இதோ வந்துவிட்டது கிருஷ்ண ஜெயந்தி. குழந்தைக் கண்ணன் ஒவ்வொருவர் வீட்டிலும் அருள் பாலிக்க சின்னஞ்சிறு பதம் வைத்து சிங்கார நடை நடந்து வரப் போகின்றான்.
அவனை வரவேற்க நாமெல்லாம் தயாராகிவிட்டோம். கண்ணன் வடிவத்தைப் பார்த்தாலே நமக்கு என்ன ஞாபகம் வரும்? வெண்ணெய் ஞாபகம் வரும். காரணம் அவனுக்கு வெண்ணெய் மிகவும் பிடிக்கும். அடுத்து கண்ணன் என்றால் நமக்கு என்ன ஞாபகம் வரும்? யோசித்துப் பாருங்கள். புல்லாங்குழல் ஞாபகம் வரும். ஆம் புல்லாங்குழல் இல்லாத கண்ணனை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா? முடியாது. கண்ணன் எப்படி வருவான் என்பதை பாரதி அற்புதமாகப் பாடுவார்.
``புல்லாங் குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பு நல் கீதம் படிப்பான்
கள்ளால் மயங்கியது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்.’’
நம் தெய்வங்கள் எல்லாம் இசைக் கருவியோடு இருப்பவர்கள்.
* உடுக்கையோடு சிவன்.
* வீணையோடு கலைமகள்.
* மத்தளத்தோடு நந்தி.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆஞ்சநேயர்கூட வீணை வாசிப்பார். அனுமார் வீணை வாசிக்கும் உருவத்தில் பல திருக்கோயில்களில் காட்சி தருகிறார்.
புல்லாங்குழல்
* கலைமகள் வைத்திருக்கும் வீணை ‘‘விபஞ்சி’’ அல்லது ‘‘கச்சபி’’ என்று அழைக்கப்படுகிறது.
* நாரதர் கையிலுள்ள வீணை ‘‘மகதி’’ என்று அழைக்கப்படுகிறது.
* தும்புரு எனப்படும் பசுமுகம் கொண்ட தேவரின் கையிலுள்ள வீணையின் பெயர்‘‘கலாவதி.’’
ஆனால் இசைக்கருவிகளில் மிகவும் பழமையான இசைக்கருவி புல்லாங்குழல்தான். வள்ளுவர்கூட யாழைச் சொல்வதற்கு முன்னால் புல்லாங்குழலைச் சொன்னார். ‘‘குழல் இனிது யாழ் இனிது’’ என்று வரிசைப்படுத்தினார். வேணு, முரளி ஆகிய சொற்கள் புல்லாங்குழலின் வேறு பெயர்கள். வேணுகோபாலன், முரளிதரன் என்றால் புல்லாங்குழலைக் கையில் வைத்திருக்கும் கண்ணன் என்று பொருள். குருவாயூர், போன்ற திருத்தலங்களில் புல்லாங்குழலோடு கூடிய கண்ணன் அலங்காரம் பிரபலமானது.
ஊத்துக்காடு வேங்கடகவி
கீர்த்தனைகளில் கிருஷ்ணகானம் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது வரகவி ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்கள்தான். அவருடைய காளிங்க நர்த்தனப் பாடல் இன்று கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதில் உள்ள ஜதிகள் கண்ணன் காலில் கட்டிய சலங்கையுடன் காளிங்கனின் தலையின் மீது பாய்ந்து பாய்ந்து ஆடிய அற்புதத்தை நமக்கு காட்டித்தரும். கண்ணனின் குழல் ஓசையை நேரில் கேட்டு இசை பாட, இவர் தாளம் போட்டு ஜதி செய்தவர் என்று சொல்வார்கள்.
அவருடைய கவியின் உயிர்த் தன்மையை நாம் உணர்ந்தால் அது கதை அல்ல நிஜம் என்பதை உணரலாம். காரணம், அது இட்டுக் கட்டிய பாடல்கள் அல்ல கண்ணனைத் தொட்டுக் கட்டிய பாடல்கள். நம் உள்ளத்தை தொடும் பாடல்கள். கண்ணன் எப்படிக் குழல் வாசித்தான் என்பதை அவர் காட்சிப் படுத்துகிற அழகு இருக்கிறதே, அதற்கு இணை வேறொன்றும் இல்லை. குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும் குறையேதும் எனக்கேதடி சகியே? என்ற காம்போதி ராகப் பாடலை நீங்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது. அப்பாடலின் சரணத்திலே கண்ணன் குழலூதும் காட்சியை அற்புதமாக படம் பிடிப்பார்.
