மாயவன் என்றால் அது கேதுதான். அமைதியாக இருந்து கொண்டு அனைத்து மாயங்களையும் செய்யும் வல்லவன் என்றால் மிகையில்லை. நவகிரகங்களில் எந்தக் கிரகமும் கேதுவுடன் இணைந்தாலும் பாதிப்பை கொடுக்கும். சனியுடன் இணையும் பொழுது கர்மங்களை இழக்கச் செய்யும் சக்தியை கொடுக்கும். சனி பகவானையே ஞானவானாக உருவாக்கும் சக்தியை கொடுப்பது கேது கிரகமே. நவகிரகங்களில் நவகிரக ராஜா கேது என்றாலும் மிகையில்லை. துன்பங்களை கொடுத்து ஞானத்தை கொடுப்பதில் கேதுவிற்கு நிகர் கேது மட்டுமே.
ஞானம் என்பது என்ன?
ஞானம் என்பது காலத்தால் ஏற்படுகின்ற அனுபவத்தையும் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வித்தையையும் எளிமையாக க்ஷண நேரத்தில் உணர்ந்து தெளிய வைக்கக்கூடியவன் கேது பகவான் என்பது பெரிய ஆச்சர்யமில்லை. அப்படிப்பட்ட கேதுவிற்குரிய தேவதைகளை வழிபடுவதன் மூலம் காலத்தால் பெற முடியாதவற்றை கேது தருகின்ற ஞானத்தால் பெறலாம் என்பதாகும்.
எந்த கிரகம் கேதுவுடன் இணைகின்றதோ அதன் வழியானக் காரகத் தொடர்பான ஞானத்தை பெறுவது நிச்சயம். ஆம், சிக்கல்கள் பின்பு, பெறமுடியாத ஞானம். சிக்கல்கள் என்றால் ஒரே ஒரு பிரச்னை தொடர்பானதல்ல, இடியாப்பச் (பல பிரச்னைகள்) சிக்கல்களின் தீர்வாகும். இந்த கேதுவின் இணைவானது ஆணிற்கு ஒரு மாதிரியான பலனும் பெண்ணிற்கு ஒரு மாதிரியான பலனும் கொடுக்கிறது. கேது எந்த கிரகத்துடன் இணைவு பெற்றாலும் பாதிப்பு நிச்சயம் உண்டு. எனவே, அதனுடன் இணையும் கிரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
கிரகங்களும் கேதுவும்...
சூரியன் + கேது இணைவு
சூரியன் ஆத்ம காரகன் என்றும் பித்ருக்காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. மேலும், தலையாய ஒளி கிரகமான சூரியன் கேதுவுடன் இணையும் பொழுது மிகுந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. தந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இவ்வாறு இணையும் கிரகங்களை கிரகணம் என்று சொல்லப்படுகிறது. அரசு தொடர்பான வளர்ச்சிகள் தடைபடும்.இதற்கான பாதிப்புகளை நாம் கிரகண நாளன்று கிரகண நேரத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கிரகண தோஷப் பரிகாரங்கள் செய்து கொள்வது சிறப்பை நல்கும். இக்கிரக இணைவு உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் விநாயகருடன் சிவன் இணைந்த தளத்தில் வழிபாடு செய்து கொள்வது நன்மை தரும். அப்படி குறிப்பிடும்படியான ஒரு திருத்தலம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைச் சொல்லலாம். கற்பக விநாயகரின் வலது ஹஸ்தத்தில் சிவபெருமான் இருப்பதே இதற்கான இணைவாகக் கொள்ளலாம்.
சந்திரன் + கேது இணைவு
மனோகாரகன் எனச் சொல்லப்படும் சந்திரன் கேதுவுடன் இணையும் பொழுது மன சஞ்சலங்கள் ஏற்படுவதுடன் ஹிஸ்ட்ரியா மற்றும் சிந்திக்க முடியாதத் தன்மையை உண்டாக்கும். சந்திர கிரகணம் நடைபெறும் சமயத்தில் காளஹஸ்தி சென்று பாதாள விநாயகரை வழிபட்டு பின்பு ராகு காலத்தில் தோஷப் பரிகாரம் செய்து கொள்ளுதல் நலம் தரும். பின்பு காளஹஸ்தீஸ்வரரையும் ஞான
பிரசுனாம்பிகையையும் வழிபடுவதன் மூலம் பிரச்னைகளுக்கான தீர்வு உண்டாகும். மனநலம் மற்றும் உடல் நலத்தில் சீரான நன்மை ஏற்படும்.
