Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மக்கள் சேவையே உயிர்நாடி

“மனிதகுலத்திற்கு சேவை செய்வது கடவுளுக்கு சேவை செய்வதற்கு சமம் என்று எல்லா தர்மங்களும் மதங்களும் மக்கள் சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. “மக்கள் சேவையே மகேசன் சேவை”. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” எனும் சொல்லாடல்கள் எல்லாம் மக்கள் சேவையை ஒட்டிப் பிறந்தவைதாம். இஸ்லாமிய வாழ்வியலின் தாரக மந்திரமே ``மக்கள் சேவைதான்’’. “இஸ்லாம் என்றால் என்ன?” என்று ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, “பசித்த வயிற்றுக்கு உணவளித்தல்” என்று கூறினார். தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகளைக் கூறாமல் ‘பசித்த வயிற்றுக்கு உணவளித்தலே இஸ்லாம்’ என்று கூறியதன் மூலம் மக்கள் சேவையின் மகிமையை உணர்த்தினார்.

“இறைத்தூதர் அவர்களே, என் தாய் இறந்துவிட்டார். அவர் நினைவாக ஏதேனும் நல்லறம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்யட்டும்?” என்று ஒருவர் கேட்டபோது;“மக்களுக்குக் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்” என்றார் நபிகளார்(ஸல்). இவற்றை எல்லாம்விட மக்கள் சேவை குறித்து மிக அற்புதமான ஒரு செய்தியை இஸ்லாம் குறிப்பிடுகிறது. மறுமை நாளில் ஓர் அடியானை இறைவன் அழைத்து,

“நான் பசியோடு இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை?” என்று கேட்பான். அந்த அடியான்,

“இறைவா, உலகத்திற்கே படியளப்பவன் - உணவளிப்பவன் நீ. உனக்கு எப்படி நான் உணவளிக்க முடியும்?” என்று மறுமொழி பகர்வான். அப்போது இறைவன், “உலகில் இன்ன அடியான் உன்னிடம் பசிக்கு உணவளிக்கும்படிக் கேட்டான். நீ அந்த அடியானின் பசியைப் போக்கியிருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்” என்பான்.

மீண்டும் இறைவன்,  “நான் தாகத்தோடு இருந்தபோது நீ ஏன் எனக்குத் தண்ணீர் தரவில்லை?” என்று கேட்பான். “இறைவா, உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் தண்ணீர் எனும் அருளை வழங்குபவன் நீ. உனக்கு எப்படி தாகம் எடுக்கும்?” என்று கூறுவான் அடியான். உடனே இறைவன், “உலகில் இன்ன அடியான் தாகத்தால் தவித்து உன்னிடம் தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ தண்ணீர் புகட்டியிருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்” என்று சொல்வான். மக்கள் சேவைக்கு இஸ்லாம் அளித்துள்ள உயர்வுக்கு உன்னதமான எடுத்துக்காட்டுதான் இந்தச் செய்தி. இறைவன் கூறியதாக இந்தச் செய்தியை அறிவித்தவர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்.

இருபத்து நான்கு மணி நேரமும் பள்ளிவாசலிலேயே தங்கி வழிபட்டுக்கொண்டிருந்த ஒரு மனிதரை நபிகளார் பார்த்தார்.“யார் இவர்? எப்போது பார்த்தாலும் வழிபாட்டிலேயே இருக்கிறாரே? இவருடைய குடும்பத்திற்கு என்ன செய்கிறார்?” என்று கேட்டார். அருகிலிருந்த தோழர்கள்,

“இறைத்தூதர் அவர்களே, இவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர்தாம் கடுமையாக உழைத்து இவருடைய குடும்பத்தையும் பராமரிக்கிறார்” என்றனர். உடனே நபிகளார் (ஸல்) கூறினார்;

“இவரைவிட இவருடைய சகோதரர்தாம் இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்.” உலகின் அனைத்து தர்மங்களும் வலியுறுத்துவது ஒன்றே;`‘படைப்புகளுக்குச் செய்யும் சேவை படைத்தவனுக்கே செய்யும் சேவை ஆகும்.’’- சிராஜுல் ஹஸன்

இந்த வார சிந்தனை

“எந்த நல்ல பொருளை (இறைவழியில் - மக்கள் சேவைக்காக) நீங்கள் செலவு செய்தாலும் அதற்குரிய நிறைவான கூலி உங்களுக்குக் கொடுக்கப்படும்” (குர்ஆன் 2:272)