Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிரச்னைகளை தீர்ப்பார் பிரசன்ன வெங்கடேஸ்வரர்

அப்பளாயகுண்டா

ஆந்திரபிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், அப்பளாயகுண்டாவில் இந்த ``பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமியை’’ தரிசிக்கலாம். முன்னொரு காலத்தில் அப்புல்லையா என்ற பக்தர் திருமலைக்கு செல்லும் போது, சற்று நேரம் இங்கு தங்கி ஓய்வெடுத்தார். சிறிது நேரம் கழித்து பயணத்தை தொடர்ந்த போது, பணப்பையை அமர்ந்த இடத்திலேயே விட்டுவிட்டு புறப்பட்டுவிட்டார். கொஞ்ச தூரம் சென்ற பின் நினைவு வந்தது. உடனே திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியிடம், என் பை கிடைத்தால் கிடைத்த இடத்திற்கு அருகில் குளம் ஒன்று வெட்டுவேன் என்று வேண்டிக் கொண்டார். திருமலையில் தரிசித்துவிட்டு, அப்புல்லையா திரும்பி வந்த போது, என்ன ஆச்சர்யம்! பணப்பை வைத்த இடத்திலேயே இருந்தது. நன்றியாக அப்புல்லையா ஒரு குளம் வெட்டினார். அதனால் இந்த இடமே ``அப்புல்ய குண்டா’’ என பெயர் வந்தது. அப்புல்லையா வெட்டிய குளம் இன்றும் உள்ளது.

இந்த பகுதியில், ``யோகுலாகொண்டா’’ என்னும் மலைகள் உள்ளன. ஒரு காலத்தில், இந்த இடத்தில் ஏராளமானோர் தவம் செய்தனர். அப்படி சித்துலையா என்பவரும் தவம் செய்தார். ஒரு நாள், அவருக்கு பெருமாள் காட்சி தந்தார். அப்போது சித்தலையா, பெருமாள் நிரந்தரமாக இங்கேயே தங்க வேண்டும் என்றார். காட்சி தந்த போது அபயஹஸ்தத்துடன் பெருமாள் காட்சி தந்தார்.

அப்படியே இங்கு நிரந்தரமானார். இப்படி அபயஹஸ்தத்துடன் காட்சி தருவதால், பக்தர்களுக்கு அடைக்கலம் தந்து, அவருடைய விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என நம்பிக்கை கொண்டனர். அத்துடன், சனிக்கிழமை தரிசித்தால் துன்பங்கள் விலகும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் இக்கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகின்றன. இந்த கோயில், பிறகு வந்த ஆகாசராஜா சந்ததியினரால் விரிவாக கட்டப்பட்டது என்று சான்றுகள் கூறுகின்றன. அதன் பின்னர் பலரும் இக்கொயிலை புதுப்பித்தனர். கி.பி1750ல் பிறந்து வாழ்ந்த அரசவை கவிஞர் சீ.சாரங்கபாணி, இந்த பெருமாள் பற்றி ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

இனி கோயிலுக்குள் செல்வோம்

இக்கோயில், கிழக்கு நோக்கி உள்ளது. மூன்று நிலைகளை கொண்ட கோபுரம் எழுந்துள்ளது. தற்போது இந்த கோயிலுக்கு, ஐந்து நிலைகள் கொண்ட புதிய ராஜகோபுரம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும், பலிபீடம், துவஜஸ்தம்பம், கருடாழ்வார் ஆகிய சந்நதிகளை கடந்தால், முகமண்டபம் வருகிறது. முகமண்டபத்தில், ஸ்ரீவிஸ்வக்சேனர், ஆழ்வார்களுடன் ராமானுஜரையும் தரிசிக்கலாம். கர்ப்பகிரகத்திற்கு முன், இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். உள்ளே, ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரர் நான்கு கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் அபயஹஸ்தத்துடன் காட்சி தருகிறார்.

திருமலையில் பெருமாள் கால்களை காட்டுவார். ஆனால், இங்கு பாதங்கள் காட்டப்படவில்லை.

இந்த கோயிலில், ஸ்ரீபத்மாவதி மற்றும் ஆண்டாள் தனி சந்நதி கொண்டுள்ளனர்.

பத்மாவதி தாயார், அமர்ந்த நிலையில் நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். இரண்டு கைகளில், பத்ம முத்திரை மேலும் இரு கைகளில் அபய, வாத முத்திரைகளுடன் காட்சி தருகிறார். ஆண்டாளுக்கு இரு கைகள். நின்ற கோலத்தில், ஒரு கையில் தாமரையையும் மற்றொரு கை தாழ்ந்த கையை தாங்கியபடி காட்சி தருகிறார்‌. இந்த கோயிலில் வாயு சிலை உள்ளது‌.

நாள்பட்ட நோய்களிலிருந்து குணமடைய இந்த வாயுவை தரிசித்து வழிபட வேண்டும். உடல், உளவியல் மற்றும் தொழில் துரதிருஷ்டங்களுடன் தொடர்புடைய தோஷக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால், சங்கடங்கள் விலகும். ஜியேஷ்டா மாதத்தில், ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ரத உற்சவமும் உண்டு. கடைசி நாள் சக்கர ஸ்நானம்.

இந்த கோயிலை, 1988 - ஆம் ஆண்டு முதல், ``திருமலா திருப்பதி தேவஸ்தானம்’’ நடத்தி வருகிறது.

விசேஷ நாள்:- உகாதி, ரதசப்தமி, தீபாவளி, வைகுண்ட ஏகாதாசி ஆகும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:- காலை 5.45 முதல் இரவு 8.00 மணி வரை.

அருகில் உள்ள கோயில்:- ``சந்திர கிரி கோதண்டராமர் கோயில்’’ இங்கிருந்து சுமார் 28.5 கி.மீட்டர்.

நேரம்:- காலை 6.00 முதல் 12.00 வரையிலும் பிற்பகல் 3.00 முதல் 8.00 வரை.

தொடர்புக்கு:- 91-8686102153.

எப்படி செல்வது:- திருப்பதியிலிருந்து 16 கிலோ மீட்டரிலும், திருச்சானூரிலிருந்து 12 கிலோ மீட்டரிலும் இக்கோயிலை அடைந்துவிடலாம்.