செவ்வாய் + கேது இணைவு
சகோதரக்காரகன், பூமிக்காரகன், ரத்தத்திற்கு அதிபதியாக இருப்பவர் செவ்வாய் ஆகும். உங்கள் சகோதரிகளின் வாயிலாக நீங்கள் பெறும் ஞானத்தை தவிர்க்க முடியாது. ‘செவ்வாய் போல கேது’ என்ற ஜோதிட சொலவடை உண்டு. அவ்வாறே, நிலம் தொடர்பான பிரச்னைகளையும் தீர்வுகளை தெளிவாக உணர்ந்து கொள்ளும் ஞானத்தையும் கேது தருவார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். செவ்வாய் ஆனவர் முருகனாகவும் ஹனுமனாகவும் இருப்பார். கேதுவின் அதிதேவதையான விநாயகரை இவர்களுடன் இணைத்து வழிபாடு செய்யும் பொழுது இடர்பாடுகள் என்பது தீர்வுகளாகவும் தவிர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு தொடர்பான தேவதையான விநாயகரும் ஹனுமனும் இணைந்த ரூபமான ஆதியந்தபிரபுவை வழிபடுவது சிறப்பான அமைப்பாகும். இந்த அதிதேவதையானவர் பாதி விநாயகராகவும் பாதி ஹனுமானாகவும் காட்சி கொடுப்பார்.
புதன் + கேது இணைவு
‘மாமன்’ என்ற உறவிற்கு அதிபதியாகவும் கல்வி மற்றும் எழுத்திற்கு காரகமாக விளங்கக்கூடிய கிரக தேவதை புதனாகும். புதனுடன் கேது இணையும் பொழுது மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் பாடத்தை (Subject) மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இல்லாவிடில் தாங்கள் படிக்கும் பள்ளியை விட்டு விட்டு வேறு ஒரு பள்ளிக்கு மாறிக் கொண்டே இருக்கும் நிகழ்வுகள் இருக்கும். குறிப்பாக கணக்குப் பாடத்தில் அதிகம் குழம்பிக் கொள்வார்கள். இதற்கு புதனுடன் கேது இணைவதால் விஷ்ணு கோயில்களில் உள்ள தும்பிக்கை ஆழ்வாரான விநாயகரை வழிபடுவதும் நர்த்தன கணபதியையோ அல்லது விஷ்ணு கணபதியையோ அல்லது பஞ்சமுக விநாயகரையோ அல்லது இரட்டை விநாயகரையோ புதன்கிழமை தோறும் வழிபடுவதும் சிறப்பான நிவர்த்திப் பரிகாரத்தை தரும் என்பதில் ஐயம் வேண்டாம். புதன்-கேது இணைவு பெற்றவர்கள் இவ்வாறு இணைத்து வழிபடும் பொழுது கல்வியில் சிறந்தவர்களாக இருப்பர்.
குரு + கேது இணைவு
குருவுடன் கேது இணையும் பொழுது தெய்வ வழிபாட்டை செய்ய மாட்டார். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு தனது குழந்தையின் மூலமாக தெய்வத்தின் சக்தியை உணர வைப்பார். தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக கோயில் கோயிலாக சென்று வழிபடும் ஞானத்தை இவருக்கு ஏற்படுத்துவார். பணமே பிரதானம் என்று இருப்பார். ஆனால், தனம் மற்றும் குழந்தைகள் வழியாக இவருக்கு தடைகள் உண்டாகும். இது போன்ற கிரக இணைவு உள்ளவர்கள் வியாழக்கிழமை தோறும் கற்பக விநாயகரை வழிபடுவது நலம் பயக்கும். லிங்க வடிவ விநாயகரை தொடர்ந்து வழிபட்டால் இவருக்கான தீர்வுகள் கிடைக்கும் என்பது அமைப்பாகும். வேலூரில் உள்ள சேண்பாக்கம் செல்வ விநாயகரை வழிபடலாம். இதனால் தீர்வுகள் உண்டாகும்.
சுக்கிரன் + கேது இணைவு
சுக்கிரனுடன் கேது இணைவானது திருமணத் தடைகளை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரம் விநாயகருக்கு திருமணம் செய்வித்தல் என்பது பரிகாரமாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட பாவகமானது இயக்கத்தை பெற்று திருமணத் தடைகள் நீங்கி, சுபகாரியங்கள் நடைபெறுகிறது. மேலும், இதற்கு பரிகாரமாக லெட்சுமி விநாயகரையோ அல்லது சுந்தர விநாயகரையோ அல்லது செல்வ விநாயகரையோ அல்லது உச்சிஷ்ட கணபதியையோ வெள்ளிக்கிழமை அன்று வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும்.
சனி + கேது இணைவு
கர்மக்காரகன் மற்றும் தொழில் காரகன் எனச் சொல்லக்கூடிய சனியுடன் கேது இணையும் பொழுது உத்தியோகம் தொடர்பான வாய்ப்புகள் அல்லது சொந்தமாக தொழில் செய்யக்கூடிய வாய்ப்புகளில் தடைகள் ஏற்படும். இதனைத் தவிர்ப்பதற்கு வருடத்தில் ஓரிரு நாட்களோ அல்லது அரையாண்டில் ஓரிரு நாட்களோ மாறுவேடம் பூண்டு கிடைப்பதை சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்வதனால் அந்த தோஷம் நீங்கி தொழில் மற்றும் உத்தியோகத்தில் சிறப்புற வாய்ப்புண்டு. முத்தாரம்மன் திருவிழாவும் இதே அடிப்படையான வழிபாடுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.