பெரியாழ்வார் பிள்ளைத்தமிழில் ஒரு பாசுரம். முதலில் பாசுரத்தைப் பார்த்து விடுவோம்.
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப்
பல் வளையாள் என் மகளிருப்ப,
மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று
இறைப் பொழுது அங்கே பேசி
நின்றேன்;
சாளக்கிராமமுடைய நம்பி சாய்த்துப்
பருகிட்டுப் போந்து
நின்றான்,
ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதை நங்காய், உன் மகனைக் கூவாய்.இதன் பொருள் இனிமையானது. யசோதை வீட்டின் மேற்குப் பக்கத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் பெண், யசோதையிடம் புகார் தெரிவிக்கிறாள்.கண்ணன் வீட்டுக்கு வீடு சென்று வெண்ணெய் திருடி தின்பதில் விருப்பம் உடையவன். அவன் செய்த ஒரு திருட்டைப் பற்றித் தான் இந்தப் பெண் புகார் கூறுகிறாள். ‘‘அம்மா யசோதை, நான் பாலைக் கறந்தேன். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் காய்ச்சுவதற்கு ஏற்றி வைத்தேன். அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். பார்த்தால் நெருப்பு இல்லை. சரி நெருப்பு வாங்கி வருவோம் என்று பக்கத்து வீட்டுக்குச் சென்றுவிட்டேன். பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இதுதான் சமயம் என்று உன்னுடைய மகன் பால் பாத்திரத்தை சாய்த்து, பாலை முற்றிலுமாகக் குடித்துவிட்டு, ஒன்றுமே தெரியாதவன் போல் நின்று கொண்டிருக்கிறான். உன் பிள்ளையை நீ கண்டிக்க வேண்டும்.”கண்ணனுடைய லீலையைச் சொல்லும் இந்த நிகழ்ச்சியில் ஒரு வார்த்தை வருகிறது.
‘‘சாளக்கிராமம் உடைய நம்பி.
சாய்த்துப் பருகிட்டுப் போந்து
நின்றான்’’
அது என்ன சாளக்கிராமம்? அதைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.வைணவத்தில் 108 திவ்யதேசங்கள் சொல்லப்படுகின்றன. அதில் வடநாட்டில் உள்ள திவ்ய தேசம் ஒன்றுக்கு திருச்சாளக்கிராமம் என்று பெயர். அந்தத் தலத்தில் ஓடும் கண்டகி எனும் ஆற்றில் கிடைக்கக்கூடிய வழி பாட்டுக்குரிய புனிதமான சாளக்கிராமக் கற்களைப் பெற்றிருப்பதால் அந்தத் திருத்தலத்திற்கு சாளக்கிராமம் என்று பெயர். நேபாளத்தில் உள்ளது. முக்திமதி அல்லது முக்தி க்ஷேத்ரம் என்று சொல்லப்படுவது காட்மாண்டு விலிருந்து 140 மைல் தொலைவில் இருக்கிறது. இதையே சாளக்ராம க்ஷேத்ரம் (முக்திநாத்) என்றும் கூறுவர். பூமியில் இருந்து சுமார் 15000 அடி உயரத்தில் உள்ள இரண்டு குன்றுகளின் கற்கள் வஜ்ரகிரீடம் எனப்படும் பூச்சிகளால் துளைக்கப்பட்டு மலை நடுவில் இருந்து வெளியாகும் கண்டகி நதியின் வழியாக வெளிவருகிறது.
இந்த சாளக்கிராமக் கல் என்பது மிகவும் விசேஷமானது. சக்தி படைத்தது. வழிபாட்டுக்கு உரியது. கோலி குண்டு போல் இருக்கும் சிறிய கற்களில் தொடங்கி, பெரிய தேங்காய் அளவுக்கு இருக்கும் கற்கள் வரை உண்டு. வைதீகமான குடும்பங்களில் தொன்று தொட்டு பூஜிக்கப்பட்டும், உயர்ந்த தாகக் கருதப்பட்டும் வருவது சாளக்ராமம். பண்டைய காலத்தில், மன்னர்களின் சபைகள், ஊர் சபைகள் ஆகியவற்றில் வழக்குகளில் சாட்சி சொல்லும் போது சாளக்கிராமத்தைக் கையில் கொடுத்து ‘சாளக்கிராம சாட்சியாக’ சாட்சி சொல்லும் வழக்கம் இருந்தது.உருளைவடிவமாயும், மிருதுவாயும், கரிய நிறமாயும் அல்லது சிவப்பு நிறமுடையதாயும் இருக்கும். இதை மிக பத்திரமாய் பூஜை பெட்டியில் வைத்திருப்பார்கள். தலைமுறை, தலைமுறையாக வழி, வழியாக குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக இதனைப் பெற்று ஆராதித்து வருகிறார்கள். கன்னிகா தானத்தின் போது, கன்னிகையுடன் வரனுக்கு தானம் செய்யப்படுவதும் உண்டு.
