Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஞ்சபூத ஸ்தலங்களுக்கு உரிய பரிகாரங்கள்

உலக இயக்கத்திற்கு காரணமே பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்தான்.

இவ்வைந்து பூதங்களை தமிழின் உயிர் எழுத்துக்கள் வடிவம் கொண்ட வல்லூறு (Falcon), ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பட்சிகளுக்கு பிரித்து கொடுத்தவர் ``காகபுஜண்டர்’’ என்ற சித்தர்தான். காகபுஜண்டர் இறையருளாலும், தம் ஞான திருஷ்டியினாலும், பஞ்சபட்சி சாஸ்திரம் எனும் கலையை கண்டறிந்து உலகுக்கு அளித்தவர்.

பஞ்சபூத முக்கிய ஸ்தலங்கள்

1. நிலம் (பிருத்வி) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்.

2. நீர் (அப்பு) திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.

3. நெருப்பு (அக்னி) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.

4. காற்று (வாயு) ஸ்ரீ காளகஸ்தி காளத்தீஸ்வரர் கோயில்

5.ஆகாயம் (ஆகாசம்) சிதம்பரம் நடராஜர் கோயில்

பஞ்சபூதங்களில் நிலம் பொறுமையின் சிகரமாகவும், நீர் பாசம் பணிவிற்கு உதாரணமாகவும், நெருப்புத் தேவதூதனின் அம்சமாகவும், காற்று தன்னடக்கத்தின் வடிவமாகவும், ஆகாயம் தெய்வங்கள் வாழும் இடமாகவும் திகழ்கின்றன. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கும் என்பார்கள்.

பூமி - நாசி

நீர் - வாய்

நெருப்பு - கண்கள்

காற்று - தோள்கள்

ஆகாயம் - செவிகள்

ஆகியவற்றை குறிக்கின்றன.

பூமி - குபேர மூலை (நிருதி)

நீர் - ஈசான்ய மூலை (வடகிழக்கு)

நெருப்பு - அக்னி மூலை (தென்கிழக்கு)

காற்று - வாயு மூலை (வடமேற்கு)

ஆகாயம் - பிரம்ம ஸ்தானம் (நடுப்பாகம்)

நாம் வாழும் இடத்தில் பஞ்சபூத சக்திகள் சம நிலையில் இருந்தால், வாழும் இடம் வளமானதாக இருக்கும்.

பரிகாரங்கள்

1. நிலம் ஸ்தலம் (குரு)

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

காலையில் அர்ச்சனை பொருட்கள் வாங்கி இறைவனை வணங்கி தேங்காய் உடைத்து, உடைத்த தேங்காயை வீட்டிற்கு கொண்டு வந்து மாலையில் அந்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றவும். தீபம் எரிந்து முடிந்த பிறகு இரவு அந்த தேங்காயை துருவி பால் பாயசம் செய்து சாப்பிட வேண்டும். இப்படி ஒன்பது வியாழக்கிழமை தொடர்ந்து செய்யவும். இதன் மூலம், பூமி தொடர்பான வில்லங்க பிரச்னைகள் தீரும். புத்திரதோஷ நிவர்த்தி ஏற்படும். குழந்தையின் சேட்டைகள் குறையும். பொன் பொருள் உண்டாகும்.

2. நீர் ஸ்தலம் (சந்திரன், சுக்கிரன்)

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்

திங்கள் அல்லது வெள்ளிக் கிழமையில், மாங்காயை கொண்டு சென்று, கடவுளின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்யவும். வழிபட்ட மாங்காயை வீட்டிற்கு கொண்டு வந்து அதன் கொட்டையை எடுத்துவிட்டு, மாங்காயில் நெய்தீபம் போட வேண்டும். தீபம் எரிந்து முடிந்த பிறகு, அந்த மாங்காயை சாப்பிடவும் அல்லது ஊறுகாய் போட்டு பயன்படுத்தவும்.

மாங்காய் இரட்டைப்படையாக இருக்க வேண்டும். 11 வாரம் செல்ல வேண்டும். இதன் மூலம் பணவரவு நன்றாக ஏற்பட்டு, செல்வ வலிமை உண்டாகும். பணத்தட்டுப்பாடு நீங்கும். பஞ்சபூத ஸ்தலங்களில் ஜலபூதம்தான் பணத்தை வாரி வழங்கக்கூடியது. ஜலபூத சக்திகளுக்கு உட்பட்ட சிவாலய வழிபாடு செல்வத்தை அள்ளித்தரும். ஜலபூத மிருகம், முதலையாகும். இதன் பொருட்டுதான் பெரும் செல்வந்தர்களை நாம், பணம் முதலைகள் என்று கூறுகின்றோம்.