``அழகான மயில் ஆடவும்
மிக அழகான மயில் ஆடவும் (மிக மிக)
காற்றில் அசைந்தாடும் கோடி போலவும்
அகமழிந்துலவும் நிலவொளி தனிலே
தனை மறந்து புல்லினம் கூவ
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிகு எனஒரு பதம் பாட
தகிட ததுமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடை சூழ
என்றும் மலரும் முகம்
இறைவன் கனிவோடு (குழலூதி)’’
அடுத்த சரணத்தில் இன்னும் அற்புதமாகச் சொல்வார். கண்ணன் தலை அசைத்து அசைத்துப் பாடும்பொழுது காதில் மகர குண்டலங்கள் ஆடுமாம். மகர குண்டலங்கள் ஆடும்பொழுது குழலின் மீது சூடி இருக்கும் மகுடம் ஒளி வீசுமாம். ஒரு பக்கம் ஆடைகள் எழிலாக அசைய, சுருண்ட கருங்குழல்கள் இன்னொரு பக்கம் அசைய, அடடா, அவன் வாசிப்பைப் கேட்பதா இல்லை பார்ப்பதா என்று மனம் தவிக்குமாம்.
கவியரசு கண்ணதாசன்
கண்ணன் குழலூதும் சிறப்பைப் பாடாத கவிகள் இருக்க முடியுமா? கவியரசு கண்ணதாசன், கண்ணன் மீது அடுக்கடுக்கான பாடல்களை எழுதினார். திரைப் படங்
களில் காதல் காட்சிக்காக யாரோ இரண்டு பேர் பாடுவது போல் அமைந்த பாடல் களில்கூட அவர் கண்ணனையும் ராதையும் நினைத்துப் பாடிய பாடல்கள்தான் அதிகம். அவர் “கிருஷ்ணகானம்” என்று தனியாகவே பல பாடல்களை எழுதினார். அதில் அவர் எழுதிய மிகப் பிரபலமான பாடல்களில் ஒன்று கண்ணனையும் புல்லாங்குழலையும் இணைத்து எழுதிய பாடல்கள்தான்.
``புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்.’’
- என்று அந்தப் பாடல் தொடங்கும்
ஆனால், இந்தப் பாடல்களுக்கு எல்லாம் அடித்தளம் போட்டுத் தந்தவர் பெரியாழ்வார். கண்ணன் எப்படிக் குழல் ஊதுவான் என்பதையே ஒரு பதிகமாகப் பாடி இருக்கிறார்.
கிருஷ்ண ஜெயந்தியில், அந்தப் பாசுரங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஒரு நாடகக் காட்சி
அதில் முதல் பாசுரம். அழகான பாசுரம் ஒரு நாடகக் காட்சி போல் விரிகிறது.
``நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள்
இது ஓரற்புதம் கேளீர்
தூவலம் புரியுடைய திருமால்
தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை
குதுகலிப்ப உடலுளவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி
வந்து கவிழ்ந்து நின் றனரே.’’
ஒரு அற்புதத் தீவு. அந்த தீவுக்கு நடுவிலே ஒரு கண்டம். அதற்கு பரதகண்டம் என்று பெயர். இதில் வசிக்கக் கூடிய வாய்ப்பு மானிடப் பிறவிக்கு மட்டுமே உண்டு. அப்படி மானிடப் பிறவி எடுத்து வந்து, கண்ணன் மீது அன்பு வைத்த நங்கைகளே! ஒரு அருமையான அற்புதம் சொல்கிறேன். வேறு ஒன்றிலும் சிந்தை வைக்காது அப்படியே உங்கள் காதைத் தீட்டிக் கொண்டு கேளுங்கள் என்று ஆரம்பிக்கிறார். தூரத்திலே காற்றில் மிதந்து வரும் அழகான இசை, புல்லாங்குழல் இசை. அதை நோக்கிப் போவோம் வாருங்கள்.
இப்படி இவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு இசை வருகின்ற திசை நோக்கிச் சென்று பார்க்கின்ற பொழுது, அங்கே அற்புதமான ஆச்சரியம். கண்ணன் தன்னை மறந்து புல்லாங்குழல் இசை வாசித்துக் கொண்டிருக்கிறான். உள்ளம் கரையக்கூடிய அந்த அற்புத இசை, கண்ணன் மீது அன்பு வைத்த அந்த சின்னஞ்சிறு பெண்களைக் கவர்ந்து இழுக்கிறது. கண்ணனோடு சேரக் கூடாது, பேசக் கூடாது என்று கட்டுக்காவல் வைத்திருந்தார்கள். ஆனால், இந்த இசையின் இனிமை அந்தக் கட்டு காவலையும் உடைத்துக் கொண்டு கண்ணனை நோக்கி அவர்களை நகர வைத்தது. ஆனால், அவர்கள் செல்வதற்கு முன்னர் அவர்களுடைய அங்கங்கள் எல்லாம் கண்ணனை நோக்கி, நான் முந்தி நீ முந்தி என்று சென்றுவிட்டன.
