Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிக்கல் தீர்க்கும்சிக்கல் சிங்காரவேலவர்

ஒரு பஞ்ச காலத்தில், உண்ண உணவில்லாத நிலையில், மாமிசத்தைத் தின்றதால் தேவலோகப் பசுவான காமதேனு, ஈசன் சாபத்தால் புலி முகம் பெற்றது. அந்த சாபத்தை காமதேனு நிவர்த்தி செய்து கொண்ட தலம், சிக்கல்.

‘‘அந்த பால் குளத்திலிருந்து வசிஷ்டர் வெண்ணெய் எடுத்து சிவலிங்கத்தை உருவாக்கி பூஜித்தார். பின் அதை அகற்ற முற்பட்டபோது, லிங்கம் பூமியில் சிக்கிக் கொண்டதால் இத்தலம் சிக்கல் என வழங்கப்பட்டது.’’

வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டாஸ்ரமம் என்றும் மல்லிகை வனங்கள் நிறைந்திருந்ததால் மல்லிகாரண்யம் என்றும் சிக்கல் அழைக்கப்படுகிறது.

இத்தல சிங்காரவேலவர் உலகப்புகழ் பெற்றவர். சூர சம்ஹாரத்துக்குப் புறப்படுமுன், இத்தலத்தில் அருளும் வேல்நெடுங்கண்ணி எனும் சத்தியதாட்சியிடம் முருகன் வேல் வாங்கி புறப்பட்டதாக புராண வரலாறு.

இன்றும் சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்தவுடன் சிங்காரவேலவனின் திருமுகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பி, துடைக்கத் துடைக்க பெருகும் அற்புதம் நிகழ்கிறது.

அருணகிரிநாதர் ‘அவர் தரு...’ எனும் திருப்புகழாலும், காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் சத்த சாகரம் எனும் தனது க்ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழிலும் சிங்கார வேலவனை போற்றுகின்றனர்.

தட்சிணாமூர்த்தி கோஷ்டத்திற்கருகே தலவிருட்சமான மல்லிகைக் கொடி உள்ளது.

வசிஷ்டர் தன் சீடர்களோடு இருப்பதும், காமதேனு நவநீதேஸ்வரரை வழிபடுவதுமாகிய தலபுராணச் சிற்பங்களை பிராகாரத்தில் காணலாம்.

மகாபலியை அழித்து அவன் அகங்காரத்தை சிதைக்க இத்தல ஈசனை வேண்டி தவமியற்றிய பெருமாள் இத்தலத்திலேயே கோமளவல்லித் தாயாருடன் நிலை கொண்டார்.

இக்கோயில் யானைபுகா மாடக் கோயிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இத்தல கார்த்திகை மண்டபத்தில் கந்த புராண நிகழ்ச்சிகளை ஓவியங்களாகவும், ராமாயண நிகழ்ச்சிகளை சுதைச் சிற்பங்களாகவும் தரிசிக்கலாம்.

‘‘காமதேனு ஈசனை வழிபடுவதற்காக, தன் பாலால் ஒரு குளத்தை உண்டாக்கியது. அத் திருக்குளம் காமதேனு தீர்த்தம், தேனு தீர்த்தம், க்ஷீர புஷ்கரணி என்ற பெயர்களில் இன்றும் பிரதான தல தீர்த்தமாக விளங்குகிறது.’’

திலோத்தமையின் மீது காதல் கொண்டு அதனால் தவபலனை இழந்த விஸ்வாமித்திரர், இத்தலத்திற்கு வந்து அந்த பாவத்தை தீர்த்துக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது.

வைகுந்த வாசனான நாராயணன் கோலவாமனப் பெருமாள் எனும் திருப்பெயரோடு இத்தலத்தில் அருள்கிறார்.

வசந்த மண்டபத்தில் கார்த்திகை திருநாள் உற்சவத்தின் போது தேவியருடன் சிங்கார வேலவன் எழுந்தருள்வது வழக்கம். அப்போது நிலைக்கண்ணாடி முன் நடத்தப்படும் ஒய்யாளி சேவையைக் காணக் கண்கோடி வேண்டும்.

நாகப்பட்டினத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.

முருகனின் வாகனம் மயில். மயிலுக்கு சிகி என்றொரு பெயரும் உண்டு. சிகிவாகனன் என்பதிலிருந்து சிக்கல் என்ற பெயர் தோன்றியது என்போரும் உண்டு.