3. நெருப்பு ஸ்தலம் (சூரியன்,செவ்வாய்)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு செல்ல வேண்டும். கோயிலுக்கு செல்லும்போது, பெரிய எலுமிச்சை ஒன்றை உடன் எடுத்துச் சென்று, கடவுளின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்யவும். வழிபட்ட எலுமிச்சையை வீட்டிற்கு கொண்டுவந்து, அதை இரண்டாக வெட்டி, அதில் நெய்தீபம் ஏற்றவும். தீபம் எரிந்து முடிந்த பிறகு, அந்த எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடிக்கவும். இப்படி, 4 வாரம் செல்ல வேண்டும். இதன் மூலம் குடும்ப பிரச்னைகள் தீரும். சமூகத்தில் அந்தஸ்து ஏற்படும். சொத்து பாக பிரச்னைகள் அகலும். அரசியலில் வலிமை பெற உதவும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற உறுதுணையாக இருக்கும்.

4. வாயு ஸ்தலம் (புதன்)

திருக்காளஹஸ்தி காளத்தீஸ்வரர் கோயில்

புதன் கிழமையில், தேங்காய் பழம், 5 வேப்பிலை கொத்து, ஆகியவைகளை எடுத்துக்கொண்டு, கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குதல் வேண்டும். பின்னர், வீட்டிற்கு வந்து தேங்காய் அடியில் வேப்பிலை பரப்பி, தேங்காயில் நெய் தீபம் ஏற்றவும். எரிந்து முடிந்த பின்னர், தேங்காயை துருவி பால் பாயசம் செய்து சாப்பிடவும். முடிந்த அளவு சிறிது வேப்பிலையையும் சாப்பிடவும். இதன்மூலம் கமிஷன் வியாபாரம் நன்றாக இருக்கும். தொழில் பிரச்னை தீரும். உறவு முறைகளில் ஒற்றுமை ஏற்படும். மூச்சுத் திணறல், கோர்ட் பிரச்னைகள் அகலும். சமூகத்தில் நமக்கு ஏற்படும் அவப்பெயர் நீங்கும். கல்வி பிரச்னைகள் தீரும். தொடர்ந்து 5 வாரம் செல்லவும்.

5. ஆகாய ஸ்தலம் (சனி)

சிதம்பரம் நடராஜர் கோயில்

சனிக் கிழமையில் கோயிலுக்கு செல்லும்போது, வெற்றிலை, தேங்காய், பழம் ஆகியவை கொண்டு செல்லவும். கடவுளை வணங்கிய பின், வீட்டிற்கு வந்து இரண்டு வெற்றிலையை கீழே வைத்து, அதற்கு மேல் தேங்காய் வைத்து, நெய்தீபம் ஏற்றவும். தீபம் எரிந்து முடிந்த பிறகு, அந்த தேங்காயைக் கொண்டு தேங்காய் சாதம் செய்து சாப்பிடவும். கணவன் மனைவி இருவரும் தாம்பூலம் தரிக்கவும். வெற்றிலை கண்டிப்பாக 5 இருக்க வேண்டும். இப்படி 8 சனிக்கிழமைகளில் செல்ல வேண்டும். இதன் மூலம் காரிய வெற்றி, ஆயுள் தீர்க்கம் ஏற்படும். தொழில் வளம் பெருகும். வாகன விபத்து ஏற்படாமல் தடுக்கும்.

மேற்கூறிய பரிகாரங்கள் செய்யும்போது, கோயிலுக்கு தம்பதிகள் சகிதமாக செல்ல வேண்டும். இறைவனை முழு மனதுடன் வேண்டிக்கொண்டு, மனத் தூய்மையுடன் செயல்படும்போது, வேண்டுவது நிறைவேறும். காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளகஸ்தி, சிதம்பரம் போன்ற பஞ்சபூத ஸ்தலங்கள், மிக முக்கியமான பஞ்சபூத ஸ்தலங்கள் ஆகும். இவற்றில் பரிகாரம் செய்ய இயலாதவர்கள், தாங்கள் வசிக்கும் மாவட்டங்களிலுள்ள பஞ்சபூத சக்திகளுக்கு உட்பட்ட சிவாலயங்களை தெரிந்து கொண்டு, அங்கு சென்று இவைகளை செய்யலாம்.