உடனே மனசு கேட்குமா? சிதிலமடைந்த மனது அந்த இசையைக் கேட்பதற்கு இவள் போவதற்கு முன்னாலே போய் நின்றுவிட்டது. அடடா, நமக்கு முன்னால் நம்முடைய அங்கங்களும், மனதும் இங்கே வந்து நிற்கிறதே என்று தவித்துப்போன பெண்கள் கண்ணனின் முகம் கண்டு நாணி, இசையில் மயங்கி தலைகவிழ்ந்து நின்றார்கள். இந்தக் காட்சிதான் இந்தப் பாசுரத்தில் விரிகிறது. இதை ஒரு திரைப்படக் காட்சி போல அனுபவித்தால்தான் கண்ணனின் அனுபவம் உங்களுக்கு வரும்.
நாவலம் தீவு
பாசுரத்தை ஆரம்பிக்கின்றபொழுது “நாவலம் பெரிய தீவினில்” என்று ஆரம்பிக்கின்றார். அது என்ன நாவலம் தீவு? உப்புக்கடல், கறுப்புக்கடல், கள்ளுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நீர்க்கடல் என்ற ஏழுகடல்களாலுஞ் சூழப்பட்ட எழுதீவுகளுக்கு, முறையே ஜம்பூத்வீபமென்றும், பலக்ஷத்வீபமென்றும், சால்மலத்வீபமென்றும், குசத்வீபமென்றும், குரெளஞ்சத்வீப மென்றும், சாகத்வீப மென்றும், புஷ்காத்வீப மென்றும் பெயர். இவற்றுள் ஜம்பூத்வீபம் மற்ற எல்லாத் தீவுகளுக்கும் நடுவிலுள்ளது; அதன் நடுவில், மேரு என்னும் பொன் மலையுள்ளது; அதனைச் சுற்றி நான்கு மலைகள். அதைச் சுற்றி நான்கு மரங்களுள்ளன; அவற்றிலொன்றாகிய நாவல் மரம் - ஜம்பூத்வீபமென்று இத்தீவின் பெயர் வழங்குதற்குக் காரணமாயிற்று.
[ஜம்பூ - நாவல்] மற்றைய தீவுகளுக்கும் இந்தத் தீவுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மற்றத் தீவுகள் பலாநுபவத்திற்கே உரியவை (அதாவது புண்ணிய பாப பலனை அனுபவிப்பதற்காக ஏற்பட்ட இடம்). ஆனால், நாம் வசிக்கும் இத்தீவு பலன்களுக்குச் சாதகமான கருமங்களைச் செய்வதற்கு உரிய இடமாகையால் இத்தீவு ஒன்றே சிறப்பானது. இதில்தான் “பாரத வர்ஷம்” என்கிற பகுதி இருக்கிறது. பரத கண்டம் என்ற நம் தேசம் இருக்கிறது. பகவானும் பகவான் அடியார்களும் அவதரித்த பெருமை உடையது அல்லவா இந்தத் தேசம். பாரதி,
``பாரத நாடு
பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்
நினைவகற்றாதீர்.
பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்’’
- என்று பாடினார்.
அதனால்தான் தினசரி சங்கல்பம் சொல்லுகின்ற பொழுது, ‘‘ஜம்பூத் வீபே, பாரத வர்ஷே, பரத கண்ட’’ என்று சங்கல்பம் சொல்கிறோம். தேவர்களுக்குக் கூட கிடைக்காத அற்புதமான மனிதப் பிறவி இத்தீவினில் பெரிய தவங்களின் பயனாக மட்டுமே கிடைக்கும். அப்படிப்பட்ட தவங்களைச் செய்து இத்தீவில் பிறந்த பெண்களே! நீங்கள் செய்த தவமெல்லாம் என்ன பயன் படைத்தன? உங்களைப் போல் பல பெண்கள் திருவாய்ப்பாடியிற் பிறந்து கண்ணனிடத்தில் கொண்ட ஈடுபாட்டையும் அன்பையும் பார்த்தால் உங்களுக்கு என்ன பூர்த்தி உள்ளதாகச் சொல்லக்கூடும்? என்ற கருத்துப்பட “நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள்!” என விளித்தார்.
