Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இருள் நீக்கி இன்னருள் புரிவாய் அபிராமியே...

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

சென்ற இதழின் தொடர்ச்சி...

``கமலத்தின் மீது அன்னமாம் கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே’’பார்வதிதேவியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று தவம் புரிந்து கொண்டிருந்தான் இமவான். அச்சமயத்தில் தாக்ஷாயணியின் உடம்பிலிருந்து பிரிந்த பார்வதியின் ஆன்மாவானது இமவானிடம் சென்று மகளாகப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் அடைந்தது. சிவனிடத்தில் அறத்தின் வழியில் மணந்து கொள்ளும்படி முன்னவே வேண்டிக் கொண்டாள் பார்வதி. தவத்தில் இருந்த சிவபெருமானுக்கு தொண்டு செய்து அவரைக் குறித்து தவம் செய்து வந்தாள். மன்மதனால் தவம் கலைக்கப்பட்ட சிவன் மன்மதனை அழித்தார். பின்பு சினம் தனிந்து மன்மதன் பார்வதியின் திருமணத்தன்று உயிர்த்தெழுவான் என்று ரதிக்கு வரமளித்தார்.

சிவனே ஸப்தரிஷிகளை அழைத்து தம் திருமணத்திற்கு முன்னின்று இமவானிடம் பார்வதியை பெண் கேட்க நினைத்ததுதான் அந்த பலன். மஹா பதிவ்ரதையான அருந்ததியும் அவளால் பெருமை பெற்ற வஷிஷ்டரையும் கண்டபொழுது சிவபிரான் தாம் திருமணம் செய்ய விரும்பியது சரி எனக் கருதி அதில் விசேஷமான ஆசை கொண்டார்.

ஏனெனில் தவம் முதலிய நற்காரியங்களுக்கு நல்ல மனைவியர் உறுதுணையாவர் என்பது அருந்ததி வஷிஷ்டர் தம்பதிகளை நோக்கியபோது சிவபிரான் மனதில் தோன்றியது. சிவபிரானின் விருப்பத்திற்கிணங்க சப்த ரிஷிகளும் இமவானிடம் சென்று முறைப்படி பார்வதியை மணம் முடிக்க பெண் கேட்டனர். அதுகேட்டு மகிழ்ந்த இமவான் திருமண நிகழ்வை விமர்சையாக நிகழ்த்தினார். தேவர்கள் யாவரையும் அழைத்தார். அதே வேலையில் பல காலம் தவம் செய்து வந்த ஸப்தரிஷிகள் தம் தவத்தின் பயனை அடைந்தார்.

இந்த நிகழ்வையே காளிதாசன் தன் காவியத்தில்

‘சதஸ்யா: கரம் சைவ குரூபனீதம்,

ஜக் ராஹ தாம்ராங்குலிம் அஷ்டமூர்த்தி:,

உமா தனௌ கூடதனோ: ஸ்மரஸ்ய,

தச்சங்கின: பூர்வமிவ ப்ரரோஹம்’

- என்கிறார்.

மேலும், திருமண நிகழ்வில் இமவான் பார்வதியின் கரத்தை சிவபிரானின் கையில் பற்றிக் கொடுத்தார். சிவந்த விரல்களை உடைய அவ்வழகிய கை சிவபிரானிடம் பயந்து பார்வதியின் சரீரத்தில் உறைந்துள்ள மன்மதக் கொடியில் முதன் முதலில் தோன்றிய தளிர் போல் இருந்தது என்ற காளிதாசனின் வாக்கினால் ‘கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே’ என்கிறார்.

“அந்தமாக”‘`குயிலாய்‌ இருக்கும்‌ கடம்பாட வியிடை’’ என்பதால் மேக வடிவான கணபதி வித்யாவையும்,‘`கோல இயல்‌மயிலாய்‌இருக்கும்‌இமயாசலத்திடை’’ என்பதால் வடிவான சண்முக வித்யாவையும்,‘`வந்து உதித்த வெயிலாய்‌ இருக்கும்‌விசும்பில்‌’’ என்பதால் சூர்ய வித்யாவையும்,‘`கமலத்தின் மீது அன்னமாம்’’‌ என்பதால் அன்னத்தின் வடிவான விஷ்ணு வித்யாவையும்,

‘`கயிலாயருக்கு அன்று இமவான்‌ அளித்த’’ என்பதால் பரசிவ வித்யாவையும்,‘`கனங்குழையே’’ என்பதால் ஆத்ம ஞான மோட்ச சித்தியையும் குறிப்பிடுகிறார்.

மேலும், பஞ்சாயதன பூசையை மறைமுகமாக குறிப்பிடுகிறார். சூரியன் - சூரிய காந்தக்கள், முருகன் - ஸ்படிகம், கணபதி - சோனபத்திரம், விஷ்ணு - சாளக்கிராமம், சிவன் - பான லிங்கம் இந்த ஐந்தையும் ஒன்றாக இணைத்து செய்யும் பூஜைக்கு பஞ்சாயதன பூஜை என்று பெயர். இப்பூசையை செய்வதனால் வாழும் போது உடலுக்கு ஆரோக்கியமும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் அறிவுக்கு தெளிவும் ஆன்மாவிற்கு சுதந்திரமும் எண்ணத்திற்கு சூனியமும் [ஒன்று மற்ற தன்மை] வாழும்போது அனைத்து சௌக்கியங்களையும் பெற்று உடலை விடும் போது ஒன்றாக விளங்கும் உமயம்மையை தானாக கருதி [அகம் பிரம்மாஸ்மி] தான் அதுவாக ஆகின்ற மோட்ச சித்தியும் ஏற்படும். இதையே இப்பாடலில் மறைமுகமாக குறிப்பிடுகிறார். நாமும் பெறுவோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்