ஒரு நாள், தசரதனுடைய அரண்மனைக்கு விஸ்வாமித்திரர் வந்தார். தான் மிகப் பெரிய யாகம் செய்ய உள்ளதாகவும், அதற்கு அரக்கர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்பார்ப்பதால், அவர்களை விரட்ட தங்களுடைய மகன் ராமன் உதவி எனக்கு வேண்டும் என கேட்டார். தசரதன் அதற்கு சம்மதிக்கவில்லை. ``ராமன் சிறுவன். அவனை அனுப்ப மாட்டேன். மாறாக நான் வந்து உதவத் தயார்’’ என்றார். விஸ்வாமித்திரரோ, தனக்கு ராமர்தான் வேண்டும் என மறுபடியும் கேட்கிறார்.
தசரதன் மீண்டும் மறுத்தார். நடந்ததை அதுவரை கவனித்த தசரதனின் குல குரு வசிஷ்டர், கவலை கொள்கிறார். விஸ்வாமித்திரருக்கு கோபம் அதிகம்!.. அதனால் கேட்டதை கொடுக்காத தசரதனை, சபித்துவிடப் போகிறாரே என பயந்து, தசரதனிடம்; ``ராமரை அனுப்பி வையுங்கள். ஏதோ காரணம் இல்லாமல் முனிவர் உங்களை தேடி வரமாட்டார். நல்லதே நடக்கும் என நம்புவோம், தைரியமாய் ராமரை அனுப்பி வையுங்கள்’’ எனக்கூற, தசரதன் தயக்கத்துடன் சம்மதிக்கிறார்! ராமனுடன்கூட லட்சுமணனையும் சேர்த்து அனுப்பி வைக்கிறார். விஸ்வாமித்திரரும் மகிழ்ந்து, ராமர் லட்சுமணனுடன் தன் ஆஸ்ரமம் செல்ல காட்டினுள் பயணிக்கின்றனர். வழியில், முதலில் கௌதமர் ஆஸ்ரமம் செல்கின்றனர். விஸ்வாமித்திரரும் சகோதரர்களும் வழியில் ஒரு குன்றின் மீது ஏறி இரவை கழித்தனர். இன்று அந்த இடத்தில் ஒற்றை சந்நதியுடன் கூடிய சிறு கோயில் உள்ளது. அதனுள் ராமர் பாதங்கள் உள்ளன.
இதனை, ``ராம் சௌரா மந்திர்’’ என அழைக்கின்றனர். இது கங்கை கரையில் அமைந்துள்ளது. இதன் பின்னர் கௌதம ஆஷ்ரமம் நோக்கி நடந்தனர்.கௌதம ஆஸ்ரமம் நியாய சாஸ்திரம் எழுதிய இந்திய தத்துவ ஞானி. பீகார் தர்பங்கா மாவட்டத்தில், ஜலே தொகுதியின் பிரம்மபூர் கிராமத்தில் இவருடைய ஆஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கு சீடர்களுக்கு குருகுலம் நடத்தி வந்தார். கீரோஸ் ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இவருடைய மனைவி அகல்யா. கௌதமரை இந்த பகுதியில் அட்சபத கௌதமர் என அழைக்கின்றனர்.
கௌதம முனிவர், திர்கதாமஸின் மகன். சப்த ரிஷிகளில் ஒருவர். ராமாயண கதையில், விஸ்வாமித்திரர், ராம, லட்சுமணரை மிதிலாவுக்கு அழைத்துச் செல்லும் போது, இந்த ஆஸ்ரமத்திற்கு வந்தார். ஆஸ்ரமம் சீரழிந்த நிலையில் இருப்பதைப் பார்த்த ராமர், விஸ்வாமித்திரரிடம் அது பற்றி விளக்கம் கேட்டார். அப்போது அவரிடம் விஸ்வாமித்திரர், அகல்யாவுக்கு நேர்ந்த சாபம் பற்றி கூறினார்.
ஏன் அகல்யாவுக்கு சாபம்?