கண்ணபிரான் வேய்ங்குழலை வாயில்வைத்து ஊத, அதன் இனிமையைக் கேட்ட, இடைப் பெண்கள் உடல் இளைத்து மன முருகி, தங்களுக்குக் காவலாக வீட்டிலிருக்கின்ற மாமியார் மாமனார் முதலியோரையும் அலட்சியம் பண்ணிவிட்டுக் கண்ணன் குழலூதுமிடத்தேறப் புகுந்து; ஒரு கயிற்றிலே அடரப் பூக்களை ஒழுங்குபடத் தொடுத்தாற்போல வரிசையாக நின்று கண்ணன் முகத்தைக் கண்டவாறே ‘நாம் நமது காமத்தை இங்ஙனே வெளிப் படையாக்கினோமே’ என்று வெள்கி, அவன் முகத்தை முகங் கொண்டு காணமாட்டாமல் தலைகவிழ்ந்து தரையைக்கீறி நின்றனர் என்பது பாசுரத்தின் அடுத்த பகுதி.
இன்னொரு பாசுரம்
சரி, இவர்களுக்கு மனிதக் காதுகள் இசையை ரசிக்கக் கூடிய தன்மை படைத்த காதுகள். அதனால் கண்ணன் இசையைக் கேட்டு ஓடி வந்தார்கள். எல்லாம் சரி. ஆனால் பெரியாழ்வார் இன்னொரு பாசுரம் பாடுகிறார் பாருங்கள். கண்ணனின் சின்னஞ் சிறிய விரல்கள் குழலின் சிறு துளைகளில் நர்த்தனம் ஆடுகின்றன. அவனுடைய புருவம் மேலும் கீழும் வளைகிறது. சிவந்த வாய் காற்றுக்காகக் குவிகிறது.
அற்புதமான இசை குழலில் வழிகிறது. இந்த இசையைக் கேட்டு கறவைப் பசுக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்ணனின் காலடியில் சூழ்ந்துவிட்டன. சதா காதுகளை ஆட்டிக் கொண்டிருக்கும் அவைகள் இசையின் மயக்கத்தில் காதுகளை ஆட்ட மறந்தன. சரி, பசு மாடுகள்தான் இப்படி என்றால், பறக்கின்ற பறவைகள் எல்லாம் வந்து இசையைக் கேட்டு அந்த மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டன. அடடா, மனிதக் காதுகள்தான் இசையை ரசிக்கும் என்றால் பறவைகளின் காதுகளும் கறவைகளின் காதுகளும்கூட புண்ணியம் செய்திருக்கின்றனவே என்று தோன்றும்.
``சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிக்க
குறுவெயர்ப் புருவம் கூடலிப்பக்
கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்திறங்கிச் செவி யாட்டகில்லாவே.’’
இனி அடுத்த நிலையைக் காட்டுகின்றார். மனிதரின் காதுகள் இசையை ரசிக்கும் தன்மை படைத்தன. மனிதனைவிட சற்று குறைவாக ஐந்தறிவு படைத்த பறவைகளும், கறவைகளும்கூட இசையை ரசிக்கின்றன. ஆனால், கண்ணன் இசையால் பூத்துக் குலுங்கும் அசேதன மரங்கள்கூட, கண்ணனுடைய இசைக்கு ஆடுவதும், அவன் இசை வருகின்ற திக்கை நோக்கி தாழ்வதும் என என்னமாய் ரசிக்கின்றன! அடடா மனிதர்களையும் தாண்டி இந்தப் பிரபஞ்சத்தையே மயக்குகின்ற இசை அல்லவா கண்ணனின் இசை, பாசுரத்தைப் பாருங்கள்.
``கருங்கண் தோகைமயிற்
பீலி யணிந்து
கட்டிநன் குடுத்த பீதக வாடை
அருங்கல வுருவி னாயர்
பெருமான்
அவனொரு வன்குழ லூதின போது
மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும்
மலர்கள் வீழும்வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற
நின்ற பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே.’’
கண்ணனின் இசையில் ஆழ்வார் எப்படி மயங்கி இருந்தால் இந்தப் பாசுரங்களை எல்லாம் பாடியிருப்பார்? இந்தக் கட்டுரையில் அடியேன் சொன்னது பத்து பாசுரங் களில் ஓரிரண்டு இடங்கள்தான். மொத்தப் பதிகத்தையும் நீங்கள் மெத்தப் படித்தால், உங்கள் மனம் என்னும் சொத்தை கண்ணனின் இசைக்கே காணிக்கையாகத் தந்து விடுவீர்கள்.
முனைவர் ஸ்ரீராம்