Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நினைத்தாலே அருகில் வருவார் குருராஜர்!

ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை - 11.8.2025

மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி, தனது 76-வது வயதில் (C.1595-C.1671) பிருந்தாவனம் பிரவேசித்தார். மகான்கள், இரண்டு முறைகளாக பிருந்தாவனத்தில் பிரவேசிக்கிறார்கள். ஒன்று, ஜீவசமாதி மற்றொன்று உடலைவிட்டு உயிர் பிரிந்த பின்னர், பிருந்தாவனத்தில் பிரவேசிப்பது. ஜீவசமாதி என்பது, தான் இந்த நாளில், கிழமையில், குறிப்பிட்ட நேரத்தில் பூத உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும் என்று, தன் ஞானத்தால் அறிந்து, தனக்கென பிருந்தாவனத்தை அமைத்துக்கொண்டு, அதில் அமர்ந்து உயிர் விடுதலாகும். மற்றொன்று, அனைவருக்கும் தெரிந்ததே. மகானின் உயிர் பிரிந்தவுடன், சிஷ்யர்கள் ஒன்றுகூடி மகானின் பூதவுடலை சுமந்துகொண்டு அமரவைத்து பிருந்தா வனத்தை எழுப்பி விடுவார்கள்.குறிப்பிட்ட சில மகான்கள் மட்டுமே ஜீவசமாதியடைந்திருக்கிறார்கள்.

அதில், மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளும் ஒருவர் என்பதைவிட முக்கியமானவர். ராகவேந்திரரின், பிறப்பு முதல் ஜீவ சமாதியடைந்தது வரை அவரின் வரலாறுகள், அவர் செய்த அற்புதங்கள் ஆகியவற்றை பல புத்தகங்கள் மூலமாகவும், ஏன்..! திரைப்படங்கள் மூலமாகவும்கூட அறிந்திருப்போம். இந்த தொகுப்பில் யாருமே அறிந்திராத ஒரு சுவாரஸ்யமான அற்புதத்தைக் காணலாம்.ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி, கிரகஸ்தராக இருக்கும்போது அவரின் பெயர் வேங்கடநாதன். ஒரு வேளை சாப்பாட்டிற்கே மிகவும் அவதிப்பட்டார். அத்தகைய கொடூர வறுமை அவரை வாட்டியது. இருப்பினும் பிரபலமான பண்டிதர். ஆகையால் விசேஷம், நாள்கிழமை, என்றால் மடத்திற்கு சென்று தீர்த்த பிரசாதங்களை (சாப்பாடு) உண்ணுவது வேங்கடநாதனின் வாடிக்கை.

ஒருநாள், விசேஷம் ஒன்று வந்தது. வேங்கடநாதன், தன் குடும்பத்தோடு மடத்திற்குச் சென்றார். நாம் முன்பே சொன்னோமல்லவா வறுமை, அதன் காரணமாக முகத்தில் தாடி மீசை, சாதாரணமான வேஷ்டி, மேல் அங்கவஸ்திரம், என வறுமையின் தோற்றம். வேங்கடநாதனின் மனைவி சரஸ்வதி, குழந்தை ஆகியோரும் அதே போல் வறுமையின் பிடியில்.. ஆனால், வேங்கடநாதன் அணிந்திருந்த நாம முத்திரைகள் மட்டும் பளிச்சிட்டன. அங்கு அவர், இரு கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்து பகவானின் மந்திரங்களை உச்சரித்தவாறு பாராயணம் செய்து கொண்டிருந்தார்.``ம்..ம்.. அன்றும் சரி இன்றும் சரி, இதற்கு யார் மதிப்பளிக்கிறார்கள்? நல்ல தோற்றத்திற்குத்தான் மதிப்பும் மரியாதையும்’’. வேங்கடநாதனையே உற்றுக் கவனித்த மடத்தின் நிர்வாகி, ``எந்த வேலையும் செய்யாமல், மடத்திற்குள் வந்தவுடனேயே முதல் பந்தி சாப்பாடோ... எந்திரி, சந்தனம் அரைத்து வந்திருக்கும் பக்தர்களுக்கு கொடு’’ என்றார். வேங்கடநாதனுக்கு கடும் பசி. இருந்த போதிலும், பக்தர்களுக்கு சேவை செய்வதில் அதீத பிரியம் (இப்போதும்கூட). பசியோடு ஸூக்தங்களை சொல்லியவாறு சந்தனம் அரைக்கத் தொடங்கினார். அரைக்க அரைக்க சந்தனம் அனைத்தும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