அகல்யா மிக அழகான பெண். அதே சமயம் கணவர் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவள். கணவர் சொல் தட்டாதவர். தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு இவள் மீது ஆசை. ஒரு நாள், கௌதமர் இல்லாத வேளையில், கௌதமரைப் போல் தன்னை உருமாறிக்கொண்டு வந்து இச்சைக்கு அழைக்கிறான். கௌதமர்தான் அழைக்கிறார் என நினைத்து, சம்மதித்துவிடுகிறாள் அகல்யா. ஞான திருஷ்டியால் இதனை அறியும் கௌதமர், அகல்யாவை கல்லாகக்கடவது என சபித்து விடுகிறார். இதனால் துவண்டு போன அகல்யா, ``ஏமாற்றப்பட்ட எனக்கு எப்போது சாபவிமோசனம்’’ என கேட்கிறாள்.
``ராமர் இந்த இடத்திற்கு வரும் போது, உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் அப்போது நாம் மீண்டும் இணைவோம்’’ என்கிறார் கௌதமர். இந்த கதையை விஸ்வாமிந்திரர் கூறியதும், ஏதேட்சையாக ஒரு கல்லின் மீது காலை வைக்கிறார் ராமர். என்ன ஆச்சர்யம் அந்த கல் மறைந்து ஒரு பெண்மணி எழுகிறார். இவள்தான் அகல்யா விஸ்வாமித்திரர்கூற, ராமர் வியக்கிறார். அப்போது கௌதமர் அங்கு வர, அந்த ஜோடி மீண்டும் இணைகிறது. மன்னர் ருத்ரா சிங் மற்றும் சோத்ரா சிங் ஆகியோரால் இங்கு 1662-82 இடையே இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு கௌதம குண்ட் என்ற குளத்தையும் காணலாம். ராமர் கால் பட்ட இடம். அநியாயமாய் ஏமாற்றப்பட்ட அகல்யா, சாப விமோசனம் பெற்றதால் கௌதமர் - அகல்யாவுக்கு கோயில், ராம் சீதா மந்திர் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.இங்கு ராம நவமி மற்றும் விஜய பஞ்சமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ராம நவமியின் போது மேளா நடக்கிறது.
விஸ்வாமித்திரர் ஆஸ்ரமம்
பீகார் மிதிலா பகுதியில் உள்ள பிசௌல் என்ற கிராமத்தில் விஸ்வாமித்திரர் ஆஸ்ரமம் உள்ளது. திரேதா யுகத்தில் அவருக்கு மன்னர் ஜனகர் இதனை கட்டிக் கொடுத்தார்.இங்கு விஸ்வாமித்திரர் குருகுலம் நடத்தினார். இங்கு ஜனகரின் மாம்பழத் தோட்டம் இருந்தது. இங்கு யாகம் நடந்தபோது திடீர் என்று ஒரு சத்தம் எழுந்தது. அந்த சத்தத்தை கேட்டு ராமரும் நடுங்கினார். என்ன சத்தம் என்று ராமர் வினவிய போது, இது ஒரு அரக்கியின் செயல், அவள் பெயர் தாடகி என்று கூறினார். முதலில் அவளை எதிர் கொண்டு கொல் என்றாராம். ராமர் ஒரு பெண்ணை கொல்வதா? என தயங்கிய போது, கெட்டவர்களில் ஆண் பெண் பாரபட்சம் பார்க்க வேண்டாம். கொல் என விஸ்வாமித்திரர் அழுத்தம் கொடுத்த போது, அவளை ராமர் கொன்றார்.
இதே போல், யாகம் நடந்த காலத்தில் கடைசியில் மாரீசன், சுபாகு ஆகியோரும் யாகத்தை கெடுக்க வந்தனர். இவர்கள் தாடகியின் மகன்கள். தாயை கொன்ற ராமனை, கொல்வதற்காக வந்தனர். அவர்களில் சுபாகு கொல்லப்பட்டான். மாரீசன், ஒரு சமயத்தில் ராமரின் வில் வீச்சை சமாளிக்க இயலாமல் தப்பி ஓடிவிட்டான்.