சாளக்ராமத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:
பிரம்மனது வியர்வைத் துளியினின்று கண்டகி என்ற ஒரு பெண் உருவெடுத்தாள். அவள் கடுந்தவம் புரிந்தமையால் அச்சுற்ற தேவர்கள் அவளை நாடி வரமளிக்க வந்தனர். அவளோ அவர்களை தன் பிள்ளைகளாகப் பெற விரும்பினாள். இது முடியாது என்பதால் தேவர்களை பூமியில் புழுக்களாகும் படி சபித்தாள். கோபமடைந்த தேவர்கள் அவளை ஒரு ஜடமாக ஆக சபித்தனர்.கலங்கிய தேவர்கள் பிரம்மா இந்திரனையும், ருத்ரனையும் அணுகி தீர்வு கிடைக்காததால், விஷ்ணுவை அண்டினர். விஷ்ணு ஒரு உபாயம் கூறினார்.சாளக்ராம க்ஷேத்ரத்தில் சக்ர தீர்த்தத்தில் தான் வாசம் செய்வது என்றும் அங்கு தேவர்கள் வஜ்ர கீடம் என்ற புழுக்களாகி அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு
வாழவேண்டியது என்றும் கண்டகி என்பவள் ஒரு நதி வடிவமாக அந்தக் கற்களில் பாயவேண்டும் என்றும் ஏற்பாடாகியது. அத்தகைய தேவாம்சமும், விஷ்ணு அம்சமும் பொருந்திய கற்கள் சாளக்ராம கற்கள்.சாளக்ராம உடைந்திருந்தாலும், ஸ்வரூப அழிவுற்று இருந்தாலும், அக்னியில் எரிந்திருந்தாலும், ஒரு தோஷமும் இல்லை. சைவர்கள் லிங்கம் வடிவில் சிவனை வழிபடுவதுபோல, வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக்கல்லில் வழிபட்டு வருகின்றனர்.சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதால், வீட்டில் அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். வீட்டில் உள்ள தீய சக்திகளை அகற்றி, நன்மை தரும் சக்திகளை ஈர்க்கும். குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள நோய்களை நீக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.சாளக்கிராம பூஜை செய்பவர்களுக்கு எமபயம் இல்லை. சந்தனம் பூசி, பூ வைத்து, தீபம் ஏற்றி, நெய்வேத்தியம் செய்து வழிபட்டால், விஷ்ணு லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும். சிரார்த்த காலங்களில் பிதுர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.ஒருவர் முக்தி அடைய தீர்த்த யாத்திரையும் யாகமும் அவசியம். ஆனால் சாளக்கிராம அபிஷேக தீர்த்தத்தை தலையில் தெளித்து அருந்தினால், புண்ணிய தீர்த்தங்களில் நீராடின பலன் கிடைக்கும்.
சாளக்ராம பூஜை மிக மிக எளிமையானது. சாதாரணமாக புருஷ சூக்த மந்திரத்தால் பூஜிப்பார்கள். ஆழ்வார்கள் பாசுரங்களால் சேவிக்கலாம். சாளக்ராம அபிஷேகதீர்த்தத்தை சிரஸில் தெளித்துக் கொண்டு அதை அர்சித்த துளசியை தரித்துக் கொண்டு, அதற்கு நிவேதனம் செய்த உணவை உண்ண வேணும். சாளக்ராம அபிஷேக ஜலத்தை கீழே கொட்டக்கூடாது.சாளக்கிராமம் வடிவங்களில் பல மூர்த்தங்கள் உண்டு. அதனுடைய சக்கரங்களையும் துளைகளையும் வடிவங்களையும் உற்று நோக்கி அனுபவம் மிக்கவர்கள் சாளக்கிராம மூர்த்தி இன்னது என்பதை கண்டு பிடித்து விடுவார்கள். சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது. சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி எனும் நூல் கூறுகின்றது.கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.
மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சாளக்கிராமத்தை துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பானது என்று கூறுவர்.