``அப்பாடா.. வந்த பக்தர்கள் அனை வருக்கும் அன்னதானம் வழங்கியாயிற்று’’ என்று மடத்தின் நிர்வாகி தெரிவிக்க;``சுவாமி.. சந்தனத்தை அரைத்துக்கொண்டிருக்கும் அந்த ஏழைப் பண்டிதர் இன்னும் உணவருந்தவில்லையே? என்று வினவினார் மற்றொரு நிர்வாகி,``ஆமா.. அவர் என்ன முக்கியமான பண்டிதரோ? இன்று ஏகாதசி என்று நினைத்துக் கொண்டு உபவாசமாக இருக்கட்டும். ஒரு நாள் உபவாசமாக இருந்தால் அவர் ஒன்றும் மெலிந்துவிடமாட்டார். அவரை நாளை வரச் சொல்’’ என்று மடத்தின் அதிகாரி ஆணவத்துடன் கூறினார். இதைப் பற்றி எதையுமே தெரியாத வேங்கடநாதன், மாங்குமாங்கு என்று சந்தனத்தை அரைத்துக்கொண்டிருந்தார். அவரின் அருகில் வாடிய முகத்துடன் சென்ற மற்றொரு நிர்வாகி,``அரைத்தது போதும். வந்திருந்த பக்தர்கள் அனைவரும் தீர்த்த பிரசாதத்தை உண்டு மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டார்கள்’’ என்றுகூற, அடுத்தது நாம்தான் உணவருந்தப் போகிறோம் என்கின்ற மகிழ்ச்சி வேங்கடநாதனின் முகத்தில் தெரிந்தது. அதை கவனித்தவாறே சோகத்துடன்;``அது.. அது.. எப்படி நான்...’’ எனத் தயங்கிய படி இருந்த நிர்வாகியிடம்,``எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்’’ என்கிறார் வேங்கடநாதன்.``இன்று உங்களுக்கு தீர்த்த பிரசாதம் இல்லை என்று சொல்லச் சொன்னார் மடத்தின் அதிகாரி’’ என்று கூறி முடித்ததும்.

``இது எங்களுக்கு புதுசா என்ன? தினம்தினம் எங்களுக்கு ஏகாதசிதான். இன்றாவது பாரணை (சாப்பாடு) செய்யலாம் என்று நினைத்தேன். இன்றும் எங்களுக்கு ஏகாதசி என்று, என் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் விருப்பம் போல.. அவனின் விருப்பம்போல் எல்லாம் நடக்கட்டும்’’ என்று தன் மனைவி சரஸ்வதியுடன் புறப்படத்தயாரானார். அதற்குள்..``ஐயோ.. உடம்மெல்லாம் எரியுதே... ஆ...ஆ..’’ என்று வந்திருந்த பக்தர்களின் அலறல் சத்தம் கேட்டது. ஒன்றுமே புரியாமல் வேங்கடநாதன் பார்த்துக்கொண்டிருந்தார். ``இதோ.. இந்த சந்தனத்தை பூசியபிறகுதான் எங்களின் உடம்பு கதகதவென எரியத் தொடங்கியது’’ என்று அங்கிருந்த பக்தர் ஒருவர் தெரிவிக்க..``ஹேய்.. பண்டிதனே! நீதானே இந்த சந்தனத்தை அரைத்தாய். எதைக் கொண்டு அரைத்தாய்? ஏதாவது சதி செய்தாயா? சொல்..’’ என்று அனைவரும் வேங்கடநாதனை வசை பாடினர். புரியாது திகைத்து நின்றார் வேங்கடநாதன். திடீர் என்று..

``ஹாஹா.. ஒரு தவறு செய்துவிட்டேன். ஒவ்வொரு ஸூக்தமாகப் பாராயணம் செய்தவாறு சந்தனத்தை அரைத்தேன். அப்போது, அக்னி ஸூக்தத்தையும் சொல்லி அரைத்தேன். அதனால்தான் அதனைப் பூசிக்கொண்ட பக்தர்களுக்கும் அதன் தாக்கம் இருக்கிறது போல’’.`சுவாமி.. நாங்கள் தவறு செய்துவிட்டோம். அக்னி ஸூக்தத்தை சொல்லி அரைத்த சந்தனத்துக்கே இத்தகைய மகிமை என்றால், நீங்கள் மிக பெரிய மகாபுருஷர்’’ என்று அனைவரும் வேங்கடநாதனின் காலடியை வணங்கினர்.``உடல் முழுவதும் எரிகிறது, எங்களை மன்னித்து, அருள்புரிந்து இதனைச் சரிசெய்ய வேண்டுகிறோம்’’ எனக் கேட்க, அடுத்த நொடி, வருண ஸூக்தத்தை சொல்லி மீண்டும் சந்தனத்தை அரைத்து, அதனைப் பக்தர்களுக்கு வழங்கினார் வேங்கடநாதன். அதனைப் பூசியதும், உடல் குளிர்ச்சியடைந்து பக்தர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். அன்று, வேங்கடநாதனுக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதே மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இன்றோ, தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு, அன்னம் இல்லை என்று சொல்லுவதில்லை.ஆம்..! வேங்கடநாதன், பிற்காலத்தில் ஸ்ரீ ராகவேந்திரத் தீர்த்தராக அவதாரமெடுத்து, பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை கல்ப விருட்சமாய் இருந்து நிறைவேற்றி இன்று மூல பிருந்தாவனமாக மந்திராலயத்தில் அருள்பாலிக்கிறார். அங்கு, தினம்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. ராகவேந்திரரின் பக்தகள் வீட்டிலும் சரி, ராகவேந்திர ஸ்வாமி மடத்திலும் சரி, அன்னத்திற்கு ஒருபோதும் குறைகள் வந்ததில்லை என்பது அனுபவ உண்மை.

``அக்னி சூக்ததிம் ராகவேந்திரா...

விப்ரரு லேபிசே ராகவேந்திரா...

க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா....

சரணு ஹொகலு ராகவேந்திரா..

வருண சூக்ததிம் ராகவேந்திரா...’’