இதன் பின் யாகம் வெற்றிகரமாக முடிந்தது. விஸ்வாமித்திரரும் மிகவும் மகிழ்ந்து, பல ஆயுத பயிற்சிகளை ராம லட்சுமணர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். இந்த கால கட்டத்தில், சீதாவிற்கு சுயம்வரம் நடப்பதாகவும் அதில் குருவான தாங்களும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என ஜனகர் தூதுவிட.. ராம - லட்சுமணரை அழைத்துக் கொண்டு ஜனகபுரியை நோக்கி பயணித்தார் விஸ்வாமித்திரர். இதன் அருகில்தான் ராமரும் சீதாவும் சந்தித்ததாக கூறப்படும் புல்ஹர் கிராமம் உள்ளது. இங்கு மிகப் பெரிய பூந்தோட்டம் உள்ளது. இதன் அருகில் கிரிஜா தேவியின் கோயில் உள்ளது. இது ஜனகரின் குலதெய்வம். அருகிலேயே கம்தாவுல் கிராமத்தில் மனோகாம்னா நாத் மகாதேவ் கோயில் உள்ளது.
இங்கு ஸ்ராவணி மேளாவின் போது கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு நடக்கும் ஜலாபிஷேகம் மிகவும் பிரபலம். கிரிஜா தேவியை, தொடர்ந்து 12 ஆண்டுகள் நேரில் வந்து சீதா வழிபட்டதாக கோயில் வரலாறு கூறுகிறது. ஜனகபூரில் நுழைவதற்கு சற்று முன்னால், அகல்யா கோயில் உள்ளது. இங்குதான் ராமர் கால் பட்டு ஒரு அழகிய பெண் எழுந்தாள் என்பதை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
ஜனகபூர்
இன்றைய நேப்பாளத்தின் துனுஷா மாவட்டத்தில் இந்த நகரம் உள்ளது. இங்கு 200க்கும் அதிகமான குளங்கள் உள்ளன. இதனால் குளங்களின் நகரம் என்ற செல்லப் பெயரும் உண்டு. இங்கு திகம்பர் ராணி பிரிசு பானு என்பவரால் கட்டப் பட்டுள்ள ஜானகி மந்திர் உள்ளது. இங்கு சீதாவை மையமாக காணலாம். ராமர், லட்சுமணர் அருகில் நிற்கின்றனர். இதனை கட்ட 1898-ஆம் ஆண்டு வாக்கிலேயே ஒன்பது லட்ச ரூபாய் செலவு ஆனதாம்.
இதனால் நவ் லாக் மந்திர் என்றபெயரும் உண்டு. ஜானகி மந்திருக்கு அருகிலேயே ராம - சீதா விவாக மந்திர் உள்ளது. இதனுள் ராமர் - சீதா திருமணம் நடந்தது. இங்கு மையமாக சீதா - ராமனையும் அருகில் மற்ற சகோதரர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். இதனை சுற்றி வந்து பார்க்க வேண்டும். உள் அனுமதியில்லை. மண்டபத்திற்குள் தசரதன் - மனைவிகள், ஜனகர் - மனைவி மற்றும் வசிஷ்டர், விஸ்வாமித்திரர் உட்பட பலர் அங்கு உள்ளனர்.
விஸ்வாமித்திரர் ஆஷ்ரமத்தில் இருந்து ஜனகபூர் வரை ராமர் சென்ற யாத்திரையை இன்று பரிக்ரமாவாக செய்கின்றனர். வருடாவருடம் முந்தைய அமாவாசையில் துவங்கி, ஹோலி பௌர்ணமியில் 15நாளில் இந்த யாத்திரை ராம பக்தர்களால் நடத்தப்படுகிறது. ஹாஜிபூர் (இங்கு ராம் சௌரா மந்திர் உள்ளது), கௌதமர் ஆஸ்ரமம், விஸ்வாமித்திரர் ஆஸ்ரமம், புல்கார் (இங்கு ஜனகரின் பெரிய பூந்தோட்டம் உள்ளது) ஜனகபூர் என பயணம் மேற்கொண்டு கோயில் மற்றும் ஆஷ்ரம்களையும் தரிசனம் செய்கின்றனர்.
ராஜி ராதா

