Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புஷ்கலா யோகம்

யோகங்கள் ஏராளமாக இருந்தாலும் சில குறிப்பிட்ட யோகங்கள் பெரிய வெற்றியை மாபெரும் செயலை செய்கின்றன என்பது ஜோதிட சாஸ்திரத்தில் சொல்கிறது. அப்படி சொல்லப்படுகின்ற ஒரு யோகம்தான் புஷ்கலா யோகமாகும். புஷ்கலம் என்பது வடமொழியில் இருந்து வந்தது. அதன்பொருள் பெரும் தனம் என்றும் மிகுந்த பொருளுடையவன் என்றும் பொருள்படுகிறது. மிகுந்த பொருளை ஈட்டும் வாய்ப்பு இந்த யோகம் உள்ளவர்களுக்கு கைக்கு வந்தடையும். இதனை ராஜயோகம் என்றும் சொல்லலாம். கேந்திரம் என்றால் மையம் என்று பொருள். அதாவது, அனைத்தையும் இயக்கும் மையம் என்றும் சொல்லலாம். ஜோதிடத்தில் கேந்திரம் என்பதை வளர்ச்சி என்றும் வளர்ச்சிக்கான பாவகத்தை இயக்கும் மையங்களான ஒன்றாம் (1ம்) பாவகம், நான்காம் (4ம்) பாவகம், ஏழாம் பாவகம் (7ம்), பத்தாம் பாவகம் (10ம்) ஆகியவற்ைற கேந்திரம் என ேஜாதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த பாவகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் யோகமாக புஷ்கலா யோகம் உள்ளதால், வளர்ச்சி நிச்சயம் உண்டு.

புஷ்கலா யோகத்தின் அமைப்புகள் என்ன?

* லக்னமும் ராசியும் கேந்திரத்தில் அமைந்து, லக்னாதிபதியும் ராசியின் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் அமையப் பெறுவது. அவ்வாறு அமையும் பட்சத்தில் லக்னத்தின் அதிபதியும் ராசியின் நட்பாக இருக்க வேண்டும்.

* இராசி அதிபதியும் லக்னத்தின் அதிபதியும் கேந்திரத்தில் அமர்ந்து லக்னத்தை பார்ப்பதும் புஷ்கலா யோகத்தின் அமைப்பாகும்.இது போன்றே, லக்னமும் ராசியும் ஒன்றாக அமையப்பெற்று லக்னாதிபதி லக்னத்திலேயே அமர்ந்தாலும் இந்த புஷ்கலா யோகம் ஏற்படுகின்றது. அதாவது, லக்னம் என்று சொல்லக்கூடிய உயிரும் சந்திரன் என்று சொல்லக்கூடிய உடலும் கேந்திரம் என்ற வளர்ச்சியில் அமரும் பொழுது மிகப் பெரிய செயல்களை செய்வதற்கான ஆற்றலும் இயற்கை தருகிறது என்பதே புஷ்கலாயோகத்தின் அமைப்பு. உயிரின் (லக்னத்தின்) அதிபதியாக லக்னாபதியும் உடலின் (ராசியின்) அதிபதியும் இணைந்து கேந்திரம் பெறுவது பெரிய வளர்ச்சியினை சாதாரணமாகச் செய்யும். ஜாதகத்தில் பார்ப்பதற்கு இவை சாதாரண அமைப்பாக தெரிந்தாலும் வளர்ச்சியும் வெற்றியும் பெரிதாகவே இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.

சிறப்பான புஷ்கலா யோக அமைப்புகள்...

* இதில், ஐம்பத்தி இரண்டு (52) விதமான அமைப்புகள் உள்ளன. இதில் உட்புற சாரத்தில் நானூறு விதமான கிரக இணைவுகள் புஷ்கலா யோகத்தில் ஏற்படுகின்றன. அதில், குறிப்பிட்ட சில அமைப்புகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாக உள்ளது.

* விருச்சிக லக்னமாக அமைந்து லக்னத்திலேயே செவ்வாயும் சந்திரனும் அமையப்பெறுவதாகும். மேலும் அவ்வாறு அமையப்பெற்ற சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருப்பதும் அந்த சந்திரன் ஒன்பதாம் (9ம்) அதிபதியாக அமைவதும் மாபெரும் சிறப்பான புஷ்கலா யோகத்தினை கொடுக்கிறது.

* கடக லக்னமாக அமைந்து லக்னத்திலேயே சந்திரன் அமையப் பெறுவது புஷ்கலா யோகத்தின் சிறப்பு. மேலும், இதனுடன் வியாழனும் இணைந்திருப்பது இன்னும் சிறப்பான அமைப்பாக உள்ளது.

* ரிஷப லக்னமாக அமைந்து லக்னத்திலேயே சந்திரன் - சனி அமைவது. ஏழாம் பாவகத்தில் சுக்கிரன் இருந்து லக்னத்தை பார்வை செய்வது சிறப்பான புஷ்கலா யோகமாகும்.

* ரிஷப லக்னத்திற்கு லக்னத்தில் சந்திரன் சிம்மத்தில் சனி. விருச்சிகத்திலோ அல்லது கும்பத்திலோ சனி இருப்பதும் புஷ்கலா யோகத்தின் அமைப்பாக உள்ளது.

புஷ்கலா யோகத்தின் பலன்கள்...

* ஜாதகர் சாதாரண நிலையில் இருந்தாலும் அவரினை நோக்கியே வெற்றிகளும் அதற்கான வழிகளும் வந்து சேரும். ஜாதகர் தொடர்ந்து வெற்றிக்கான வழிகளை ஏற்படுத்திக் கொண்டே முன்னேறுவார்.

* அரசனை போல வாழும் யோக அமைப்பாக இருக்கும்.

* எதிரிகளை வீழ்த்தும் யுக்திகளை சிந்திப்பது இவருக்கு கைவந்த கலை.

* வாகனங்கள் வித விதமாக பயன்படுத்தும் அமைப்பாக உள்ளது. மேலும், விதவிதமான ஆடைகள் அணிந்து ராஜாவை போல தன்னை அலங்கரித்து கொள்வார்.

* அரசு தொடர்பான அதிகாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பார். தனக்கு மேல் உள்ள உயர் அதிகாரத்தையும் தன் கைக்குள் வைத்திருக்கும் யுக்தியை வைத்திருப்பார்.

* ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார். அதுவே, தன்னை முழுமையாக வழி நடத்துவதாக அதற்கு சேவைகளை செய்து கொண்டே இருப்பார்.

* ஆரோக்கியத்தில் அதிக கவனம் கொண்டிருப்பார். எப்பொழுதும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருப்பார். தன் உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என கவனம் இவருக்கு இருக்கும்.

* சமூகத்தில் நன்மதிப்பை பெற்றவராக இருப்பார். இவருடன் தொடர்புள்ளவர்கள் இவரின் வெற்றியை கண்டு ஆச்சர்யப்படுவார்கள். தனக்கென தனி முத்திரைப் பதிப்பார்.