்னங்களுக்கு இந்த சகடை யோகமானது மிகுந்த பாதிப்பையும் அவமானத்தையும் பெற்றுத் தரும். கடினமான பாதிப்புகளை உண்டாக்கும். பொருளாதாரத்திற்காக போராட வேண்டிய சூழ்நிலைகளை உண்டாக்கும். இந்த அமைப்பு உள்ளவர்கள் பெரும் தொகையை எளிமையாக இழக்கும் அமைப்பை உடையவர்களாக இருப்பர். சில முக்கியமான நேரங்களில் எடுக்கும் முடிவுகள் ஆபத்துகளை உருவாக்கும். கூடவே எதிரிகளை உண்டாக்கி வாழ்வை படுகுழியில் தள்ளிவிடும் அமைப்பை கொடுக்கும். அந்தத் தருணத்தில் சிலரின் ஆலோசனைப்படி முடிவை எடுப்பது சிறப்பாக இருக்கும். அதே போல, சந்திரன் தேய்பிறையாக அமைந்து வியாழன் மற்றும் சூரியனுக்கு எட்டாம் (8ம்) பாவகத்தில் சந்திரன் அமையப் பெற்றால் அது மிகுந்த பொருளாதார பாதிப்பை கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவரும் தங்களுக்கு உண்டான யோகம் மற்றும் அவயோகங்களை புரிந்து கொள்வதால் வாழ்வில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முயற்சிக்கலாம். இவர்கள் வாழ்வில் எப்பொழுதும் பொருளாதாரம் பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஏற்றாற்போல இவர்களின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் இருக்கும் என்பது ஜாதக விதி என்று சொன்னால் அது மிகையில்லை.வியாழன் நின்ற பாவகத்திற்குரிய கிரகம் பரிவர்த்தனை பெற்றால் சகடை யோகப் பாதிப்புகள் குறையும். பௌர்ணமி யோகம் கொண்டவர்களுக்கும் சகடை யோகம் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.

சகடை யோகத்தின் பலன்கள்

* திடீரென பெரும் தொகையை சம்பாதிக்கும் அல்லது பெரும் அமைப்பைக் கொண்டவர்களாக இருப்பர்.

* திடீரென பெரும் தொகையை இழந்து என்ன செய்வது என சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் அமைப்பு கொண்டவர்கள்.

* இவர்கள் சிந்தனையெல்லாம் எப்படியாவது பொருள் ஈட்ட வேண்டும் என்ற மனோபாவம் கொண்டிருப்பர். செய்யக் கூடாத செயலை, செய்ய வராத செயலை செய்து அவமானத்தையும், பொருள் இழப்பையும் சந்திப்பர்.

* யார் சொல்லையும் இவர்கள் கேட்க மாட்டார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என செய்து சிக்கலை இவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.

* நல்ல குழந்தை பாக்கியங்களை பெற்றவர்களாக இருப்பர். அந்த குழந்தைகளுக்கு ஏதும் சரிவர செய்ய முடியாத துர்பாக்கியங்களை இவர்களே உருவாக்கிக் கொள்வர். சிலருக்கு பொருள் இருக்கும். குழந்தைகளால் பிரச்னைகளை சந்திப்பர் என்பதே இந்த யோகத்தின் மாற்றம் ஆகும்.

* முன்யோசனை சிறிதும் இருக்காது. வார்த்தைகள் மிகவும் கடினமானதாக இருக்கும்.

சகடை யோக பரிகாரம்

* வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் சிறந்த நற்பலன்கள் கிட்டும். அதுபோலவே, திங்கள் கிழமைகளில் வரும் பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுதல் நலம் பயக்கும்.

* யானையின் முடியால் செய்யப்பட்ட மோதிரத்தையோ அல்லது அணி கலன்களையோ அணிந்து கொள்ளும் போது சகடை யோக பாதிப்புகள் குறையும்.

* வியாழக்கிழமை தோறும் சந்திரமௌலீஸ்வரருக்கு வெல்லத்தால் செய்யப்பட்ட பாயசத்தை நெய்வேத்தியமாக கொண்டோ அல்லது தட்சிணாமூர்த்தியை கொண்டைக்கடலை நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்தல் சிறப்பான பலன்கள் தரும்.

* யானைக்கு உங்களால் முடிந்த அளவு உணவு கொடுங்கள். கரும்பு கட்டு வாங்கித் தரலாம் அல்லது பச்சரிசி, வெல்லம் கலந்து உணவாக கொடுக்கலாம். வாழைப்பழம் போன்றவற்றை உணவாகக் கொடுங்கள். உங்கள் தோஷம் குறையும். மறவாமல் யானையின் துதிக்கையால் ஆசீர்வாதம் பெறுங்கள். உங்கள் வாழ்வு மேம்படும். யானையின் பார்வை பல தோஷங்களை போக்கும் குருவின் பார்வைக்கு நிகரானது.