Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பூரம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு பதினொராவது வரக்கூடிய நட்சத்திரம் பூரம் நட்சத்திரமாகும். கலைக் குரிய நட்சத்திரமாகும். சமஸ்கிருதத்தில் பூரம் நட்சத்திரத்தை பூர்வ பால்குனி என்றழைக்கிறார்கள். பால்குனி என்ற நட்சத்திர மண்டலத்தின் முந்தையது என்ற பொருளாகும். மிகவும் வசீகரமான நட்சத்திரமாகும். இது ஒரு இரட்டை நட்சத்திரத்தின் ஒரு பகுதியாகும். இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் உள்ள முழுமையான நட்சத்திரம். இந்த நட்சத்திரம் கண் போன்ற ஒரு அமைப்பை கொண்டுள்ளதால் இந்த நட்சத்திரத்திற்கும் கண்ணிற்கு ஒரு தொடர்பு உள்ளது என்பது விளங்குகிறது.

பூரம் நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் துர்க்கை, நாவிதன், எலி, இடைச்சனி ஆகியன. பூரம் அதிகாரம் கொண்ட நட்சத்திரம். அன்பாக காணப்பட்டாலும் அதிகாரம் செய்யும் காலத்தில் அதிகாரம் செய்யும். இந்த நட்சத்திரம் மனித கணம் கொண்ட நட்சத்திரம். ஆகையால் சில நேரங்களில் தேவ குணத்துடனும், சில நேரங்களில் ராட்சச குணத்துடன் இருப்பர்.

பூரம் - விருட்சம் : பலா மரம்

பூரம் - யோனி : பெண் எலி

பூரம் - பட்சி : ஆந்தை

பூரம் - மலர் : தாமரை

பூரம் - சின்னம் : கட்டிலின் கால், சங்கு, மெத்தை

பூரம் - அதிபதி : சுக்ரன்

பூரம் - அதி தேவதை : பார்வதி

பூரம் - கணம் : மனுஷ கணம்

மீனாட்சி அம்மன், ஆண்டாள், பார்வதி தேவியும் அவதரித்த நட்சத்திரம் பூரமாகும். முன்னோர்கள் பூரம் தாரத்திற்கு லாபம் என்ற சொலவடையைச் சொல்வர்.

விருப்பத்தை அடையும் பூரம்.

மீனாட்சி அம்மனும், பார்வதி தேவியும் மனிதப் பிறப்பெடுத்து இருவரும் சிவபெருமானை தன் மணாளனாக நினைத்து வாழ்ந்து சிவபெருமானை அடைந்தாள். சிவபெருமானின் தரிசனம் யாவருக்கும் சீக்கிரம் கிட்டாது. தான் கண்ட சிவதரிசனத்தை பூலோக உயிர்களும் காண வேண்டும் என்ற எண்ணத்தில் பூலோகத்தில் பிறப்பெடுத்து குழந்தைகளையும் தரிசனம் செய்ய வைக்கிறாள் அன்னை மீனாட்சி.

மூன்று ஸ்தனங்களுடன் பிறந்தவள் தன் கணவன் எப்பொழுது தன்னை காண்கிறானோ அப்பொழுது ஒரு ஸ்தனம் மறைந்து போகும் என அறிந்தவள். தன் கணவனாகிய சிவபெருமான் எந்த ரூபத்திலும் காட்சி கொடுப்பார் என்பதை அறிந்து கொள்ள ஒரு உபாயம் வேண்டும் என்பதற்கே இப்படி அவள் உடலில் மூன்றாவது ஸ்தனம் இருந்தது என்கின்றன புராணம்.

மீனாட்சி என்பதற்கு மீனை போன்ற கண்களை உடையவள் என்று பொருள். கண்கள் என்றால் சுக்ரனை குறிப்பதாகும். கண்கள் சூரியனையும் சுக்ரனையும் குறிக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

மீன் தன் குஞ்சுகளை கண்களிலிருந்து அகலவிடாமல் எப்படி பாதுகாத்து வளர்க்கிறதோ, அது போன்று தன்னை வணங்கும் குழந்தைகளை கண் போல் பாதுகாத்து வளர்த்து காப்பவள் மீனாட்சி என்று பொருள் கொள்கிறது.

பூரம் என்பது சுக்ரனின் நட்சத்திரமாக இருப்பதால் பொருளாதாரச் செழிப்பு மற்றும் ஆடம்பரத்தை குறிப்பதாகும். ஆகவே, மீனாட்சி அன்னையும் மன்னனின் அரண்மனையில் அவதரித்து சுக்ரனுக்குரிய கலையம்சமாக அனைத்து கலைகளையும் கற்றுப் போர்த்தொடுத்தாள் என்கிறது புராணம். ஆடம்பரபாக வாழ்ந்தாள். ஆனால், எண்ணம் எப்ெபாழுதும் அவனையே நினைத்தது. அன்னை போர்த் தொடுக்கவில்லை மணாளனை தேடி அலைகிறாள். பூரம் என்பது சிம்ம ராசியினுள் இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் அவதரித்த அன்னை மீனாட்சி, அரண்மனையில் அதிகாரம் செய்யக்கூடிய இடத்தில் அவதாரம் எடுத்தாள்.

மீனாட்சி அம்மனுக்கும் சனி - சுக்ரன் தொடர்புகள் உண்டு. ஆகவே, இத் திருத்தலத்தில் சனி எனச் சொல்லக்கூடிய கடினமான பாறைகளும் சுக்ரன் என்று கலைகளுக்கு காரணமானவர் என்பதால் அழகிய சிலைகளை காணலாம்.

ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் உதித்தவள். இவளும் ஸ்ரீரெங்கநாதரை பக்தியுடன் நினைத்துருகி அவரையே கணவனாக நினைத்து வாழ்ந்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதே. சுக்ரனின் நட்சத்திரத்தில் அவதரித்ததால் அழகாக பாடும் வல்லமை கொண்டவள். பல பாசுரங்களை இயற்றினால் கோதை. கவி புனையும் வல்லமை சுக்ரனின் மூலம் அமையும்.

பொதுப்பலன்கள்

இந்த நட்சத்திரக்காரர்கள் ஆடம்பரம், கேளிக்கை, அதிகாரம் ஆகியவற்றில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பர். பூரப் புருஷன் புவனத்தை ஆள்வான் என்ற சொலவடை உண்டு. அதிகாரம் செய்யும் நட்சத்திரம். மாற்றத்தை முன்னரே உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி இவர்களுக்கு உண்டு. சுகபோகமாக வாழ்வார்கள். இவர்களுக்கு தாங்கள் தொழிலில் தனிபட்டு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆகவே, அதற்காக பாடுபடுவார்கள். அன்பும் கோபமும் இவர்களிடம் கலந்தே இருக்கும்.

ஆரோக்கியம்

பூரம் நட்சத்திரக்கார்கள் ஹார்மோன் தொடர்பான பிணிகள் உண்டாக வாய்ப்புண்டு. ஆகவே, ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களையும் இந்த நட்சத்திரமே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தைராய்டு பிரச்னை, கண் தொடர்பான பிரச்னை தரும். கவனம் தேவை.

பூரம் வேதை நட்சத்திரம்

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். உத்திரட்டாதி வேதை நட்சத்திரமாக உள்ளது.

பரிகாரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம் நட்சத்திரம் அன்றோ அல்லது ஏகாதசி அன்றோ வெங்கடாஜலபதியை வழிபடலாம். ஒருமுறை ரெட்டை திருப்பதி சென்று வந்தால் நற்பலன் உண்டாகும்.