Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிடித்து வைத்த ஞானமே பிள்ளையார்!

விநாயகர் என்றாலே தனக்குமேல் எந்த நாயகரும் இல்லாதவர் என்று பொருள். தனக்குமேல் எவருமில்லாத தானே அனைத்துமான பிரம்மம் அது. விநாயகர் வழிபாடு என்பது மிகமிக எளிமையானது. உலகிலேயே பார்க்கப் பார்க்க சலிக்காத விஷயங்கள் மூன்று. ஒன்று கடல், இரண்டு யானை, மூன்று குழந்தை. எனவேதான், ஆனை முகத்தோனை பார்த்துப் பார்த்து வழிபட்டு வந்தனர், முன்னோர். எங்கும் நிறைந்திருப்பவராக இருப்பதாலேயே ஆற்றங்கரை முதல் பெரும் ஆலயங்கள் வரை எழுந்தருளி இருக்கின்றார். முன்னோர்களின் வழிபாடு எப்போதும் தத்துவச் செறிவு கொண்டது. வா வந்து அருகே பார். யானையின் தலையின் அளவு அறிவுக் களஞ்சியத்தை குறிக்கின்றது. அதன் பரந்த செவி கேள்வி ஞானத்தை உணர்த்துகின்றது. குருவின் வார்த்தைகளை சீடன் எப்படி கேட்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் ஆழ்ந்த குறியீடு அது. யானையின் கூர்மையான கண்கள் எதையும் ஊடுருவிப் பார்த்தலைக் குறிக்கும். அது ஒரு ஞானி அந்தமிலாக் கண் கொண்டு பார்க்கும் அகண்டாகார பார்வையாகும். தும்பிக்கை என்பது வலிமையின் அடையாளம். எவ்வளவு பெரும் புத்திசாலியானாலும் சரிதான், தன் வலிமை உணர்ந்து அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென சொல்லித் தருகின்றது. அதுமட்டுமல்லாது யோக மார்க்கத்தில் பயணிப்போர் யானைபோல நீண்ட சுவாசத்தை பழக வேண்டும். நீண்ட நெடிய சுவாசமுடையோர் பெரும் ஞானவானாகலாம் என்பதையே இது காட்டுகின்றது.

தந்தம் என்பது கொம்புகள். அதை ஒடித்தல் என்பது யாராக இருப்பினும் அகங்காரம் என்கிற கொம்புகள் ஒருநாள் ஒடிந்தே தீரும். இங்கு உலகியல் ரீதியான அகங்காரம் மட்டுமல்ல, ஆன்மிகம் சார்ந்த அக உலகம் விரிய விரிய பல்வேறு நிலைகளை கடப்பவருக்குள்ளும் அகந்தை எழும். அப்போது உங்களின் தந்தம் எனும் அகந்தையை கணபதி ஒடித்துப் போடுவார். கையில் ஏந்தியிருக்கும் மோதகமோ அல்லது மாம்பழமோ ஞானத்தை கைமேல் கனியாக அளித்தலை காட்டுகின்றது. மோதகம் எனும் கொழுக்கட்டையில் உள்ளதை பூர்ணம் என்கிறோம். அதுபோல இந்த உடல் எனும் கொழுக்கட்டைக்குள்ளும் பூர்ணம் எனும் ஞானம் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது. அது மட்டுமல்ல பிள்ளையாரின் வாகனமான மூஞ்சூறு உழைப்பைக் குறிப்பதாகும். இன்னும் ஆழமாகப் பார்த்தால் எல்லாவற்றினுள்ளும் நிறைந்த பிரம்மம் சிறியதான சுண்டெலியைக் கூட வாகனமாக்கும் பிரபஞ்ச முரணை அழகாக காட்டுகின்றது. குண்டலினி எனும் சக்தியின் மூலாதார கடவுளான கணபதியை பூஜையின்போது மஞ்சள் பிள்ளையாராக வடிப்பது நம் வழக்கம். ஏனெனில், குண்டலினி எழுச்சியின்போது ஒரு ஜீவன் முதலில் தரிசிக்கும் நிறமானது மஞ்சள் நிறமானது என்பது யோகியரே அறிந்த ரகசியம். தத்துவக் களஞ்சியமான பிள்ளையாரை பார்ப்போம். அதுவும் நம்மை பார்க்கும். காலக்கிரமத்தில் அதுவே நம்மை அதுவாக்கும் ஞான வைபவமும் நம் அகத்தில் நிகழும். அன்று நாமும் பிடித்து வைத்த பிள்ளையாராக மாறிப்போவோம் எனில் மிகையில்லை.